அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“அவருக்கு இரவு எல்லாம் பகல்” - தி.ஜா. குறித்து மகள் உமாசங்கரி!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   08 , 2020  14:08:01 IST


Andhimazhai Image

தந்தையின் நூற்றாண்டு விழாவில் தமிழ் வாசக உலகமே ஆர்வத்துடன் பங்கேற்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார் மகள். ஆம்... தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரி. ஹைதராபாத்தில் வாழும் இவர் தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்...

 

தந்தையைப் பற்றி உங்கள் மனதில் இப்போதும் நிழலாடும் பிம்பம் என்ன?

 

அப்பா என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிரியமாகத்தானே இருக்கும், அதுபோல்தான் எனக்கும், அவரும் என்னிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தார். மனிதாபிமானம் கொண்டவர்; வேறொருவர் நிலைமையில் தன்னை வைத்து உலகத்தைப் பார்க்க முடிந்தவர். எப்போதும் தன்னை பற்றி பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை. தான் சாதாரண மனிதன்; தன்னிடம் குறைபாடுகள் இருக்கின்றன, அவற்றைக் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றே நினைத்தார். இன்றும் அவரது தோற்றத்தை நினைத்தால் சென்னையில் இருக்கும்வரை ஜிப்பாவும் வேட்டியும் அணிவார். தில்லிக்குப் போனபின்னால் பாண்ட் சர்ட்டுக்கு மாறினார். ஏனென்று கேட்டால், ‘நான் ஒரு எழுத்தாளன். பிறரை கவனிப்பவன். வேட்டிசட்டையில் இருந்தால் எல்லோரும் என்னையே பார்ப்பார்கள். நான் அவர்களைப் பார்க்கமுடியாது. அதனால்தான் பாண்ட் ஷர்ட்டுக்கு மாறி இருக்கிறேன். எழுத்தாளன் என்பவன் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும்’ என்றார்.

 

தி.ஜா. அவர்கள் இசையில் மிகுந்த ஞானம் உடையவர். அவர் பாடிக் கேட்ட ஞாபகங்கள்?

 

நிறைய பாடல்கள் ஞாபகத்தில்  இருக்கின்றன. முக்கியமாக தீட்சிதர் பாட்டுகள்: ஸ்ரீகாந்திமதீம், த்விஜாவந்தி அகிலாண்டேஸ்வரி, சுப்ரம்மண்யேன ரக்ஷிதொஹம், கமலாம்பாள் மேல் தீட்சிதர் கீர்த்தனைகள், நவக்ரஹ கீர்த்தனைகள், தியாகய்யரின் ஓரசுபுஜூ, மனசுலோனி மர்மமுலு. இப்பல்லாம் எதாவது கச்சேரிகளை கேட்கும் போது அப்பா இந்த பாட்டைப் பாடுவாரே என்று ஞாபகம் வருகிறது. அப்பா எல்லா சங்கீதமும் கேட்பார் - கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், லலித சங்கீதம், நாட்டுப்புறப் பாடல்கள்.  வெஸ்டர்ன் மியூசிக்&கில் பயிற்சி இல்லாவிட்டாலும் கேட்பார். காமாசோமா என்ற அபஸ்வரமாக இருந்தால் பிடிக்காது. சில சினிமா பாட்டுகள் அவ்வாறு இருந்தால் உடனே தன்னை அறியாமல் முகம் சுளிக்கும். எனக்கும் பாட்டுக்கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். நான் இசையில் ஈடுபட வேண்டும் என அவர் விரும்பினார் ஆனால் என் விருப்பம் வேறாக இருந்தது.

 

அவருடன் மேற்கொண்ட பயணங்கள்...?

 

ஒருமுறை குற்றாலம் போயிருந்தோம், ரிஷிகேஷ், ஹரித்வார், ஆக்ரா, மதுரா, போன்ற இடங்கள் போயிருக்கிறேன். ஆனால் நிறைய போனதில்லை, அவர் தனியாகவும் நான் தனியாகவும் தான் போயிருக்கிறேன். 

