???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வகுப்பறை வாசனை - 1: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   23 , 2019  01:34:30 IST


Andhimazhai Image
எழுபதுகளின் இறுதியில் முதுகலை இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் வருடத்தில் பாதி நாட்கள் பளிங்கு போல பாய்ந்தோடும். எங்கள் கிராமமான சமயநல்லூர் ஊரைச் சுற்றிலும் எங்கும் ஒரே பசுமை. வெற்றிலைக் கொடிக்கால்கள், தென்னந்தோப்புகள், நெல் வயல்கள் எனப் பச்சைக் கம்பளம் விரித்தது போன்று காணும் திசையெங்கும் செழிப்பு. ஒரு நாள் மாலைவேளையில்  எனது தந்தையார் என்னை அழைத்து “இவரு கீதாரி. நம்ம  வயலில் கிடை போடணும். கள்ளரவெட்டி காணியை இவருக்குக் காட்டிட்டு வாய்யா” என்று அருகில் நின்றவரைக் காண்பித்தார். திரும்பிப் பார்தேன். வாட்டசாட்டமான நடுத்தர வயதானவர், சட்டை அணியாமல் கருத்த உடம்புடன் நின்றுகொண்டிருந்தார். தோளில் நீர்ப்பழுப்பேறிய துண்டு.  மனதில் சின்ன சலிப்பு. எப்படியும் ஒரு மைல் தொலைவு நடக்கணும். யோசித்தவாறு நடக்கத் தொடங்கினேன். என்னைவிட வேகமான நடையில் அவர். “எந்த ஊருங்க’ என்ற கேள்விக்கு உடன் ”அருப்புக்கோட்டை பக்கம் கீகாடுங்க என்றார். அவர், லாரி டயரால் தயாரான தடித்த செருப்பைச் சரட்டுச் சரட்டென இழுத்தவாறு நடந்து வந்தது, எரிச்சலாக இருந்தது.  கொஞ்ச நேரம் மௌனம். சகிக்காமல் பேசத் தொடங்கினேன். எத்தனை ஆடுகள்? எவ்வளவு பேர் கிடையில் இருப்பீங்க? வருசம் முழுக்க இப்படியே இருட்டுக்குள்ள வயக்காட்டில் அலைவீங்களா? திருடன்கள் வருவானுகளா?.. இப்படி கேள்விகளாகக் கேட்டேன். அந்த எளிய கிராமத்து மனிதர் பொறுமையாகச் சொன்ன பதில்கள், என்னை ஆச்சரியப்படுத்தின. பள்ளிக்கூடத்தில் ரெண்டாவதுதான் படிச்சேன் என்றவர் விலாவாரியாக ஆடுகள், மேய்ச்சல், கிடை, கீதாரி வாழ்க்கை பற்றிச் சொன்ன தகவல்கள், கலைக்களஞ்சியம் போல விரிந்தன. நாலு பேருக்குச் சொந்தமான 385 ஆடுகளில் அவருடைய பங்குக்கான 104 ஆடுகள் எவை என்று தெரியும் என்று சொன்னதுடன், ஒவ்வொரு ஆட்டுக்கும் மூளி, குட்டை எனப் பெயர் இருக்கிறது என்றார். வயலுக்குச் செல்லும் வழியில் அவருடைய கிடை ஆடுகள், புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. எல்லாம் வெள்ளாடுகள். ஒரே மாதிரி இருந்தன. அவர் மூளி என்று சப்தமாகச் சொன்னதும், தொலைவில் இருந்த வெள்ளாடு அவரை நோக்கி, தலையை ஆட்டியவாறு உற்சாகத்துடன் ஓடி வந்து மோந்து பார்த்தது. கீதாரி தனது  கிடை, ஆடுகள், பற்றிச் சொன்ன விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்தன. கிராமத்துக் காட்டாள் போல இருந்தவர் அனுபவத்தில் அறிந்திருந்த விஷயங்கள், ஒருபோதும் எனக்குத் தெரியாதவை. பிரக்ஞை, கசடதபற, கணையாழி போன்ற பத்திரிகைகள், மார்க்சியம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி தத்துவம், எக்ஸிடென்சியலிசம், உன்னத இலக்கியம், ஃபிலிம் சொசைட்டி உலகத் திரைப்படங்கள், வீதி நாடகங்களில் நடித்தல் எனக் கலகக்காரன் பிம்பத்துடன் அறிவுஜீவியாக என்னை வித்தியாசமானவனாகக் கருதிய மனநிலை, உடைந்து சிதறியது. கல்வியறிவு, புத்தக வாசிப்பு இல்லாத  கீதாரிக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து இருந்தன என்று குழம்பினேன். எண்ணும் எழுத்தும் கற்பது மட்டுமல்ல கல்வி, ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள ஏகப்பட்டவை இருக்கின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. கீதாரி மட்டுமல்ல, தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய கொத்தனாரின் தொழில்நுட்ப அறிவு என்பது நிச்சயம் ஏட்டுக் கல்வியாக இருக்க வாய்ப்பில்லை. கல்வி என்றால் வகுப்பறை, ஆசிரியர், பாடத்திட்டம், தேர்வு என்ற முறையியலுக்கு மாற்றாகச் சமூகத்தில் கல்வி வெவ்வேறு வடிவங்களில் எல்லாக் காலங்களிலும் இருக்கிறது. பள்ளிகூடம் போகாமலே பாடங்களைப் படிக்காமலே வாழ்ந்த நமது மூதாதையர், மகிழ்ச்சியாக வாழவில்லையா என்ன? பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைப் படிக்காமலே வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.
 
