அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“தொ.ப.விடம் ஆய்வறிஞர்களிடம் பேசுவதற்கும், டீக்கடைகாரனுடன் பேசுவதற்கும் தகவல்கள் கொட்டிக்கிடந்தன!”

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   05 , 2021  12:27:59 IST


Andhimazhai Image

தொ.பவுடன் நாம் பயணம் செய்வது என்பது ஒரு காலச்சக்கரத்தில் ஏறி பயணம் செய்வதற்கு ஒப்பானது என்று பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் கூறி உள்ளார்.

சமீபத்தில் மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு லெமூரியா அறக்கட்டளை, கருநாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் கருநாடக தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்  ஆகியவை  இணைந்து நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று இணையத்தில் மெய்நிகர் கூடுதலாக நடைபெற்றது.

அதில், தொ.பவின் நண்பரும், உடன் பணிபுரிந்தவருமான பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், தொ.பவை இவ்வாறு நினைவுகூர்ந்தார். “பன்னிரண்டு ஆண்டுகாலம் தொ.பவுடன் நான் பணிபுரிந்தேன் என்று சொல்வதை விட, அவரிடம் கல்வி கற்றேன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு குருகுல மாணவன் போல் நான் அவருடன் சேர்ந்து பயணித்து கற்றுக்கொண்டவை ஏராளம். தொ.பவிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் தன்மை இருந்தது. எப்படி கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லுவார்.
 

தொ.ப ஒற்றை மனிதனாக நின்று போராடக்கூடியவர். மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் அவரிடம் உண்டு. பரமக்குடியில் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கியவரும் அவரே. இளையான்குடியிலிருந்தும், பரமக்குடியிலிருந்தும் மக்கள் அவரைத் தேடித் தேடி வருவார்கள். அதை பார்க்கும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மதுரை வீதிகளில் நான் தொ.பவுடன் உரையாடி சென்ற ஞாபகங்கள் எனக்கு ’அன்பே சிவம்’ படத்தின் காட்சிகளை தான் நினைவுப்படுத்தும். அதில், மாதவன் கேள்விகளாக கேட்பது போல் நான் கேள்விகளை கேட்டுக்கொண்டே வருவேன். அவர் பொறுமையாக பதில்களை சொல்வார். அவரது ’அழகர் கோயில்’ ஆய்வேட்டின் பயன்பாட்டை முழுமையாக உணர்ந்தவன் நான் தான். அழகர் கோயில் சித்திரை திருவிழாவை கடந்த 30 ஆண்டுகளாக நேரலையில் வர்ணனை செய்து வருபவன்  நான், எனக்கு அந்த ஆய்வேடு மிகவும் உதவியது. அதேபோல் அழகர் கோயில், கிராமப்புற மக்களின் வாழ்வியலுடன் எப்படி கலந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் உண்டு. சித்திரை திருநாள் அன்று அழகர் ஆற்றில் இருங்கும் நிகழ்வு, கிராமப்புற மக்களின் வருடாந்திர கணக்காக இருந்திருக்கிறது என்ற தகவலை எனக்கு தொ.ப சொன்னார். தொ.ப கடவுள் நம்பிக்கையற்றவர் தான். ஆனாலும், அவர் எப்போதும் நடுநிலையாகவே இருந்தார். அவர் மக்களின் நம்பிக்கைகளை விமர்சனம் செய்ததில்லை.

ஒருமுறை நான் அவரிடம், இளங்கோவடிகளை மட்டும் ஏன் பாரதியார் மூன்று முறை பாராட்டியுள்ளார் என்று கேட்டேன். அதற்கு அவர், அந்த காலத்தில் எல்லாம் அரசர்களுக்கும், ஆண்களுக்கும் மட்டுமே சிலை வைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், பெண்ணுக்கு சிலை எடுக்க இமயம் வரை சென்று, தடுப்பவன் எவனாகிலும் போர் புரிந்து அவன் தலையிலேயே கல் சுமந்து கொண்டு வந்து கண்ணகிக்கு  கோட்டை கட்டிய பெருமை இளங்கோவடிகளையே சேரும்.  அதனால் தான் பாரதி அவரை பாராட்டுகிறார் என்றார். நீர் நிலைகளில் ஏன் குளம், ஏரி, கண்மாய் என தனித்தனிப் பெயர் வந்தது என இப்படி அனைத்திற்கும் பொருத்தமான, அறிவுப்பூர்வமான விளக்கம் சொல்வார்.    

1995-ஆம் ஆண்டு மணவழகர் மன்றத்தில் பேசுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  அந்த மேடையில் பேச, ஒரு மாணவனை போல் என்னை ஒருவாரம் தயார் செய்தார் தொ.ப. பேச்சு முடிந்தவுடன் கலைஞர் என்னை “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” என்று  வாழ்த்தினார். இந்த செய்தியை நான் தொ.பவிடம் சென்று கூறும் போது என்னை கட்டித்தழுவி ‘அசத்திட்டீங்க’ என்று வாழ்த்தினார்.
தொ.பவுடன் நாம் பயணம் செய்வது என்பது ஒரு காலச்சக்கரத்தில் ஏறி பயணம் செய்வதற்கு ஒப்பானது.

என் தந்தையார் இறந்து போது, அவரது சிதைக்கு நெருப்பு வைக்கும் தருணத்தில், என் தந்தைக்கு நெருப்பு வைப்பதாக எண்ணவில்லை. ஒரு நூலகத்திற்கு நெருப்பு வைப்பது போல வருந்தினேன், என சொல்லியிருந்தேன். அதே வருத்தத்தை தொ.பவின் மரணத்திலும் உணர்கிறேன். தொ.ப ஒரு பல்கலைகழகம், அவர் ஒரு நூலகம்.” என்று அவர் கூறினார்.

எழுத்தாளர் பாமரன் பேசும் போது, “எனக்கு தொ.பவைப் பற்றி புரிய வைத்தவர், முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா தான். அதனால் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தொ.ப பற்றி நான் முதலில் புரிந்து கொள்ளவில்லை. அவர் கடவுளை பற்றி எழுதுகிறார் என்று தான் இருந்தேன். ஆனால், கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கான தடை சட்டம் வந்தபோது தான் எனக்கு விஷயம் புரிந்தது. சமயங்களில் இருக்கும் நுட்பமான அரசியலை எளிய மொழியில் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்தவர் தொ.ப. அவர் வைக்கும் விமர்சனங்கள் கூட நேசப்பூர்வமான விமர்சனமாக இருக்கும்.

அறிஞர்களுடன், பாமரர்களுடனும் ஒரே மாதிரி தான் பேசுவார். அதுதான் அவரது சிறப்பு. அவரிடம் ஆய்வறிஞர்களிடம் பேசுவதற்கும், டீக்கடைகாரனுடன் பேசுவதற்கும் தகவல்கள் கொட்டிக்கிடந்தன. தொ.ப பெண்கள் மீது மகத்தான மரியாதை கொண்டவர். பெண்கள் தான் மிகப்பெரிய ஜனநாயக சக்தி என்பதை நம்பினார்.  தொ.ப எப்போதுமே மற்றவர்களை பல்வேறு ஆய்வுகளை நோக்கித் தள்ளியவர். அவர் தமிழ் கருவூலம். அவரது இழப்பை என் தந்தையின் இழப்பாக கருதுகிறேன்,’’ என கூறினார்.


- கார்த்திக் சுந்தர் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...