???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வகுப்பறை வாசனை - 6: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   27 , 2019  06:49:02 IST


Andhimazhai Image

வகுப்பறையில் ஆசிரியர் போதிக்கிற போதனைகள் மட்டும் சிறுமியையோ அல்லது சிறுவனையோ முழுமையாக உருவாக்குவது இல்லை. அம்மாவின் அரவணைப்பில் இருந்து விலகிடும் குழந்தை, மெல்ல தவழுதல், அடியெடுத்து வைத்தல், பேசக் கற்றல், வேடிக்கை பார்த்தல் என்று புதிதாகக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. வீட்டைவிட்டு வெளியேவந்து பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது குழந்தையின் தேடல் விரிவடைந்து, புதிய விஷயங்களை அறிந்துகொள்கிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த பச்சிளம் சிசுவின் செயல்கள் ஒவ்வொன்றும் கற்றல் பின்புலமுடையவை. சமூகத்தின் உறுப்பினராவதற்கான செயல்பாடுகளில் குழந்தையை வடிவமைப்பதில் பள்ளிக்கூடம், முக்கிய இடம் வகிக்கிறது. பள்ளிக்கூடத்தில் போதிக்கப்படும் எண்ணும் எழுத்தும் முக்கியமானவை என்றாலும், சமூகச் சூழலுடன் ஒத்திசைந்து அறிந்திடும் விஷயங்கள் முக்கியமானவை. குறிப்பாக வகுப்பறை நண்பர்கள் மூலம் பெறுகிற அனுபவங்களும் கிராமத்தினருடன் கலந்து உரையாடுகிற பேச்சுகளும்.

 

தெருவில் விளையாடுகிற நண்பர்கள் என்ற எல்லையானது, பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கிற நண்பர்கள் என்று விரிவடைந்த காரணத்தினால் எனது நட்பு வட்டம் விரிவடைந்தது. புதிய விளையாட்டுகள், ஊர் சுற்றுதல் ஆகிய  இரண்டும் நண்பர்கள் மூலம் இடைவிடாமல் எனக்கு அறிமுகமாகின. விடுமுறை நாளில் காலை உணவிற்குப் பின்னர் வீட்டைவிட்டுக் கிளம்பினால் எங்களுடைய கால்கள் ஏதோ ஒரு இடத்திற்குப் போகும். வையை ஆறு கண்மாய், கிணறு என நீராடுவதில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். கண்மாயில் வெட்டுப் பள்ளம் இருக்கும் கவனமாகக் குளிக்கணும் என்று பெரியவர்கள் எப்பொழுதும் எச்சரிப்பார்கள். ஒரு தடவை காலங்கரையில் வெள்ளம், அதிகமாகப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்தவழியில் போன யாரோ ஒருத்தர், ’ஏய் தண்ணி ரொம்ப வருது வீட்டுக்குப் போங்கடா” என்று அதட்டினார். எங்களில் ஒருத்தன், ‘எல்லாம் தெரியும் என்று தெனாவட்டாகப் பதில் சொன்னான். அன்று எல்லாருக்கும் வீட்டில் அடி கிடைத்தது. பொதுவாகக் கிராமத்துவெளியில் எதுவும் தவறாகச் செய்திட முடியாது. அப்புறம் இன்னார் பேரன் அல்லது மகன் என்பது எல்லோர் நெற்றியிலும் ஒட்டியிருக்கும். கண்காணிப்பு, கிராமத்து வெளியேங்கும் பரவியிருந்த சூழல், ஒருவகையில் சிறுவர்களுக்குப் பாதுகாப்புத்தான்.

 

