???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தரமணி என்ன வகைப் படம்?

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   17 , 2017  08:00:39 IST


Andhimazhai Image
 
 
 
 
உலகமயமாக்கல் தொடர்பான தன் Trilogy-யில் மூன்றாவது படமாக தரமணியுடன் வந்திருக்கிறார் ராம். இம்முறை ஐ.டி. துறையில் மனிதவள அதிகாரியாக வேலைபார்க்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும், சாதாரண பின்னணியில் இருந்துவரும் இளைஞனுக்குமான காதல், அதில் ஏற்படும் உறவுச்சிக்கல்களைச் சொல்கிறது இப்படம்.
 
 
ஆல்தியா என்ற பெயரில் வரும் ஆண்டிரியாவுக்கு படத்தில் ஏற்கெனவே மணமாகி, ஏட்ரியன் என்றொரு சிறு மகன் இருக்கிறான். எதேச்சையாக பிரபுவைச் (வசந்த் ரவி) சந்தித்து அவரது கதையைக் கேட்டறிந்து பின்பு அவருடன் காதல். இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஆல்தியாவின் நண்பர்கள் பற்றி, அலுவலகம் பற்றி அதிகப்படியான உரிமை எடுத்து அவளை டார்ச்சர் செய்து, வெளியே போடா நாயே என உக்கிரமான சண்டைக்குப் பின்னால் வெளியேற்றப்படுகிறான் பிரபு. அதன் பின்னர் பிரபு சில தவறுகள் செய்து திருந்தி, பிராயச்சித்தம் செய்து, ஆண்ட்ரியாவைத் தேடிவருகிறான்.
 
 
படத்தில் முக்கியமாக மூன்று பெண்கள் வருகிறார்கள். மூன்றுபேரையுமே உயர்வாகக் காட்டியிருக்கிறார் ராம். ஆண் பாத்திரங்கள்தான் மோசமாக இருக்கிறார்கள்!
 
 
ரயிலில் பார்த்த ஒரு மனிதரிடம் இருந்து மூன்று லட்சத்தைத் திருடியதாக குற்ற உணர்ச்சியில் இருக்கிறான் பிரபு. எப்படியாவது திருப்பித் தந்துவிடுகிறேன் என்று எழுதி வைத்துவிட்டுத் திருடுகிறான். இதைத் தன்னிடம் குற்ற உணர்ச்சியுடன் சொல்லும் அவனிடம்  “உலகத்தில் திருட்டுக் குற்றம் செய்யாதவர் யாருமே இல்லை. நான் கூட சின்ன வயதில் ரப்பர் திருடியிருக்கேன். யாரும் எப்போதாவது திருடி இருப்பாங்க.’ என்று சொல்லும் பெண் ஆல்தியா. பிட்ச் என்று திட்டும் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தன் கணவன் ஓரினச்சேர்க்கையாளன் என்று தெரிந்த பின், நாம் பிரிந்துவிடலாம். நீ என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் வெளியே சொல். உன்னைப் பற்றி நான் எதுவுமே சொல்லமாட்டேன். ஏனென்றால் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்கிற தங்கமான பெண். ஓரினச்சேர்க்கையாளர்கள்  நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது கடினம் என்பதால் அவனுக்கு ஆதரவாக  இந்த முடிவை எடுக்கக்கூடிய அற்புதமான குணம் கொண்ட பெண். இன்று எவ்வளவுதான் படித்து பெரிய பதவியில் இருந்தாலும் கணவன் ஓரினச் சேர்க்கையாளன் என்று தெரிந்தால் முதலில் அவன் மீது சேற்றை வாரி இறைத்து, அவனை அசிங்கப்படுத்தி, டைவோர்ஸ் வாங்குவதுதான் நம் பழக்கம். இந்த வழக்கத்தில் இருந்து மாறுபட்டு அவனைப் புரிந்துகொண்டு, தன் பெயர் நாசமானாலும் பரவாயில்லை என்று மாளாத அன்பை வெளிப்படுத்துகிறாள் ஆல்தியா( இதைப் புரிந்துகொள்ளமுடியாததால்தான் பலருக்கு ராம் மீது கோபம். ஆல்தியா வழக்கமான பெண்ணாக இருந்திருந்தால் நம்  ஈகோ திருப்தி அடைந்திருக்கும்).
 
 
பிரபு மீது கொண்ட காதலில் பிரிவு ஏற்பட்டதும் ஆல்தியாவுக்கு தற்கொலை உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. ப்ளாஸ்டிக் பையை முகத்தில் சுற்றிப் படுத்துக்கொள்கிறாள். அந்த சின்னப்பையன் ஆட்ரியனை நடுத்தெருவில் விட்டுப்போய்விடுவாளோ என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால் அவள் மீண்டு வருகிறாள். இடையில் வேலையும் போகிறது. ஒரு அரைமணி நேரத்தில் நீங்க ரிசைன் பண்ணா போதும் என்கிறது நிறுவனம். கலங்காமல் நம்பிக்கையுடன் வாழ்கிறாள்! அவள் வாழ்வில் ஒளிக்கீற்றாய் வழிகாட்டுகிறது அவள் சுயநம்பிக்கை!
 