 
கல்வி என்றால் என்னவென்று யோசிக்கவேண்டியுள்ளது. ஆதிகாலத்தில் எங்கும் இருள் நிரம்பியிருந்தபோது, கையில் தீவட்டியை ஏந்திச் சென்றவரை மனிதகுலத்தின் முதல் ஆசிரியர் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மனம் என்ற விநோதமான உலகில் பயணிக்கையில், ஒவ்வொரு கணமும் எதிர்கொள்கிற அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்கிற விஷயங்களுக்குக் கணக்கேது? தாயின் கருப்பையில் இருந்து வெளியே வந்த பச்சிளம் சிசு, அரை மணி நேரத்தில் அம்மாவின் மார்புக் காம்பில் பிஞ்சு உதடுகளால் உறிஞ்சிப் பாலைக் குடிக்கக் கற்றுக்கொள்வது இயல்பிலே இருக்கிறது. யோசிக்கும்வேளையில் மனித வாழ்க்கையில் பிறந்தது முதலாக  மூப்புக் கட்டம் வரை கற்றல் என்பது இடைவிடாமல் தொடர்கிறது. பூமியில் கற்றலுக்கு ஓய்வு என்பது ஒருபோதும் இல்லை. மரபான வழியில் எண்ணும் எழுத்தும் ஆசிரியர் மூலம் கற்றல், தமிழர்களைப் பொருத்தவரையில் சங்க காலத்தில் தொடங்கி விட்டது. இருபதாம் நூற்றாண்டில் குருகுலக் கல்வி, ஆங்கிலேயக் காலனியாதிக்கம் உருவாக்கிய கல்வி இரு வேறு முறைகளில்  மாணவர்கள் கற்றல் நடைபெற்றது. கல்வி கற்றல் மூலம் ஒரு குழந்தையின் செயல்கள் செழுமையடைந்து, சமூகத்துடன் பொருந்திப் போகின்றன என மேலோட்டமாகச் சொல்ல முடியும். கல்வியைக் கண் என்று கருதுகிற தமிழ்ச் சமூகத்தில் கல்வியை முன்வைத்த எனது அனுபவங்கள் சுவராசியமானவை மட்டுமல்ல, கடந்த காலத்தின் வரலாற்று ஆவணங்கள்.
 
