அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பொதுக்காசை ஆட்டை போட்ட சம்பவம்!- வகுப்பறை வாசனை -9- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   20 , 2020  16:40:32 IST


Andhimazhai Image

  1967,  ஜூன் மாதம்.   ஆறாம் வகுப்பில் சேர்ந்திட எனது தந்தையாருடன் உயர்நிலைப் பள்ளிக்கூடம் போனேன். எனது அண்ணன்கள் படிக்கிற பள்ளியில் நானும் சேர்ந்து படிக்கப் போவதால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே வளாகத்தில் வலதுபுறம் தொடக்கப் பள்ளியும், இடதுபுறம் உயர்நிலைப் பள்ளியும் இருந்தன. பள்ளியின் மையத்தில் இருந்த பெரிய காரைக் கட்டடத்தில் எதிரெதிராகத் தலைமை ஆசிரியர் அறைகள் இருந்தன. கடந்த ஐந்தாண்டுகளாகப் படித்த தொடக்கப் பள்ளிக்கூடத்தை விலகி நின்று பார்த்தேன். ’பொடிப் பயலுக ஓடித் திரியுறானுக’ என்று அலட்சியம் என் மனதில். நான் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது, எங்களுடன் வந்திருந்த கடைப்பையன் தலைமையாசிரியருக்கும், அங்கிருந்த பிற அலுவலர்களுக்கும் காளி மார்க் கலர் பாட்டிலின் சிங்கியைத் திறந்து, குடிப்பதற்காகக் கொடுத்தார். ஆறாம் வகுப்பு பி பிரிவு வகுப்புக்குப் போனேன். எனது சட்டைப் பையில் மை ஊற்றி எழுதும் பேனா இருந்தது, உற்சாகமளித்தது.  பென்சிலில் இருந்து பேனா என்பதும், சிலேட், குச்சி  இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். பென்சிலைச் சீவி எழுத வேண்டிய வேலை இனிமேல் இல்லை. சில நேரங்களில் பென்சிலைச் சீவுவதற்குப் பதிலாகக் கை விரலைச் சீவி, ரத்தம் சிந்தும் விரலைச் சூப்பிடத் தேவையில்லை. அப்புறம் நான் இப்பொழுது ஹைஸ்கூல் மாணவன்; பெரியவன் என்ற எண்ணம் மனதில் பொங்கியது. இன்றைக்கு ஆறாம் வகுப்பு, அடுத்த வருஷம் ஏழாம் வகுப்பு, அப்புறம் எட்டு… இப்படியே பதினைந்தாம் வகுப்புவரை படிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன். எங்கள் ஊர்ப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வரை இருப்பது தெரியும். அடுத்துப் படிக்க மதுரைக்குப் போக வேண்டும்.

 

பேனாவுக்குத் தினமும் மை ஊற்றுவது, பெரிய விஷயம். நான் தினமும் எனது தந்தையாரின் கடைக்குப்போய், பேனாவில் மையை நிரப்புவேன் ஒரு காசு கொடுத்து, பள்ளிக்கு எதிரில் இருக்கிற  கடையில் பேனாவுக்கு மையை ரொப்பிக்கொள்ளக் காலையில்  மாணவர் கூட்டம் காத்திருக்கும். பெரும்பாலான மாணவர்களின் பேனாவில் மை கசிந்து, கை விரல்களும், சட்டையும் மைக்கறையாக இருக்கும். வாத்தியார் கரும்பலகையில் எழுதுவதை நோட்டில் எழுதும்போது, பேனா மக்கர் பண்ணும். பேனாவின் கழுத்துக்கட்டையைக் கழற்றிப் பார்த்தால், உள்ளே மை இருக்காது. அப்புறம் பக்கத்துப் பையனிடம் ஏழெட்டுச் சொட்டுகள்  மைத்துளிகளை நிப்பின் வழியாகக் கடன் வாங்கி, நிரப்பிக்கொண்டு எழுத வேண்டும்.  சிலர், பேனாவின் நிப்பைப் பல்லால் கடித்தும், நிப்பின் முனையைச் சிமிண்டுத் தரையில் மெல்ல உரசியும் எப்படியாவது எழுதிட முயலுவார்கள். தமிழாசிரியர் சண்முகம் ஐயா, ‘என்னடா பேனாவுக்குப் பிரசவம் பார்க்குறீயா?’ என்று கிண்டலாகச்  சொல்வதைக் கேட்டு, எல்லோரும் சிரிப்போம்.    

