???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வகுப்பறை வாசனை - 3: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   06 , 2019  01:42:36 IST


Andhimazhai Image

‘‘இரண்டாம் வகுப்புப் படிக்கிற பி வகுப்பு மாணவர்கள், அப்படியே மூன்றாம் வகுப்புக்குப் பி வகுப்புக்குப் போங்க” என்று பிரேயரில் ஹெட் மாஸ்டர் சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஓடினோம். என்னுடன் படித்த சுகுமாறன், ”அப்படியே அடுத்த வருஷம் நான்காம் வகுப்பு, அப்படியே அஞ்சாம் வகுப்பு அப்புறம் ஹை ஸ்கூலுக்குப் போய் ஆறு சேர்ந்து ஏழு எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்னு, பன்னெண்டு, பதிமூணு, பதிநாலு, பதினைஞ்சு” என்று சொன்னவுடன் நண்பர்கள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. என்னுடன் இரண்டாம் வகுப்பில் படித்த சிலர் பள்ளிக்கு வரவில்லை. இனிமேல் படிக்கிற தொந்தரவு அவர்களுக்கு இல்லை, ஜாலி என்று நினைத்துக்கொண்டேன்.  அன்றைய காலகட்டத்தில் வசதியற்றவர்கள் வீட்டில்கூட ஐந்தாறு குழந்தைகள் சாதாரணம். கூரை வீடுகளில் அன்றாடங்காய்ச்சியாக வாழ்ந்தவர்கள், தங்களுடைய பிள்ளைகள், பள்ளிக்குப் போய் வயிராறச் சாப்பிடட்டும் என்று நினைத்தனர். பெற்றோர், தினமும் வயல் வேலை, கூலி வேலை எனச் செல்கிற சூழலில் பள்ளியில் போடுகிற சூடான மதிய உணவுதான், குழந்தைகளைப் பள்ளியை நோக்கி ஈர்த்தது என்று பின்னர் புரிந்தது. எதற்காகப் பள்ளிக்கூடத்தில் மதியஉணவு போடுகிறார்கள் என்றுதான் அந்தக் காலத்தில் நினைப்பேன்

மூன்றாம் வகுப்பு ஆசிரியர் பெயர் வேல் சார் என்ற வேலுச்சாமி. தமிழ்ப்பாடத்தைக் கதைகள் சொல்லி நடத்திய அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பொது விஷயங்களையும் அவர் செயல்முறைப் பயிற்சிமூலம் விளக்கினார். தெருவில் வாழைப் பழத் தோலைக் கவனமில்லாமல் வீசியதால், பின்னால் வருகிறவர், தோலினால் வழுக்கி விழுதல், சாலையில் கிடக்கிற முள்ளை எடுத்துத் தெருவோரத்தில் போடுதல்,  வாகனங்கள் செல்கிற சாலையைக் கடந்து செல்லுதல் போன்றவற்றை மாணவர்களை வைத்து நிகழ்த்திக் காட்டினார். சாலையைக் கடப்பதற்கு அவர் தந்த ஆலோசனை இன்றைக்கும் பயனுள்ளதாகும். சாலையைக் கடந்திட நினைக்கிறவர், முதலில் வலது புறம் வாகனங்கள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். வாகனம் எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, வேகமாக நடந்து, சாலையின் நடுவில் நின்று இடது பக்கம் பார்த்து, சாலையைக் கடந்து செல்ல வேண்டும். குழந்தைகள் மனதில் இதுபோன்ற சமூகம் சார்ந்த விஷயங்கள், நுட்பமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

வகுப்பறை எனக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. சக மாணவர்களுடன் சேர்ந்து ஏதாவது கதை பேசி, ஓடிப் பிடித்து விளையாடும் இடம் எனத் தோன்றியது. ஒன்றாவது படிக்கிறப்ப ஐந்து வயதுச் சிறுவனான எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஆசிரியரும் பெரியவர்களும் கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் நானும் எனது நண்பர்களும் ஒருபோதும் அப்படி கருதியது இல்லை. எல்லாம் தெரியும் என்ற பெரியவர்களின் மனநிலைதான் எனக்கும் இருந்தது. பொதுவாக எல்லாக் குழந்தைகளும் தம்மளவில் தங்களைப் பெரியவர்களாகக் கருதுகின்றன என்பதுதான் உண்மை. ஆனால்  அதேவேளையில் மூன்றாம் வகுப்புப் படிக்கிற எனக்கு ஒன்றாம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ’பொடியனுக அவனுகளுக்கு இன்னும் தெரியாது’ என்று நினைத்தேன்.

