???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆலம்கீரின் சமாதி! மகாராஷ்ட்டிரா பயணக்கட்டுரை

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   31 , 2018  04:33:03 IST


Andhimazhai Image
 
எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைப் பார்த்துவிட்டு வெளியே ஒரு கடையில்  சாப்பிட பூரி சொல்லிவிட்டு அமர்ந்திருந்த எங்கள் கண்ணில் பட்டது ஒளரங்காபாத்தில் பார்க்கவேண்டிய இடங்கள் என்ற அறிவிப்பு. அதில் சட்டென மனதைக் கவர்ந்தது ஒளரங்கசீப்பின் சமாதி என்ற புகைப்படம்.  ஒளரங்கசீப்பின் சமாதி இங்குதான் இருக்கிறதா என்று  இணையத்தைத் துழாவினால் எங்கோ தூரத்தில் இருப்பதாகக் காண்பித்ததும் ஏமாற்றம்.
 
மதிய வெயில் சுள்ளென அடிக்க, துருப்பிடித்த டுபான் வண்டி ஒன்றில் 14 பேர் இருந்தோம். அது எல்லோராவில் இருந்து சில்லோட் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அழகான ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரிடத்தில் இருந்த பலகை ஔரங்கசீப் சமாதி என்றது. ‘திருப்புய்யா வண்டியை” என்றோம் ஓட்டுநர் ஜாவீதிடம். பான்பராக்கைக் குதப்பியவண்ணம் ஏதோ முணுமுணுப்புடன் அவர் திருப்பி, குறுகலான சாலை வழியாக சற்று தூரம்சென்ற பிறகு ஒரு தேநீர்க்கடையோரம் நிறுத்தினார். அது குல்தாபாத் என்ற ஊர். இடதுபுறம் நாங்கள் தேடிவந்த ஒளரங்கசீப் நித்திரை கொள்ளும் ஸ்தலம். ஆலம்கீரின் சமாதி என்ற பெயர்ப்பலகை.  1958 ஆம் ஆண்டு தொல்லியல் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட இடம் என்ற அறிவிப்பும் உண்டு. இறங்கியதும்  ரோஜாக்களை விற்கும் கடை இருந்தது. 20 ரூபாய்க்கு சில ரோஜாக்களை வாங்கிக்கொண்டார்  எம்முடன் வந்த தேக்வாண்டோ பயிற்சியாளர் பிரகாஷ். சிறு வாயில் வழியாக  நுழைந்ததும்  கைகளைக் கழுவிக்கொள்ள தண்ணீர். இடதுபக்கம் எதிரே சிறுவாயிலின் மேலே ஆலம்கீரின் சமாதி என எழுதப்பட்டிருக்க, அங்கே மணிக்கற்களை விற்றுக்கொண்டிருந்த ஒருவர் உள்ளே என்றார். நுழைந்தோம். பின்னாலேயே ஒருவரும் வந்தார்.
 
 தரையோடு தரையாக பதிக்கப்பட்டு வெள்ளைத்துணி போட்டு போர்த்தப்பட்டிருந்த சமாதி அருகே போனோம். நடுவே நீள் செவ்வக வடிவில் மண். அதில் இருந்த ஒரு செடி காய்ந்துபோயிருந்தது. யாரோ பூக்களை வைத்திருந்தார்கள். ரோஜாப் பூக்களை வெண்ணிற துணி மேல் வைத்தோம்.  நான்கு பக்கமும் சதுர வடிவில் பளிங்குக் கற்களால் ஆன சுவர். கூரை ஏதுமில்லை. அகண்ட இந்தியாவை வாள் நுனியில் ஆண்ட ஆலம்கீர் இங்கே அமைதியாக உறங்குகிறார் என்ற எண்ணமே சிலிர்க்கச் செய்தது. முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மாமன்னர். வரலாற்றுப் புத்தகங்களில் மொகலாய அரசராக அறிமுகம் ஆனவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கால்வாசி அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. 
 
