அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வகுப்பறை வாசனை 14: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பெரிய வகுப்பிற்குப் போனேன்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   04 , 2020  11:38:07 IST


Andhimazhai Image

உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் ஒன்பதாம் வகுப்பு முக்கியமான திருப்புமுனை.  எட்டாம் வகுப்பு வரையிலும் படிக்கிற மாணவர்களில் சிலர், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திட  வாய்ப்புக் கிடைக்காது. சிலரின் குடும்பப் பொருளாதாரம் மேற்கொண்டு படிக்க அனுமதிக்காது. சில மாணவர்கள் ஆசிரியர்களின் அடி, உதைகளுக்குப் பயந்து, ஏதாவது வேலைக்குப் போகிறேன் என்று சொல்வதைப் பெற்றோரும் ஏற்றுக்கொள்வார்கள். ஓரளவு பெரிய ஊர்களில் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், சில மைல் தொலைவு நடந்து வந்து எங்கள் ஊரில் இருக்கிகற உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும். எனவே, பெரும்பாலான கிராமத்துப் பள்ளி மாணவிகளின் கனவு, எட்டாம் வகுப்புடன் நிறைவடைந்து விடும்.   சுற்றுப்புறக் கிராமத்து நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்புத் தேறிய மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்காக அதிக எண்ணிக்கையில் எங்கள் பள்ளிக்கு வந்ததால்,  ஒன்பதாம் வகுப்புகளில் நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டன.


ஒன்பதாம் வகுப்பிற்குப் போனவுடன் ஏதோ பெரிய படிப்புப் படிக்கிற மனநிலை எனக்கு ஏற்பட்டது. ஆசிரியர்கள் ஓரளவு மரியாதையுடன் எங்களை நடத்தினர். படிக்க வேண்டிய பாடப் புத்தகங்களைப் புரட்டி, வாசித்தால் பிரமிப்பாக இருந்தது. மாணவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஐம்பது காசுகள் வாங்கி எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் தனியாக எழுதி, கையொப்பம் வாங்கினார்கள். இனிமேல் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அந்தப் புத்தகத்தில் பதியப்படும் என அறிந்தோம்.  அந்தக் காலகட்டத்தில் கல்கி, சாண்டில்யன் எழுதிய வரலாற்று நாவல்களை வாசித்துவிட்டு, வரலாற்றின் புனைவுகளை எல்லாம் நிஜம் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.  ஒருவரின் பெயரை மாற்ற வேண்டுமெனில் ஒன்பதாம் வகுப்பில் மாற்றலாம் என யாரோ சொன்னதைக் கேள்விப்பட்டேன். வரலாற்றுப் போதைக்குள்ளிருந்த எனக்கு முருகேசபாண்டியன் என்ற பெயர் பிடிக்கவில்லை. அந்தப் பெயரில் சுவராசியம் எதுவுமில்லை என்று தோன்றியது. அது, உண்மை இல்லையா? லட்சுமிகாந்தன் சார் தான் பெயரை மாற்றி எழுதுவார் என்று அறிந்தேன். சாருக்கு நான் செல்லப்பிள்ளை. விஷயம் உடனடியாக முடிந்திடும் என்று மகிழ்ந்தேன்.  நான்கைந்து வரலாற்று நாயகர்களின் பெயர்களை மனதில் நினைத்தவாறு சாரிடம் போனேன். அவர் பொறுமையுடன் நான் சொன்னதைக் கேட்டார். என்ன பெயர் வைக்கணும் என்றார். நான், மாறவர்ம பாண்டியன் அல்லது அருண்மொழி வர்மன் என்ற பெயர்களைச் சொன்னேன். அவர், ’ஒன்பதாம் வகுப்புச் சேர்ந்தவுடன் சொல்லியிருந்தால் பெயரை எளிதாக மாறியிருக்கலாம். இப்ப எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் உனக்குன்னு தனியாகப் போட்டபிறகு மாற்ற முடியாது’ என்றார். எனக்கு ஒரே வருத்தம். ’பெயரில் ஒன்றுமில்லை, நல்லாப் படிச்சுப் பெரிய ஆளாக வா, உன்னால முடியும்’ என்று சார் எனக்குத் தேறுதல் சொன்னார். என் தந்தையாரிடம்கூட கேட்காமல் எனது பெயரை மாற்றிட முயன்ற செயலை நினைக்கும்போது, எனக்கு ரொம்பத் தெனாவட்டு என்று தோன்றுகிறது. அன்றைக்கு என்னுடைய பெயர் மாறியிருந்தால், இந்தத் தொடரை எழுதியவர் பெயர் மாறவர்ம பாண்டியன் என்று இருந்திருக்கும். யோசிக்கும்வேளையில் எல்லாம் தமாஷ்தான். அப்புறம் சார் சொன்ன ‘ பெயரில் என்ன இருக்கிறது? இன்றுவரையிலும் தொடர்கிறது.


