Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 01 , 2022 13:05:19 IST
‘ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றாட அரசியல் சாசன கடமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை பேசுகிறார்’ திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்த இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் மதிமுகவினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இப்படி, இருபது மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் போல் சனாதனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல், சம்மதமில்லாமல், திராவிட இயக்கம் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறார். தன்னுடைய அன்றாட வேலையை விட்டுவிட்டு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். இந்த மசோதாக்கள் நிறைவேறினால் எங்கு திமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என ஆளுநர் நினைக்கிறார். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றுகிறார்களோ, அதன் மூலம் அவர்களுக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என நினைக்கும் ஆளுநர் அதை தடுக்க நினைக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றாட அரசியல் சாசன கடமையை செய்யாமல் தேவையில்லாதவற்றைப் பேசுகிறார்.” என்றார்.