 
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நாவலுக்குரிய விஷயங்கள் ததும்பி வழிகின்றன; இதற்கு  நானும் விதிவிலக்கு அல்ல. தெருவில் விளையாடிக்கொண்டு திரிந்த குட்டிப்பையனான என்னை அழைத்துப்போய் எனது அம்மா எனக்குப் புது உடைகள் அணிவித்து, தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு, நடு உச்சியாக வகிர்ந்தெடுத்தார்; தேங்காய்ச் சிரட்டையில் உறைந்திருந்த வேங்கைப்பாலில் தண்ணீர்விட்டு, சுட்டுவிரலால் கருப்பு மையை நெற்றிப்பொட்டில் திலகமிட்டார். கையில் மஞ்சள் பையில்  கல் சிலேட், குச்சி, அன்னாஆவன்னா அட்டையுடன் என் தந்தையின் இடதுகைச் சுண்டுவிரலைப் பிடித்தவாறு நடந்தேன். வேட்டியின் நுனியைக் கையில் பிடித்தவாறு நடந்தவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தேன். பள்ளிக்கூடத்தில் சேரப்போகிறேன் என்ற உற்சாக மனநிலையுடன் இருந்தேன். சுற்றிலும் பராக்குப் பார்த்தவாறு நடந்துபோன எனக்கு, அண்ணன்கள் படிக்கிற பள்ளியில் நானும் படிக்கப் போவதில் ஒருவிதமான பெருமை.
 
 
 எங்கள் ஊரான சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் ராணி மங்கம்மாள் காலத்துப் புளியமரங்கள், வானத்தைத் தழுவி நின்றன. அன்றைய காலகட்டத்தில் பஸ் என்ற பேருந்து கார் என அழைக்கப்பட்டது. எப்பொழுதாவது ஒரு கார் சாலையில் போகும். மற்றபடி மாடுகள் அசைந்தவாறு இழுத்துச்செல்கிற மாட்டு வண்டிகள்தான் சாவகாசமாகப் போய்க்கொண்டிருக்கும். பெரும்பாலானோர் நடந்து சென்றனர். சாலையின் ஓரத்தில் சோர்வுடன் இருந்த பழைய காலத்துக் கட்டடம், ஊர்க்காரர்களால் சத்திரம் எனப்பட்டது. ஒரு சில விவரமான ஆட்கள்,  அந்தக் கட்டடத்தை ராணி மங்கம்மா சத்திரம் என்று சொல்லுவார்கள். சதுர வடிவில் நடுவில் திறந்த முற்றத்துடம் அமைந்திருந்த சத்திரம் எனப்பட்ட காரைக் கட்டத்தின் நுழைவாசலின் இடதுபுறம் இருந்த பெரிய அறையின் முன்னர் எனது தந்தையாருடன் போய் நின்றேன். பெரிய மேசையின் பின்னர் உட்கார்ந்திருந்த ஹெட் மாஸ்டர் என அழைக்கப்பட்ட தலைமை ஆசிரியர் “வாங்க” என்று புன்முறுவலுடன் எனது தந்தையாரை உள்ளே அழைத்தார். நானும் ரொம்ப இயல்பாக உள்ளே போனேன். எனது பெயரைக் கேட்டார். சொன்னேன்.  வலது கையை வைத்து தலையைச் சுற்றி இடது காதைத் தொடச் சொன்னார். சிரமப்பட்டுக் காதைத் தொட்டுக் காண்பித்தேன். அவர் “அம்மா முத்துப் பிள்ளை” என்றவுடன் ஒல்லியானவர் உள்ளே நுழைந்தார். ” இவனை ஒன்னாவது ஏ வகுப்புக்குக் கூட்டிடுப் போய் விடுங்க” என்றவுடன் அவர் பின்னாடி போனேன். அந்தத் தலைமை ஆசிரியரின் பெயர் தூமடை என்று பின்னர் தெரிந்தது. கொஞ்சம் கட்டையான தோற்றத்துடன் இருந்த அவர், மாணவர்களிடம் எப்பொழுதும் பிரியமாக இருந்தார்.
 
