அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வகுப்பறை வாசனை 17: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பதினொன்றாம் வகுப்புக்குப் போனேன்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   02 , 2020  12:26:45 IST


Andhimazhai Image

கிராமத்துப் பள்ளியில் பயின்ற எனக்குக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற வேண்டுமென்ற ஆர்வம், கல்லூரியில் சேர்ந்து படித்த எனது அண்ணன்களைப் பார்த்து உருவாகியது. பதினொன்றாம் வகுப்பில் அரசுப் பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சியடைந்தால்தான் கல்லூரிக்குப் போக முடியும். இல்லையென்றால் அந்தக் காலகட்டத்தில் மதுரை நகரில் கொடி கட்டிப் பறந்த வி.டி.சி., எஸ்.டி.சி. போன்ற டூட்டோரியல் காலேஜில் சேர்ந்து படித்து, தேர்வெழுதி, வெற்றியடைய  வேண்டும்.  எல்லா வகுப்புக்களிலும் நன்கு படிக்கிற மாணவன் என்றாலும், எனது மனதில் சிறியஅளவில் அச்சம் துளிர்த்தது. எப்படியாவது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வடைந்து, கல்லூரிக்குப் போய்ப் பட்டம் வாங்க வேண்டுமென்று உறுதியுடன் பதினொன்றாம் வகுப்பு ’அ’ பிரிவில் நுழைந்தேன். பத்தாம் வகுப்பில் சிலர் தங்கிவிட, மற்றவர்கள் பதினொன்றாம் வகுப்பில் இருந்தனர். உடன் பதினெட்டு மாணவிகள். எங்கள் வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரான காசிமாணிக்கம் சார்.  வரலாற்றில் பட்டம் வாங்கிய சார், ஆங்கிலம் முதல் தாள் பாடம் நடத்தினார். எப்பொழுதும் சிடுசிடுவென்ற முகத்துடன் மாணவர்களைத் திட்டிக் கொண்டேயிருப்பார். அவர், அடிக்கடி பயன்படுத்தும் சொல் ‘எருமை மாடு’. நாங்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை.

 

பதினொன்றாம் வகுப்பில் கிளாஸ் லீடர் பொறுப்பு முதலில்  என்னிடம் தரப்பட்டபோது மறுத்து விட்டேன். எப்பவும் ஆசிரியர்களுக்குப் பதில் சொல்கிற தலைவன் பொறுப்பு எனக்குப் பிடிக்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் கிளாஸ் லீடராக இருந்து, வகுப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், விலகுகிறேன் என்று சொல்லிவிட்டனர். இந்தச் சூழலில் என்னை அழைத்த தலைமை ஆசிரியர், ’நீதான் கிளாஸ் லீடர், வகுப்பை ஒழுங்காகப் பார்த்துக்க’ என்று ஆணையிட்டார். அப்புறம் என்ன? எல்லோரையும் தாஜா பண்ணி, ஒருவகையில் சமாளித்தேன். வகுப்பில் பசங்களைவிடப் பொம்பளைப் பிள்ளைகள் விவரமாகவும், கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் இருப்பார்கள். பசங்க விளையாட்டுதனமாகச் சின்னப் பயலுக மாதிரிச் செயல்படும்போது, பொண்ணுகள் ஒருவிதமான மெச்சூரிட்டியுடன்  இருந்தனர். எனவே,  பசங்க எது சொன்னாலும் துச்சமாகக் கருதுகிற மனநிலை, மாணவிகளுடைய இயல்பிலே இருந்தது. வகுப்பறையின் தலைவன் என்றால் ஒரு மாதிரியாகச் சமாளித்து, மாணவிகளுடைய தயவு அல்லது நம்பிக்கையைப் பெற்றால்தான், ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறை அமைதியாக இருக்கும். ஏற்கெனவே நான் பத்தாம் வகுப்பில் லீடராகச் செயல்பட்ட முறையை அறிந்திருந்த மாணவிகள் எனக்கு ஒத்துழைப்புத் தந்தனர். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். வகுப்பில் மாணவிகளுடன் இயல்பாக உரையாடுகிற ஒரே மாணவன் நான் மட்டும்தான். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இடையில் பெரிய சுவர் எப்பொழுதும் தடையாக இருந்தது. இதனால் காதல் என்ற சொல் புழக்கத்தில் இல்லை.