 

அவர் பிறந்த கிராமமான தேவன்குடிக்குப் போனதுண்டா?

 

தேவன்குடிக்கு எப்போதும் போனதில்லை. அவரே போனதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் குழந்தையாக இருந்தபோதே அவருடைய குடும்பம் தஞ்சாவூருக்கு குடியேறி வந்து விட்டது. எனக்கும் என் அண்ணாக்களுக்கும் சொந்த ஊர் என்றால் வலங்கைமான் அருகே உள்ள கீழ விடயல்தான். அம்மாவின் ஊர் குடவாசல் அருகே தடுத்தாட்கொண்டபுரம். ஆனால் இப்போது அங்கெல்லாம் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை.

 

தந்தையின் படைப்புகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் குறித்து?

 

பெண்களின் சுதந்திரத்தை அவர் வெகுவாக மதித்தார், அதைப் பற்றி நிறைய எழுதினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அவருடைய பெண் பாத்திரங்கள் தைரியம் மிகுந்தவர்கள், தன் வாழ்க்கையை தானே தீர்மானித்துக் கொள்ளும் சக்தி, தன்னம்பிக்கை உள்ளவர்கள், நல்லது கெட்டது இவற்றை யோசித்து முடிவெடுக்க கூடியவர்கள். ஆண்களுக்கு ஒருபோதும்  குறைந்தவர்கள் இல்லை. ஆனால் கதைகளில் எல்லா பெண்களையும் ஒரே வார்ப்பில் படைக்க முடியுமா? அவர் வேறு வேறான மனிதர்களை, பெண் பாத்திரங்களைப் படைத்தார், சில பெண் பாத்திரங்கள் வக்ரமாக, சிலரை பலஹீனமானவர்களாகவும் கூட படைத்தார். குடும்பத்திற்குள் அவர் பெற்றோர்களுக்கே உரிய குழந்தைகளைப் பற்றிய கவலை கொண்டிருந்தாலும் எனக்கும் என் அண்ணாக்களுக்கும் சுதந்திரத்துக்கு குறைச்சல் இல்லை. சென்னையிலும் சரி, தில்லியிலும் சரி தனியாக போக, எல்லோரிடம் பேச, பழக சின்ன வயசிலிருந்தே எங்களுக்கு அனுமதி உண்டு. மறைமுகமான கண்காணிப்புதான் எங்கள் மேல் இருந்தது.

 

அவர் சிறுகதைகள் எழுதி நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இன்றும் அவரது படைப்புகள் பொருந்தும் அளவில் உள்ளன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

அவர் எழுத்துகள் இன்றும் பொருத்தமாக இருக்கின்றன என்றால் அதற்கு இரண்டு காரணம்: நம்முடைய சமூகம் அவ்வளவாக முன்னேறவில்லை - ஏழ்மை, கல்வி அமைப்பு, பணக்காரர்கள் - எழைகளுக்கு இடையிலே உள்ள தூரம், ஜாதி வேற்றுமை போன்றவை அன்று இருந்த நிலையிலேயே இன்னும் மாறாமல் இருக்கின்றன. இரண்டாவது காரணம், அவர் மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளைப் பற்றி எழுதினார். கயமை. மனிதாபிமானம், பரிவு, இரக்கம், காமம்,மோகம், பொறாமை, சோகம், துக்கம், குற்றவுணர்வு - இவ்வாறு அடிப்படை உணர்ச்சிகளைப்   பற்றி அவர் எழுதியதால் அவருடைய கதைகள் படிப்பவர்களுக்குள் இன்றும் அதே மன அதிர்வை ஏற்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்.

 

அரசியல் பற்றிப் பேசியது உண்டா? எம்மாதிரியான நிலைப்பாடு கொண்டிருந்தார்?

