அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“ஓர் இடம் காலி!” - தங்கம் தென்னரசு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  16:05:00 IST


Andhimazhai Image



தங்கா' பாண்டியன்.. எனது அப்பா தங்கப்பாண்டியன் அவர்களைத் தலைவர் கலைஞர் இவ்வாறு அழைப்பது வழக்கம். சென்னைக்கு வரும்போது தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்த பின்னர், ஓரிரு நாட்கள் அங்கே தங்கியிருந்து தொடர்ச்சியாக தலைவரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக ஊருக்குத் திரும்பிவிடும் வாடிக்கை அப்பாவுக்கு இருந்ததால், தலைவர் கலைஞர் அவர்கள் வேடிக்கையாக அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம்.

நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, வயது முதிர்வின் காரணமாக தன் வாழ்க்கைப் பயணத்தின் இறுதிப் பகுதிக்கு வராமல், தலைவர் கலைஞரின் தனி அன்பைப் பெற்று அவரது பெருமைமிக்க அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பின்றி, திடீரென விடை பெற்றுக் கொண்டதால், ஒருவகையில் அவர் தங்காப்பாண்டியனாகவே இருந்துவிட்டாரோ என்ற எண்ணம் எனக்கும் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

அப்பாவின் அரசியல் பயணம் நெடியது. 1949ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களோடு பேரறிஞர் அண்ணா அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டு தாய்க்கழகத்தை விட்டுப் பிரிய நேரிட்டபோது, அவரோடு இணைந்து வெளியே வந்தவர்களின் பட்டியலைக் ‘‘கண்ணீர்த் துளிகள்'' எனும் தலைப்பில் ‘திராவிட நாடு' இதழில் அண்ணா அவர்கள் வெளியிட்டு வந்தார். அந்தப் பட்டியலில் ‘தங்கபாண்டி, திராவிட மாணவர் கழகம், கமுதி' என்ற பெயரோடு அப்பாவும் இடம்பெற்றதில் இருந்து அவரது அரசியல் வாழ்வு துவங்கியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்ட பின்னர் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கமுதியில் கிளைக்கழக உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்ட நாள் முதல், தன் இறுதி மூச்சுவரை வாழ்விலும், தாழ்விலும் அவர் கழகத்துடனே ஒன்றியிருந்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி எனும் சின்னஞ் சிறிய கிராமத்தில் பிறந்து, வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற தனது அபிலாஷைகள் அந்த கிராமத்தின் புழுதிபடர்ந்த தெருக்களில் மறைந்து போகுமோ என்ற அச்சத்தில் கண்மாய்க்கரையில் அமர்ந்து தன்னந்தனியே அழுது கொண்டிருந்ததாக அப்பா என்னிடம் ஒருமுறை சொன்னார். அந்த உந்துதலோடு படித்து, அவரது விருப்பப்படியே பிறகு ஆசிரியராகவும் ஆனார்.

1968ஆம் ஆண்டு மல்லாங்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அப்பாவுக்கு உடனடியாக சென்னை வந்து முதலமைச்சரைச் சந்திக்கச் சொல்லி ஓர் அவசர அழைப்பு!

ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியருக்கு முதலமைச்சரிடம் இருந்து வந்த அழைப்பு அவர் மனதில் மட்டுமல்ல, அந்த கிராமம் முழுவதும் பலவிதமான எண்ண ஓட்டங்களை எழுப்பி இருக்க வேண்டும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்பாவைப் பார்த்து ‘உன்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்க பரிந்துரை செய்திருக்கிறேன். கலைஞரைப் போய்ப்பார்' என்றார். அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை. தலைவர் கலைஞரோ ‘‘யானை உனக்குத் தானாக மாலை போடுகிறது'' என்று தனக்கே உரிய இலக்கியச் செழுமையோடு அப்பாவை அரவணைத்துக் கொண்டராம்.

அவரது அரசியல் வாழ்க்கை என்பது, இருமுறை மேலவை உறுப்பினர்; ஒன்றியப் பெருந்தலைவர்; கூட்டுறவு அமைப்புகளில் தலைவர்; சட்டமன்ற உறுப்பினர்; அமைச்சர் எல்லாவற்றுக்கும் மேலாக 23 ஆண்டு காலம் மாவட்டக் கழகச் செயலாளர்; ஓராண்டு மிசா சிறைவாசம்; எண்ணற்றப்
போராட்டங்கள் ,  தேர்தல் தோல்விகள்; சிறைவாசம் என எல்லா நிலைகளையும் உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றது.