ஆங்கில எழுத்துகளை அறிமுகப்படுத்திய ஆசிரியர் A,B,C,D..எனச் சப்தமாகச் சொல்லிட நாங்கள் பின்பாட்டுப் போல சொல்வோம். எதுக்கு அந்த எழுத்துகளைக் கற்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆங்கில எழுத்துகள் 26 என்பதும் அவற்றை மனப்பாடம் செய்து கட்டாயம் ஒப்பிக்க  வேண்டுமென்ற நிலை, பல மாணவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அதிலும் பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்ற வேறுபாடு, சோதனையாக இருந்தது. ஏற்கனவே கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் போன்ற கணக்குகளால் வெறுப்படைந்திருந்த சிலர், இது என்ன புதிய சோதனை? என்று நினைத்தனர். ஆங்கிலம் என்றால் என்னவென்று புரியாமல், எழுத்துக்களை வாசிக்கச் சொன்னது, சிரமத்தைத் தந்தது.

ஆசிரியர் ஏதாவது ஒரு தமிழ்ச் சொல்லைச் சொன்னவுடன், அந்தச் சொல்லைச் சிலேட்டில் எழுதிட வேண்டும் . இப்படி மொத்தம் இருபது சொற்களையும், எழுதி, வரிசையாகச் சிலேட்டுகளை அடுக்குவோம். சார், ஒவ்வொரு சிலேட்டாக எடுத்துத் திருத்தி, மதிப்பெண் போடுவார். அதிகமான சொற்களைப் பிழையில்லாமல் எழுதியவர்களுக்குக் கைதட்டல் கிடைக்கும். ரொம்பவும் பிழையாக எழுதியவர்கள், அடி வாங்குவார்கள். கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள பாடலை எல்லோரும் உரத்த குரலில் கத்திப் பாட்டுவோம். ற, ர வேறுபாடு, ழ,ள,ல வேறுபாடு, ந,ண,ன வேறுபாடு எல்லாவற்றையும் ஆசிரியர் நுட்பமாக விளக்கியதனால், வகுப்பில் பெரும்பாலோனார் குழப்பம் எதுவுமில்லாமல் சரியாக எழுதுவார்கள். இன்று தமிழில் முதுகலை மாணவர்கள்கூட எழுத்துப் பிழைகளுடன் எழுதுகிற சூழல் ஏற்பட்டுள்ளமைக்கு நம் கல்விமுறையின் கோளாறுதான் காரணம்.

 திடீரென எல்லோரையும் எழுந்து நிற்கச் சொல்லும் ஆசிரியர், தமிழ்ப் பாடத்தில் இருக்கிற மனப்பாடப் பாட்டைச் சிலேட்டில் எழுதிக் காட்டச் சொல்லுவார். முதலில் எழுதிக் காட்டுகிற மாணவனைப் பாராட்டுவார் என்பதற்காக வேகமாக எழுதியதால் எனது கையெழுத்துக் கிறுக்கலாகிப் போனது. அப்புறம் இன்றுவரை எனது கையெழுத்து அழகாக இல்லை என்பது மனதுக்குள் சின்ன வருத்தம்தான்.

மதிய உணவு சமைப்பதற்காகப் பள்ளியில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைக்கிற வேலையை மாணவர்கள் செய்தனர். மாணவிகள் தண்ணீரைச் சமையலறைக்கு சுமந்து சென்றனர். சில நாட்களில் பால் பவுடரை நீரில் கரைத்துச் சூடாக்கிய பாலை மாணவமாணவியருக்கு அலுமினிய டம்ளர்களில் கொடுத்தனர். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் வரிசையாகப் போய், டம்ளரில் தரப்பட்ட பாலைக் குடித்தோம். சில நாட்களில் ஒவ்வொரு வகுப்பாக வந்து இனிப்பான சத்து மாவு, இரு கைபிடியளவு தந்ததைச் சிலேட்டில் வாங்கிச் சாப்பிட்டோம். மதிய உணவு என்பது பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து வந்த மக்காச் சோள உப்புமாதான். எப்பொழுதாவது கோதுமைக் கஞ்சி அல்லது அரிசிச் சோறு குழம்புடன் போட்டனர். சாப்பிடுகிற தட்டை எடுக்காமல் வந்த சில மாணவர்கள், காலை ரீசர்ஸ் என்ற இடைவேளை நேரத்தில் வீட்டுக்குப் போய்த் தட்டை எடுத்து, சட்டையின் முதுகில் ஒளித்து வைத்துத் தாமதமாக வகுப்புக்கு வருவார்கள். அவர்களுடைய முதுகில் இருக்கிற தட்டை எப்படியோ தெரிந்துகொண்ட ஆசிரியர், முதுகில் குச்சியால் அடிப்பார். மாணவர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.

