???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிகச்சிறந்த ஆண்குரல் உங்களுடையதுதான்: டி.எம்.சௌந்தர்ராஜன் - சிறப்புக் கட்டுரை [ பகுதி-3 ]

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   07 , 2018  00:51:31 IST


Andhimazhai Image
சேலம் மாடர்ன் தியேட்டர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நிறுவனம். அதன் உரிமையாளரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மேதை. பியூ சின்னப்பா இருவேடங்களில் நடித்த உத்தமபுத்திரன் அவர் எடுத்தபடம்தான். அங்கு டி.எம்.எஸ்ஸை அழைத்துச்செல்ல அனுமதி வாங்க முயற்சி செய்தேன். இப்போது அதன் பெரும்பகுதி விற்கப்பட்டுவிட்டது. கலைவாணி சுந்தரம் என்கிற டி.ஆர். சுந்தரத்தின் மருகள் வெளிநாட்டில் இருந்தார். அவர் வரும்போது தகவல் சொல்லுமாறு அவர் வீட்டருகே இருந்த ஒரு தேநீர்க்கடையில் சொல்லி வைத்திருந்தேன். ஒரு நாள் அவர் வந்திருந்தபோது போய்ப் பார்த்து அனுமதி கோரினேன். அவரும் அனுமதி அளித்தார். மாடர்ன் தியேட்டர் எபிசோடில் டி.எம்.எஸ்ஸுடன் உரையாடுபவர் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன். மாடர்ன் தியேட்டர் வாசலிலிருந்து உள்ளே வரை டி.எம்.எஸ்ஸுடன் மிகவும் நகைச்சுவையாக நடந்துகொண்டே உரையாடினார் ஒய்.ஜி. மகேந்திரன். ஒராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் - என்கிற புகழ்பெற்ற பாடலைப் பாடிய இடத்தில் நின்று டி.எம்.எஸ் தன் மாடர்ன் தியேட்டர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். முதல் முதலில் மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் அவர் நடித்தது தேவகி என்ற படம். 1951-ல் வெளிவந்த இப்படத்தில் தனக்கு பாடிக்கொண்டே நடந்து வரும் ஒரு பண்டாரம் பாத்திரம் கிடைத்ததாகச் சொல்கிறார். அந்தப் பாடல் காட்சியை நான் கண்டுபிடித்துச் சேர்த்திருக்கிறேன். மாடர்ன் தியேட்டரின் இன்னொரு படமான சர்வாதிகாரியில்(1951)  நாம பத்துவருஷம் பட்ட கஷ்டம் தீரலே... அதற்குள் பாவி மகன் சண்டைப் போடச்சொல்லுறான் என்ற பாடலை அவர் பாடிக்காட்டினார்.
 
 
அத்துடன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்ற பலருக்கும் குரலை மாற்றிப்பாடுவதன் ரகசியத்தை அவர் விவரித்தார். சிவாஜிக்கு அடிவயிற்றிலிருந்தும் எம்.ஜி.ஆருக்கு தொண்டையிலிருந்தும் மீதி மென்மையான குரல்களுக்கு நெஞ்சிலிருந்தும் பாடுவதாகக் கூறினார். எம்.ஆர்.ராதா குரலில், சோவின் குரலில், எம் .ஆர்.ஆர். வாசு குரலில்.... என்று எவ்வளவு வேறுபாடுகளை அவர் காட்டியிருக்கிறார்! இதனால்தான் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர் பாடல்களாக சிவாஜி பாடல்களாக நின்றுவிட்டன. அதில் டி.எம்.எஸ் இல்லாமல் போய்விட்டார்! இதில் அவருக்கு வருத்தமே.. அதைத்தான் அவர் டி.எம்.எஸ். இல்லாவிட்டால் எம்.ஜி.ஆர் உண்டா என்று சொல்லப்போக சற்று மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. நாடோடிமன்னன் படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆல்பர்ட் தியேட்டரில் மறுரிலீஸ் செய்யப்பட்ட போது அவரை அழைத்துச் சென்று இருந்தேன். அங்கேயும் அவரை படம் எடுத்தோம். படம் ஓட ஆரம்பித்து டி.எம்.எஸ்ஸின் குரலில் தூங்காதே தம்பி தூங்காதே பாடல் ஒலித்தபோது அரங்கமே அதிர்ந்தது. அவரிடம் சொன்னேன்,” அய்யா.. உங்கள் குரல் இன்றும் ஏராளமான பேரை மகிழ்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.. அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்..”  ஒவ்வொரு முறை அவரது பாடல் ஒலித்தபோதும் மக்கள் கைத்தட்டினார்கள். அதில் ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு. நம்பிக்கெட்டவர்கள் யாரும் இல்லை” என்ற எம்.ஜி.ஆர் வசனம் வந்தபோது டி.எம்.எஸ் ஒரு குழந்தையைப் போல் வாய்விட்டுச் சொன்னார். “ நான் தான் ஒருவேளை அவரை நம்பவில்லையோ..”
 
