அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மிகச்சிறந்த ஆண்குரல் உங்களுடையதுதான்: டி.எம்.சௌந்தர்ராஜன் - சிறப்புக் கட்டுரை [ பகுதி-2 ]

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   06 , 2018  17:09:46 IST


Andhimazhai Image
பாகப்பிரிவினை படத்துக்கான வெற்றிவிழா.  டி.எம்.எஸ் அவர்களும் மேடையில் உள்ளார். அவரை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்கிறார்கள். பாடுகிறார். எல்லோருக்கும் விருதுப்பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. அதில் நடித்த மாட்டுக்குக்கூட வழங்கப்படுகிறது. பாடகருக்கு இல்லை. அப்போது பாடகர்களுக்கு படவெற்றிவிழாவில் விருது வழங்குவது வழக்கம் இல்லை. இறுதியாக தேசிய கீதம் பாட டிஎம் எஸை அழைத்தார்கள்.  ‘நான் என்ன சும்மா இந்த பாடல்களைப் பாடவா வந்தேன்..?’ என அவருக்குள் கோபம் பொங்கியது. தேசிய கீதம் முடிந்தபின், எல்லோரும் ஒரு நிமிடம் நில்லுங்கள் என்றவர்.. இனி நான் பாடப்போவதில்லை.. ஊருக்குப் போகிறேன் என்றார். என்ன என்ன என்று எல்லாரும் அதிர்ந்தார்கள்... மாட்டுக்குக் கூட விருது கொடுக்கிறீர்கள்.. பாடகனுக்கு கிடையாதா என்று மேடையிலேயே குமுறினார்... தயாரிப்பாளர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் பாடகர்களுக்கு விருதுகொடுக்கும் முறை ஏற்பட்டது.
 
 
எஸ்.பி.பியுடன் சந்தித்துப் பேசுகையில் டிஎம்.எஸ் இந்த தகவலைச் சொல்லி, “நீங்கள் எல்லாம் இன்று பல ஷீல்டு வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது நான் சண்டை போட்டதால் கிடைத்ததுதான்,” என்றார். டி.எம்.எஸ்ஸின் வாய்ப்புகள் குறைந்தபோது வந்து அதை நிரப்பிய ஆண்குரல் எஸ்.பிபியுடையது. இருவரும் உரையாடும் நிகழ்ச்சி மிக அழகாக அமைந்தது. டி.எம்.எஸ்சுக்கு பாலசுப்ரமணியன் என்றொரு மகன் இருந்து இறந்துவிட்டான். அந்த பெயரில் ஒர் அறக்கட்டளை வைத்து ஓசைப்படாமல் ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் தான தருமங்களுக்காக டிஎம்.எஸ் கொடுத்துவந்தார். அந்த தகவலை எஸ்பிபியுடன் முதல்முதலாகப் பகிர்ந்துகொண்டார். எஸ்பிபி நெகிழ்ச்சியுடன் ‘ அந்த பாலசுப்ரமணியன் இடத்தில் இந்த பாலசுப்ரமணியன் இருக்கிறேன்’ என்று சொல்லி அவர் கரங்களைப் பற்றிக்கொண்டார்.
 
 
 
இந்நிகழ்ச்சிக்காக கங்கை அமரனுடன் டிஎம்எஸ் சந்திப்பு நடந்தபோது ஓர் அரிய தகவலை அவர் கூறினார். இளையராஜா இசையில் டி.எம்.எஸ் தீபம் என்ற படத்துக்காக 1968-லேயே ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார். அப்போது பாவலர் பிரதர்ஸ் என்றபெயரில் அவர்கள் இசை அமைத்தனர். சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு எனத்தொடங்கும் அப்பாடலை எழுதியவர் கங்கை அமரன். அந்த படம் வெளிவரவில்லை. அந்த பாடலை நெடுநாள் தேடிக்கொண்டிருந்தேன்.. கிடைக்கவே இல்லை. கடைசியில் இசைத்தட்டு சேகரிப்பாளர் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தில் இருந்தபோது இளையராஜா பாப்பிசைப் பாடல்கள் என ஒரு இசைத்தட்டு இருந்தது. அதன் மேல் வரிசையாய் எழுதப்பட்டப் பாடல்களில் கடைசியாக அந்தப் பாட்டைக் கண்டடைந்தேன். அந்தப் பாட்டையும் இந்த ஆவணப்படத்தில் சேர்த்தேன்.
 