வயல் வெளியில் வரப்பில் நடந்து போகும்போது, திடீரெனச் சாரைப் பாம்பு சரசரவெனப் போவதைப் பார்த்தவுடன், பயத்துடன் சற்று ஒதுங்கி நிற்போம். அப்புறம் எங்கள் பயணம் தொடர்ந்திடும். எது விஷமுள்ள பாம்பு எது விஷமில்லாத பாம்பு என்ற வேறுபாடு, எங்களுக்குத் தெரியும். நட்டுவாக்காலி, தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளை அடையாளம் கண்டு ஒதுங்கிப்போக வேண்டுமெனக் கிராமத்தினர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தனர். எதைச் செய்யக்கூடாது என்பது தெரிந்தநிலையில் கிராமத்தில் வாழ்ந்த பிற உயிரினங்களைப் பற்றிய விவரங்களைக் கற்றது,  சாதாரண விஷயமல்ல. தட்டான் தாழப் பறந்தால் மழை வரும்; பகலில் ரொம்பப் புழுக்கமாக இருக்கு, சாயங்காலம் நிச்சயம் மழை வரும்; பிள்ளையார் எறும்புகள் முட்டையைத் தூக்கிட்டுப் போகுதுக, நிச்சயம் மழை வரும்; ராத்திரி நிலாவைச் சுற்றி விட்டமாகக் கோட்டை கட்டியிருக்கு, நிச்சயம் மழை வரும்.. இப்படி இயற்கையைக் குறியீட்டு நிலையில் புரிந்துகொள்வது எப்படி என்பதைக் கிராமத்தில் வாழ்ந்த கல்வியறிவற்ற எளிய மனிதர்களிடமிருந்து நிரம்பக் கற்றுக்கொண்டோம்.

 

விளையாடத் தொடங்குவதற்கு முன்னர் யார் ’பட்டு வரவேண்டுமெனத் தீர்மானிக்க விளையாட்டுப் பாடல் பயன்பட்டது. விளையாடுகிறவர்கள் வட்டமாகக் கூடி நின்று, நீட்டிய இரு கைகளையும் யாராவது ஒருத்தன் மாற்றிமாற்றித் தொட்டு ’அத்திலி பித்திலி மக்கான் சிக்கான் பால் பறங்கி ராட்டினம் சல்லைத் தூக்கி மேலே போடு சர்க்கார் வீட்டு நண்டு எங்க மாடு இளைச்சுப் போச்சு புல்லைத் திங்குற கொரப்பயல்’ என்பான். இதுபோல் ஏதாவது இடைவிடாமல் சொல்லுவது அல்லது பாடுவது வழக்கமாக இருந்தது. அதிலும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து தெருவில் போனால், திண்ணையில் அமர்ந்திருக்கிற பெரிசுகள் கூப்பிட்டு யாருடைய மகன்கள் என்று விசாரிப்பார்கள். புதிர்க் கதைகள் போட்டு விடுவிக்கச் சொல்லுவார்கள். ஒரு தடவை பெரியவர் ஒருத்தர், ’கிழவன் அழுது புரண்ட புழுதியிலே கிண்டி முளைத்த பனையோலை கீழே ஏழு ஒலை மேலே ஏழு ஓலை’ என்று மூன்று தடவைகள்  சொல்லச் சொன்னார். நாங்கள் திணறிப் போய்விட்டோம்.  அப்புறம் எனது அய்யாப்பா மூன்று தடவைகள், வேகமாகச் சொல்லச் சொன்ன வரிகள் பின்வருமாறு: ’கொள்ளை வறுத்துக் கிழவி குதியில் கொட்டு’ வேகம்வேகமாகச் சொன்னால் நாக்குபுரண்டு தத்தளித்துச் சொற்கள் குழம்பிவிடும். இவை போன்ற வாசகங்கள் குழந்தையின் நாக்கின் சுழற்சிக்குப் பயிற்சி அளித்ததுடன், ஒலிப்பைச் சீராக்கிட பெரிதும் உதவின. சிறுவர்களாகிய எங்களின் அறிதல் திறனையும் ஞாபக ஆற்றலையும் வளர்த்ததில் கிராமத்தினரின் பங்கு கணிசமானது.

      

மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து, எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள நாகமலை அடிவாரத்தில் இருக்கிற புல்லூத்துக்குப் போன சம்பவம் மறக்க முடியாதது. சின்ன தூக்கு வாளியில் பழைய சோறு, சுண்டக் காய்ச்சிய குழம்புடன் ஐந்து சிறுவர்கள் மலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் ஓடையாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வையை ஆற்றைக் கடந்து போனோம். ஏற்கனவே அங்கு சென்றிருந்த நண்பன் செல்கிற வழியில் பின்தொடர்ந்தோம். வாழைத் தோப்பிற்குள் ஊடாக நடந்து, நாகமலை கரட்டை நோக்கிப் பாதை போனது. மலையின் உச்சியில் விரைத்து நின்ற மூன்று பெரிய பாறைகள் இடையன் இடைச்சி கல் எனப்பட்டன. அந்தக் கதையை அறியாத சின்னப் பசங்க எங்கள் ஊரில் இருக்க மாட்டார்கள். ஒருமுறை கிருஷணன் காட்டில் திரியுறப்ப தாகம் தாங்காமல், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடையன், அவனுடைய மனைவி, மகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார். அவர்கள் கரட்டா வண்டி எனப்படும் ஓணானின் மூத்திரத்தைப் பிடித்துக் குடிப்பதற்காகக் கொடுத்தபோது, கோபமடைந்த கிருஷணன் அவர்களைக் கல்லாகப் போகுமாறு சபித்து விட்டாராம். அதுதான் அந்த மூன்று பெரிய பாறைகள். சுற்றிலும் கிடக்கிற சின்னப் பாறைகள்தான் மாடுகள், கன்னுக்குட்டிகள். அந்தப் பாறை இருக்கிற இடத்துக்குப் போனால், கிருஷ்ணரின் தேர்ச் சக்கரம் பதிந்த தடம் தெரியும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உச்சியில் இருக்கிற இடையன் இடைச்சி இடத்துக்குப் போகிற ஒற்றையடிப் பாதையின் இரு பக்கமும் கடுக்காப் பழம் காய்க்கிற மரத்தின் கொரண்டி முட்கள், தோலைக் கிழித்து விடும். என்றாலும் பள்ளிக்கூடம் செல்கிற பத்து வயதுக்குள்ளாக எங்கள் ஊர்ப் பசங்களில் பெரும்பாலானோர் இடையன் இடைச்சி பாறைக்குப் போய் விடுவார்கள். அது ஒரு சாதனை அல்லது சாகசம். நான் நான்காம் வகுப்புப் படிக்கிறப்ப இடையன் இடைச்சி பாறைக்குப் போனேன். மலை உச்சியில் பெரிய திடல் போன்ற இடத்தில் அந்தப் பாறைகள் விநோதமாக நின்றன.  போகிற வழியில் பறவைகளின் றெக்கைகள், முள்ளம் பன்றியின் முட்கள், வழுவழுப்பான இயற்கையில் விளைந்த காக்காப் பொன் எனப்படும் சிலிகா, காற்றாடிக் காய்கள் போன்றவற்றைப் பொறுக்கிக்கொண்டு வந்தோம். முள் குத்துவதைப் பொருட்படுத்தாமல் கடுக்காப் பழங்களைப் பறித்துத் தின்றோம். மலையைப் புரிந்திட முயன்றது பெரிய விஷயமல்லவா?

      

நாகமலை அடிவாரத்தில் பெரிய மரங்கள் அடர்ந்த சோலை போன்ற இடத்தில் ஊறிக் கொண்டிருந்த இயற்கையான நீருற்று, சின்னக் கட்டுமானத்தின் வழியாக வழிந்தோடுமாறு அமைக்கப்பட்டிருந்தது. புல்லுத்து எனப்பட்ட அந்த ஊற்றின் தண்ணீர் குடிப்பதற்குச் சுவையாக இருந்தது. கடுமையான கோடையிலும் ஊற்று நீர் குளிர்ச்சியாக இருந்தது. அந்த ஊற்றில் குளித்துவிட்டு, கொண்டு போயிருந்த சோறைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்குத் திரும்பினோம். எட்டு வயதுச் சிறுவர்களான எங்களை எப்படி அவ்வளவு தொலைவு அனுப்பிட அம்மாகள் சம்மதித்தார்கள் என்பது இப்பவும் தெரியவில்லை. சுக்கான் பாறைகளும் முட் செடிகளும் நிரம்பிய நாக மலையில் விஷமுள்ள பாம்புகள் அதிகமென்றாலும் எங்களின் பயணத்தை அனுமதித்த பெற்றோர், நல்லது கெட்டது புரியட்டும் என்ற நம்பிக்கையுடன்தான் அனுப்பியிருக்க வேண்டும்.

    

