???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாஜ்பாயி: முன்னத்தி ஏர்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2018  00:39:02 IST


Andhimazhai Image

அது 1957 ஆம் ஆண்டு. உத்தரபிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த அந்த இளம் உறுப்பினரின் கன்னிப் பேச்சே மிகவும் ரசிக்கப்பட்டது. நேரு அந்த இந்தி உரையை மிகவும் விரும்பிக்கேட்டார். அதன் பின்னர் அவர் வெளிநாட்டு பிரமுகர் ஒருவரிடம் அந்த இளம் உறுப்பினரை அறிமுகம் செய்வித்தபோது சொன்னார்: “ ஒரு நாள் இந்நாட்டின் பிரதமராக ஆகப்போகும் மனிதர் இவர்!.”

அந்த இளம் உறுப்பினர் அடல்பிஹாரி வாஜ்பாயி. மத்திய பிரதேசம் குவாலியரில் பிறந்த வாஜ்பாயி, 1957ல் தன் 33-வது வயதில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நுழைந்தார். அதன் பிறகு நாற்பதாண்டு கால நாடாளுமன்ற வாழ்க்கைக்குப் பின்னால் நேரு சொன்னது நிறைவேறியது. இடையில் ஜனதா ஆட்சியின்போது நேரு கையில் வைத்திருந்த வெளியுறவுத்துறையின் அமைச்சராகவும் இருந்த வாஜ்பாயி 1996-ல் முதல்முறையாக பிரதமர் ஆனார். பதின்மூன்று நாட்கள் தான் அந்த ஆட்சி நீடித்தது. ஆனாலும் இந்தியாவில் வலதுசாரி அரசியலில் அது மிக முக்கியமான படி. அதன் பின்னர் 1998ல் 13 மாதங்கள். பின்னர் முழுமையான ஐந்தாண்டுகள் என பாஜக வாஜ்பாயியின் முகத்தை முன்னிலைப்படுத்தி தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. பாஜகவின் மிதவாத முகமாகக் கருதப்பட்ட வாஜ்பாயி, மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், அனைவரையும் அரவணைத்துச் சென்ற ஜனநாயகவாதியாகவும் இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற அமைப்பை காங்கிரஸ் அல்லாத சோஷலிசவாதிகள், பிராந்திய உதிரிக் கட்சிகள் என்று பலவற்றைச் சேர்த்துக் கட்டி வெற்றிகரமாக ஐந்தாண்டுகள் ஆளமுடியும் என்று முதல்முறையாகக் காண்பித்தார். அவரது மாதிரியையே அதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சியும் கையிலெடுத்து இரண்டு ஐந்தாண்டுகளை நிறைவு செய்தது. தமிழ்நாட்டில் முதலில் அதிமுக, பின்னர் திமுக என இருகட்சிகளையும் கையாண்டார் வாஜ்பாயி. திமுகவின் முரசொலிமாறன் பலமாதங்கள் மருத்துவமனையில் இருந்து இறந்தபோது, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். திமுக தம் கூட்டணியில் தொடராது என்ற அறிகுறிகள் இருந்தபோதும் அவர் இணக்கமாகவே நடந்துகொண்டார்.
கூட்டணிக் கட்சிகளிடம் அவர் மாட்டிக்கொண்டு விழித்ததும் சமாளித்ததும் குறித்து நிறைய கதைகள் உண்டு. அது 1998. ஜெயலலிதாவின் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைத்திருந்தார். அவுட்லுக் ஆசிரியர் வினோத் மேத்தா அப்போது ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றிருந்தார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் வாஜ்பாயி அப்போது கவலையுடன் இருந்திருக்கிறார். என்ன கவலையாக இருப்பதுபோல் தெரிகிறதே என வினோத் மேத்தா கேட்க, “உங்களுக்கு அடுத்ததாக என்னைச் சந்திக்க வரப்போகிறவர் ஜெயலலிதா..” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல. சொந்தக் கட்சித்தலைவர்களையே அவர் திறம்பட சமாளிக்கவேண்டி இருந்தது. அத்வானியா வாஜ்பாயியா யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது அத்வானி, வாஜ்பாயியையே பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். பாஜக அந்த காலகட்டத்தில் பெரும் கூட்டணியை அமைக்க அது உதவியது என்றாலும் கட்சியிலும் ஆட்சியிலும் இயற்கையாகவே அவர்களுக்குள் ஒரு சமநிலை உருவானது. அச்சமநிலையை குலைக்க பலர் முயன்றபோதும் இருவரின் நீண்டகால அரசியல் அனுபவம் இதைச் சமாளிக்க உதவியது. பாஜகவின் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா, வாஜ்பாயியை முகமூடி என்று தாக்கி பின்னர் ஒதுக்கப்பட்டார்.  2003-ல் ஒருமுறை பிரதமர் வாஜ்பாயி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு, 2003-ல் அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் வாஜ்பாயி, அத்வானி இருவரையும் கட்சி முன்னிறுத்தும். வாஜ்பாயி வளர்ச்சி மனிதர், அத்வானி இரும்பு மனிதர் என்றார். கல்யாண்சிங் வேறு வாஜ்பாய் களைத்துவிட்டார். பிரிஜேஷ் மிஸ்ரா போன்ற ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி செய்கிறார் என்றார். திரும்பி வந்த வாஜ்பாயிக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை. முக்கிய அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் இருந்த கூட்டம் ஒன்றில் நான் களைப்பும் அடையவில்லை ஓய்வும் பெறவில்லை. ஆனாலும் அடுத்த தேர்தலில் அத்வானிஜி கட்சியை வழி நடத்திச் செல்வார் என்று ஒரே போடாகப் போட்டார். அடுத்த சிலநாட்களில் பாஜக தலைவர்கள் வாஜ்பாயிதான் முதல் தலைவர். அத்வானி இரண்டாம் தலைவர் என்று சொல்லி சமாளிக்கவேண்டி இருந்தது.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டு விழிபிதுங்கிக் கொண்டிருந்தன. மோசுல் பகுதியில் இந்தியா தன் படைகளில் 17000 பேர்களை அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கோரியது. இப்போரில் இந்தியா பங்கேற்கவேண்டும் என்று பாஜகவின் ஒரு தரப்பினர் விரும்பினர். வாஜ்பாயியின் ஆலோசனை அதிகாரிகளும் அதே கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பிரதமர் இதில் கருத்தேதும் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் கோரிக்கையை  தட்டவும் உடனடியாக வழி இல்லை. ஒரு நாள் அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பரதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் இருவரையும் தன் அலுவலகத்துக்கு அழைத்தார் பிரதமர். இருவரிடமும் பல பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த அவர், அமெரிக்காவின் ஈராக் போருக்கு எதிரான உங்கள் குரல் மிகவும்பலவீனமாக இருக்கிறதே என்றிருக்கிறார். இரு தலைவர்களும் புரிந்துகொண்டார்கள் அதன்பின்னர் அவர்களின் கட்சிகள் ஈராக் போருக்கு எதிராக தங்கள் குரலை மேலும் வலுவாக்கின. அமெரிக்காவின் கோரிக்கையை பின்னர் வாஜ்பாயி நிராகரிக்க இது உதவியது.