           

ஒருநாள் வகுப்பில் பெரிய பிரச்சினை. காலையில் எட்டரை மணிக்கு வகுப்பறைக்கு வந்த ஆண்டியப்பன், அவனுடைய நண்பன் பாஸ்கரைப் பார்த்து, ‘ என்ன செல்லா வரலையா? என்று கேட்டிருக்கிறான். அவன், செல்லா என்று சொன்னது நண்பன் செல்லத்துரையை. அந்த நேரம் வகுப்பில் இருந்த ஒரு மாணவி, அதைக் கேட்டு, ஸ்டெல்லா ஆரோக்கியமேரி என்ற மாணவி வந்தவுடன் உன்னைப் பற்றி ஆண்டியப்பன் விசாரித்தான் என்று போட்டுக் கொடுத்து விட்டார். அந்த விஷயம் அப்படியே தலைமை ஆசிரியரிடம் போய்விட்டது. பிரேயர் முடிந்தவுடன் ஆண்டியப்பனையும், பாஸ்கரையும் கூப்பிட்டுவிட்டு, தலைமை ஆசிரியர் விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் மத்தியில் பதற்றம். நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், வகுப்பறையில் பாடம் நடத்திய  ஆசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டு, தலைமை ஆசிரியர் அறைக்குப் போனேன். தலைமை ஆசிரியரின் அறை வாசலில் இரண்டு மாணவர்களும் பயத்துடன், கையைப் பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்னைப் பார்த்தவுடன் தலைமை ஆசிரியர் உள்ளே வரச் சொன்னார்.  நான், ‘சார், ஆண்டியப்பன், செல்லத்துரை, பாஸ்கர் எல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படிக்கிறோம். மூன்று பேரும் சாயங்காலம்கூட ஒன்னாத் திரிவானுக. ஆண்டியப்பன், செல்லா என்று சொன்னது, செல்லத்துரையைத்தான். நிச்சயம் ஸ்டெல்லா கிடையாது. பொம்பளைப் பிள்ளைகள் தப்பாகப் புரிஞ்சிக்கிட்டாங்க’ என்று விளக்கம் சொன்னேன். ’கிளாஸ் லீடர் நீ சொல்றது உன்மைதானா?’ என்றார் தலைமை ஆசிரியர். ’ஆமாம் சார்’ என்று உறுதியுடன் தலையை அசைத்தேன். ஒருகணம் யோசித்தவர், ‘சரி, வகுப்புக்குப் போங்க’ என்றார்.  நான் சொல்வதைக் கேட்டு, நேர்மறையாக முடிவெடுத்த தலைமை ஆசிரியரின் மீது எனக்கு மரியாதை கூடியது. யாரோ ஒரு மாணவனின் பிரச்சினை என்று ஒதுங்கிடாமல், உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துணிந்து சொல்லும் ஆற்றல், எனக்குப் பள்ளிப் பருவத்திலே இருந்தது.

