???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வகுப்பறை வாசனை - 2: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   30 , 2019  02:53:04 IST


Andhimazhai Image
அறுபதுகளில் வீட்டில் குறும்புகள் செய்கிற குட்டிக்  குழந்தைகள், “பூச்சாண்டி கிட்ட உன்னைப் பிடிச்சுக் கொடுத்துடுவேன்’” என்று மிரட்டுகிற அம்மாக்களின் மிரட்டலை அடிக்கடி  எதிர்கொள்ள நேரிடும். யார் அந்தப் பூச்சாண்டி? அது என்ன செய்யும்? எப்படி இருக்கும்? போன்ற கேள்விகளைவிட, அரூபமாகப் பிஞ்சு மனதில் கற்பிதமாகும் எண்ணம்தான் குழந்தைகளைப் பாடாய்ப்படுத்தும். ஐந்து வயது வரையிலும் வீட்டிலும் தெருவிலும் விளையாடுகிற குழந்தைகளை அடக்குவதற்கு “பார் உன்னைப் பள்ளிக்கூடத்தில் விட்டால்தான் சரிப்படுவே” என அம்மா  எச்சரிக்கும்போது, பள்ளியானது விநோதமான வஸ்துவாகக் குழந்தையின் மனதில் தோன்றிட வாய்ப்புண்டு. பள்ளிக்குப் போவது என்பது ஒருவகையில் தீவாந்திரத் தண்டனையினால்  நாட்டைவிட்டுக் கடத்தப்படுவதற்கு இணையாகச் சித்திரிப்பது, குழந்தையின் கற்றல் மனநிலையைச் சிதலமாக்கிடும். சரி, போகட்டும்.
 
 
பள்ளிக்கூடம் தொடங்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக ஹெட் மாஸ்டர் அறையின் முன்னால் தொங்குகிற தண்டவாளத் துண்டில் இரும்புக் கம்பியினால் டங்டங்கென அடித்து முதல் மணியை முத்து அண்ணன் அடிப்பார்.  அந்த ஒலி, சமயநல்லூர் தெருக்களில் பரவும். மணியின் ஓசையைக் கேட்டவுடன் முதல் மணி அடிச்சாச்சு என்று மாணவர்கள் வேகம்வேகமாகப் பள்ளியை நோக்கி ஓடுவார்கள். பெரும்பாலானோரின் பைகளில் சிலேட், புத்தகம், வாய்ப்பாடு அட்டை, சாப்பாட்டு தட்டு இருக்கும். துணிப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு, இரண்டாம் மணி அடிப்பதற்குள் எல்லோரும் பிரேயருக்குச் செல்வார்கள். எங்கும் புழுதியும் இரைச்சலும் காற்றில் மிதக்கும். காலை நேரத்தில் சுள்ளென அடித்திடும் வெய்யிலில் ஒரே வகுப்பில் படிக்கிறவர்கள் வரிசையில் நின்று கை கூப்பியவாறு நின்றிட, ஐந்தாம் வகுப்பு படிக்கிற நான்கு மாணவியர் ‘அருள் புரிவாய்க் கருணைக் கடலே/ ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே..” என முன்னால் நின்று பாடுவார்கள். திங்கள் கிழமையன்று தலைமை ஆசிரியர், தேசியக் கொடியைக் கம்பத்தில் ஏற்றியவுடன் எல்லா மாணவர்களும் 'தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்' எனப் பாடுவோம். கடைசியில் தேசிய கீதம். ஏன் இப்படி காலை வெய்யிலில் நிற்க வைத்துச் சிரமப்படுத்துகிறார்கள் என எனக்கு அந்த வயதிலே தோன்றியது.
                  
