![]() |
உடன்பிறப்பே- திரை விமர்சனம்Posted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15 , 2021 21:48:22 IST
![]() ஜோதிகா -சூரியா தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் உடன் பிறப்பே. அண்ணன் தங்கை பாசத்தை தஞ்சை - புதுக்கோட்டை வட்டார கிராமிய வாழ்வியலுடன் சொல்லி இருக்கும் படம். ஜோதிகாவின் ஐம்பதாவது படத்துக்கு தோள்கொடுத்திருக்கிறார்கள் சசிகுமார், சமுத்திரக்கனி.
ஜோதிகாவின் அறிமுகக் காட்சியே அட்டகாசம். குளத்துக்குள் அம்மன் சிலையுடன் தானும் ஒரு கிராமத்து தேவதையாக தோன்றி நிற்கிறார். எந்த பிரச்னையாக இருந்தாலும் சட்டப்படி தீர்க்க நினைக்கும் கணவன், கட்டப்பஞ்சாயத்தில் தீர்க்க நினைக்கும் அண்ணன், ஆகியோரிடம் மாட்டித் தவிக்கும் அழுத்தமான பாத்திரம் ஜோதிகா.
மண்வாசனை வீசும் கிராமிய வாழ்வியலுக்கு நடுவே ரத்தமும் சதையுமான அசலான முகங்களுக்கு நடுவே வாழ்கிறார் ஜோதிகா. என்ன, சமுத்திரகனி எல்லா படங்களிலும் செய்யும் அட்வைஸ் ரோலை இந்த படத்தில் ஜோதிகா செய்வதுபோல் சிலசமயம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. போலியோ தடுப்பூசி, தாலி செண்டிமெண்டுக்கு, பூப்புநீராட்டு விழாவுக்கு எதிர்ப்பு என ஜோ பல மெசேஜ்களை வைத்திருக்கிறார்.
சசிகுமார் வழக்கமான பாணியில் நடிக்க, சமுத்திரகனியும் அடக்கிவாசித்திருக்கிறார்.
படம் முழுக்க குடும்ப உறவு செண்டிமெண்ட் காட்சிகளால் நிரப்பி வைத்துள்ளார் இயக்குநர் இரா.சரவணன். அடிக்கடி கண்கள் குளமாவதால் கைக்குட்டை அவசியம்.
சூரி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காவல்நிலையத்தில் அடிவாங்கி, அவனுக்கு எவ்வளவோ அங்காளி பங்காளி இருந்தும் ஒரு வேலைக்காரன்... என்னய அடிச்சா அவனை பிடிச்சிரலாம்நு நினைக்கிறீங்க பாருங்க.. இதெல்லாம் அடி இல்லய்யா அவார்டு... என்று கண்கலங்க வைக்கிறார். சூரியே இந்த போடுபோடுகிறார் என்றால் மற்றவர்கள் எப்படி நெகிழவைப்பார்கள் என்று உணர்ந்துகொள்ளுங்கள்.
இரண்டு பின்னங்கால்களும் இல்லாத ஒரு நாய்க்குக்கூட உணர்ச்சிவயப்பட்டு நடிக்கும் வாய்ப்பை அளித்துள்ளனர்.
சிஜா ஜோஸ், வேல ராமமூர்த்தி, தீபா போன்றவர்களும் இருக்கிறார்கள். கலையரசனுக்கு வில்லன் ரோல்.
முழுக்க முழுக்க ஜோதிகாவின் ஆக்கிரமிப்பு. ‘பொம்பள சிவாஜி' இப்போதைக்கு யாரும் தமிழ் சினிமாவில் இல்லாத குறையை நீக்குகிறார்.
இமானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. யுகபாரதி எழுதி, ஷ்ரேயா கௌஷல் குரலில் அண்ணே யாரண்ணே மண்ணுல ஒண்ணாட்டம்.. பாடல் இனிமை.
குடும்ப செண்டிமெண்டுகளை விரும்பும் ரசிகப் பெருமக்கள் இந்த படத்தை இன்னொரு பாசமலராக பார்த்து பிழிய பிழிய கண் கலங்கலாம்.
|
|