வகுப்பில் மாணவர்கள்தான் பெரும்பாலும் சேட்டை செய்வார்கள். பொம்பளைப் பிள்ளைகள் எப்பவும் அமைதியாக இருப்பதுடன், சேட்டைக்காரர்களை ஆசிரியரிடம் சொல்லி விடுவார்கள். மாணவர்களில் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் எப்பொழுதும் அழிக்கமுடியாத கோடு இருக்கும்.

பள்ளியில் சின்ன தோட்டம் இருந்தது. மானவர்கள் மண்ணைக் கொத்துதல், செடிகளை நடுதல், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். அங்கு விளைந்த காய்கறிகள் மதிய உணவிற்குப் பயன்பட்டன. உடம்பில் வியர்வை வர வேலை செய்யாவிட்டால் ஊளைச்சதை வந்திடும் என ஆசிரியர் எச்சரித்தார். அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் தினமும் கேப்பைக் கூழ் அல்லது சோளக் கூழ்தான் சமைப்பார்கள். அரிசிச் சோறு ஆக்குவது என்பது தீபாவளி, பொங்கல், திருவிழா நாட்களிலும் வீட்டிற்குச் சொந்தக்காரர்கள் வரும்போதுதான் நிகழும். வசதியான பின்புலமுடைய எங்கள் வீட்டில் தினமும் அரிசிச் சோறுதான். கூழ் குடித்தால், உடம்பு இறுக்கமாக இருக்கும். அதனால் யாருடனும் சண்டை போடலாம் என்று வகுப்பறைச் சேக்காளிகள் சொல்வார்கள். நான் தினமும் சோறு சாப்பிடுவதனால், குண்டாகி சோதாப்பயலாகி விடுவேன் என்று நண்பர்கள் கேலி செய்வதை உண்மை என்று நம்பினேன். இயல்பிலே சண்டை செய்யவோ, யாரையும் அடிக்கவோ செய்திடாத எனது மனநிலை, தினமும் அரிசிச் சோறு சாப்பிட்டதால் வந்தது என்று நம்பினேன்.

ஒரே மாதிரியான பள்ளி வாழ்க்கையில் பரபரப்பான விஷயம், ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வரும் நாள்தான்.  வகுப்பறைக்கு முன்னால் வளர்ந்திருக்கிற புல்லைச் செதுக்கி, சுற்றிலும் கிடக்கிற காகிதங்களைப் பொறுக்கி, தரையக் கழுவிவிட்டு எங்கும் பளபளப்பாகிட எல்லோரும் சுசுறுப்பாக வேலை செய்தோம். இன்ஸ்பெக்‌ஷன் அன்று யாராச்சும் வராமல் இருந்தால், மறுநாள்  மண் தரையில் வெய்யிலில் முழங்கால் போட வேண்டுமென ஆசிரியர் எச்சரித்தார். எங்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஏதோ நடக்கப் போவதாகப் பயம் தொற்றிக்கொண்டது. பூச்சாண்டி போல ஸ்கூல் இன்ஸ்பெக்டர் எங்கள் மனதில் கற்பிதம் ஆனார். ”நாளைக்குப் பள்ளிக்கூடம் வருகிற மாணவர்கள் குளித்து, தலை சீவி, நெற்றியில் திருநீறு பூசி வர வேண்டுமெனக் கண்டிப்புடன் ஆசிரியர் சொன்னார். வகுப்புக்குள் இன்ஸ்பெக்டர் வந்தவுடன் எல்லோரும்  எழுந்துநின்று ’வணக்கம் அய்யா’ என்று சொல்ல வேண்டுமென்ற என்ற அறிவிப்பைக் கேட்டவுடன், எங்கள் பயம் இன்னும் கூடியது. அந்த நாளில் காலையில் இருந்து ஆசிரியர் பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்தவுடன், ஏதோ சிக்கல் வரப்போகிறது என்று நினைத்தோம். ஹெச்.எம்.முடன் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் எல்லோரும் கோராஸாக ’வணக்கம் அய்யா’ என்று கத்தினோம். அவர் கெத்தாக வகுப்பறையில் நுழைந்து, ஆசிரியரின் நாற்காலியில் அமர்ந்து, ஆசிரியரைப் பாடம் நடத்தச் சொன்னார். திடீரெனப் பாடத்தை இடையில்  நிறுத்தச் சொல்லிவிட்டு எங்களிடம் கேள்விகள் கேட்டார். நாங்கள் பதற்றத்துடன் பதில் சொன்னோம். எதுவும் சொல்லாமல் அவர் எழுந்து போனவுடன் எங்களுக்கு நிம்மதி வந்தது. எங்கள் மீது எப்பொழுதும் அதிகாரம் செலுத்திய ஆசிரியர், பள்ளி ஆய்வாளர்க்குப் பயந்து, கலவரமான முகத்துடன் நடுங்கிய நிகழ்வை இப்பொழுது நினைத்தாலும், வேடிக்கையாக இருக்கிறது. 

