சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ விஞ்ஞானிக்கும், மருத்துவ உலகின் மாஃபியாக்களுக்கும் இடையே நடைபெறும் தர்மயுத்தமே தி லெஜண்ட் திரைப்படம்.
நாயகன் சரவணன், சர்வதேச அளவில் அறியப்படும் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி. தனக்குக் கிடைத்த வசதி, வாய்ப்புகள் அனைத்தும் உதறிதள்ளிவிட்டு மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமென தமிழ்நாட்டில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகிறார். பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் காதல் வயப்படுகிறார், உதவாக்கரை இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறார்.
இவரது பால்ய வயது நண்பன் மற்றும் அவரது குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். திடீரென ஒருநாள் நண்பன் இறந்து விடுகிறார். இதனால், கடுமையான மனவேதனைக்குள்ளாகும் நாயகன், சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்கு, மருத்துவ மாபியாக்கள் முட்டுக்கட்டைப் போடுகின்றனர். இதை மீறும் நாயகன் எதிர்கொண்ட இழப்புகள் என்னென்ன? சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட், பழிவாங்கல் என கமர்சியல் படத்திற்கான அத்தனையும் இருந்தும், திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கின்றனர் இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி. படத்தின் முதல் பாதி இழுத்துக் கொண்டு செல்ல, இரண்டாம் பாதியிலேயே கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது. மறைந்த விவேக்கின் காமெடிகளை விட, யோகி பாபுவின் காமெடி கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.
விஜயகுமார், பிரபு, நாசர், விவேக், மன்சூர் அலிகான், சுமன், ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஊர்வசி ரௌடேலா, கீத்திகா திவாரி, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, யோகி பாபு என பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும், எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவில்லை. நாயகனாக நடித்துள்ள அருள் சரவணன் நடிக்க முயன்று, ரசிர்களை சோதித்துப் பார்க்கிறார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும், அனல் அரசின் சண்டைக் காட்சியும் படத்திற்கு பெரும் பலம். மற்ற குறைகளை இவர்களே நிவர்த்தி செய்கின்றனர். ரூபனின் படத்தொகுப்பில் காட்சிகளின் தொடர்ச்சி மிஸ்ஸாகிறது. ஹாரிஸ் ஜெயராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்? என்ற சந்தேகம் எழுகிறது. படத்தின் விறுவிறுப்பிற்காக அவர் போட்டிருக்கும் பின்னணி இசை, காதை செவிடாக்கிவிடும் போல. பாடல்களும் ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வு.
“நீட் தேர்வுக்கு முன்னாடி படிச்சவனா” என்று வசனம் எழுதியுள்ள பட்டுக்கோட்டை பிரபாகர், வசனகர்த்தவாக எங்கும் தனித்துத் தெரியவில்லை. பெரிய நடிகர்கள், முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் இருந்தும், படத்தில் அவர்களின் பங்களிப்பு எங்கே என்ற கேள்வி எழுகிறது.
பட்ஜெட்டும், அருள் சரவணனின் தன்னம்பிக்கையுமே ’தி லெஜண்ட்’ படத்தின் தனிச்சிறப்பாகத் தெரிகிறது.
தா.பிரகாஷ்