நான் 1965ஆம் ஆண்டில், நான்காம் வகுப்புப் படிக்குப்போது எங்கள் வகுப்பு மாணவர்களை ஆண்டிபட்டிக்கு அருகில் வைகை அணைக்குச்  சுற்றுலா அழைத்துப் போவதாகவும் அதறகான கட்டணம் ரூ.2/- என்று அறிவிப்பை ஆசிரியர் வகுப்பில் அறிவித்தார். எனது தந்தையாரிடம் தகவலைத் தெரிவித்து, சுற்றுலா செல்ல அனுமதி பெற்றுப் பணத்தை வாங்கி ஆசிரியரிடம் கொடுத்தேன். சுற்றுலா செல்வதாக அறிவிக்கப்பட்ட நாளுக்கு முந்தைய இரவில் வாழை இலையில் கட்டப்பட்ட மூன்று சோற்றுப் பொட்டலங்கள், மறுநாள் அணிந்திட ஆடைகள், துண்டு, கொஞ்சம் பணம் என எல்லாவற்றையும் ஒரு பையில் வைத்து என தந்தையார் என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டார். பள்ளியில் உறங்கிய மாணவர்களை அதிகாலையில் எழுப்பி, ரயிலில் ஏற்றி, மதுரை சந்திப்புக்குக் கூட்டி வந்தார்கள். காலையில் ஒன்பது மணியளவில் இன்னொரு ரயிலில் பயணித்து ஆண்டிபட்டி ஸ்டேஷனில் இறங்கினோம். அந்த ஊரில் இருந்த பள்ளியில் தங்கி, உணவைச் சாப்பிட்டோம்.

       

மதிய உணவிற்குப் பின்னர் ஆண்டிபட்டியிலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள வைகை அணையை நோக்கி நடந்தோம். வெயிலினால் வாடி வதங்கி, செல்லும் வழியில் இருந்த கிராமங்களில் இருந்த வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்தோம். எப்படியோ மாலையில் வைகை அணை போய்ச் சேர்ந்தோம். கண்ணுக்குப் பசுமையான பூங்கா, குட்டி ரயில், சறுக்குகள், விளையாட்டுகள் என எல்லோரும் ஓடிப்போய் விளையாடி மகிழ்ந்தோம். அணையில் தேக்கப்பட்டிருந்த தண்ணீர் கடல் போலப் பரந்திருந்தது. அங்கிருந்துதான் எங்கள் ஊரில் பாய்கிற வைகை ஆற்றுக்குத் தண்ணீர் வருகிறது என்பதை அறிந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. பொழுது மங்கி, விளக்குகளின் வெளிச்சத்தில் அணைக்கு முன்னர் இருந்த பூங்கா ஒளிவெள்ளத்தில் பிரகாசித்தது, உற்சாகம் அளித்தது. இரவு எட்டு மணியளவில் மீண்டும் ஆண்டிபட்டி நோக்கி இருளுக்குள் நடக்கத் தொடங்கினோம். ஏற்கனவே நான்கு மைல்கள் நடந்தது, அணையைச் சுற்றிப் பார்த்தது எனப் பெரும்பாலான மாணவர்கள் களைப்புடன் இருந்தனர். இரவில் எப்படியோ நடந்துபோய். தங்கியிருந்த பள்ளிக்குப் போய் உணவுப் பொட்டலத்தைப் பிரித்தால், அதிலிருந்து வந்த வாடை காரணமாக அதைச் சாப்பிடாமல், தூக்கி எறிந்துவிட்டு, சோர்வுடன் தூங்கி விட்டேன்.

 

மறுநாள் அதிகாலையில் எழுந்து, ரயில்வே ஸ்டேசனுக்கு நடந்துபோய் ரயிலில் ஏறி உட்கார்ந்தோம். இரவில் எதுவும் சாப்பிடாத காரணத்தினால், எனது தலை சுற்றுவது போலிருந்தது. ஓடும் ரயிலில் அப்படியே தூங்கி விட்டேன். ’மதுரை ரயில் நிலையம் வந்துவிட்டது இறங்குங்க என்ற ஆசிரியரின் குரலைக் கேட்டு, எழுந்துபோய், ரயிலைவிட்டுக் கீழே இறங்கினேன். ஒரு கணம் என்ன நடந்தது என்று புலப்படவில்லை. தலைச்சுற்றல் வேகமாகி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் எனது நினைவு தப்பிவிட்டது. அப்புறம் முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் எழுந்து உட்கார்ந்தேன். ஆசிரியர் தந்த வடையைத் தின்று,  தேநீரைக் குடித்தவுடன் தெளிவு ஏற்பட்டது. வீட்டிற்கு வந்தவுடன் மயங்கி விழுந்த சம்பவத்தைத் தந்தையாரிடம் சொன்னேன். அவர், ’ஸ்கூல் பிள்ளைகள் என்று  சலுகை வாங்கி ரயிலில் கூட்டிட்டுப்போன வாத்தியானுக பிள்ளைகளுக்குச் சாப்பிடக்கூட எதுவும் வாங்கித்தராமல், பணத்தைக் கொள்ளையடிச்சிட்டானுக என்று திட்டினார். மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு வந்து ஹெட்மாஸ்டரிடம் சத்தமாக எனது தந்தையார் பேசினார். தொடக்கப் பள்ளிக்கூட பிள்ளைகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, மிச்சமாகும் பணத்தைத் தாங்களே வைத்துக்கொள்கிற திருட்டுப் புத்தி, ஆசிரியர்களுக்கு இருந்திருக்கிறது என்பதுதான்  சுற்றுலா, எனக்குக் கற்றுத்தந்த தந்த பாடம். எட்டு அல்லது ஒன்பது வயதுக் குழந்தைகளை வெயிலில் நான்கு மைல்கள் நடக்க வைத்ததுடன், திரும்பவும் இருட்டில் நான்கு மைல்கள் நடக்க வைத்த ஆசிரியர்கள், உண்மையில் கொடூரமானவர்கள். மாணவர்களிடமிருந்து சுற்றுலாவுக்கென வசூலித்த தொகையில் கணிசமான தொகையைக் களவாடிய ஆசிரியர்கள், சிறிய அளவிலாவது மாணவர்களுக்கு இரவு உணவு வாங்கித் தந்திருக்க வேண்டும். என்ன செய்வது? திருட்டு ஆடுகள் எங்கும் புகுந்து விடும் ஆற்றலுடையவை.   

