![]() |
பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம்Posted : புதன்கிழமை, ஜுன் 29 , 2022 22:00:38 IST
![]() மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில் திடீர் திருப்பமாக, முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே பதவிவிலகியுள்ளார்.
சற்று முன்னர் மாநில மக்களுக்கு ஆற்றிய உரையின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும் உத்தவ் அறிவித்தார்.
நாளை 30ஆம் தேதிக்குள் உத்தவ் தாக்கரே அரசாங்கம் சட்டப்பேரவையில் தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என அந்த மாநில ஆளுநர் கோசியாரி உத்தரவிட்டிருந்தார்.
அதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில் இன்று மாலை வெளியிடப்பட்ட உத்தரவில், நாளை முற்பகல் 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் அரசாங்கம் ஆதரவை நிரூபிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட உள்ள 16 உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது என உத்தவ் தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதனிடையே இன்று மாலை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஔரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என்றும் ஒஸ்மானாபாத் நகரின் பெயரை தாரா சிவ் என்றும் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
English Summary
uddhav thackarey resigned 29-06-2022
|
|