அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   10 , 2020  11:03:02 IST

1960களில் தொடக்கப் பள்ளியில் ஐந்தாண்டுகள் படித்து முடிப்பது என்பது கிராமத்துச் சிறுவர் சிறுமியருக்குப் பெரிய சவால்தான். ஒரு வீட்டில் ஏழெட்டுக் குழந்தைகள் இருந்த சூழலில், கல்வி கற்று, அரசாங்க வேலையில் சேர்ந்து சௌகரியமாக வாழலாம் என்பதுகூடப் பெரும்பாலான பெற்றோருக்குத் தெரியாது. ஏதோவொரு காரணத்தினால் பாடம் படிக்கத் திணறுகிற குழந்தைக்கு மண்டையில் படிப்பு ஏறவில்லை என்று பெரியவர்கள் கருதினர்; அவன் தலையெழுத்து அவ்வளவுதான் என்று தண்ணீர் தெளித்து ஒதுக்கினர். அப்புறம் வீட்டு வேலைகள், வயல் வேலைகள், ஆடு, மாடு மேய்த்தல். இல்லாவிடில் டெய்லர் கடையில் காஜா எடுக்கப் பழகுதல், பலசரக்குக் கடையில் பொட்டலம் மடிக்கப் பயிலுதல், சைக்கிள் கடையில் எடுபிடி வேலை…  இவைபோன்ற வேலைகள் செய்கிற சிறுவர்களுக்கு அடி, உதை சாதாரண விஷயம். பள்ளியில் ஆசிரியரின் அடி, சித்திரவதைக்குப் பயந்து, பள்ளிக் கல்வியை, தொடக்கப்பள்ளியுடன் முடித்த எனது நண்பர்கள், ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தனர். எனக்கு அவர்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும்.  தொடக்கப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்கிறவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். சுமார் 70% மாணவமாணவியரின் கற்றல், தொடக்கப் பள்ளியுடன் முடிந்துவிடும்.  கிராமத்துப் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதற்கு வருத்தப்பட மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரையில் அது ஒரு விஷயமல்ல. பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை உயர்சாதியினர்தான் அறிந்திருந்தனர். அதிலும் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வி நிறுத்தப்படுவது சாதாரண விஷயம்.  அப்புறம் அந்தக் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகள், ஓரளவு பெரிய ஊர்களில் மட்டும்தான் இருந்தன.  அந்தக் காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில்  சேர்ந்து படிக்க வாய்ப்புக் கிடைத்த சிறுவர், சிறுமியர்கள்  கொடுத்து வைத்தவர்கள்.

 

 