ஒன்பதாம் வகுப்பில் வரலாறு பாடம் போதித்த மணிமேகலை டீச்சர் பற்றிச் சொல்ல வேண்டும். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றுகிற பெரும்பாலான ஆசிரியைகள் எளிமையான தோற்றத்தில் பள்ளிக்கு வருவார்கள். சில ஆசிரியர்கள் ஈரப் பழுப்பேறிய வேட்டி, சட்டை அணிந்து, முகத்தில் நரைத்த தாடியுடனும் சோர்வாகப் பள்ளிக்கு வருவார்கள். இத்தகைய சூழலில் எங்கள் ஊரிலும், பள்ளியிலும் மணிமேகலை டீச்சரின் தோற்றம் தனித்து விளங்கியது.  காலில் குதிகால் உயர்ந்த செருப்பு, காதில் பெரிய வளையம், குட்டைக் கை ஜாக்கெட், பெரிய பொட்டு, புஸ்ஸென்ற சடை முடி தோற்றத்துடன் நேர்கொண்ட பார்வையுடன் வந்த டீச்சரைப் பார்த்தவுடன் கிராமத்துப் பையன்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இன்றைய மொழியில் சொல்வதெனில் டீச்சர் டிரண்டிங்காக இருந்தார். அவர், மாணவர்களைப் பிரம்பினால் அடிக்காமல், பாடம் சொல்லிக் கொடுகிறார் என்ற தகவல் பள்ளியில் பரவியுடன் பசங்களின் மத்தியில் அவரைப் பற்றிய மதிப்புக் கூடியது. டீச்சர் பள்ளிக்கு வந்த முதல்நாளில் வழக்கறிஞராகப் பணியாற்றும் அவருடைய கணவரும் வந்திருந்தார். வரலாற்றுப் பாடத்தைச் சுவராசியமாக நடத்திய டீச்சரின் அணுகுமுறை எங்களுக்குப் பிடித்திருந்தது.  வகுப்பில் அவ்வப்போது நடைபெறும் தேர்வில் எப்பொழுதும் அதிக மதிப்பெண் வாங்கியதால், அவர் என்னுடன் ப்ரியமாகப் பேசுவார். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளி தொடங்கிய நாளில் என்னை அழைத்த டீச்சர், எங்கள் வகுப்பு மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை என்னிடம் தந்தார். அவர் விடைத்தாளில் வழங்கியிருந்த மதிப்பெண்களைக் கூட்டி, ஒவ்வொருவரின் விடைத்தாளிலும் எழுதிவிட்டு, தனியாக மாணவரின் பெயரும், மதிப்பெண் பட்டியலும் தயாரிக்கச் சொன்னார். டீச்சர் என்னை மதித்துத் தந்த பணி, எனக்கு உற்சாகமளித்தது. நான் படித்த பத்து, பதினொன்றாம் வகுப்பிலும் டீச்சர்தான் வரலாற்று ஆசிரியை. மதிப்பெண்களைக் கூட்டி, பட்டியலிடுகிற எனது பணி தொடர்ந்தது.