 

எங்கள் தமிழாசிரியர் இராமநாத சர்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட தோற்றம்.  ஆறடி உயரம், ஒல்லியான உடம்பு, சிவந்த தோல், கூர்மையான மூக்கு, உச்சந்தலையில் சிண்டு எனப்படும் நீளமுடியிலான முடிச்சு. எப்பொழுதும் பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய வேட்டி, ஜிப்பா அணிந்திருப்பார். ஒவ்வொரு மாணவனின் சாதிப் பெயரையும், குடும்பப் பின்புலத்தையும் துல்லியமாக அறிந்திருப்பார். ஒரு சில ஆதிக்க சாதி மாணவர்களைத்தவிர பிற மாணவர்களிடம் சாதி பற்றிய உணர்வு இல்லாத சூழலில், தமிழாசிரியர் சர்மா, ‘தேவர் மகனே’, ’சேர்வை’ என்று மாணவர்களை அழைப்பார்.

    

 சர்மா, வகுப்பில் தமிழ்ப் பாடத்தை ஈடுபாட்டுடன் நடத்துவார். குறிப்பாகச் செய்யுளைப் பதம் பிரித்துப் பொருள் சொல்லி, ஆர்வத்தை ஏற்படுத்துவதில் அவருக்கு நிகராக யாருமில்லை. வகுப்பில் பாடம் நடத்துகிறபோது, யாராவது மாணவர்கள் ஒருவரையொருவர் சீண்டி விளையாடினால், அவர்களைக் கேலி செய்து சர்மா சொல்லிய கதை: ‘அய்யாக்காளை ஸ்கூட்டரில் முதலில் ஒன்று இன்னொன்றின் பிடரியைக் கடிக்கும். அப்புறம் இன்னொன்று அடுத்ததின் பிடரியைக் கடிக்கும். அப்புறம் ரெண்டும் ஒன்னு மாற்றி ஒன்னுக்கு உதைவிட்டுவிட்டு, ராகம் பாடிக்கிட்டுக் கிளம்பிடும்.’ வகுப்பில் அந்த இரண்டு மாணவர்களைத்தவிர எல்லோரும் வயிறு குலுங்கிடச் சிரிப்போம். அய்யாக்காளை என்பவர் எங்கள் ஊரில் லாண்டரி கடை போட்டு, அயன் பண்னுகிற வண்ணார் சாதியைச் சார்ந்தவர். அவருடைய ஸ்கூட்டர் என்பது கழுதையைக் குறிக்கும். எல்லா மாணவர்களையும் மட்டந்தட்டி பேசுகிற அவருடைய வகுப்பில் யாரும் எழுந்து நின்று கேள்வி கேட்டுவிட முடியாது.

 

 இராஜாஜியின் மூளையைப் போல உலகில் யாருக்கும் மூளை இல்லை என்று அமெரிக்காகாரன் கண்டுபிடிச்சிருக்கான்; அந்த மூளையைக் கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் செய்திருக்கான் என்று வகுப்பில் சர்மா அவ்வப்போது சொல்லுவார். அவர் சொல்வது எல்லாம் நம்புகிற மொழியில் இருக்கும்.

 

சர்மா சார் காதல், திரைப்படம், தி.மு.க. பற்றி எப்பவும் விமர்சனத்துடன் எதிர்மறையாகப்  பேசுவார். எங்கள் பாடத்தில் பாரதிதாசன் எழுதிய புரட்சிக் கவியில் இருந்து ஒரு பகுதி இடம் பெற்றிருந்தது.  மாணவிக்குப் பாடம் நடத்தப்போன வாத்தியார், அந்த வேலையைப் பார்க்காமல், அதில் என்ன காதல் வேண்டியிருக்கு என்று அவர் கேட்ட கேள்வி, தருக்கரீதியில் சரியானது. சர்மா,  அந்தப் பாடத்தை நடத்தும்போது, வகுப்பில் ஒரே சிரிப்பு.  இந்த மாதிரி பாடத்தைப்  படிச்சிட்டுப் பசங்க, காகிதத்தை எடுத்து, ‘காது எலியே என்று எழுதுகிறானுக. இவந்தான் எலிக்குக் காது இருக்கிறதைக் கண்டுபிடிச்ச மாதிரி. அவள் உடனே கண்ணா, மூக்கா, நாக்கா என்று எழுதுறா’ என்று சிரிக்காமல் சொல்லுவார்.      