1964 ஆம் ஆண்டில்தான் எங்கள் ஊரான சமயநல்லூரில் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் எட்டு மைல் தொலைவில் இருக்கிற மதுரை நகரில் இருக்கிற உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரயிலில் சென்று மாணவர்கள் படித்து வந்தனர்.   சமயநல்லூரில் இருக்கிற அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கூடம்தான் ஏழெட்டு மைல்கள் சுற்று வட்டாரத்தில் வசிக்கிற கிராமத்து மாணவர்கள் சேர்ந்து பயிலும் ஒரே பள்ளி. பரவை, ஊர்மெச்சிக்குளம், தோடநேரி, கள்ளிக்குடி, மூலகுறிச்சி, தேனூர், நகரி, கட்டப்புளி, சித்தலாங்குடி, வைரவத்தம், டெபதார் சந்தை, அய்யன்கோட்டை, கீழமாத்தூர், கொடிமங்கலம், மேலமாத்தூர், வயலூர், திருவாலவாயநல்லூர் போன்ற கிராமங்களில் இருந்து மாணவர்கள் தினமும் நடந்து வந்து  சமயநல்லூர் பள்ளியில் படித்தனர். கிராமத்தில் வசதியானவர்கள்தான் சொந்தமாகச் சைக்கிள் வைத்திருந்தனர். எனவே, மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வரும் வழக்கமில்லை. பெரும்பாலான மாணவர்கள் கையில் மதிய உணவு இருக்கிற பித்தளைத் தூக்கு வாளியுடன், தினமும் சராசரியாக ஆறு கிலோ மீட்டர்  தொலைவு  நடந்து, பள்ளிக்குப் போய்ச் சேர்ந்து, மாலையில் திரும்ப ஆறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து வீட்டுக்குப் போயினர். ஆறாம் வகுப்பில் சேரும்போது- பத்து வயது- தொடங்கிய நடை, பதினொன்றாம் வகுப்பு வரையிலும் தொடர்ந்தது. உயர்நிலைக் கல்வி கற்றிட மொத்தம் 15,000 கி.மீ. தொலைவு நடக்க வேண்டிய சூழல் அன்று இருந்தது.   மூலகுறிச்சி போன்ற குக்கிராமத்தில் இருந்து வருகிற வழியானது ஒற்றையடிப் பாதையாக இருக்கும்; சில இடங்களில் வயல் வரப்பில் வழுக்கிவிடாமல் நடந்து வர வேண்டியதிருக்கும்; அவ்வப்போது எதிர்ப்படும் விஷப் பாம்புகளை விட்டு விலகி நடக்க வேண்டும். காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பி, மாலையில் இருட்டும்போது வீட்டுக்கு நடந்துபோன மாணவர்கள், மழைக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டனர். சுமார் நான்கு மைல் தொலைவிலிருந்த மூலகுறிச்சி என்ற ஊரிலிருந்து வந்து, என்னுடன் ஒன்பதாம் வகுப்பில் படித்த ராஜேந்திரனும், நடராஜனும்  அடைமழைக் காலத்தில் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரமாட்டார்கள். அவர்கள் ஊரிலிருந்து வரும் வழியில் உப்போடை பெருக்கெடுத்து வெள்ளம் பாய்ந்தால், அந்த ஊர் வெளியுலகில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். அந்த உப்போடையில் புதைகுழிகள் இருந்தன. அதனால் கோடைகாலத்தில்கூட ஓடைக்குள்  கவனமாக நடக்க வேண்டுமென்றும், இல்லாவிடில் புதைசேறு ஆளை உள்ளிழுத்து விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றல் என்பது சிறுவர்களைப் பொருத்தவரையில் ஒருவகையில் அதிர்ஷ்டம்தான்.

 

 

கிராமத்தில் சிறுவர்களுக்கு எப்பொழுதும் நிறைய வேலைகள் காத்திருந்தன. மாடுகளைப் பிடித்துக் குழுதாடியில் தண்ணீர் காட்ட வேண்டும். வைக்கோல் படப்பில் இருந்து வைக்கோலைப் பிடுங்கி, கட்டாகக் கட்டி, தலையில் சுமந்து வந்து, மாடுகளுக்கு உதறிப் போட வேண்டும். அப்புறம் மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்குக் கூட்டிப் போதல், கத்துகிற பசுமாட்டைச் சினைக்கு ஊசி போட கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்… இப்படி முடிவற்ற வேலைகள் இருக்கும். அதிலும் வயலில் உழவடை தொடங்கி, அறுவடை நாளில் களத்தில் இருத்தல் முதலாகக் கிராமத்துச் சிறுவர்கள் செய்கிற வேலைகளுக்குக் கணக்கேது? இந்தச் சூழலில் புத்தகத்தை எடுத்து வாசிப்பது சிரமமான காரியம்தான். அறுபதுகளில் பெரும்பாலான வீடுகளில் அகல் விளக்கு, ஹரிகேன் விளக்கு, காடா விளக்கு போன்றவை இருளில் ஒளியேற்றிட பயன்பட்டன. கிராமத்தினர் இரவு எட்டு மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுவிட்டுத் தூங்கிடச் செல்வார்கள். வீட்டிலிருக்கிற ஒன்று அல்லது இரண்டு விளக்குகளில் நான்கைந்து குழந்தைகள் படிக்க வேண்டும். ஆங்கிலம், கணக்கு போன்ற பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால், கிராமத்துச் சூழலில் யாரிடமும் போய் விளக்கம் கேட்பது? வீட்டில் வயல் வேலை, ஆடு, மாடுகளைப் பராமரித்தல் என்று சிரமப்பட்டு, நான்கைந்து மைல்கள் நடந்துபோய் பள்ளிக்குப் போனால், அங்குத் திட்டுக்களும், அடிகளும் காத்திருக்கும்போது, சிறுவர்களின் மனமும் உடலும் அடைகிற வலிகளும், வேதனைகளும் அளவற்றவை. கிராமத்தில் ஓரளவு வசதியானவர்கள் எனினும் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைத்திட பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.  இந்தச் சூழலில் வயலில் கூலி வேலை செய்கிறவர்களின் வீட்டில் அன்றாடம் சாப்பிடுகிற உணவுக்குக்கூட  தட்டுப்பாடு நிலவிய வறுமையான சூழலில் உயர்நிலைக் கல்வி என்பது அபூர்வமானது.

