அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 115 
|
“என் வாழ்க்கையில் இது பொன்னான நாள்” - திருமணம் செய்து கொண்ட மலாலா!
Posted : புதன்கிழமை, நவம்பர் 10 , 2021 11:16:50 IST
“என் வாழ்வில் இது பொன்னான நாள். அசரும் நானும் திருமணம் செய்துகொண்டோம்” என அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடிவரும் மலாலா தான் திருமணம் செய்து கொண்டது பற்றிய அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மிங்கோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மலாலா, கடந்த 2009ஆம் ஆண்டு, பிபிசி உருது இணையதளத்தின் தலிபான் நடவடிக்கைகளை எதிர்த்து எழுதத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல், பாகிஸ்தானில் தலிபான்களின் எதிர்ப்பையும் மீறி பெண் குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையை ஆதரித்து வந்தார். இதனால் கோபமடைந்த தலிபான்கள், பள்ளி முடிந்து வீடு சென்றுகொண்டிருந்த மலாலாவின் வாகனத்தை மறித்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த மலாலா, ராவல்பிண்டியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், நினைவு திரும்பாத மலாலாவை பாகிஸ்தான் அரசு, இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பியது. அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற வந்த மலாலா தனது 16வது வயதில், கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றினார். தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மலாலாவின் செயல்பாட்டிற்கு உலக நாடுகள் பலவும் பாராட்டிக் கௌரவித்தன.
அதேபோல், பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் மலாலா. மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்த மலாலா, 2020ஆம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள வீட்டில் தனக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அசர் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திருமண புகைப் படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “என் வாழ்வில் இது பொன்னான நாள். அசரும் நானும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமண விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை அனுப்புங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
|
|