ஒன்றாம் வகுப்பில் பெரிய அளவில்  எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. தமிழ் எழுத்துகள், எண்கள், பாடல்கள் மட்டும்தான். அன்னாஆவன்னா அட்டையில் இருந்த படங்களைப் பார்த்து ரசிக்கலாம். மஞ்சள் வண்ணத்தில் ஔவையார் படம் இடம் பெற்றிருந்த அட்டையிலான தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பாட்டியின் வீட்டுப் பழம் பானையில் ஒரு ஓட்டை இருந்தது. ஓட்டை வழியே ஒரு சுண்டெலி உள்ளே போய் நெல்லைக் கொறித்துத் தின்றது எனத் தொடங்கும் பாடல், இறுதியில் கள்ள வழியில் போகிறவனைக் காலன் பின் தொடர்வான் என முடியும். அப்புறம்  ‘பனை மரமே’ எனத் தொடங்கும் பாடலை எல்லோரும் சேர்ந்து பாடுவோம். கையில் எப்பவும் குச்சியுடன் இருக்கிற ஆசிரியைப் பார்க்கும்போது, எனக்குப் பயமாக இருக்கும். எனது வகுப்பறையில் அழகர்சாமி, பலராமன் போன்ற சேக்காளிகளுடன் சேர்ந்து ஊருக்குள் திரிந்தேன்.  வகுப்பில் யாராவது  ஒரு பையனை மெல்லக் கிள்ளினால்கூட, அவன் ‘டீச்சர் என்னை அவன் அடிச்சிட்டான்’ என்று புகார் சொன்னால் போதும், நீட்டிய கையில் டீச்சர் குச்சியினால் அடிப்பார். அப்பொழுது வகுப்பறை ரொம்ப அமைதியாக இருக்கும். கப்சிப். மாணவர்களை ஒழுங்குபடுத்த பெரும்பாலான ஆசிரியர்கள், பிரம்பைத்தான் நம்பியிருந்தனர். அடியாத மாடு படியாது என்ற சொலவடை,  பள்ளிக்கூட மாணவர்களுக்கு எப்படி பொருந்தியது என்பது இப்பவும் புலப்படவில்லை.
 
பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் அறை மட்டும்தான் காரைக் கட்டடம். வகுப்பறைகள் கீற்றுக் கொட்டைகள். உச்சி வெய்யிலின்போது சூரிய ஒளி வகுப்பிற்குள் தாராளமாக உலாவும். மாணவர்கள் ஓய்வு நேரத்தில் ஓளிக்கற்றையைக் கையில் பிடிக்க முயலுவார்கள். சில வகுப்புகள், பள்ளி வளாகத்தில் நிரந்தரமாக ஆல மரத்தடியில் நடைபெறும். நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறப்ப முழுக்க மரத்தடியில்தான் படித்தேன். வெய்யில் அடிக்கிற திசைக்கு எதிராக வகுப்பு  அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது, வெளியே அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பது சௌகரியமாக இருந்தது.  சில வேளைகளில் வேடிக்கை பார்த்த சில மாணவர்கள், ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வார்கள். மழைக்காலம் முழுக்க ஒரே கொண்டாட்டம்தான். அதுவும் சாயங்காலம் வானம் கருங்கும்முனு இருந்தால் போதும், ஹெட் மாஸ்டர். ‘ஓவர் பெல்’ எனப்படும் நீண்ட மணியை அடிக்கச் சொல்லி விடுவார். குட்டிப் பையனுக எல்லோரும் ஓவென்று கத்தியவாறு வீட்டுக்கு ஓடுவதற்கு இணையான மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏது? அதை இப்ப நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.
 
ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது பாடத்தைச் சிலேட்டில்தான் எழுத வேண்டும். முழுப் பரீட்சை எனப்படும் ஆண்டு இறுதித் தேர்வு எதுவும் நடந்ததாக எனக்கு நினைவு இல்லை. கோடை விடுமுறைக்குப் பின்னர் உற்சாகத்துடன் பள்ளிக்குப் போனேன். ஒன்றாம் வகுப்பு எல்லாம் அப்படியே இரண்டாம் வகுப்புக்குப் போ என்று தலைமை ஆசிரியர் பிரேயரில் சொன்னவுடன் எல்லோரும் உற்சாகத்துடன் ஓடினோம். பெரிய வகுப்புக்கு வந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன். வேல் ஆசிரியர்தான் எங்கள் வகுப்பு ஆசிரியர். தினசரி வகுப்பு தொடங்கியவுடன் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய சௌந்திர அக்கா வந்து, யார் வரவில்லை என்று கேட்பார். ஆசிரியர், வகுப்புக்கு வராத மாணவர்களின் பெயர்களைச் சொல்வார். சௌந்திர அக்கா பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காக ஊருக்குள் போவார். அவரைப் பிள்ளை பிடிக்கிற அக்கா என்று பையன்கள் சொல்வார்கள். நான்கைந்து பேர் வரவில்லை என்றால் ஆசிரியர், ஒரு பையனுக்கு இரண்டு மாணவர்கள் வீதம் அனுப்பி, பள்ளிக்கு வராத மாணவனைப் பிடித்து வரச் சொல்லுவார்.  நான் போறேன் என்று கிளம்புகிற நான்கைந்து மாணவர்களில் நிச்சயம் நானும் இருப்பேன். சிட்டாகத் தெருக்களில் பறந்து, வகுப்பிற்கு வராமல், தெருவில் உற்சாகத்துடன் விளையாடுகிற மாணவனைத் தேடி அலைவோம். எங்களைப் பார்த்ததும் ஓடுகிற வகுப்பறை நண்பனை விரட்டிப் பிடித்து இழுத்துப் பள்ளிக்குக் கூட்டி வருவோம். பிடிக்கிறப்ப சிலர் விசும்புவதுடன் கையைக் கடிக்க முயற்சிப்பது உண்டு; சிலர் நகத்தினால் பிறாண்டி வைப்பார்கள்.  சிறுவனைக் கூட்டி வரப்போன நாங்கள் சாகச மனநிலையில் இருப்போம்; புலியைப் பிடித்த மனநிலையில் அவனைப் பள்ளிக்கு இழுத்து வருவோம்.  முரட்டு யானையை அடக்கிடும் கும்கி யானையாக எங்களை மாற்றிய கல்விச் சூழலை இப்பொழுது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. சக மாணவர்களுடன் ஓடித் திரிந்து, புதிய விஷயங்களை உற்சாகத்துடன் கற்க வேண்டிய வகுப்பறை, ஏன் சில சிறுவர்களுக்கு ஆர்வத்தைத் தரவில்லை? யோசிக்க வேண்டியுள்ளது. 
 