அவர், ஒருமுறை என்னை அழைத்து ‘உங்கள் வீட்டில் பசு மாடு இருக்கிறதா? இருந்தால் கொஞ்சம் வெண்ணெய் வேண்டும். உதட்டில் புண்ணாக இருக்கிறது’ என்றார். என்னுடைய அம்மா, ’வெண்ணையை யாருக்கும் தரக்கூடாது. அது மாட்டுக்கு ஆகாது’ என்று கூறினார். நான் அதைப் பொருட்படுத்தாமல், கிண்ணத்தில் வெண்ணையை எடுத்திட்டுப் போய் டீச்சரிடம் தந்தேன். அவர் கண்களில் மலர்ச்சியுடன் நன்றி என்றார். எனக்குக் கூச்சமாக இருந்தது.


ஆசிரியர்  பத்தாம்பசலித்தனமாக ஆடை உடுத்திக்கொண்டு, அழுது வடியும் முகத்துடன் பாடம் நடத்தினால், அந்த வகுப்பில் மாணவர்கள் உற்சாகம் இல்லாமல்  இருப்பார்கள். அதேவேளையில்  நவீனமான உடையுடன் எடுப்பான தோற்றத்துடன் களையான முகத்துடன் சுறுசுறுப்பாகப் பாடம் நடத்துகிற ஆசிரியரின் வகுப்பை எல்லா மாணவர்களும் நேசித்தனர். தோற்றமும், முகப்பொலிவும் ஆசிரியர் பணிக்கு அடிப்படையானது என்ற புரிதலை மணிமேகலை டீச்சர் மூலம் அறிந்துகொண்டேன். பின்னர் நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது, மிடுக்குடன் வகுப்பிற்குச் சென்றதற்கு ஒரு  காரணம் மணிமேகலை டீச்சர்தான்.  எண்பதுகளின் நடுவில், எனது நேசத்திற்குரிய அந்த டீச்சரைத் தற்செயலாக மதுரைப் பேருந்து நிலையத்தில் பார்த்தவுடன், என்னைப் பற்றிச் சொல்லிவிட்டுப் பேசினேன். அவருடைய இளமையான தோற்றம் மாறியிருந்தது. என்னைப் பற்றி அவருக்கு நினைவு இல்லை. இருந்தாலும் அதே கனிவுடன் பேசினார். ஆசிரியர் பணி என்பது ஏணி என்பது உண்மைதான்.

 
ஒன்பதாம் வகுப்பில் என்னுடன் படித்த துரைப்பாண்டி தனது பையில் வைத்திருந்த பத்திரிகையைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. மட்டமான சாணித்தாளில் கருப்பு மை தடவியது போன்று அச்சடிக்கப்பட்டிருந்த பத்திரிகையில் நீச்சல் உடையில் இருந்த பெண்கள், மார்பில் முந்தானை இல்லாமல் ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்த பெண்கள் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அது, ஒரு மாதிரி பத்திரிகை என்று தோன்றியது. மதிய இடைவேளையில் பாடப் புத்தகத்திற்குள் அந்தப் பத்திரிகையை வைத்துப் புரட்டி வாசித்தேன். திரைப்பட நடிகைகள் பற்றிய செய்திகளுடன், மேலோட்டமான காதல் கதைகளும் பிரசுரமாகியிருந்தன. எனக்குள் சிறிய குழப்பம். ஏற்கனவே எங்கள் ஊரில் பத்திரிகை விற்பனை செய்கிற கடையில் ’காதல்’ என்ற பெயருடன் தொங்கிய பத்திரிகையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். காதல் என்ற சொல்கூட தவறானதாக அன்றையச்  சூழலில் கருதப்பட்டது. கிராமத்தில் பெரியவர்கள் சின்ன விஷயத்திற்காகச் சண்டை போடும்போது, பயன்படுத்துகிற பாலியல் சார்ந்த வசவுகளையும், பாலியல் பேச்சுக்களையும் கேட்டு வளர்ந்தபோதிலும், எழுத்து வடிவில் பாலியல் புத்தகத்தைப் பார்த்தது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாலுறவு பற்றிய அறிமுகம்கூட சக மாணவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. சிறிய கிராமங்களில் இருந்து படிக்க வருகிற  பையன்கள் ஓரளவு பாலியல் அறிவுடன் விளங்கியதும், அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதும் எப்படி என்பது இப்பவும் எனக்குப் புரியாத புதிர்தான். எண்ணும், எழுத்தும் மட்டுமல்லாமல்,  சிறுவர்சிறுமியர்க்குத் தங்களையும்,  சூழலையும் புரிந்திட பள்ளிகள் பெரிய அளவில் உதவுகின்றன.


