???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வகுப்பறை வாசனை - 4: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  06:58:53 IST


Andhimazhai Image
எங்கள் வீட்டிற்குப் பின்புறம் சுமார்  நூறு அடிகள் நடந்தால் சேர்கிற இடத்தில் புதிதாகக் கட்டப்ப்பட்ட கருங்கல் கட்டடத்தில்தான் இனிமேல் நான்காம் வகுப்பு நடைபெறும் எனப் பிரேயரில் ஹெட் மாஸ்டர் அறிவித்தவுடன், நாங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். பள்ளி வளாகம் இட நெருக்கடி காரணமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது எனப் பின்னர் தெரிந்தது. பள்ளி இடைவேளையின்போது, தண்ணீர் குடிக்க வீட்டிற்குப் போகலாம் என்பது உற்சாகம் தந்தது. எங்கள் வகுப்பு ஆசிரியர் ராமசாமி சார், எல்லா மாணவர்களையும் எப்பொழுதும் கிண்டலாக ஏதாவது சொல்லுவார்; மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்ளும்வகையில் நிறுத்திப் பாடம் எடுப்பார்; புதிய விஷயங்களைப் பற்றி வகுப்பறையில் சொல்வதை நாங்கள் ஆவலுடன் கேட்போம். அவர், வாய்ப்பாடு புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்  அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களையும் மூச்சுவிடாமல் சொல்லுவதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்போம். இது எப்படி சாத்தியமென நினைத்துக்கொள்வேன். எல்லா மாணவர்களும் ஒரு வாரத்திற்குள் அறுபது வருடங்களின் பெயர்களையும் சொல்லாவிட்டால் உதை விழும் என அவர் எச்சரித்தார். பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத பிரசோற்பத்தி, ஆங்கிரச எனத்  தொடர்ந்திடும் சொற்களை நினைவுக்குள் கொண்டுவருவது சிரமமானதாக இருந்தது. எத்தனை தடவைகள் மனப்பாடம் செய்தாலும் அவை நினைவில் இல்லாமல் காற்றில் கரைந்து போயின. வகுப்பில் யாராலும் தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மொத்தமாகச் சொல்ல முடியவில்லை.
 
கையில் கடிகாரம் எதுவும் கட்டியிருக்காத போதிலும், ராமசாமி சார், துல்லியமாக நேரத்தைக் கணிப்பதில் கில்லாடி. உச்சி வெய்யிலின்போது, வகுப்பறையில் இருந்து வெளியே பார்க்கிறவர், ஒரு மாணவனை அழைத்து, இப்ப நேரம் பன்னிரண்டு மணி முப்பது நிமிசம் என்று சொல்லி அருகில் இருக்கிற வீட்டில் நேரத்தைக் கேட்டுவர ஏவுவார். சுவர்க் கடியாரம் இருக்கிற பக்கத்து வீட்டில் நேரத்தைக் கேட்டுவிட்டு வந்து மாணவன் சொல்கிற  நேரமும் அவர் ஏற்கனவே சொன்ன நேரமும், ஏறக்குறைய சரியாக இருக்கும்.  எங்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பம் ஏற்படும். சூரிய ஒளி, பூமியில் இருக்கிற ஏதோவொரு பொருளின்மீது படுவதால், தரையில் விழுகிற நிழலை வைத்து நேரத்தைக் கணக்கிடலாம் என்று வாத்தியார் கெத்தாகச் சொல்லிவிட்டுச் சிரிப்பார்.
 
கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் என விரிந்திடும் கணக்குகள், எல்லா மாணவர்களையும் பயமுறுத்தின. சிலர்  எண்களைப் புரிந்துகொள்ள முடியாமல், தினமும் ஆசிரியரிடம் அடி வாங்கி, வலியால் துடித்தனர். எங்கள் வகுப்பு ஆசிரியர், மாணவர்கள் எல்லோருக்கும் தனித்தனியாகப் பட்டப்பெயர் சூட்டுவதில் ஆர்வத்துடன் இருந்தார். ஏதோ ஒரு கணக்கு வழக்கில் தோற்றம், சிறப்பான செயல்பாடு. ஊர்ப் பெயர் எனப் பட்டப் பெயர்கள், மாணவமாணவியருக்குச் சூட்டப்பட்டன. எங்கள் வகுப்பில் ஒல்லியான தோற்றத்துடன் வாத்தியார் கம்பை ஓங்குவதற்கு முன்னர், துள்ளிக்குதிக்கிறவனின் பட்டப் பெயர் ’சில்லு வண்டு’.  கூழ்முட்டி, புல் தடுக்கி பயில்வான் என சில பெயர்கள் இப்பவும் நினைவில் உள்ளன. எனது பட்ட பெயர் ’சப்போட்டா’. எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காகப் பெற்றோருடன் தேத்தாம்பட்டி என்ற ஊருக்குப் போயிருந்தபோது, நான் அங்கிருந்த தோட்டத்தில், சப்போட்டா பழத்தைப் பறிப்பதற்காக மரத்தில் ஏறியதைப் பார்த்த ஆசிரியர், சப்போட்டா என்ற பட்டப் பெயரை வகுப்பில் சூட்டி விட்டார். வகுப்பில் ஆசிரியர் பட்டப் பெயரைச் சொல்வது பிரச்சினை இல்லை. விடுமுறை நாளில் ஊருக்குள் திரியுறப்ப, யாராவது சப்போட்டா என்று கத்திவிட்டு, ஓடி விடும்போது, அவமானமாக இருக்கும். பொம்பளைப் பிள்ளைகளுக்கும் பட்டப் பெயர்களைச் சூட்டிய வாத்தியாரின் செய்கை, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வருத்தத்தைத் தந்தது. பொதுவாக அந்தக் காலத்தில் வீடுகளில் அம்மாக்களே பிள்ளைகளுக்குப் பட்டப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது வழக்கம். சேட்டை செய்யும்போது எனது தாயார் என்னை முருங்கைக்காய் என்று சொல்லித் திட்டுவார். வகுப்பு ஆசிரியர் இடது கைப் பழக்கம் உள்ளவராதலால், ’வல்லாங் கை’ என அவருக்குப் பட்டப் பெயர் சூட்டிய மாணவர்கள், தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர்.
 
அந்தக் காலத்தில் பாடம் படிப்பதில் பின்தங்கிய குழந்தைகளைத் திட்டுவதற்கு மக்குகள் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். அப்படிச் சொல்வதைக் கேட்கும் சிறுவர்கள் மிகவும் வருந்தினர். பொதுவாக மக்குப் பிள்ளைகள்தான் சாயங்காலம் ஆசிரியர் வீட்டிற்குச் சென்று டியூஷன் படித்தனர். வகுப்பில் மாதந்தோறும் தேர்வுகள் நடத்தி, ரேங்க் அட்டை தருவது வழக்கம் இல்லாத காரணத்தினால், ஒரு மாணவனின் கற்றல்திறன் தோராயமாகத்தான் மதிப்பிடப்பட்டது. டியூஷன் என்ற பெயரைக் கேட்டால் எனக்கு பயங்கரமான வெறுப்பு. தினமும் மாலையில் உற்சாகமாக விளையாடுவது டியூஷன் காரணமாக நின்று விடும். இரண்டாம் வகுப்பில் படித்த என்னுடைய தங்கையும் தம்பியும் சுமாராகப் படித்ததினால், எங்கள் வீட்டில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இருந்த வாத்தியாரின் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்லும் வேலை, என்னிடம் வந்து சேர்ந்தது. என்னுடைய வகுப்பு ஆசிரியரின் துணைவியார் குப்பம்மாள் டீச்சர் வீட்டிற்கு நாங்கள் தினமும் கிளம்பிப் போவோம். அங்கே ஏழெட்டுப் பிள்ளைகள் ஏற்கனவே உட்கார்ந்திருப்பார்கள். டீச்சரின் மகள் கஸ்தூரி அக்கா அல்லது மகன் முருகேசன் அண்ணன் என்றைக்காவது பாடம் சொல்லிக்கொடுப்பார்கள்.  மற்றபடி எல்லாம் படிங்க என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போய்விடுவார்கள். நாங்கள் புத்தகத்தை எடுத்து, சப்தமாக வாசிப்போம். அதுதான் டியூஷன். புளியம் பழம் சீசனில் பெரிய கடகப் பெட்டி நிறைய ஓடுடன் இருக்கிற புளியம் பழங்களை எல்லோரும் வட்டமாக அமர்ந்து ஓட்டை உடைத்துச் சாக்கில் போடுவோம்.  டியூஷனில் ஒன்றும் சொல்லித் தருவதில்லை என்று தந்தையாரிடம் சொன்னேன். இப்படியான டியூஷன் அந்த வருடத்துடன் நின்று போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
 