 

நாங்கள் வளர்ந்த காலம் திராவிட இயக்கம் கால்கொண்ட காலம். அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலம். இவற்றைப் பற்றி நாங்கள் விவாதித்துள்ளோம். ஆனால் அவர் எழுதும் போது பிரசார இலக்கியத்திலிருந்து தூரமாகவே இருக்க விரும்பினார். எந்தக் கொள்கையைப் பற்றியும் வெளிப்படையாக எழுதாமல் அவை தனி மனிதனை எவ்வாறு பாதிக்கின்றன, தனி மனிதர்களிடையே எவ்வாறு வெளிப்படுகின்றன, எவ்வாறு செயல் படுகின்றன என்பதைப் பார்க்கவே விரும்பினார் என்று சொல்லலாம். ஏதோ ஒரு கொள்கையைப் பற்றிக்கொண்டு வாழ்நாள் முழுக்க இருக்கவும் அவர் விரும்பியதில்லை. அந்தந்த சமயத்தில் எது சரி, உண்மை, நீதி, நியதி என்று படுகிறதோ அவற்றை பின்பற்றி சப்போர்ட் செய்தார். வாழ்க்கையில் சமரசங்களும் தேவைதான், நம் எல்லோரையும் போல சில சமரசங்களுக்கும் உடன் பட்டார் என்றும் சொல்லலாம்.

 

அவர் எழுத்துமுறை? கதைகளை வாசித்துக் காட்டியது உண்டா?

 

அவருக்கு இரவு எல்லாம் பகல். தூங்க இரண்டு மணியாகிவிடும், ஏதாவது படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பார். அவருக்கு வானொலியில் நிறைய நிகழ்ச்சிகள் செய்யவேண்டி இருந்ததால் அதற்காக நிறைய வாசிப்பார்.  தான் எழுதிய, கதைகளைப் பற்றி பேசியதும் இல்லை, வாசித்துக் காட்டியதும் இல்லை. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலும் தன்னைப் பற்றி மிகையான அபிப்ராயம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. தன்னைப் பற்றி பேசுவதோ, தன கதைகளைப் பற்றி பேசுவதையோ வெகுவாக தவிர்த்தார். யாராவது கேட்டால்தான் அவற்றைப் பற்றி பேசுவார்.

 

உங்களைப் பற்றி?

 

நான்  தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தேன். நம் கோயில்களைப் பற்றி பி.எச்.டி செய்தேன். பிறகு ஆந்திராவைச்  சேர்ந்த பிராமணர் அல்லாத ஒருவரை கலப்புத்திருமணம் செய்துகொண்டேன். இதை ஏற்க அவர் தயங்கினார். ஆனால் இந்தப் பெண் மசியமாட்டாள் என்று உறுதியானபின் உடனடியாக என் கணவரைப் பற்றிய பின்னணி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று விசாரித்து உறுதி செய்துகொண்டார். அவர் இப்படி ஏற்றுக்கொண்டாலும் என் அம்மாவின் பழமைவாத பின்னணி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் நான் கருவுற்ற செய்தி கேட்டபோது என தாய் எல்லாவற்றையும் மறந்து என்னை அரவணைத்துக்கொண்டார். என் கணவரும் நானும் சமூகசேவை செய்வதில் ஈடுபாடு கொண்டிருந்தோம், அவருடைய சொந்த ஊர், திருப்பதிக்கருகே ஒரு குக்கிராமம். அங்கே முப்பது ஆண்டுகள் இருந்தோம். விவசாயம் செய்து கொண்டு, சமூக இயக்கங்களில் பங்கு கொண்டோம்.

 

விவசாயிகளின் பிரச்னைகள், நிலம் இல்லாத விவசாய கூலிகளின் பிரச்னைகள், அவர்களுக்கு நிலம் சொந்தமாக்குதல், மனித உரிமைகள், தீண்டாமையை எதிர்த்து தலித் மனிதர்களின் சமஉரிமை போராட்டங்கள் போன்ற பல இயக்கங்களுடன் ஈடுபட்டிருந்தோம். என் கணவர் இப்போது இல்லை. சில வருடங்களாக நான் என் மகளுடைய குடும்பத்தாருடன் ஹைதராபாதில் வசித்து வருகிறேன். நாங்கள் செய்த பணிகளை காண்பதற்கு முன்பே அப்பா போய்விட்டார். இருந்திருந்தால் பெருமைப்பட்டிருந்திருப்பார்.

 

- நா. அசோகன் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...