அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வராகப் பதவியேற்பார் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேராசிரியர் தொ. பரமசிவன் மறைவு - தலைவர்கள் இரங்கல்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   25 , 2020  13:59:57 IST


Andhimazhai Image

தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர்.
 
அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிறந்த பெரியாரிய சிந்தனையாளர். மாணவப் பருவந்தொட்டே திராவிட இயக்கப் பற்றாளர். காரைக்குடியில் தந்தை பெரியாரை அழைத்து 1970களில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக நிகழ்ச்சியை நடத்தியவர்களுள் ஒருவர். பல வகை நூல்களை புத்தாக்கச் சிந்தனையோடு எழுதி, செம்மொழித் தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஒப்பற்ற இலக்கியத் தொண்டு புரிந்த மாமேதை ஆவார் பேராசிரியர் தொ.ப. அவர்கள்.

சில காலமாகவே அவர் உடல்நலம் குன்றி வீட்டிலேயே இருந்துவந்தவர் மறைவு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல திராவிட சமுதாயத்திற்கும் தமிழ் இலக்கிய உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நம்மிடம் அன்பு கொண்டவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருக்கு அருகில் இருந்து உதவிய நண்பர் குழுவினருக்கும் நமது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது, தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் அளித்த மகத்தான மாமனிதராவார். சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்து அவர் நிகழ்த்தியிருக்கிற ஆய்வுகள் தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன.

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தி அவர் எழுதி இருக்கின்ற அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்கள் தமிழினத்திற்கு அவர் வழங்கி இருக்கின்ற மகத்தான பெருங்கொடைகளாகும்.

இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக அவர் பணிபுரிந்த போது அவருடைய மாணவனாகப் பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரால்தான் நான் உருவானேன். என் பேச்சில், என் எழுத்தில் என என் வாழ்வின் சகல விதத்திலும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது பேராசிரியர் மறைந்துவிட்டார் எனும் செய்தி ஏற்கவே முடியாத பெருந்துயரமாக மாறி, என்னை வாட்டுகிறது. நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்து வழிகாட்டிய பெருந்தகை அவர்.

மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞராவார். கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய அவரைப் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளுமை யாரும் இல்லை. அவருடைய இழப்புத் தனிப்பட்ட அளவில் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்றளவும் எனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த ஒரு ஒளி அணைந்து விட்டதே? என்று கலங்கி நிற்கும் வேளையிலும் அவர் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள காலத்தால் அழியாத அவரது ஆய்வு நூல்களும் அவர் கற்பித்த பாடங்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் என்ற பேருண்மை நம்பிக்கையுடன் மீண்டெழ வைக்கிறது.

ஐயாவின் மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானப் பேரிழப்பாகும். உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...