எங்கள் வகுப்புத் தோழனான அரசகுமாரன் எப்பவும் குறும்பாக எதையாவது செய்துகொண்டிருப்பான். அடிக்கடி வகுப்பிற்கு தாமதமாக வந்து  ஆசிரியரிடம் திட்டும் அடியும் வாங்குவான். அடிப்பதற்கு முன்னரே அய்யோ என்று கத்துவதைப் பார்த்து எல்லோரும் சிரிப்போம். அடி வாங்கிய பின்னர் இதெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்பது போல முகபாவம் இருக்கும். தென்னந்தோப்புக்குள் இருந்த வீட்டில் இருந்து தினமும் ஒரு மைல் தொலைவு நடந்து வருவான். ஒரு நாள் நடந்து வரும்பொழுது  இரண்டு கழுதை முண்டங்கள் தலையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டு வருவதைப் பார்த்துப் பயந்துபோய், வார் நடைப் பாலத்திற்கு அடியில் ஒளிந்துகொண்டு, உயிர் பிழைத்ததாகச் சொன்னதைக் கேட்டவுடன், எல்லோரும் நடுங்கி விட்டோம். ஏற்கனவே கிராமத்து வெளியெங்கும் கதைகளின் மூலம் நீக்கமறப் பரவியிருந்த பேய்கள், பிசாசுகள், முனிகள் பற்றிய பயத்தில் இருந்த எங்களுக்குப் புதிய கழுதை முண்டம் பீதியைக் கிளப்பி விட்டது. அவன் இடுப்பில் கட்டியிருக்கிற அரைஞாண் கயிற்றில் மந்திரிக்கப்பட்ட தாயத்து இருப்பதால்தான் உயிர் பிழைத்ததாகச் சொன்னவுடன் எல்லோரும் தாயத்துக் கட்ட வேண்டுமென முடிவெடுத்தோம். அரசகுமாரன் அந்த வயதில் பாலியல் விஷயங்களை எல்லாம் தெரிந்தது போலப் பேசுவான். அவனை எதிர்த்து யாராவது கருத்துச் சொன்னால் உடனே காய் விட்டுவிடுவான். சிறுவனான அரசகுமாரன் ஏன் அப்படியெல்லாம்  பொய் பேசினான் என்பது இப்பவும் எனக்குப் புலப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் எனக்குப் புரியாத விஷயங்களில் ஒன்று, விழா என்ற பெயரில் தலைமை ஆசிரியர் ஆற்றுகிற உரைதான். சுதந்திர தினம், நேரு  மாமா பிறந்த குழந்தைகள் தினம் என பிரேயரில் நிற்கவைத்து பேசுகிற பேச்சசுகள், இம்சையாக இருக்கும். காலையில் சுள்ளென அடிக்கிற வெய்யிலில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்திடுவான். என்றாலும் பேச்சு தொடரும். சுதந்திர தினத்தன்று சின்ன காகிதத்தில் இருக்கிற தேசியக் கொடியைக் குத்திக்கொண்டு, கையில் பெரிய கொடியைப் பிடித்தவாறு, ’பாரத் மாதாகி ஜே’ என்று கோஷமிட்டு ஊரைச் சுற்றி ஊர்வலமாக  வருவோம். மீண்டும் பள்ளிக்கு வந்தவுடன், ஆளுக்கு இரண்டு சிறிய ஆரஞ்சு மிட்டாய்கள் கிடைக்கும். அந்த மிட்டாயை வாயில் போட்டுச் சப்பும்போது, நாக்கில் ஏற்படும் தித்திப்பும், வாசனையும் மகிழ்ச்சியைத் தரும்.

பள்ளி என்பது ஏதோ ஒருவகையில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் அழியாத கோலங்களாய் பதிந்திருக்கிறது. எட்டு வயதுச் சிறுவனான எனது மனதில் சித்திரமாகப் பதிந்திருக்கும் காட்சிகள் அளவற்றவை. 

 

(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)

 
ஓவியம் - தியானேஸ்வரன்

          

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...