      

என்னுடைய வகுப்பறைத் தோழர்களுடன் ஆன நட்பு, பள்ளிக்கு வெளியிலும்  தொடர்ந்தது.   பெரும்பாலும் விடுமுறை நாட்களில்  கிராமத்து வெளியெங்கும் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித் திரிந்தேன். ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக ஏதாவது செய்திட எங்களுக்குள் ஆர்வம் கொப்பளித்தது. என்னுடைய நண்பன்  நெடுஞ்சேரலாதன், ஒருநாள் பள்ளிக்கு வந்தபோது, இலையில் பொதிந்திருந்த பொட்டலத்தை என்னிடம் கொடுத்தான். அதைப் பிரித்தால் சமைக்கப்பட்ட இறைச்சி. ’முயல் கறி சாப்பிட சுவையாக இருக்கும் என்றான். உண்மையிலே அநத் இறைச்சி, செமையாக இருந்தது. அவனுடைய உறவினர்கள் வேட்டைக்குப் போய், வேட்டையாடிக் கொண்டுவந்த முயல்தான் இது என்று சொன்னவுடன், எனக்கு வேட்டை பற்றிய எண்ணம் உருவானது. நண்பர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டைக்குப் போவது என முடிவெடுத்தோம். அவன் வீட்டில் வளர்க்கப்பட்ட கோம்பை நாய், பார்க்கிற ஆளை மிரட்டிடும். எங்கள் ஊருக்கு வெளியே பரவியிருந்த சீமைக் கருவேல முட்செடிகளை அரிவாளால் வெட்டி, அதற்குள் குகை ஒன்றை ஏற்படுத்தியிருந்தோம். அங்கிருந்து பன்றி வேட்டைக்குப் போவது என முடிவெடுத்தோம்.  கோம்பை நாயைக் கூட்டிக்கொண்டு வந்த சேரலாதன், முள் காட்டிற்குள் போய், பன்றி குட்டிகளை நோக்கி நாயை ஏவினான். அது, பாய்ந்துபோய் ஒரு குட்டியைக் கவ்வித் தூக்கிவந்து, கொன்று போட்டது. எங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் செத்துப்போன பன்றிக்குட்டையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அப்புறம் கரட்டான்களைக் கொல்லுதல், மீன் பிடித்துச் சுட்டுச் சாப்பிடுதல், கவண் கல்லினால் குருவியை அடித்து வீழ்த்தி, தீயில் சுட்டுத் தின்னுதல்.. இப்படியான வேட்டை அனுபவங்கள்,  தந்த பாடங்கள் உயிரோட்டமானவை.

 

பள்ளிக்கூடம் என்ற அதிகார மையம் கற்றுத் தந்ததைப்போல எங்கள் கிராமமும், கிராமத்தினரும் எனக்குக் கற்றுத்தந்த பாடங்கள் அளவற்றவை. ஒவ்வொரு குழந்தையின் சுயத்தையும் உருவாக்குவதில் அக்குழந்தை  வாழ்கிற சமூகப் பின்புலமும் சூழலும் முக்கியமானவை.

 

(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)   

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...