நான் நான்காம் வகுப்புப் படிக்கிறப்ப நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றும்போது, பக்கத்து ஊரான ஊர்மெச்சிக்குளம் போனேன். ஊரின் நடுவில் பரந்திருந்த பெரிய திடலின் ஓரத்தில், நீளமான ஓட்டுக் கட்டடம், கிளை நூலகம் என்ற பெயர்ப் பலகையுடன் இருந்தது. ஆச்சரியத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தேன். சிலர் பத்திரிகைகள் வாசித்துக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் மெல்ல உள்ளே போனேன். மேசையில் இருந்த கண்ணன் என்ற பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். அதில் பிரசுரமாயிருந்த படக்கதை, வாசிப்பதற்கு உற்சாகமாக இருந்தது. அப்புறம் அம்புலி மாமா பத்திரிகை. கையில் உருவிய வாளுடன் வேதாளத்தைச் சுமந்திருக்கும் விக்ரமாதித்யன் கதையை வாசித்தவுடன் புனைவுலகில் மிதக்கத் தொடங்கினேன். வகுப்பறையில் புத்தகத்தைக் கட்டாயம் வாசித்து மனப்பாடம் செய்ய வேண்டிய நெருக்கடி இல்லாமல் இருந்ததால், நூலகப் பத்திரிகைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. அப்புறம் தனியாக அவ்வப்போது நூலகத்திற்குப் போய் குழந்தைகள் பத்திரிகைகளை வாசித்தேன். வாசிப்பின் வழியாக எனக்குள் மகிழ்ச்சி கொப்பளித்தது. அன்றைக்கு எப்படியோ எனக்குப் பிடித்த நூலகம், புத்தகங்கள், பத்திரிகைகள் என் வாழ்க்கை முழுக்கத் தொடர்வது ஒருவகையில் விநோதம்தான்.
 
 
பள்ளிக்கூடம் என்பது மாணவர்கள் தினமும் பாடங்களைப் படிப்பதற்காக மட்டுமிருந்ததாக எனக்கு நினைவில் இல்லை.  வகுப்பறையில் இருக்கிற கரும்பலகை வழுவழுவென மாறி, ஆசிரியர் எழுதுவது சரியாகத் தெரியாதபோது, பலகைக்குக் கரி தடவுகிற வேலை, மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வகுப்பில் நன்றாகப் படிக்கிறவன் என்பதுடன், சற்று உயரமாகவும் குண்டாகவும் இருப்பதனால், பெரும்பாலும் எல்லாப் பொதுவேலைகளிலும் எனது பெயர் சேர்க்கப்படும். பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எங்கள் குழு கிளம்பிப்போய் ஊமத்தைச் செடியின் இலைகளைப் பறித்துக்கொண்டு பள்ளிக்கு வந்து, சமையல் கூடத்தில் இருந்து  எடுத்துவந்த அடுப்புக் கரியுடன் தண்ணீர்விட்டுக் கிணற்றடியில் வைத்துக் கல்லினால் தட்டிச் சாந்தாக்குவோம். பின்னர் அந்தக் கறுப்புச் சாந்தைக் கரும்பலகையில் அழுத்தித் தேய்ப்போம். டிரவுசர், சட்டை எல்லாம் கரி படிந்த கோலத்தில், வீட்டிற்குப் போனால் திட்டுக் கிடைக்கும்.. மறுநாள் வகுப்பறையில் நுழையுறப்ப கன்னங்கருப்பாகக் கரும்பலகை மின்னும். சாக் பீஸினால் அதில் எழுதக் கை பரபரக்கும்.
 