பதினான்கு ஆண்டுகளாக எதிர்க்கட்சி அரசியல் எண்ணற்ற இடர்பாடுகளை விளைவித்தாலும், கலைஞரின் பாலும், கழகத்தின் பாலும் அவர் கொண்டிருந்த திடமான பற்றும் கொள்கை உறுதியும் மட்டும் என்றும் மாறாதிருந்தன. கலைஞரை விட்டு விலகினால் சிறைவாசத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகள் அவரை மயக்க முடியவில்லை. கழகத்தை விட்டு வெளியேறினால் பதவி சுகம் காத்திருக்கிறது என்ற பசப்பு வார்த்தைகள் அவரை அசைக்க முடியவில்லை. அதனால்தான் அவர் மறைவுற்றபோது கலங்கிய கண்களுடன் தலைவர் கலைஞர், என் குடும்பத்தில் ஒருவராக ஒன்றியவர் என்று அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட வகையில் எனது முன்னேற்றத்தில் வழக்கமான தந்தைக்குரிய அக்கறையும், கண்டிப்பும் அப்பாவிடம் இருந்தது. அரசியல் நிழல் என் மீது படர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். தலைவர் மற்றும் தளபதி அவர்களின் வருகையின் போது மட்டுமே கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதித்த அவர், ஒவ்வோர் ஆண்டும் தைப் பொங்கல் நாளில் மட்டும் கழகத்தின் இருவர்ணக் கரை போட்ட வேட்டி ஒன்றை எனக்கு அளிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
அமைச்சர் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்ட இரவு என்னை அழைத்து, ‘நீ அமைச்சருக்கான கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் என்னோடு தங்கியிருக்க வேண்டாம்' என்று சொன்னார். பின்னாட்களில் அதே குடியிருப்பில் நானும் வசிக்க நேர்ந்தது ஒருவகையில் முரண்நகையே.

அம்மாவின் அன்பு அலைகளாக வெளித் தெரியும் ஒன்றென்றால், அப்பாவின் அன்பு என்பது ஆழ்கடல் நீரோட்டம் போன்றது. நள்ளிரவில் கூட ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் என்னை எழுப்பி அவர் மதுரையில் இருந்து வாங்கி வந்த ‘பிரேமா விலாஸ் முக்குக்கடை' அல்வாவை சாப்பிடச் சொல்லும் போது அவரையும் அறியாமல் ஆழ்மனதின் அன்பு வெளிப்பட்டு விடும். எந்தக் கூட்டத்தில் எங்கே இருந்தாலும், நான் விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்குச் செல்லும் நாளில் என்னை வழியனுப்ப வீட்டிற்கு அவர் வராமல் இருந்ததில்லை. நெஞ்சிலே பூட்டி வைத்துக்கொள்ள முடியாத நிகழ்வு ஒன்றுண்டு. நான் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தூத்துக்குடியில் ‘ஸ்பிக்' நிறுவனத்தில் வேலைக்காக அழைப்பினைப் பெற்றிருந்தேன். என்னை அங்கே இருக்கும் விடுதியில் விட்டுவிட்டு அப்பா மட்டும் ஊர் திரும்பத் திட்டம். பிரியும் நேரம் வந்ததும் அப்பாவின் கண்கள் கலங்கி கண்ணீர்த் தாரை எட்டிப்பார்த்தது. நான் அழத்தொடங்கி விட்டேன். எங்கள் இருவரையும் பார்த்த அந்நிறுவனத்தின் மேலாளர் ஒருவர், ‘‘என்ன சார், பையன் வேலைக்குத் தானே சேர்ந்து இருக்கிறார். சின்னப் பையனை ஹாஸ்டலில் விட்டு விட்டுப் போவதைப் போல இப்படி அழுகிறீர்களே'' என்று கேட்டது, இன்னும் என் நினைவில் நிற்கிறது. தந்தை தாயுமாகி நின்ற தருணம் அது.

அவர் மறைவுக்கு ஓரிரு நாட்கள் முன்பு, ஊரில் இருந்த நிலமொன்றை விற்றுவிடலாமா என்று கேட்டேன். கைகளை வேகமாக ஆட்டி மறுத்தார். ‘‘வேண்டாம் உனக்கு பிறிதொரு சமயம் உதவக்கூடும்'' என்றார். அதுவே அவருக்கான இடமாக ஆகி, அங்கேதான் அவருக்கு நினைவகம் எழுப்பினேன்.
அப்பா மறைந்தபோது இரங்கல் செய்தி விடுத்த தலைவர் கலைஞர், பல நாட்கள் கழித்து, கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்கள் எழுதிய ஹைகூ கவிதை நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது மேடையிலேயே அப்பாவை நினைவு கூர்ந்து ஹைகூ கவிதை ஒன்றையும் சொன்னார்.
‘அரங்கு நிறைய அமைச்சர்கள் ஆனாலும் நான் அழுகிறேன் ஓர் இடம் காலி'
இன்னும் அந்த இடம் காலியாகவே இருக்கின்றது.  அவரது நினைவுகளால் அதை நிரப்பிட ஒவ்வொரு நாளும் நான் முயன்று கொண்டேயிருக்கின்றேன்.

(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...