 
 
முதல் வகுப்பில் சேரும்போது ஐந்து வயதாகி இருக்க வேண்டும் என்பது அரசின் விதி. எனக்கு அப்ப நான்கு வருடங்கள், ஆறு மாதங்கள் ஆயிருந்தது. எனது அசலான பிறந்த தேதியான 26-12-1957 என்பது 01-06-1957 என்று தலைமை ஆசிரியரால் மாற்றப்பட்டது. நாலரை வயதில் பள்ளிக்குப் போன என்னுடைய  முதலாம் வகுப்பு ஆசிரியையின் பெயர் சீனியம்மாள். வகுப்பில் எனக்கு ஏற்கனவே தெரிந்த சில பையன்களும் பொண்ணுகளும் இருந்தனர். மணியடித்தவுடன் வெளியே ஓடிப்போய் விளையாடலாம் என்ற நினைப்பு, உற்சாகம் தந்தது.
 
 
வகுப்பறை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆசிரியை ஆர்வத்துடன் பாடம் நடத்தவில்லை. எதுவும் கற்றதாக எனக்கு நினைவில் இல்லை. அ,ஆவன்னா கூடச் சொல்லத் தெரியாமல் இருந்தேன். சில மாதங்கள் கழிந்தபிறகு நான் சரியாகப் படிக்கவில்லை என்று எனது அண்ணன் கனிப்பாண்டியன் தலைமை ஆசிரியரிடம் சொல்லி, வேறு வகுப்பிற்கு மாற்றினார். பி வகுப்பில் குப்பம்மாள் டீச்சர் ரொம்பக் கண்டிப்புடன் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். ஒழுங்காகப் படிக்காத மாணவ்ரகளைக் கம்பினால் விளாசி விடுவார்.  எழுத்துகளும் எண்களும் எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. வகுப்பறையில் நிறையக் கதைகள் சொன்ன டீச்சரை எனக்குப் பிடித்தது. தொப்பி வியாபாரியும் குரங்குகள் கதையை வகுப்பில் நிகழ்த்திக் காட்டியது மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தது. மரத்தடியில் தூங்கிய வியாபாரியிடம் இருந்து தொப்பிகளை எடுத்த குரங்குகளில் ஒருவனாக நானும் நடித்தேன்.
 
 
 ஒருநாள் கரும்பலகையில் எழுதியிருந்த சொற்களைத் தவறாக வாசித்தனால், காற்றில் சுழன்ற பிரம்பினால் எனது தலையில் இருந்து குருதி  சட்டையில் சொட்டியது. அலுவலக அறையின் முன்னால் இருந்த பானையில் இருந்து தண்ணீரால் ரத்தத்தைத் துடைத்தபோது, என்னைப் பார்த்த தலைமை ஆசிரியர், ஆயாம்மா சௌந்திரம் அக்காவை அழைத்துச் சுத்தம் செய்யச் சொன்னார். மறுநாள் எங்கள் அம்மா பள்ளிக்கு வந்து குப்பம்மாள் டீச்சரைத் திட்டிய வசவுகள் சொல்லில் அடங்காது. அம்மாவின் வசவுகளைக் கேட்கக் கூச்சமாக இருந்தது;  எதுவும் பேசாமல் நின்ற டீச்சரைப் பார்க்க பாவமாக இருந்தது. அப்புறம் முதலாம் வகுப்பில் டீச்சரிடம்  ஒருபோதும் அடி வாங்கவில்லை.   பள்ளியில் குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று இன்றைய உளவியலாளர்களும் கல்வியாளர்களும் சொல்வதை 1962 ஆம் ஆண்டில் பள்ளிக்குப் போகாத எனது அம்மா சொன்னதை இப்ப நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
 
(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)
 
ஓவியம் - தியானேஸ்வரன்
 

English Summary
Vagupparai vaasanai 1

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...