 எங்களுடன் வந்த மனிதர், உரத்த குரலில் எமது பெயரைக் கேட்டார். தொடர்ந்து மேலும் உரத்தகுரலில் இந்தியில் விளக்கத்தொடங்கினார். ” இறுதியாக தக்காணப்போர்களில் ஒளரங்கசீப் இறங்கி இருந்தபோது தன் 89வது வயது ஆலம்கீர் காலமானார். பழுத்த பழம்! அவர் தொப்பி செய்து விற்று சேமித்து வைத்திருந்த பதினான்கு ரூபாயில் இந்த இடம் வாங்கப்பட்டது. தலைப்பாகையோ தொப்பியோ இல்லாமல் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் விருப்பப்படியே திறந்த வெளியில் ஆடம்பரமின்றி இது அமைக்கப்பட்டுள்ளது, எப்படி அடக்கம் நிகழவேண்டும் என்று அவர் சொன்னபடியே இது செய்யப்பட்டது” என்று சொன்னவரை திரும்பிப் பார்த்தோம். அவரது உரத்த குரலுக்குக் காரணம் தெரிந்தது. அவர் பார்வையற்றவர்.  வெளியேறும்போது ஒரு பெட்டியைக் காட்டி ஏதாவது காணிக்கை அளியுங்கள் என்றார். அவர் கையில் கொடுத்தோம். கையில் வாங்கக்கூடாது எனப் பதறியவர், பிறகு அந்த மரப்பெட்டியில் பணத்தைத் திணித்தார்.
 
 இங்கிருந்து 100 கிமீ தள்ளி இருக்கும் அகமத்நகரில்தான் ஔரங்கசீப் 1707- மார்ச் 3-ல் காலமானார். தக்காண பீடபூமியில் அவருக்கு பல விதங்களில் தொல்லை கொடுத்துவந்திருந்த சிவாஜி 1680-திலேயே மரணம் அடைந்திருந்தார். இங்கிருந்த பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்கள், மராட்டியத்தில் இருந்த வேறு சில குட்டிக் கோட்டைகள் ஆகியவற்றைக் கைப்பற்றும்விதமாக நீண்டகாலம் இங்கேயே இருந்தார் ஆலம்கீர். படைவீரர்களும் தளபதிகளும் டெல்லிக்குத் திரும்பிச்செல்லவேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் அவர் திரும்ப முடிவு செய்தார். அவருடைய மகன்களே தாத்தாக்கள் ஆகி இருந்தார்கள். பேரன்கள் வளர்ந்திருந்தார்கள். யார் முகலாய அரியணை ஏறுவது என்று முடிவாகவில்லை. இறக்கும்போது ராஜ்யத்தை மகன்களுக்குச் சமமாகப் பிரிக்கவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார் ஒளரங்க சீப். ஆனால் அது நடக்கவில்லை. ஒளரங்கசீப் தன் சகோதரர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்ததுபோலவே மீண்டும் நடந்து சாம்ராஜ்யம் வாரிசுரிமைப் போர்களில் சரிந்தது.
அகமது நகரில் இறந்த ஔரங்கசீப்பை இங்கே ஏன் அடக்கம் செய்யவேண்டும்? அவரது ஆன்மிக குருவான ஷேக் சைனுதீன் அவர்களின் தர்கா வளாகத்தில் தான் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று அவர் விரும்பியதால்தான் இங்கே செய்தார்கள். ஆமாம். இது ஷேக் சைனுதீன் என்கிற சூபி மகானின் தர்கா வளாகம். இதே வளாகத்தில் இருந்த தர்காவுக்குள் சென்றோம். எம்முடன் இருந்த பெண் குழந்தைகளை வெளியே நின்று வேண்டிக்கொள்ளுமாறு அங்கிருந்த பெரியவர் கேட்டுக்கொண்டார். உள்ளே போனதும், “ இவர் மிகப்பெரிய மகான். ஏதோ காரணத்தால்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். என்னவேண்டுமோ வேண்டிக்கொள்ளுங்கள் அப்படியே நிறைவேறும்” என்றார் பெரியவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு வெளியே வந்தோம். அங்கேயே ஒளரங்கசீப்பின் மூத்தமகன், மருமகளின் கல்லறைகளும் நிஜாம் ஒருவரின் கல்லறையும் இருந்தது. மகானின் உடனிருந்த சிலரின் கல்லறைகளும் இங்கே உண்டு என்றார் பெரியவர்.
 
வெளியே வந்து செருப்புகளை அணிந்தபோது முன்பு கண்ட பார்வையற்ற மனிதர் வாசலில் நின்றுகொண்டிருந்தார். “நான் பார்வையற்றவன்.. எதாவது தந்துசெல்லுங்கள்” என்ற அவரது கோரிக்கையைத் தட்டமுடியவில்லை!
 
-அசோகன்
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...