 

 

               எனக்குத் தெரிந்த அளவில்  சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வந்து பள்ளியில் படித்த மாணவர்களில் சிலர் ஒன்பதாம் வகுப்புடனும், சிலர்  பத்தாம் வகுப்புடனும் நின்று விட்டனர். என்னுடன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வயல் வேலை செய்துகொண்டிருந்த நண்பன் முருகேசனுக்கு  அடுத்த வருடம்- பதினைந்து வயது- சொந்த அத்தை மகளுடன் திருமணம் நடைபெற்றது. வயல் வேலை செய்வதற்கும், வீட்டில் சோறு ஆக்குவதற்கும் ஆள் வேண்டியிருப்பதாலும், அவ்வப்போது அவனுடைய அம்மாவுக்கு உடம்பு சௌகரியமில்லாமல் போவதாலும் கல்யாணம் செய்துகொண்டதாக முருகேசன் என்னிடம் சொன்னான். மறவர் சாதியைச் சார்ந்த முருகேசன் அப்பாவி. நான் பதினொன்றாம் வகுப்புப் படித்துத் தேர்வடைந்தபோது, ஆண் குழந்தைக்குத் தந்தையானதை முருகேசன் இயல்பாக என்னிடம் சொன்னான். பொம்பளைப் பிள்ளைகள் என்றால் எந்தவிதமான கேள்வியும் கிடையாது. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புடன் பெரும்பாலான சிறுமிகளின் கல்வி கற்றல் முடிந்துவிடும். சிறுமி, வயதுக்கு வந்தபிறகு   பள்ளிக்கு அனுப்பக்கூடாது   என்ற பொதுப்புத்தி அன்று நிலவியது. என்னுடன் படித்த பெரும்பாலான சிறுமிகளுக்குப் பதினாறு வயதுக்குள் திருமணம் நடந்தது. சிலர் அடுத்த வருடத்திற்குள் இடுப்பில் கைக்குழந்தையுடன் தெருவில் நடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் உடன் படிக்கிற சக மாணவியைத் தற்செயலாகத் தெருவில் பார்த்தால்,  புன்னகைக்க மாட்டேன். அந்தப் பெண்ணும் குனிந்த தலை நிமிராமல் நடந்து போவார். வகுப்பறையில் மாணவனும், மாணவியும் அரட்டை அடிப்பது சாத்தியமில்லை. கிராமத்தில் சுவருக்கும் கண், காது இருக்கும். பெண்ணுடல் என்றால், வயதுக்கு வந்தவுடன் யாரோ ஓர் ஆணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டால்  பெரிய கடமை முடிந்தது என்று  கருதிய பெற்றோர்  எழுபதுகள் காலகட்டத்தில்  நிறைய இருந்தனர்.  பொதுவாக உயர்நிலைக் கல்வியின் அவசியம் பெரிதும் அறியப்படாமல் இருந்தது.