 

 ஆறாம் வகுப்பில் ஏ பிரிவில் மாணவிகளும், பி, சி பிரிவுகளில் மாணவர்களும் இருந்தனர்.  தொடக்கப் பள்ளியில்  பெண்/ஆண் பேதமில்லாமல் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்த சூழல், உயர்நிலைப் பள்ளியில் பிரிவினைக்குள்ளானது. பசங்களைப் பொருத்தவரையில் பொம்பளைப் பிள்ளைகள் இல்லாத வகுப்பு, உற்சாகமளித்தது; இனிமேல் எல்லாவிதமான வால்த்தனங்களும் செய்திடலாம்; அவர்களைக் காட்டிக் கொடுக்க யாருமில்லை என்று மகிழ்ந்தனர். ஆறாம் வகுப்பில் பெண்/ஆண் என்ற பால் பாகுபாடு, மாணவர்களுக்கு இடையில்  வேறுபாடுகளைக் கூட்டியது. ஒரே வளாகத்தில் படித்தாலும், வகுப்பில் ஆணும், பெண்ணும் பிரிந்திருக்க வேண்டுமென்ற சூழலில் படித்தோம்.

 

ஆறாம் வகுப்பு  ஆசிரியர்  அடைக்கலம் சார், தினமும் வகுப்புகள் நடைபெறும் பாட அட்டவணையைக் கரும்பலகையில் எழுதி, இனிமேல் அதன்படி   பாடம் நடத்தப்படும்  என அறிவித்தார். பி.டி.பீரியட் எனப்படும் விளையாட்டு, ஓவிய வகுப்பு, கைவேலை வகுப்பு என்ற அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அப்புறம் வகுப்பு ஆசிரியர்தவிர வேறு ஆசிரியர்களும் பாடம் நடத்த வருவார்கள் என அறிந்தேன். தொடக்கப் பள்ளியில் ஒரு வகுப்பில் ஒரே ஆசிரியரிடம் வருஷம் முழுக்கப் படிக்க வேண்டும். அது, ஒருவகையில் அலுப்பூட்டுவதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்தவர்களில் சிலர் சேர்ந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். எல்லாம் தெரிந்தது போன்ற மனநிலையுடன் வகுப்பறையில் குதூகலமாக இருந்தோம். இனிமேல் யாரும் எலிமண்டரி ஸ்கூல் பையன் என்று மட்டமாகச் சொல்ல மாட்டார்கள்; இப்ப நான் ஹைஸ்கூல் மாணவன். ஆனால், ஆசிரியர்கள் பார்வையில் நாங்கள் பொடிப் பசங்கள். அதிலும் 9,10,11 ஆம் வகுப்புகளில் படிக்குற அண்ணன்கள் எங்களைச் சின்னப் பசங்களாகக் கருதி, நடத்துவதும், வேலை சொல்வதும் எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம் அளித்தது.

 

ஆறாம் வகுப்பில் சேர்ந்தவுடன், கடந்த ஆண்டு ஆறாவது வகுப்புப் படித்த அண்ணனிடமிருந்து  பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கினேன். பொதுவாக நல்ல நிலையில் இருக்கிற  பழைய பாடப் புத்தகங்களைத்தான் பெரும்பாலான மாணவர்கள் விலைக்கு வாங்கிப் படித்தனர்.  பாடத் திட்டம் மாறும்போது புதிய புத்தகங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டுப் பிள்ளைகள் அடுத்தடுத்து இருந்தமையினால், பள்ளியில் படிக்கிற  மாணவர்களுக்குப் புத்தகங்கள், நோட்டுகள், பேனா வாங்குவதற்குப் பணம் செலவழித்திடப் பெற்றோர் சிரமப்பட்டனர். அந்தக் காலத்தில் கிராமத்துச் சுவர்களில் சிவப்புப் பெயிண்டில் முக்கோணம் வரைந்து, ஆணும், பெண்ணும், மூன்று குழந்தைகளும்  அடங்கிய படம் வரைந்து, ’நாம் இருவர், நமக்கு மூவர்’ என்ற விளம்பரத்தைச் சுகாதாரத் துறை செய்திருந்தது. விளம்பரத்தை வாசிக்கிற சிறுவர்களுக்கு ஒன்றும் புரியாது. பெற்றோர்களும் அந்த விளம்பரத்தைப் பொருட்படுத்தவில்லை.

            ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நான் செலுத்த வேண்டிய பள்ளிக் கட்டணம் இரண்டு ரூபாய். அதைக் கொடுப்பதற்குக்கூடச் சிரமப்பட்ட மாணவர்கள் இருந்தனர். என்னுடைய தந்தையார், எல்லாப் பொருட்களும் விற்கிற ஸ்டேஷனரி ஸ்டோர் வைத்திருந்தார். அந்த ஊரில் எங்கள் குடும்பம் வசதியானது.  கடையில் இருக்கிற என் தந்தையாரிடம் போய்ப் பள்ளிக் கட்டணம் இரண்டு ரூபாய் கேட்டால், நாளைக்குக் கொடுக்கலாம்,  என்பார். அவரிடம் எப்பொழுது போய்ப் பணம் அல்லது ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றாலும் ’நாளைக்கு’ என்று  சொல்வது வழக்கம். குழந்தைகள் கேட்டவுடன்  கொடுத்துவிட்டால், பணத்தின் அருமை தெரியாது என்பது அவருடைய நோக்கம் என்று பின்னர் புரிந்தது. அது, குழந்தை வளர்ப்பில் அடிப்படையானது. பள்ளியில் படிக்கிற என்னுடைய குழந்தைகள்,   ஏதோவொரு  விஷயத்திற்காக உடனடியாகப் பணம் வேண்டுமென்று கேட்கும்போது, அவசரமில்லையெனில் நாளைக்குத் தரலாம் என்று சொன்னேன். அப்பொழுது அவர்கள் என்ன நினைத்தனர்  என்பது எனக்குத் தெரியவில்லை.

 

ஆறாம் வகுப்பு ஆசிரியர் அடைக்கலம், அருமையாகப் பாடம் நடத்துவார். அவர் பாடம் நடத்துவதைக் கவனமாக கவனித்தால் போதும் எல்லாம் புரிந்துவிடும்.  வகுப்பில் வேடிக்கை பார்க்கிற மாணவர்களைக் ’’கழுதை, கழுதை என்று சொல்லித் திட்டுவார்.   ஒழுங்காகப் பாடம் படிக்காத, தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களை அடித்து நொறுக்கி விடுவார்.  அவருடைய வகுப்பில் பயத்துடன் மாணவர்கள் இருப்பார்கள். விஞ்ஞானப் பாடம் நடத்திய   சக்கு பாய் ஆசிரியை கோபத்துடன், தலைமுடியைப் பிடித்து இழுத்து, குச்சியால் அடி பின்னி விடுவார்.   நான் பெரும்பாலும் அடி வாங்கியது இல்லை. என்னுடைய வகுப்பறை நண்பர்கள் அடி வாங்கி, வலியால் துடிப்பதைப் பார்க்கும்போது, வருத்தமாக இருக்கும்.  அடிக்கிற ஆண் ஆசிரியரை அவன், இவன் என்றும், அடிக்கிற பெண் ஆசிரியரை அவள், இவள், அது என்று மாணவர்கள், தனிமையில் வெறுப்புடன் பேசினர்.  பொதுவாக ஒரு வகுப்பில் படிக்கிற 25% மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்; நான்கைந்து மாணவர்கள்தான் நன்றாகப் படித்தனர். அன்றைய கற்றல் அல்லது கற்பித்தல் முறையில்தான் கோளாறு இருந்தது. வகுப்பறையும், பாடமும்  சில மாணவர்களுக்கு ஏன் வெறுப்பை அளித்தன என்பது யோசிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் கற்றலில் பின்தங்கிய மாணவர்களைப் படிக்க வைக்க அன்றைக்குப் பெரும்பான்மையான ஆசிரியர்கள் நம்பியது, குச்சியைத்தான். பள்ளிக்கூடம் ஒருவகையில் சின்னப் பசங்களையும், பொண்ணுகளையும் வறுத்து எடுக்கிற சித்ரவதைக்கூடமாக இருந்தது.  என்றாலும் எங்களுடன் அன்பாகப் பேசிய  ஆசிரியர்களை நாங்கள் நேசித்தோம்.

