![]() |
ஒரு காலத்தில் இங்கேதான் சோற்றுக்கு வழியில்லாமல் அமர்ந்திருந்தேன் என்றார் வாலி!Posted : திங்கட்கிழமை, நவம்பர் 11 , 2019 08:51:14 IST
![]() விசுவைப்போன்ற கலைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.
மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கவிஞர் வாலியின் 88வது பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: “ மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உவேசா-வைப்போல வாலி அவர்களுக்கு நெல்லை ஜெயந்தா இருக்கிறார். கவிஞர் வாலிக்கு சிறப்பு செய்யும் வகையில் திருச்சியில் நான் நடத்திய நிகழ்ச்சிக்கு பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர். ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் போல நடைபெற்றது. வாலி அசந்துபோனார். வாலிக்கு விழா எடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறியதும் ‘ என்னிடம் சில நிபந்தனைகளை சொல்லி, ’இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் வருவேன்’ என்றார்.
‘ என்னோடு மூன்று பேர் வருவார்கள்.. கிருஷ்ணகுமார், நெல்லை ஜெயந்தா, பழநி பாரதி.’ என்றார். நெல்லை ஜெயந்தா இல்லாமல் எங்களின் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது. அவர்தான் எங்கள் நிகழ்வுகளின் நிரந்தர தொகுப்பாளர். நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்படுகிறோம். தமிழை வாழவைக்கும் கலைஞர்களை உயர்த்திபிடிப்பதுதான் எங்கள் பணி. ஐயா ஞானசுந்தரம் அவர்களுக்கும் முத்துலிங்கம் அவர்களுக்கும் நான் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை கொடுக்கும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல. அதனால் இந்த விருதை அவர்களை எடுத்துக்கொள்ளச்சொன்னேன். முனைவர் ஞானசுந்தரம் போல ஆசியரிடத்தில் என்னால் கல்வி பயில முடியவில்லை என்ற ஏக்கம் இன்னும் இருக்கிறது. இவரைப்போல ஆசிரியர்களும் இல்லை என்பதுதான் உண்மை.
இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் திமுகவின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், குண்டுகளை நெஞ்சில் ஏந்தவும் இளைஞர்கள் தயாராக இருந்தார்கள் என்றால் அதற்கு காரணமே அவர்களின் ஆசிரியர்கள்தான்.
கவிஞர் முத்துலிங்கம் நேரடி எதிர்க்கட்சியை சேர்ந்தவர். அதனால் என்ன? நான் தமிழுக்கு தொண்டாற்றுபவர்களை மதிப்பவன். இயக்குநர் விசுவும்கூட ஒரு கட்சியை சேர்ந்தவர்தான். ஆனால் தமிழுக்கு முன்னால் அனைவரும் ஒன்றுதான். இது வாலியின் மேடை.
மன சங்கடமாக இருக்கும்போது விசு இயக்கிய படங்களைத்தான் குடும்பத்தோடு பார்ப்பேன். அவரின் படத்தில் அவர் கட்சி தெரியவில்லை அவர்தான் தெரிகிறார். வாலி அவர்கள் எவ்வளவு பணம் சேர்த்தார் என்பது முக்கியம் அல்ல. சுயநலம் இல்லாமல் தமிழுக்காக அர்ப்பணிக்கும் நெல்லை ஜெயந்தா போன்ற பல மகன்களை பெற்றிருக்கிறார். நடிகர் ரஜினியை இயக்கிய எஸ். பி முத்துராமன் பார்வையாளராக அமர்ந்து இந்த நிக்ழ்ச்சியை பார்த்து வருகிறார். இதுபோன்று நல்ல மனிதர்களின் அன்புதான் உண்மையான சொத்து.
பட்டுக்கோட்டை 230 பாடல்கள் மட்டுமே எழுதினார். வள்ளுவரோ 1330 குறள்கள் மட்மே எழுதினார். எவ்வளவும் பாடல்கள் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல எதை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். வாலிக்கு தெரியும் எதை எப்படி எழுத வேண்டும் என்று.
நாடாளுமன்றத்தில் எங்களை போன்றவர்களுக்கு குறைந்த நேரம்தான் கொடுக்கப்படும். அந்த குறைந்த நேரத்தில் தமிழ் மக்களுக்காக நாங்கள் பேச வேண்டும். தொடர்ந்து பேசியும் வருகிறேன். அண்ணாவுக்கே 2 நிமிடங்கள் கொடுக்கப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது. ‘கலைஞர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும்’ என்று வெளிப்படையாக சொன்னவர் வாலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி தனது கருத்தை துணிச்சலாக வெளிப்படுத்துவார். திருச்சியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றபோது குல தெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் கூட வரவேண்டும் என்று கட்டளையிட்டார். அங்கு சென்றபோது குளக்கரையில் அமர்ந்துகொண்டார். என்னையும் அருகிலே அமரச்சொன்னார். ஒரு நண்பர் போல் தோளில் கைபோட்டு ‘ ஒரு காலத்தில் இங்கேதான் சோற்றுக்கு வழியில்லாமல் அமர்ந்திருந்தேன்’ என்றார். பாராட்டு விழாவுக்கு சிலரை அழைக்க வேண்டாம் என்றும் கூறினார்.
விசுவைப்போன்ற கலைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டாம். அதை நாங்கள் பார்த்துகொள்கிறோம். எங்களால் உங்களைப்போன்று அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியாது’’
இவ்வாறு பேசிய அவர் இறுதியில் “பூ மகள் மெல்ல வாய் மொழி சொல்ல’’ என்று பணம் படைத்தவன் படத்திலிருந்து பாடல்வரிகளைப் பாடி அசத்தவும் செய்தார்.
-வாசுகி
|
|