அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வகுப்பறை வாசனை 13: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   28 , 2020  13:07:52 IST


Andhimazhai Image

ஏழாம் வகுப்பில் ஆண்டுத் தேர்வுகள் எழுதி முடித்து, கோடை விடுமுறையில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது, எனக்குத் திடீரெனத் தோன்றியது, ஆங்கில வழிக் கல்வி போதிக்கிற பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று.  கிராமத்துச் சிறுவர்கள் ஆங்கில மொழிப் பாடத்தைக் கண்டமாக நினைத்த சூழலில், எல்லாப் பாடங்களையும் ஆங்கில வழியில் படிக்க முடியுமென்ற நம்பிக்கை எனக்குள் எப்படி உருவானது என்று இப்பவும் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் எப்பொழுதாவது வானத்தில் பறந்துபோகும் விமானத்தைப் பார்த்துவிட்டு, அதையோட்டுகிற பைலட் ஆக வேண்டுமென்று  ஆசைப்பட்டேன். அப்புறம் நீதிபதி. இப்படி நிறைய ஆசைகள். இவையெல்லாம் ஆங்கிலம் மூலம்தான் சாத்தியப்படும் என்று தோன்றியதன் விளைவுதான் ஆங்கில வழியில் படிக்க விருப்பம் கொண்டேன் என்று சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது.

 

மதுரையில் நாகமலை அடிவாரத்தில் ஜெயராஜ் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருக்கிறது எனக் கேள்விப்பட்டு, எனது தந்தையாரிடம்  விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் சரி என்று சொல்லி, மூத்த அண்ணன் கனிப்பாண்டியனிடம்  ஆவன செய்யுமாறு சொன்னார். அந்தப் பள்ளியில் சேர்ந்திட சிபாரிசு வேண்டுமென்று கேள்விப்பட்டபோது, எங்கள் மச்சான் மூலம் பள்ளியின் நிர்வாகியிடமிருந்து பரிந்துரைக் கடிதம் வாங்கினோம். நானும் அண்ணனும் நகரப் பேருந்தில் பயணித்து, பள்ளிக்குப் போனோம். பிரமாண்டமான கட்டடங்களும், பெரிய மரங்களும் அடர்ந்திருந்த பள்ளிக்கூடம் பிரமிப்பைத் தந்தது. ஒருவிதமான மிரட்சியுடன் தலைமை ஆசிரியர் அறையின் முன்னர் காத்திருந்தேன். எங்களை அழைத்தவுடன் உள்ளே போனோம். பரிந்துரைக் கடிதத்தை வாங்கி வாசித்த தலைமை ஆசிரியர், என்னைப் பார்த்து வாட் இஸ் யுவர் நேம்? என்று மிரட்டலாகக் கேட்டார். அதற்குப் பதில் சொன்னேன். சரி, போய் பணத்தைக் கட்டுங்கள், ஹாஸ்டல் வேண்டும் இல்லையா? என்றவுடன் ஆம் என்றார் அண்ணன். அறையைவிட்டு வெளியேவந்த அண்ணன் அலுவலகத்தில் கட்ட வேண்டிய தொகையை விசாரித்தார். அவர் கொண்டு வந்திருந்த தொகை, குறைவாக இருந்தமையினால், மறுநாள் வந்து சேர்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். மீண்டும் பேருந்துப் பயணம்.

 

ஊருக்குப் போனவுடன் ஏற்கனவே அந்தப் பள்ளியில் சேர்ந்து, விடுதியில் தங்கியிருந்து, இடையில் கிளம்பிவந்த துரைப்பாண்டி என்ற மாணவனைப் பார்த்து விசாரித்தேன். அவன், ஹாஸ்டலில் ஒரு பெரிய அறையில் நாற்பது பேர்  தங்கியிருப்பார்கள்;  காலையில் ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள்; திறந்தவெளியில் இருக்கிற தண்ணீர்த் தொட்டியில் குளிக்க வேண்டும்; சின்னத் தவறு செய்தால்கூட வார்டன் அடி பின்னி விடுவார்… இப்படிச் சொன்னவுடன் எனது ஆங்கிலவழிக் கல்வி கற்றல் ஆசை, நிராசையானது. வீட்டைவிட்டுப் பிரிந்து போகிற மனநிலை வேறு தொந்தரவு செய்தது. வெளியூர் போய்ப் படிக்கவில்லை என்று தந்தையாரிடம் சொன்னவுடன், அவர் சரியென்று சொன்னார். ஒருக்கால் ஆங்கில வழியில் எட்டாம் வகுப்பிலிருந்து படித்து இருந்தால், ஆங்கிலத்தில் புலமை மிக்கவனாகி இருந்திருப்பேன். 