 
 
எம்.எஸ்.வியுடன் நடந்த சந்திப்போ உருக்கத்திலும் உருக்கமானது. 1950 களின் ஆரம்பத்தில் எம்.எஸ்.வி கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவுக்கூடத்துக்குப் பின்னால் ஹார்மோனியப் பெட்டியைத் துடைத்து வைத்துக்கொண்டு இருக்கும்போதிருந்து பழக்கம். நீங்க பெரிய ஆளா எதிர்காலத்தில்வருவீங்க என்று எம். எஸ்.வியைப் பார்த்து டி.எம்.எஸ் சொன்னதை அவர் நினைவுகூர்ந்தார். அச்சமயம் எம். எஸ்.வி என்ன பாடலை ஹார்மோனியத்தில் இசைத்துக்கொண்டிருந்தேன் என்பதையும் நினைவிலிருந்து சொன்னார். அது தலத் முகமது குரலில் சந்தா சலே முஷ்குராயே ஜவானியே.. என்ற பாடல். இடம்பெற்ற படம் பானுமதி இயக்கி நடித்த சண்டிராணி.  இசை சி.ஆர்.சுப்பராமனும் எம்.எஸ்.வியும். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி இருக்கிறது. தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் பாடியவர் கண்டசாலா.  ’வான் மீதிலே இன்பத் தேனாறு பேயுதே..’ இது தமிழில் வந்த பாடல். இதில் இன்னும் ஒரு சுவாரசியமும் உண்டு. இந்த பாடலுக்கான மெட்டை இந்திப் பாடலாசிரியரிடம் சொல்லியபோது இரண்டு நாள் ஆகியும் அவரால் பாடல் வரிகளைப் போட முடியவில்லை. எம் எஸ்.வியே இப்படி வைக்கலாமா என்று பாடிக்காட்டியதுதான் சந்தா தலே முஷ்குராயே ஜுவானியே.. என்ற வரி. அதுவே இந்திக் கவிஞரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அவர் உடனே இந்தியில் அடுத்த வரியை ஹாத்தோ பே தில் கி கஹானியா என்றார். அந்தகவிஞர் பெயர் விஸ்வாமித்ரா. இதெல்லாம் 1950களின் ஆரம்பத்தில் நடந்த கதை..
 
 
தமிழ் சினிமாவில் முதல்முதலாக பாடலுக்குப் பாட்டு எழுதிய பெண் கவிஞர் ரொஷானாரா பேகம். எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோவில் படத்தில் ’குங்குமப்பொட்டின் மங்கலம்....” என்ற புகழ் பெற்ற பாடல் அவர் இயற்றியது. அவர் கோவையில் வசிப்பவர். இந்த நிகழ்வுக்காக அவரும் டி.எம்.எஸ்ஸும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியதால் அவரைப் போய் பார்த்துக் கேட்டேன். அவரோ ஒரேயடியாக மறுத்தார். எம்.ஜி.ஆரும் என் தந்தையும் வேண்டியவர்கள். அதனால் என்னைப் பாட்டு எழுதச்சொன்னார்கள். எழுதினேன். ஒரே பாட்டுடன் விலகிவிட்டேன். நான் தொலைக்காட்சியில் முகம் காட்டுவதெல்லாம் எங்கள் சம்பிரதாயத்துக்கு ஒத்துவராது என்றார்கள். நானோ விடாமல் முயன்றேன். டி.எம்.எஸ் என்கிற மாயக்கலைஞனுக்கு அவர்கள் வீட்டு வாசலும் ஒருநாள் திறந்தது. அவர் நுழைந்ததுமே அங்கிருந்த இறுக்கமான சூழல் தகர்ந்துவிட்டது. கவிஞர் ரொஷானாரா பேகத்தின் வீட்டார் அவரைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் பேசும் நிகழ்ச்சியும் மிக அற்புதமாக வந்துவிட்டது. 
 
 
 
ஞானஒளி படத்தில் தேவனே என்னைப் பாருங்கள் என்ற பாடல் மிகப்பிரபலம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரத்துடன் டி.எம்.எஸ் இத்தொடருக்காகப் பேசுகிறார். இவர்கள் இருவரும் சந்திப்பது இதுதான் முதல் முறை. தேவனே என்னைப்பாருங்கள் பாடல் ஒளிப்பதிவின் போது  ஒரு மேகக்கூட்டம் கடந்து சென்றிருக்கிறது. உடனே திடீரென சிவாஜியை கூட்டிக்கொண்டு ஓடி.... அது கடந்து செல்வதைப் படமெடுத்த அனுபவத்தை சுந்தரம் பகிர்ந்துகொண்டார்.
 
