விவாதங்களை நடத்த அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது தாக்குதலை நடத்தும் பாஜக அரசு – ராகுல் காந்தி
Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 13:24:55 IST
விவாதங்களை நடத்த அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய பாஜக அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஐடியாஸ் ஃபார் இந்தியா மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”இந்தியாவில் தற்போது என்ன நடக்கிறது என்றால், விவாதங்களை நடத்த அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய பாஜக அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. காங்கிரஸ் இந்தியாவை மீட்கப் போராடுகிறது. பாகிஸ்தானில் நடந்ததைப் போல, இந்தியாவில் மெல்ல நடக்கத் தொடங்குகிறது.
பாஜகவின் விஷ பிரசாரம் நாட்டை பாதித்துள்ளது. மக்கள் குரல்களை பாஜக அடக்குகிறது. இந்தியாவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.” என்றார்.