 

அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பாடத்தைப் படிக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு, ஒத்துவராத காரணத்தினால்தான் ஹாஸ்டலுக்குப் போய்த் தங்கிட எனக்கு விருப்பம் இல்லாமல் போனது. அதிகாலையில் பாடம் படித்தால், படித்த பாடம் அப்படியே நினைவில் தங்குமென்பது பொதுவாக நிலவும் நம்பிக்கை. ஆசிரியர்கள் வகுப்பறையில் காலையில் எழுந்து படிக்க வேண்டியதன் அவசியத்தைப் போதிப்பார்கள். ஆனால் என்னுடைய கல்வி கற்றல் ஒருபோதும் அதிகாலையில் இல்லை.  கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளின்போதுகூட, அதிகாலை மூன்று மணி வரை படித்துவிட்டு, திருப்தியான மனநிலையுடன் தூங்கி, காலையில் எட்டு மணிக்கு மேலாக எழுந்து, பரபரப்பு இல்லாமல் தேர்வு எழுதிடச் செல்வது எனது வழக்கம். கல்வி கற்றலைப் பொருத்தவரையில் எல்லா மாணவர்களையும் ஒன்றாகக் கருதுவது தவறானது. ஒவ்வொரு மாணவனின் கற்றல் முறையும், கற்றல் திறனும் வெவ்வேறானவை.

 

 கோடை விடுமுறை முடிந்து, உயர்நிலைப் பள்ளிக்குப் போனேன். ஆங்கில வழிப் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் போனது மனதில் நெருடலாக இருந்தது. எட்டாம் வகுப்பின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் சார் சிவந்த தோற்றத்தில் உயரமாக இருப்பார்.   அழகிய எவர்சில்வர் பெட்டியிலிருந்து வெற்றிலை, பாக்கை கலைநயத்துடன் எடுத்து, அடிக்கடி போட்டு மெல்லுவதால்  அவருடைய உதடுகள் சிவந்து இருக்கும். எப்பொழுதும் புன்னகையான தோற்றத்துடன் பாடம் நடத்துகிறவர், ஓய்வு நேரத்தில் பள்ளியின் அலுவலகம் தொடர்பான எழுத்து வேலைகளைச் செய்வார். ஆங்கிலப் பாடத்தைப் புரியும்படி நடத்துவதாலும்,  மாணவர்களை அடிக்காமல் இருப்பதாலும் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். 

 

ஆசிரியரின் துணைவியார் மதுரை, மங்கையற்கரசி பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றினார். அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவமாணவியர் எழுதிய காலாணடுத் தேர்வு விடைத்தாள்களை என்னிடம் கொடுத்து, திருத்தி, மதிப்பெண் அளிக்குமாறு சார் சொன்னார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. ஒவ்வொரு பரிட்சைப் பேப்பராக எடுத்து வாசித்து, மதிப்பெண் அளித்தேன். அரைப் பரீட்சைக்கும் நான்தான் தேர்வு மதிப்பீட்டாளர். ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முழு ஆண்டுத் தேர்வுத் தாள்களை என்னிடம் கொடுத்து, மதிப்பெண் போடச் சொன்னார். குட்டிப் பிள்ளைகள் பாஸ் அல்லது ஃபெயில் என் கையில் இருக்கிறது என்ற உணர்வுடன் கவனமாகத் திருத்தினேன். சில மாணவர்கள் விடைத்தாளில் பெயருக்கு ஏதோ கிறுக்கி இருந்தனர். அழி ரப்பரை வைத்து, அந்தக் கிறுக்கல்களை அழித்துவிட்டு, விடைகளைச் சின்னப் பிள்ளைகள் எழுதுவது போலப் பெரிய எழுத்தில் எழுதி,  மதிப்பெண்கள் கொடுத்தேன். ஏன் அந்தக் குழந்தைகள் எளிய கேள்விகளுக்குக்கூட பதில் எழுதவில்லை என்று வருத்தமாக இருந்தது. தேர்வில் ஜீரோ வாங்கினால், நிச்சயம் அந்த வருடம் ஃபெயில்தான். மீண்டும் அதே வகுப்பில்தான் படிக்க வேண்டும். முகமறியாத குழந்தைகள்மீது இரக்கப்பட்டு, நான் செய்த செயல் தவறு எனப் புரிந்தாலும், பாடம் படிக்க முடியாமல் மக்கு என்று திட்டு, அடி வாங்குவதுடன், ஃபெயிலாகிறவர்களை எண்ணி வருத்தப்பட்டேன். நான் செய்த செயல் ஆசிரியர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு முரணானது. ஒருவகையில் துரோகம். ஆசிரியரின் மனைவியான ஆசிரியை விடைத்தாள்களைத் திருத்தாமல், சாரிடம் தந்ததும், அவர் என்னிடம் தந்ததும் எல்லாம் சரியானவை அல்ல என்று அந்த வயதில் எனக்குத் தோன்றியது. 