என்னுடன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த சிலர் நான்காம் வகுப்பிற்குக்கூட வராமல், நின்றுவிடுவது, சாதாரணமாக நடைபெற்றது. சில பையன்கள், கற்றலில் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அத்தகைய மாணவர்களை அடித்து நொறுக்கினால், நிச்சயம் படித்து விடுவார்கள் என ஆசிரியர் தருகிற கொடுமையான தண்டனைகள் காரணமாகச் சிலர் வீட்டில் பள்ளிக்குப் போக மாட்டேன் என முரண்டு பிடித்து நின்று விடுவார்கள். அடித்து உதைத்தல், மணலில் முழங்கால் போட வைத்தல், தலையில் கொட்டுதல், காது மடலைப் பிடித்துத் திருகுதல், தொடையில் நமண்டுதல் எனச் சித்ரவதைக்கூடமாகிப் போன பள்ளிக்கூடம், சில பையன்களுக்கு வெறுப்பைத் தந்தது வியப்பில்லை.  சனிக்கிழமை மதியத்தில் இருந்து தொடங்குகிற விடுமுறை, திங்கள் கிழமையன்று காலை 9 மணிக்கு முடிந்து போவதை நினைத்து வருத்தப்படாத சிறுவர்களே இருக்க மாட்டார்கள். ஆசிரியரின் சித்ரவதை தாங்க முடியாமல், பள்ளிக்கு வராமல் நின்றுவிட்ட என் வகுப்பறை நண்பர்களைத் தெருவில் பார்க்கும்போது, ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், இன்னொருபுறம்  ஏக்கமாகவும் இருக்கும். இன்னும் சில நண்பர்கள், திடீரெனப் பள்ளியைவிட்டு நின்று விடுவார்கள். இடுப்பில் பிள்ளையுடன் திரிகிற அத்தகைய மாணவனைத் தற்செயலாகச் சந்திக்கும்போது கேட்டால், “எங்கம்மாவுக்கு பிள்ளை பிறந்திருக்கு. அதனால் சின்னப் பிள்ளையாக இருக்கிற மூத்த தங்கச்சியைத் தூக்கி வைச்சிருப்பதற்காக என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்” என்று எங்கப்பா சொல்லிட்டார் எனச் சாதாரணமாகச் சொல்லுவான். அவன் பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போன்று நிம்மதியுடன் சொல்லுவது எனக்குப் பொறாமையைத் தரும். இருந்தாலும் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடு, ஆசிரியர், புத்தகம், கண்டிப்பு, மனப்பாடம், அடி போன்றவை ஏற்படுத்தும் வெறுப்பையும் மீறிப் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது, எனக்குப் பிடித்தமானதாக இருந்தது.
 
பள்ளிக்கூடத்தில் சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிற இடத்தில் பையன்கள் ஒருபுறம் திரும்பி நின்று, ஒன்னுக்கு அடிப்பார்கள். சிறுமிகள் சற்றுத் தள்ளியிருக்கிற இடத்தில் சுவரைப் பார்த்தவாறு ஒன்றுக்கு இருப்பார்கள். அடிப்படை வசதிகளைப் பற்றி யாரும் கவலைப்படாத காலமது.  எங்கள் ஊரில் 90% வீடுகளில் கழிவறை என்ற வசதி இல்லாமல், திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்திய சூழலுடன் ஒப்பிடும்போது, பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகள் செல்லுவது என்பதுகூட, ஓரளவு ஆடம்பரமான விஷயம்தான்.
 