 
 
டி.எம்.எஸ் அவர்கள் என்னிடம் பல விஷயங்களை நேர்காணலில் சொல்லி இருக்கிறார். ஆனாலும் வயதாகி விட்டதால் அவர் சொல்பவற்றில் ஆண்டுக்கணக்கு, தகவல்கள் போன்றவை சரிதானா என்று நண்பர் சந்தானகிருஷ்ணனிடம் சரிபார்த்துத்தான் பயன்படுத்தினேன். அவர் தான் பாடியதில் மிகவும் புகழ்பெற்ற பக்திப்பாடலான உள்ளம் உருகுதைய்யா என்ற பாடலைப் பற்றி பின்வருமாறு பல நேர்காணல்களில் சொல்லி உள்ளார்: ’’பழனிக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு முஸ்லிம் பையன் உள்ளம் உருகுதடா என்று பாடிகொண்டிருந்தான். அவனிடம் என்ன பாட்டு என்றேன். ஒரு அம்மா மலைமேல் பாடிக்கொண்டிருந்தார் என்றான். நான் உடனே ஆர்மோனியத்தை எடுத்து உள்ளம் உருகுதையா... என்று அந்த வரியை சற்று மாற்றி இசையமைத்துப் பாடினேன்.”
 
 
ஆனால் உள்ளம் உருகுதடா என்கிற டிஎம்எஸ் கேட்ட பாடல் வரிக்கு ஒரு வரலாறு உண்டு. அது எனக்காக சென்னை காளிகாம்பாள் கோவிலில் காத்துக்கொண்டிருந்திருக்கிறது. ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் அங்கே சென்றிருந்தபோது, அங்குள்ள முருகன் சன்னதியில் வேலுக்குப் பக்கத்தில் ஒரு கல்வெட்டில் உள்ளம் உருகுதடா என்ற பாடல் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. பாடலைப் பாடியது ஆண்டவன் பிச்சை என்றிருந்தது. வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்காக நிதி கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் சங்ககிரியில் சொந்த ஊரில் இருந்தேன். அப்போது 2004-ல் ஒரு பத்திரிகையில் ஆண்டவன் பிச்சை பற்றி முரளி சுவாமிகள் எழுதிருந்த கட்டுரை என் கண்ணில் பட்டது. ஆண்டவன் பிச்சை ஒரு பெண் கவிஞர். அவரது படமும் வெளியாகி இருந்தது. உடனே சென்னைக்கு ஓடி வந்து முரளி சுவாமிகளை சந்தித்துக் கேட்டேன். அவர் அவரது வரலாற்றைச் சொன்னதுடன் அவரது பேரன் எண்ணும் கொடுத்தார். அங்கே போய் அவரது புகைப்படமும் பெற்றேன். மயிலாப்பூரில் வாழ்ந்துவந்த மரகதம் என்கிற பெண்ணின் உடலில் திருச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்கிற யோகியின் ஆன்மா புகுந்துகொண்டு அவர்  இறைப்பாடல்களை ஆண்டவன் பிச்சை என்ற பெயரில் பாடத்தொடங்கினாராம். உள்ளம் உருகுதய்யா பாடலுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருப்பதை டிஎம்.எஸ்ஸிடம் சொன்னபோது அவர் அப்படியே உருகிவிட்டார்!
 