 

 

நான் பயின்ற அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதலாக ஒன்பதாம் வகுப்பு வரையிலும் சிமிண்டு தரையில்தான் உட்கார்ந்திட வேண்டும். பத்து, பதினொன்று வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திட நீளமான பெஞ்சுகளும்,  எழுதுவதற்கான டெஸ்க் எனப்பட்ட நீளமான மேசைகளும் இருந்தன. பள்ளியில் இருந்த நான்கு கட்டடங்களின் கூரைகளும் தென்னை ஓலையினால் பின்னப்பட்ட கிடுகினால் வேயப்பட்டிருந்தன. அந்தக் கூரை இரண்டு ஆண்டுகள்கூடத் தாங்காமல், ஓட்டை விழுந்து விடும். மழைக்காலத்தில் பொத்துக்கொண்டு தண்ணீர் உள்ளே கொட்டும். வகுப்பறைகளின் தரை ஈரமாக இருப்பதால், அடைமழைக் காலத்தில் மாணவர்களுக்கு எப்பொழுதும் விடுமுறைதான். அப்புறம் தலைமை ஆசிரியர் ஊரில் இருக்கிற வசதியான புள்ளிகளைப் பிடித்து, கூரை மேய்வதற்கான வழியை மேற்கொள்வார். எங்கள் அப்பச்சி (அய்யாவின் அப்பா) மூ.வடிவேல்  அவர்கள் பள்ளிக் கட்டடக் கூரையை மேய்வதற்கான செலவுகளைச் சில தடவைகள் ஏற்றிருக்கிறார்

 

 

நூற்றுக்கணக்கில் மாணவமாணவியர் படித்த எங்கள் பள்ளியில் கழிவறைகள் என்று சொல்லப்பட்ட கட்டடம், சிறிய சுவர் தடுப்பிற்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக இருந்தது. மேற்கூரை எதுவும் இல்லை. ஒரே நேரத்தில் நான்கைந்து மாணவர்கள்தான் நீளமான சிமிண்டு திண்டில் ஏறிநின்று சிறுநீர் கழிக்க முடியும். பெண் குழந்தைகளுக்கும் அதே நிலைமையில்தான் கழிவறை இருந்தது.  கழிவறைக்குப் பின்புறம் இருக்கிற புளியமரத்தடியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் ஒன்னுக்கு அடிப்பார்கள். எல்லாம் திறந்தவெளிதான்.  எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கிற மாணவர்கள் பள்ளிக்கு வெளியேபோய், எதிரில் இருக்கிற முள்ளுக்காட்டுக்குள் நுழைந்து சிறுநீர் கழிப்பார்கள்.   பள்ளிக் கழிவறையில் தண்ணீர் வசதி இருக்காது. பெரிய வகுப்பு மாணவிகள், தண்ணீர் இல்லாத பிரச்சினையை எப்படி எதிர்கொண்டனர்? என்று தெரியவில்லை.  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ய வருடந்தோறும் வருகிற மாவட்ட கல்வி அலுவலர் போன்றவர்கள் இது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை?  இன்று கழிவறைகூட குளிரூட்டப்பட்ட நிலையில் மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன வசதியுடன்  நகர்ப்புறப் பள்ளிகள் செயல்படுகின்றன.  அறுபதுகளில் அடிப்படையான வசதிகள்கூட இல்லாத   உயர்நிலைப்பள்ளிகளை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.         

 

 

அன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் நடத்திய பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல்   இருந்தன.  இப்படியான பள்ளிகள்கூட இல்லாமல் போயிருந்தால், சமயநல்லூர் வட்டாரச் சிறுவர், சிறுமியர் உயர்நிலைக் கல்வி பயின்று இருந்திருக்க முடியாது. எனக்கு முந்தைய தலைமுறையில் விஞ்ஞானிகளாகவும், துணைவேந்தர்களாகவும், மாவட்ட ஆட்சியராகவும், துறை வல்லுநர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், பேராசிரியர்களாகவும் சிறப்புடன் செயலாற்றி, சாதனையாளர்களாக விளங்கியவர்கள் இதுபோன்ற அடிப்படை வசதியற்ற பள்ளிகளில் படித்தவர்கள்தான்.

 

( ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...