எண்கள்,    கிராமத்து மாணவர்களுக்கு  எப்பொழுதும் சிக்கலை ஏற்படுத்தக்கூடியவை. மனக்கணக்கில் வல்லுநர்களான பெரியவர்கள், தெருவில் போகிற பையன்களை அழைத்து ஏதாவது புதிர்க்கணக்கு போட்டு, விடை சொல்லச் சொல்லுவார்கள். ’ஒரு குளத்தில் கொஞ்சம் பூக்கள் இருந்தன; கொஞ்சம் குருவிகள் பறந்துவந்து, பூக்களின் மீது உட்கார்ந்தன. ஒரு பூவில் ஒரு குருவி  என உட்கார்ந்தால், ஒரு குருவி மிச்சமாகும்.  ஒரு பூவில் இரண்டு குருவிகள் உட்கார்ந்தால், ஒரு பூ மிச்சமாகும். அப்ப பூ எத்தனை? குருவிகள் எத்தனை? நாங்கள் திணறிப் போய் விடுவோம்.  இதுபோல இன்னுமொரு  புதிர்: மொத்தம் மூன்று தேங்காய்கள் இருக்கின்றன. இரண்டு அப்பாக்கள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தேங்காயை உடைக்காமல் எல்லோருக்கும் சரிசமமாகப்  பிரித்துக் கொடுக்க வேண்டும். அது எப்படி?  இப்படியான கணக்குகளைப்   பள்ளிக்குப் போகாதவர்கள்கூட வாய்மொழியாகச் சொல்லி, சிறுவர்களான எங்களைத் திணறடிப்பார்கள். கூட்டல், கழித்தல் எல்லாம் வாய்மொழியாகச் சொல்லும் பெரியவர்கள் கிராமத்தில் நிரம்ப இருப்பார்கள்.


பொதுவாகக் கணக்குப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தவுடன், அதிர்ச்சியடைகிற மாணவர்கள் நிறைய இருந்தனர்.  ஆசிரியர், வகுப்பறையில் கணக்கைக் கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு, ம் எழுதுங்க என்று சொன்னால் எப்படி புரியும்?  பெரும்பாலான ஆசிரியர்களுக்குப் பொறுமையுடன்  கணக்கை விளக்குகிற ஆற்றல் இல்லை என்பதுதான் உண்மை. அப்புறம் வீட்டுக் கணக்குத் தருதல். வீட்டில் போய் எப்படி கணக்குப் போடுவது என்பது பெரும்பாலான மாணவர்களுக்குப் பெரிய பிரச்சினை. கணக்கில் ஏற்படுகிற சந்தேகத்தை யாரிடம் போய்க் கேட்பது? எல்லா பாடங்களையும் எளிதாகப் படித்த எனக்கு ஒன்பதாம் வகுப்பு வரையிலும் கணக்குப் பாடம் தொல்லை தருவதாக இருந்தது.  யோசிக்கும்வேளையில் பிற பாடங்களைச் சிரமப்பட்டு மனனம் செய்ய வேண்டும். கணக்குப் பாடம் அப்படியல்ல.   ஒரு கணக்கின் வழிமுறைகளை நினைவில் வைத்துக்கொண்டால் போதும், எளிதாகப் போடலாம்.