 
சில மாணவர்கள் பள்ளிக்கூடம் போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுப் பையுடன் கிளம்பி,  ஊருக்கு வெளியே புளிய மரத்தடியில் விளையாடிவிட்டு, மாலையில் வீட்டிற்குத் திரும்பிப் போவது, நான்கைந்து நாட்களுக்குப் பின்னர்தான் தெரியவரும். வகுப்புக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, ஊருக்கு வெளியே சுற்றித் திரியுற மாணவனின் காலில் 12x5x5 இஞ்ச் அளவிலான கனசெவ்வகக் கட்டை, இரண்டு அடி நீளமுள்ள இரும்புச் சங்கிலியினால் மாட்டப்படும். சங்கிலியின் வளையங்கள் சின்ன பூட்டினால் பூட்டப்பட்டிருக்கும். பூட்டின் சாவி, தலைமை ஆசிரியரிடம் இருக்கும். நான் படித்த ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் இதுபோன்று நான்கு கட்டைகள் இருந்தன. காலில் கட்டையுடன் சிறுவன் தெருக்களில் நடந்து வருவது, அடிமைப் பெண் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காலில் கட்டப்பட்ட சங்கிலியுடன் இரும்புக் குண்டை இழுத்துக்கொண்டு வருவதைப் போலிருக்கும். சிறுவனைச் சக மாணவர்கள் பாவமாகப் பார்ப்பார்கள். எப்பவும் கட்டையைக் கையில் தூக்கிவாறு நடப்பது வலியைத் தரும்.  சிலவேளைகளில் அவனது நண்பர்கள் யாராவது கையில் கட்டையைத் துக்கிக் கொள்வார்கள். இந்தக் கொடுமை, பெற்றோரின் சம்மதத்துடன்தான் நடந்தது. ஏன் அந்தப் பையனின் இளம் மனதிற்கு வகுப்பறை பிடிக்கவில்லை என்று யோசிக்காமல், குழந்தையின் மீது வன்முறையைச் செலுத்திய நிகழ்வுகள், அந்தக் காலத்தில் சாதாரணம். குறைந்தபட்சம் ஐந்தாறு நாட்கள் கழித்துத்தான் மாணவனின் காலில் இருந்து கட்டை நீக்கப்படும். 
        
‘‘வீட்டில் ரொம்பச் சேட்டை பண்றான். ஒழுங்காகப் படிக்க மாட்டேங்குறான். எப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். நல்லா அடிச்சு நொறுக்குங்க சார். கண்ணை விட்டுட்டுத் தோலை உரிச்சிருங்க” என்று மகனை ஆசிரியரிடம் இழுத்துவரும் அம்மாக்கள்/ அப்பாக்கள் அந்தக் காலத்தில்  நிரம்ப இருந்தனர்.  குழந்தையின் பண்புகளையும் கற்றல் திறனையும் வளர்க்கும் இடம் பள்ளிக்கூடம் என்ற புரிதல் இல்லாமல், இயல்பாகக் குழந்தைகள் செய்கிற குறும்புகளுக்காக அடக்கியொடுக்குகிற சித்ரவதைக்கூடமாகக் கருதிய நிலை, அன்று நிலவியது.
 