2004 தேர்தலை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் வாஜ்பாயி அணி எதிர்கொண்டது. மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் இருந்தனர். வழக்கமான இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகி, வளர்ச்சி, சிறுபான்மையினரையும் உள்ளிழுக்கும் உத்தி என்று அவர்களின் வியூகம் அமைந்திருந்தது. ஆனால் 99 தேர்தலில் பெற்ற 182 இடங்களை விட 44 இடங்கள் குறைவாகவே பெற்று தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது.
தேர்தல் முடிந்து சில மாதங்களில் அத்வானி பாஜகவின் தலைவராக ஐந்தாம் முறையாக பதவி ஏற்றார். வாஜ்பாயி தேஜகூட்டணியின் தலைவர் என்ற பதவியே போதும் என ஒதுங்கிக்கொண்டார். தோல்வியால் கட்சிக்குள் களைப்பு ஏற்பட்டிருந்தது. சில மாதங்கள் கழித்து கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் டெல்லியில் கூடியது. எல்லோரும் பேசினார்கள். ஆனாலும் வாஜ்பாயியின் பேச்சுதான் அனைவருக்கு புத்துணர்ச்சி ஊட்டியது: “ ஒரு முறை நானும் அத்வானியும் தேர்தலில் தோற்றுவிட்டோம், முடிவு வெளியான அன்று மாலை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவே இருவரும் ஒரு திரைப்படத்துக்குப் போனோம்(சற்று நேரம் இடைவெளி விடுகிறார்). அப்படத்தின் பெயர்  ‘பிர் சுப ஹோகி.’( அது 1958-ல் வெளியான இந்திப்படம்.  தமிழ் அர்த்தம்   ‘மீண்டும் விடியும்!.’), சொல்லி நிறுத்தினார் வாஜ்பாயி. கூட்டம் களைத்துப்போகும் வரைக்கும் கை தட்டிக்கொண்டே இருந்தது. பொருள்பொதிந்த இந்த சொற்களால் பல மாதங்கள் கழித்து பாஜகவினர் முகங்களில் மகிழ்ச்சி!

வீட்டில் இரண்டு நாய்கள், ஒரு பூனை, தத்தெடுத்த குடும்பம், அவ்வப்போது கிரைம் நாவல்கள், இலக்கியம், நல்ல உணவு, வெளிநாட்டு சுற்றுலாவில் ஆர்வம்,  பெரும் கூட்டத்தைக் கட்டிப்போடும் இனிமையான உரை- இவ்வளவும் கொண்டு பெரும் ரசிகராக வாழ்ந்த தலைவர் மறைந்திருக்கிறார்! எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் மேலும் உணர சில காலத்துக்கு முந்திய இந்திய அரசியலின் பக்கங்களைப் புரட்டி அசைபோடலாம்!

- அசோகன் ( செப்டம்பர் அந்திமழை 2018 இதழில் வெளியானது)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...