ஒன்பதாம் வகுப்பில் ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் கணக்கு ஆசிரியராக ஒரு மாதம் இருந்தார். அவர், கரும்பலகையில் கணக்கை எழுதிப் போடுவதைக் கடமையாகச் செய்வார். ஒரு பிரீயடில் ஏழெட்டுக் கணக்குகள்கூட எழுதிப் போடுவார். மாணவர்களுக்குக் கணக்குப் புரிந்ததா? என்று யோசிக்க மாட்டார். ஒன்பதாம் வகுப்பில் கணக்குப் பாடம், ஒப்பீட்டளவில் கஷ்டமாக இருந்தது.  வகுப்பில் ஓரிரு மாணவர்கள்தவிர எல்லோரும் திண்டாடினர். நான் எப்படியோ மாதிரி கணக்கை வைத்துக்கொண்டு வீட்டுப் பாடக் கணக்குகளை ஒப்பேற்றினேன். கணக்கு ஆசிரியர் சனி, ஞாயிறு விடுமுறை எனில் வெள்ளிக் கிழமை அன்று  மூன்று பயிற்சி கணக்குகள்- சுமார் 45 கணக்குகள்- வீட்டுக் கணக்காகப் போட்டு வருமாறு  சொல்லுவார்.  மாணவர்கள் கணக்குப் பாடத்தையும் ஆசிரியரையும் வெறுத்தோம். என்றாலும் சில கெட்டிக்கார மாணவர்கள் வீட்டுக் கணக்குப் போட குறுக்கு வழி கண்டுபிடித்தனர்.  மொத்தம் 45 கணக்குகளில் கடைசி ஐந்து கணக்குகளை மட்டும் போட்டு, திங்கள் கிழமை அன்று வகுப்பிற்கு வரும் ஆசிரியரிடம்   நோட்டின் கடைசி இரு பக்கங்களை மட்டும் காண்பித்துக் கையொப்பம் வாங்கி விடுவோம். அது, பரமரகசியமாகக் கடைசிவரையிலும் இருந்தது.


பள்ளிக்குப் புதிதாகவந்த ராஜு சார், ஒன்பதாம் வகுப்பிற்குக்  கணித ஆசிரியராக வந்தவுடன் வகுப்பறை சுறுசுறுப்பானது.   உசிலம்பட்டி பக்கத்து ஊரைச் சேர்ந்த ராஜு சார், ஒவ்வொரு கணக்கையும்  ஸ்டெப் பை ஸ்டெப்பாக நிதானமாக விளக்கினார். ஒரு பிரீயடில் இரண்டு அல்லது மூன்று கணக்குகளை எல்லோருக்கும் புரியும்வகையில் விளக்கினார். அவர், கொஞ்சம் கோபக்காரர்.  வகுப்பில் எங்காவது வேடிக்கை பார்க்கிறவனை நோக்கி சாக்பீஸ் துண்டை எறிவார்; திட்டுவார். வீட்டுக் கணக்கு என்று மாதிரிக்கு ஒன்றாக ஒரு பயிற்சியில் இருந்து, அதிகபட்சம்  மூன்று கணக்குகள் தருவார். ஒவ்வொருவரின் நோட்டையும் வாங்கி, எப்படி கணக்குப் போட்டிருக்கின்றனர் என்று கவனத்துடன்  பார்ப்பார். இன்னொருத்தன் நோட்டைப் பார்த்துக் காப்பியடித்து வீட்டுக் கணக்கை எழுதி வந்தால், அதைக் கண்டு பிடித்தால் அடி பின்னி விடுவதாக எச்சரிக்கை விடுப்பார். ராஜு சார் கணக்கு ஆசிரியரானவுடன்,  அவருடைய வகுப்பை உற்றுக் கவனித்த எனக்குக் கணிதப் பாடம் எளிதானதாக மாறியது. கணக்குப் பாடம் என்றால் வேப்பங்காயாகக் கசந்த நிலைமை, ஓரிரு மாதங்களில் மாறியதற்கு ராஜுசார்தான் காரணம். அப்புறம் நான்  பத்தாம் வகுப்பில் சிறப்புப் பாடமாகக் கணிதத்தைத் தேர்ந்தெடுத்ததும், கல்லூரியில் பி.எஸி(கணிதவியல்) பட்டம் பெற்றதும்  எதுவும் நடப்பதற்கான சாத்தியத்தின் வெளிப்பாடுகள். அவை   தனிக்கதைகள்.

 

(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்) 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...