இரண்டாம் வகுப்பில் தினமும் கதை சொன்ன வேல் வாத்தியாரை எனக்குப் பிடித்துப் போனது.  அவர், பாடங்களைப் புரியுற மாதிரி சொல்லிக் கொடுத்தவர், வாய்ப்பாடுகளை மனனம் செய்யச் சொல்லி வற்புறுத்தினார். இரண்டாம் வாய்ப்பாடு மட்டுமல்ல அப்பொழுது 1/8,1/4,1/2,3/4 வாய்ப்பாடுகளும் பாடத்தில் இருந்தன. வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வது பெரிய இம்சையாக இருந்தது. அந்தக் காலத்தில் காலணா, அரையணா, ஒரணா போன்ற நாணயங்கள் வழக்கில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு 161/2 அணாக்கள் என்பது எனது தந்தையாரின் மூலம் எனக்குத் தெரிந்ததது. 
 
இரண்டாம் வகுப்புப் படிக்கும்பொழுது ஊரின் மெயின் ரோட்டில் நெல் அரவை ஆலை வைத்திருந்த எங்கள் அய்யப்பா மூ. வடிவேல் நாடார் அவர்களை எனது அண்ணன்களுடன் சென்று, தினமும் பள்ளிக்குப் போவதற்கு முன்னர் பார்க்கப் போவேன். அவர் தினசரி அரையணா கொடுத்தார். அது ஓட்டைச் செப்புக் காசும், இன்னொரு  வட்டச் செம்புக் காசும் அடங்கியது. பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் விற்ற ஆறுமுகப் பாட்டி/கிழவியிடம் சிவப்புச் சவ்வு மிட்டாய் அல்லது அவித்த கிழங்கு அல்லது மாங்காய் வாங்கித் தின்பதற்கு அரையணா பயன்பட்டது.
 
இரண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்குப் தெரிந்தது, பள்ளியில் மதிய உணவு போடுகிறார்கள் என்ற விஷயம். மக்காச் சோள மாவில் கிண்டப்பட்ட உப்புமாவை மாணவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். நான் மதியம் சாப்பிட வீட்டுக்குப் போய் விடுவேன். தட்டை எடுத்துட்டுப் போய் பள்ளியில் போடுற மதிய உணவைச் சாப்பிட போகிறேன் என்று அய்யாவிடம் சொன்னபோது, ‘‘அந்தச் சாப்பாடு ஏழைக் குழந்தைகள் சாப்பிடுவதற்காக  அரசாங்கம் போடுது. அதை நீ சாப்பிடக் கூடாது’’ என்றார். எனக்கு ஏழை என்றால் என்னவென்று புரியவில்லை. 
 
இரண்டாம் வகுப்பில் படிக்கிறப்ப, தினமும் மாலையில் மாணவர்களில் பசங்களும் பொண்ணுகளும் எதிரெதிராக வரிசையில்  நிற்க வேண்டும். பையன்களில் ஒருத்தன் எதிராக நிற்கிற சிறுமிகளில் யாராவது ஒருத்தரைப் பார்த்து ஐந்தாம் வாய்ப்பாடுகளுக்குள் ஏதோ ஒன்றைக் கேட்க வேண்டும். 4X3 எத்தனை என்பது போல கேள்வி இருக்கும். பதில் சொல்லாவிட்டால் மாணவியின் தலையில் குட்ட வேண்டும். அப்புறம் பொம்பளைப் பிள்ளை 9X3 போல ஏதோ ஒன்றைக் கேட்கும். சரியான பதில் சொன்னால், எல்லோரும் கை தட்டுவார்கள். இந்தப் போட்டியில் குட்டு வாங்கிய சிறுவர்கள் ரொம்ப அவமானப்பட்டதாக நினைப்பார்கள். மாலையில் தினமும் கடைசி பீரியடு விளையாட்டுத்தான். பிள்ளைகள் மகிழ்ச்சியாகக் கத்தியவாறு அங்குமிங்கும் ஓடுவார்கள். ஒரு நாள் வேல் வாத்தியார் பையன்களைச் சரி சமமான பையன்களாகப் பிரித்துக் குஸ்திக்கு ஏற்பாடு செய்தார். எல்லா சிறுவர்களும் சுற்றி நின்றிட மல்யுத்தம் தொடங்கும். எதிராளியை வீழ்த்தி, அவனது முதுகில் மண் படுமாறு செய்துவிட்டால், கீழே இருப்பவன் தோற்றவன் ஆவான். நானும் இன்னொரு பையனையும் மோதியபோது. அவனை எப்படியாவது புரட்டிட முயன்றேன். சுற்றிலும் ஒரே கூச்சல். திடீரெனப் பார்த்தால், நான் கீழே விழுந்து, எனது முதுகில் மண் ஒட்டியது. குஸ்தியில் தோற்றுப் போன சம்பவம், எனக்கு அவமானமாகப் போய் விட்டது; வருத்தமாக இருந்தது.
 
(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)
 
ஓவியம் - தியானேஸ்வரன்
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...