 

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, வகுப்பில் ஒவ்வொரு மாணவனாக அழைத்து விடைத்தாள்களைக் கொடுத்தார். முதல் மதிப்பெண் வாங்கிய மாணவனுக்குப் பரிசு என்று முதலில் அறிவித்திருந்தார். நான்  தமிழ்ப் பாடத்தில் 66% மதிப்பெண்கள் பெற்று முதலிடம். என்னை அழைத்த சர்மா, விடைத்தாள்களைக் கட்டிக்கொண்டு வந்திருந்த டொய் நூலைப் பரிசாக வழங்கினார். அவருடைய முகத்தில் சிரிப்புப் பொங்கியது. எனக்கு அசடு வழிந்தது. வேறு வழி? பார்ப்பனரான சர்மாவின் சநாதன செயல்பாடு குறித்து, எட்டாம் வகுப்புத் தமிழாசிரியரான எஸ்.எஸ். வாசன் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களினால் நாத்திகனாக மாறியிருந்த காரணத்தினால் எனக்குத் தமிழாசிரியர் சர்மா மீது எனக்கு வெறுப்பு மனநிலை உருவாகியிருந்தது. அது வேறு விஷயம். ஆனால், அவர் பாடம் நடத்தும்போது, ஒழுங்காகக் கவனித்தால் போதும் எல்லாம் அப்படியே மனதில் பதிந்துவிடும். மாணவர்களுக்குப்  பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதில் அவர் திறமைசாலி. அதில் அவர் சாதனையாளர். அந்த விஷயத்தில் அவரை எனக்குப் பிடிக்கும்.

 

ஆங்கிலப் பாடத்தில் இடம் பெற்றிருக்கும் மனப்பாடப் பகுதியான கவிதையை மனனம் செய்து, அப்படியே  தேர்வில் எழுதுவது எங்கள் வகுப்பில் பலருக்கும் பிரச்சினைதான். மொட்ட மனப்பாடம் செய்வதில் சில மாணவர்கள் கைதேர்ந்தவர்கள். Essay எனப்படும் ஏழெட்டுக் கட்டுரைகளை மனனம் செய்ய வேண்டும். ஆசிரியர், பாடப் புத்தகத்தில் குறித்துக் கொடுக்கிற கேள்விக்கான பதிலைத் தேர்வில் எழுத வேண்டும். சில மாணவர்கள் நோட்ஸ் வைத்திருந்தனர். இருந்தாலும் அதை வகுப்பிற்குக் கொண்டு வர மாட்டார்கள். ஆங்கில ஆசிரியரான தலைமை ஆசிரியர் காசிமாணிக்கம் சார், ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துப் பாடம் நடத்தாமல், வகுப்பிலிருந்த ராம்ஜி என்ற மாணவனிடமிருந்து நோட்ஸை வாங்கி, வாசிப்பார்; ஒப்பேத்துவார். வகுப்பில் நன்கு படிக்கிற மாணவர்கள்கூட பாடம் புரியாமல் சிரமப்பட்டோம். ‘சார் நீங்க நடத்துற ஆங்கிலப் பாடம் புரியலை என்று அவரிடம் யார் போய்ச் சொல்வது? ஒரே குழப்பம்.

 