அன்றைய நாட்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் சாதாரணமாக ஏழெட்டுக் குழந்தைகள் இருக்கும். பெரிதும் விவசாயத்தை நம்பியிருக்கிற நடுத்தர வர்க்கத்தினர், கூலி விவசாயிகள் போன்றோரின் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது, கிழிசல் இல்லாத அழுக்கடையாத ஆடைகளை அணிந்திருப்பார்கள். காலில் செருப்பு அணியும் வழக்கம் என்பது இல்லை. வளரும் பிள்ளை என்பதால்  பெரும்பாலான பள்ளி மாணவர்களின் உடைகளைத் தொளதொளவென லூஸாக அளவெடுத்துத் தைத்து மாட்டி விடுவார்கள். சிறுவர்கள் டிராயரின் இடுப்பில் பட்டனைப் போடமுடியாமல்,  இரு முனைத் துணிகளையும் இழுத்துப் பிடித்து, முடிச்சுப் போட்டுக்கொள்வார்கள். டவாலி போட்ட டிராயரைத்தான் பெரும்பாலான சிறுவர்கள் உடுத்தியிருந்தனர். அப்பொழுது பள்ளிகளில் சீருடை என்ற ஏற்பாடு இல்லை. சில ஏழ்மையான சிறுவர்களின் டிராயரின் பின்புறத் துணி நைந்து போனதனால், வேறு கலர்த் துணியில் ஒட்டுப்போடப்பட்டிருக்கும். மாணவமாணவியர் யாரும் உள்ளாடை அணிகிற வழக்கம் இல்லை. சிறுமிகளில் சிலர் கவுன் அணிந்திருப்பார்கள்; சிலர் சீட்டித் துணியில் பூப்போட்ட சட்டையும் அரைப் பாவடையும் உடுத்தியிருப்பார்கள். 
 
தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து படித்தாலும், அவர்கள் இருவருக்குமிடையில் பெரிய சுவர் எப்படி உருவானது என்பது இப்பவும் புலப்படவில்லை.. சிறுவர்களின் உலகம் தனியாகக் குறும்புகளும், சேட்டைகளும் நிரம்பியதாக இருக்கையில், சிறுமிகள் எப்பொழுதும் அமைதியாக இருந்தனர். ஓப்பிட்டளவில், பையன்களைவிட சமவயதுப் பொம்பளைப் பிள்ளைகள் விவரமாக இருந்தனர். பையன்களைப் போலவே படிப்பில் அக்கறை இல்லாத சில சிறுமிகள், ஆசிரியரிடன் உள்ளங்கையில் அடிகள் வாங்கி, அழுதனர். என்றாலும்  வால்த்தனம் செய்கிற சிறுவனைப் பற்றி ஆசிரியரிடம் போட்டுக்கொடுத்து அடி வாங்கித் தருவது, பொம்பளைப் பிள்ளைகள் எனக் கருதிய பெரும்பாலான பையன்கள் வகுப்பறைத் தோழிகளை வெறுத்தனர். அதேவேளை வீட்டிலும், தெருவிலும் பால் வேறுபாடு இல்லாமல் பையன்களும் குட்டிப்பொண்ணுகளும் சேர்ந்து  விளையாடினோம். தொடக்கப் பள்ளியில் சிறுவர்களும் சிறுமிகளும் காந்தப் புலன்கள் போன்று எதிரெதிராக நிற்கிற நிலைதான், கடைசியில் கல்லூரிவரையிலும் தொடர்கிறது. இரு பாலரும் சேர்ந்து படிக்கிற பள்ளி என்பதற்கப்பால், இரு பாலரும் நண்பர்களாக இருக்கிற நிலையைக் கல்வி முறை ஏன் உருவாக்கிடவில்லை என்பது யோசிக்கப்பட வேண்டியதாகும்.
 

(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)

 
ஓவியம் - தியானேஸ்வரன்
   
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...