 

 ஆறாம் வகுப்பு நடைபெற்ற கட்டடம், செவ்வக வடிவில் நீண்டிருந்தது. பெரிய கூரைக் கட்டடம்.  அதில் நான்கு வகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் இடையில் தடுப்புகள் எதுவுமில்லை. நீண்ட ஹால்.  தென்னை ஓலையால் பின்னப்பட்ட பெரிய தட்டிகளைக்கொண்டு, தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டுமென வகுப்பு ஆசிரியர் சொன்னார்.  அதற்காக ஒவ்வொரு மாணவனும் ஐம்பது காசுகள் தரவேண்டுமெனச் சொன்ன ஆசிரியர், என்னைப் பொறுப்பாக்கிக் காசை வசூலித்து, தட்டிகளைக் கட்ட வேண்டுமென்று உத்தரவிட்டார். எல்லோரிடமும் காசை வாங்கியபிறகு, விடுமுறை நாளில் மொத்தம் ஆறு மாணவர்கள், ஊருக்கு வெளியே ஒரு மைல் தொலைவிலிருக்கிற நாடோடி என்பவரின் தென்னந்தோப்புக்குப் போனோம். தென்னங்கிடுகினால் பின்னப்பட்ட எட்டுத் தட்டிகளை விலைக்கு வாங்கி, சுருட்டி கட்டி, தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, பள்ளிக்கு வந்தோம். தட்டிகளை நிறுத்துவதற்கு ஊடு கம்புகளாக ஐந்தாறு அகத்தி மரங்களை ஊருக்குள் போய் வாங்கித் தூக்கி வந்தோம். எங்கள் வகுப்பறையின் ஒரு பக்கத்தில் கம்புகளைச் சுவர்களுக்கு இடையில்  நிறுத்தி, தட்டிகளைக் கொச்சக் கயிற்றினால் இறுக்கிக் கட்டினோம்.  ஒரு வழியாக வேலை முடிந்தபிறகு, இன்னும் பணம் மிச்சமிருக்கிறது என்று நண்பர்களிடம் சொன்னேன். என்னைவிட விவரமான போஸூம், சப்பானியும் டீக் கடைக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு, தேநீர் குடிக்கலாம் என்றனர். எனக்குத் தயக்கமாக இருந்தது. யாராவது ஒருத்தன் ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்தால், பிரச்சினையாகி விடுமென்று பயந்தேன். ’அதெல்லாம் ஒருத்தனும் சொல்ல மாட்டானுக. எல்லாரும் சேர்ந்துதானே செய்யப் போறோம். சொல்வறனும்தான் மாட்டிக்கிடுவான்.’ என்றனர். எல்லோரும் சேர்ந்து, ஏதோ தின்பண்டம் தின்றுவிட்டு, தேநீர் குடித்தோம். அந்தச் சம்பவம் ரொம்ப நாட்களாக மனதில் நெருடலாக  இருந்தது. பொதுக் காசில் தேநீர் குடித்தது தவறு என்று நினைத்துக் கொள்வேன்.  செய்த வேலைக்குத் தேநீர் குடித்தோம் என்று பின்னர் அமைதியடைந்தேன். என்றாலும் பொதுக் காசை ஆட்டையப் போட்டுத் தேநீர் குடித்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.

 

( ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)

 


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...