 
 
ஒரே படத்தில் இளமையான சிவாஜிக்கும் பாடுவார் வயதான சிவாஜிக்கும் பாடுவார். இரண்டும் வெவ்வேறு குரல்கள் இருக்கும். உயர்ந்த மனிதன் படத்தில் அவரிடம் என் கேள்விக்கு என்ன பதில் என்ற பாடல் அளிக்கப்பட்டது. அதை சிவாஜிக்குத் தானே என்று நினைத்து கம்பீரமாகப் பாடிவிட்டார். ஆனால் பாடலைக் கேட்ட தயாரிப்பாளர் ஏ.வி.எம்..” இது கோவையிலிருந்து ஒரு இளைஞர் சிவக்குமார்  என்பவர் நடிக்கிறார். அவருக்கான பாடல் ஆயிற்றே... இப்படி பாடிவிட்டீர்களே..?” என்று சொல்லியிருக்கிறார். எனவே அப்பாடல் சிவக்குமாருக்காக மென்மையாக மீண்டும் பாடினார் டி.எம்.எஸ். இந்த இரண்டு பாடல்களுமே இப்போது கிடைக்கின்றன. சிவாஜிக்காகப் பாடியது இசைத்தட்டில் உள்ளது. இரண்டையும் கேட்டால் அவர் கொண்டுவந்திருக்கும் மாறுதலை உணரமுடியும்.. சிவகுமாருடன் இத்தொடருக்காக டி.எம்.எஸ் சந்தித்தபோது இப்பாடல் பற்றிப் பேச்சுவந்தது. சிவகுமாரை சந்தித்து அவரது குரல், உடல் அசைவு, பேசுகையில் இடது கையை முன்னே கொண்டுவரும் மென்மை எல்லாவற்றையும் கவனித்து பின்னர் தான் அந்தப் பாடலைப் பாடியதாக டி.எம்.எஸ் சொல்கிறார். அதே படத்தில் வெள்ளிக்கிண்ணம்தான்... என்ற பாடலை இளவயது சிவாஜிக்காகவும் அந்த நாள் ஞாபகம் பாடலை மூத்த சிவாஜிக்காக... ஸ்டூடியோவில் இரைக்க இரைக்க ஓடிவந்து பாடியதாகவும் அவர் விவரித்திருக்கிறார்.
 
 
 
அவர் சுமார் பத்தாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கிறார். பல படங்களின் காட்சிகள் தமிழகத்தில் இல்லை. மலேசியாவில் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவற்றைத் தேடிப்பிடித்து வாங்கி இமயத்துடன் தொடரில் பயன்படுத்தி இருக்கிறேன். அந்நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர்  என் நன்றிக்குரியவர்.
 
 
 
டி.எம்.எஸ் அவர்களுக்கு இளமையில் ஒருகாதல் இருந்திருக்கிறது. அதையும் இப்படத்தில் அவர் நினைவுகூர்கிறார். அப்போது மதுரையில் பஜனைகளில் பாடிக்கொண்டிக்கிறார் அவர். அப்பெண்ணை பெண் கேட்டுச் சென்றபோது அவரது குடும்பத்தில் இவரது வறுமை நிலையைச் சுட்டிக்காட்டி மறுத்துவிட்டார்கள். அந்த காதல் அப்போதே முறிந்து விட்டது. அதன் பின்னர் தான் அவர் கோவை செண்ட்ரல் ஸ்டூடியோவுக்கு வாய்ப்பு தேடி நகர்கிறார். எப்போது காதல் பாடல்கள் பாடினாலும் அந்த முதல் காதலியின் முகம்தான் என் மனதில் நிற்கும் என்று அவர் கூறினார். அவரது இளமைக்கால நினைவுகளை அவரது மகள்வயிற்றுபேரன் சுந்தரை நடிக்க வைத்து எடுத்திருக்கிறோம். டி.எம். எஸ்ஸின் தந்தையாக பத்திரிகையாளர் மேஜர் தாசன் நடித்துக்கொடுத்திருக்கிறார்.’’  சொல்லி முடித்தார் விஜயராஜ். பதின்மூன்று ஆண்டு உழைப்பு அவரது சொற்களில் தெரிந்தது.
 
 
 
[அந்திமழை ஏப்ரல் 2018 இதழில் வெளியான சிறப்புக் கட்டுரையின் விரிவான வடிவம்] 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...