 

அப்பொழுது நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊருக்கு வடக்கில் இருக்கும் கண்மாயில் குளித்துவிட்டு, மாலையில் நண்பர்களுடன் வீட்டுக்குப் போனேன். செல்லும் வழியில், ரயில்வே கேட் அருகில் இருந்த முள் வேலியிடப்பட்டிருந்த இடத்தில், மரத்தடியில் சுமார் இருபது சிறுவர்களும், இரண்டு பெரிய அண்ணன்களும் கூடி விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தோம். அந்தக் குழுவில் பெரிய ஆட்கள் காக்கி டிரவுசரும், வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தனர். கொஞ்ச நேரம் நின்றுவிட்டுக் கிளம்பினோம். மறுநாள் காலை இடைவேளையின்போது, பதினொன்றாம் வகுப்புப் படிக்கிற கிருஷ்ணமூர்த்தி அண்ணன் வந்து என்னிடம் பேசினார். வாரத்தில் நான்கு நாட்கள் விளையாட்டுகள் நடத்துகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்திட அழைப்பு விடுத்தார். எனக்கு ஆர்.எஸ்.எஸ். என்றால் என்னவென்று எதுவும் புரியவில்லை. இருந்தாலும் சேர்ந்து விளையாடலாம் என்ற ஆர்வத்தில் வருவதாக ஒப்புக்கொண்டேன். அடுத்த நாளில் மாலையில் அந்த இடத்திற்குப் போனேன். வயதில் மூத்தவர்களை ‘ஜீ’ என்று அழைபபது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டுகளின் முடிவில் எல்லோரும் வட்டமாக அமர்ந்தபோது, தலைவர் போல இருந்த எங்கள் பள்ளியின் தமிழாசிரியர் இராமநாத சர்மாவின் மகன் (கல்லூரி மாணவர்) ‘இந்து சாம்ராஜ்யம்’ ஏற்படுத்திட முயலுகிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கத்திற்குப் பாடுபட வேண்டும் என்று உரையாற்றினார். அது குறித்து எனக்கு ஆர்வம் எதுவுமில்லை. அங்கே சொல்லித் தரப்பட்ட விளையாட்டுகள் முக்கியமானவையாகப்பட்டன. ‘தச்சோ, விஸ்ரமோ’ என்ற சம்ஸ்கிருத மொழியில் சொல்லவேண்டிய ஆணைகளும், ‘சதா வஸ்திர மாத்ரு பூமி’ எனத் தொடங்கிய சம்ஸ்கிருதப் பாடலும் எனக்கு விநோதமாகப்பட்டன. எதுக்கு இந்து சாமராஜ்யம் என்ற குழப்பத்துடன் அங்கு போய்க்கொண்டிருந்தேன்.

 

எங்கள் அப்பச்சி, அய்யா, சின்னையா, மாமா எல்லோரும் திராவிட இயக்கச் சார்புடையவர்கள். எனக்கு தி.மு.க.வின் அடுக்கு மொழிப் பேச்சுகளும், முற்போக்குக் கருத்துக்களும் பிடிக்கும். ஆர்.எஸ்.எஸ். பற்றிய புரிதல் இன்றி அங்கு போனேன். அந்தச் சூழலுடன் ஒட்ட முடியவில்லை. மூன்று மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் எங்கள் வீட்டிற்கருகில் இருந்த மந்தையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், ‘ காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன்’ என்று பேச்சாளர் பேசியதைக் கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.   பள்ளிப் பருவத்தில் என்னுடைய ஆதர்சமான காந்தியை  ஆர்.எஸ்.எஸ்.காரன் ஏன் சுட்டுக் கொல்ல வேண்டுமென்று, மறுநாள் பள்ளிக்கூடத்தில் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து விளக்கம் கேட்டேன். அவருடைய பதில் மழுப்பலாக இருந்தது. மதுரையில் இருந்து மாதந்தோறும் வரும் பெரிய ’ஜீ’யிடம் விளக்கம் கேட்கலாம் என்ற சொன்ன பதில் சரியானதாகத் தெரியவில்லை. ‘இனிமேல்   அங்கு வரமாட்டேன்’ என்று உறுதியுடன் கூறினேன். எனக்கென்று சுயமான கருத்து உருவானது அந்தக் காலகட்டத்தில்தான். கிராமத்துச் சிறுவனான என்னைக் கருத்துரீதியில் வடிவமைத்ததில் ஆசிரியர் வாசனுக்கும், புத்தகங்களுக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

 

நான் கல்வி கற்ற உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில்  ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் என்று எதுவும் நடைபெறவில்லை. எங்கள் ஊரில் இருந்த ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா, ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. அரசு உயர்நிலைப் பள்ளியில் விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது என்ற விதி  இல்லாதபோதிலும், அதற்கென நிதி இல்லாத காரணத்தினால் ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை. பொதுவாகத் தலைமை ஆசிரியர்களும் ஆரவமற்று இருப்பதானால், எவ்விதமான கலை நிகழ்ச்சியும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நடைபெறாது. ஆண்டு முழுவதும் பள்ளியில் படிக்கிற மாணவமாணவியரின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஆண்டுவிழா நடத்த வேண்டியது அவசியம். கற்றலுடன் இசை, நாட்டியம், நாடகம் எனப் பல்வேறு கலைத் திறன்களை வெளிக்கொண்டு வருகின்ற ஆண்டு விழா என்ற நிகழ்ச்சி, பள்ளி மாணவமாணவியரின் ஆன்மாவாகும்.

 

(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)

   


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...