 
 
இளையராஜாவுடன் டி.எம்.எஸ் அவர்களுக்குப் பிணக்கு ஏற்பட்டது இலங்கைப் பத்திரிகையான வீரகேசரியில் வெளியான ஒரு செய்தியால்தான். அண்ணே அண்ணே சிப்பாயண்ணே என்ற பாடல் தெரியுமல்லவா? அதில் அண்ணே என்று வருவது தவளை கத்துவது போல் இருக்கிறது என்று டி எம் எஸ் சொல்லிவிட்டார். அவர் எப்போதும் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடுகிறவர் அல்லவா? பதிலுக்கு இளையராஜா, அவர் என்ன பெரிய பாடகரா.. அவருக்கு பாவத்துடன் பாடவே தெரியாது என்று பதிலுக்கு பொங்கிவிட்டார். அதையும் தாண்டி வானொலி அறிவிப்பாளர் அப்துல்ஹமீது, இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு( தர்மயுத்தம்) பாடலையும் அடுத்ததாக அதே எம்எஸ்வி இசையில் தங்கை படத்தில் தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே என்ற பாடலையும் ஒலிபரப்பி டி.எம். எஸ்ஸுக்கு பாவத்துடன் பாட வருமா வராதா என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னது இன்னும் நினைவில் அவரது குரலிலேயே என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
 
இந்த பலப்பல சிண்டு முடிதல்களால் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. இந்த நிகழ்வுக்காக நான் இவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கத்திட்டமிட்டேன். உன்னால் முடியவே முடியாது என்றார்கள். இளையராஜாவை அணுகிக் கேட்டபோது பாப்போம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஒரு நாள் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையும்போது வழியில் பார்த்துக் கேட்டேன். இங்கேயே நில்லுய்யா.. வர்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். காலையில் போனவர் மாலை ஏழுமணிக்குத்தான் வெளியே வந்தார். அதுவரைக்கும் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வெளியே வந்தவரிடம் இங்கேயே நிற்கிறார் என்று சொன்னார்கள். என்னைப் பார்த்தவர், சரிய்யா... சந்திப்போம் என்றார். அவருக்கு எப்போ ப்ரியோ அப்போ பார்க்கலாம் என்றார் நெகிழ்வுடன். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த சமயம் பார்த்து டி.எம்.எஸ்ஸுக்கு கண் அறுவை சிகிச்சை.. எனவே சில நாட்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. அந்த சில நாட்களும் சில ஆண்டுகள் போல் இருந்தன. பின்னர் டி எம். எஸ்ஸை அழைத்துக்கொண்டு சந்திக்க வந்தேன். மிக உருக்கமான சந்திப்பாக அது அமைந்தது. நான் உங்களை ஒதுக்கலைண்ணா.. புதுக்குரலாக வேணும் என்றார்கள். அதற்காக புதிய குரல்களை அறிமுகப்படுத்தவேண்டியதாயிற்று என்று பல விசயங்களை இளையராஜா சொன்னார். நான் கண்டதிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் உங்களுடையதுதான் என்றார் ராஜா. ஒளிப்பதிவு முடிந்ததும் எங்களை வெளியே அனுப்பி விட்டு அவர்கள் உரையாடல் தனிமையில் தொடர்ந்தது. 
 
 
 
இதேபோல்தான் டி.ராஜேந்தருடனான உறவிலும் டி.எம்.எஸ்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டது. நானொரு ராசியில்லா ராஜா... பாடலைப் பாடியபிறகுதான் அவருக்கு பாட வாய்ப்புகள் இல்லை என்பது பரவலாகப் பேசப்பட்ட ஒன்று. இருவரும் நம் நிகழ்ச்சிக்காக சந்தித்தது பல்லாண்டு இடைவெளியில் நிகழ்ந்தது. டிஆர் தன் பாணியிலேயே டி.எம்.எஸ்சை எதிர்கொண்டார். நீங்கள் பாடிய அந்தப் பாடலுக்குப் பிறகு மேலும் பல பாடல்கள் என் இசையிலேயே பாடினீர்களே.. நானும்கூட அந்த படத்துக்குப் பின்னர் எவ்வளவு படங்களை எடுத்துவிட்டேன்... என்று சொல்லிக்கொண்டே போக, ஒருகட்டத்தில் டி.எம்.எஸ் எழுந்து டி.ஆருக்கு திடீரென முத்தம் கொடுத்தார்.
 
 
 
[டி.எம்.எஸ் நினைவலைகள் தொடரும்..] 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...