தினமும் பள்ளிக்கூட அலுவல் நேரம் முடிந்த பின்னர் இரண்டு மணி நேரம் ஸ்பெஷல்  வகுப்பு  நடைபெறும். ஆங்கிலப் பாடம் நடத்துதல்,  முதல் நாள் அவர் சொல்லிய கட்டுரையை எழுதிக் காட்டுதல், சிறிய தேர்வு… ஒரு கட்டத்திற்குப் பிறகு நான், கணேசன், வீரபத்ரன் ஆகிய மூவரும் ராம்ஜியைக் கூப்பிட்டுச் சொன்னோம் ‘இனிமேல் வகுப்புக்கு நோட்ஸ் கொண்டு வராதே, அதை வச்சுக்கிட்டுத்தான் ஹெட்மாஸ்டர் ஒழுங்காகப் பாடம் நடத்த மாட்டேங்கிறார்’ என்று. பொதுவாக மாணவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஆசிரியரிடம்  இன்னொரு மாணவன் மீது புகார் சொல்லி, மாட்டிவிடும் வழக்கம் இல்லை. அந்த நம்பிக்கையில்தான் மராட்டிக்காரனான ராம்ஜியிடம் சொன்னோம். ஆனால் அந்தத் தகவல், பள்ளியில் எழுத்தராகப் பணியாற்றிய ராம்ஜியின் சித்தப்பா மூலம் ஹெட்மாஸ்டர் காதுக்குப் போய்விட்டது.

 

 அடுத்த நாள் மாலையில் ஸ்பெஷல் கிளாஸ் தொடங்குவதற்கு முன்னர் வெளியே போய்விட்டு வந்த மாணவர்களில் எங்கள் மூவரையும் வகுப்பிற்கு வெளியே நிறுத்தினார், காசி மாணிக்கம் சார். ‘ நாயே, பேயே’ என்று அவர் திட்டிய சொற்கள் கணக்கற்றவை. ‘நல்லாப் படிக்கிறம்னு திமிரு உங்க மூன்று பேர் கண்ணைத் தோண்டிப்புடுவேன்’ என்று கோபத்துடன் மிரட்டலாகக் கத்தியதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தோம். ‘உங்க மூன்று பேருக்கும் T.C-யில் Bad என்று எழுதிடுவேன். என்னை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் நீங்க காலேஜ்ல சேர முடியாது, தெருவுலதான் நாய் மாதிரி திரியணும்’ என்றார்.  அவருடைய பேச்சு எங்கள் மனதை மிகவும் பாதித்தது. எனது எதிர்காலக் கனவான கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெறுவது நிராசையாகிப் போனதாகத் தோன்றியது. அன்று மட்டுமல்ல, அந்த வருஷத்தில் அவருக்கு எப்பொழுதெல்லாம் எங்கள் மீது எரிச்சல் ஏற்படுகிறதோ அப்பவெல்லாம் அர்ச்சனையைத் தொடங்கிவிடுவார். ஆசிரியர் பாடம் நடத்துகிற முறை குறித்து மாணவர்கள் விமர்சனம் செய்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவர் செய்த டார்ச்சர் கொடுமையானது. நாங்கள் மூவரும் அவ்வப்போது கலந்து பேசி, ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்தோம். எனக்கு மிகவும் நெருக்கமான அறிவியல் ஆசிரியை ஜேம்ஸ் டீச்சரைப் பார்த்து விஷயத்தைக் கூறி, T.C.யில் Bad போட்டுவிட்டல் என்ன செய்வது என்று வருந்தினேன். ’அந்த ஆள் உங்களை மிரட்டுவதற்காக அப்படிச் சொல்கிறார். நீ எதுக்கும் பயப்படாதே. அப்படியெல்லாம் நடக்காது. நல்லாப் படிச்சு மார்க் வாங்கு. அப்புறம் பார்த்துக்கலாம்.’ என்று வழமையான புன்னகையுடன் டீச்சர் தேறுதலாகச் சொன்னது, மனதுக்கு இதமாக இருந்தது. எனினும் அந்த வருஷம் முழுவதும்  ஆழ்மனதில்  மாற்றுச் சான்றிதழ் விஷயம் உறுத்தலாக இருந்தது. இரவில் படுக்கையில் படுக்கும்போதும்கூட டி.சி  ஞாபகம் நினைவுக்கு வந்து தொந்தரவு கொடுததது. அது, மாபெரும் இம்சை.

 

(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)

   


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...