 
பிரபு தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்துவிட்டு திரும்பிவருகிறான்.  “நீ வந்து என்னைப்
பார்க்காதே... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுவேன்” என்று அவனைத் திருப்பி அனுப்பும் ஆல்தியா, பின்னர் அவனைச் சேர்த்துக்கொள்வதில் படம் முடிகிறது. சிம்பிள்! ஒரு பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்தரம் இருக்கிறது. அவள் தான் விரும்பிய ஒருவனை அவனது தவறுக்காக விரட்டி அடிக்கிறாள்! அவன் திருந்திவந்ததும் மன்னித்துத் திரும்பச் சேர்த்துக்கொள்கிறாள்!
 
 
அஞ்சலியின் பாத்திரம் இன்னொரு வகையில் மேம்பட்டு நிற்கிறது. பிரபுவைக் காதலித்து அவனிடம் இருந்து மூன்று லட்சரூபாய் வாங்கிக்கொண்டு அமெரிக்கா செல்கிறது! அங்கே இன்னொருவனை சந்தர்ப்ப சூழலால் திருமணம் செய்துகொண்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறது! அவள் இந்தியாவுக்குத் திரும்பிவந்து பிரபுவை அழைக்கிறாள்! அவனுக்கு சாக்கலேட் பெட்டி ஒன்றை அளிக்கிறாள்! ஆனால்  இப்போதிருப்பது அவள் காதலித்த அன்பான பிரபு அல்ல.. அவன் அவளுடன் படுக்கையில் படுத்து ஆடை விலக்கி படம் எடுத்துக்கொள்கிறான்! அந்தப் படத்தைக் காட்டி மிரட்டி தான் கொடுத்த 3 லட்சத்தைக் கேட்கிறான்! தான் முன்பே அளித்து அவன் வாங்க மறுத்த சாக்லேட் பெட்டியை திறக்கச் சொல்கிறாள். அதில் 5 லட்சம் பணம் இருக்கிறது! பிரபு அஞ்சலிக்கு முன்னால் புழுவாக நெளிகிறான்! ‘ இந்த படங்களை வைத்து நீ எதுவும் செய்யமாட்டாய். நீ அவ்வளவு நல்லவன் பிரபு!’ என்று அஞ்சலி மேலும் அவனை சம்மட்டியால் அடிக்கிறாள்! இந்த இடத்தில் நமக்குத் தோன்றுவது அஞ்சலி மீது பரிதாபமும் அவள் தேடும் பிராயச்சித்தம் குறித்த மரியாதையும்தான்! தவறு செய்கிறவன் அதிலிருந்து திருந்த நினைப்பது குறித்த நிகழ்வுகளே அதாவது redemption  முயற்சிகளே தரமணியை உயர்த்துகின்றன!
 
 
அசிஸ்டண்ட் கமிஷனரின் மனைவியாக வரும் பெண் மிகுந்த ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.கணவனால் புறக்கணிக்கப்பட்டு அவனைத்தாங்கிக்கொண்டு வாழும் பெண்ணின் அசலான உணர்வை வெளிப்படுத்தும் காட்சி இது! கணவனுக்குத் தெரியாமல் பிரபுவை வர வைத்து அவனிடம் இருந்து அவன் இன்னொரு பெண்ணை மிரட்டி வாங்கிய திருமண மோதிரத்தை வாங்குகிறார். பிரபுவின் போனை ஒட்டுக்கேட்கும் கணவன், பல பெண்களிடம் கை வைத்து தன் வீட்டுக்கே வந்துவிட்டானே என்று கொலைவெறியுடன் வருகிறான். அடுத்து நிகழ்வது உச்சகட்ட கோபத்தில் நடக்கும் முழுமையான madness! வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் பிரபுவைத் தேடுகிறான். தன்னைப் புறக்கணிக்கும் போலீஸ் கணவன் மீதிருக்கும் ஆத்திரத்தில்   ”அசுரன் நாவலில் இருந்து ஒரு பாராவை அந்தப் பெண்மணி படிக்கிறார்! புத்தகம் படித்துத்தான் நீ கெட்டுப்போய்விட்டாய் என்று அவர்களுக்குள் நிகழ்கிறது பூசல்! பதுங்கியிருக்கும் பிரபுவைப் பிடித்து அடி அடியென்று அடிக்கிறான்! எல்லை மீறிய ஒரு கணத்தில் மனைவியை நெற்றிப்பொட்டில் சுட்டுவிடுகிறான்! பிணமாகச் சரியும் அவளைப் பார்த்த கணத்தில் ஆத்திரம் வடிந்து, இப்படிப் பண்ணிட்டியேடீ என்று அழுகிறான்! அந்த அழுகையினூடாக பிரபுவை வெளியே போகச் சொல்கிறான்! ! படத்தைத் தூக்கி நிறுத்தும் இக்காட்சி மிக உக்கிரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது!
 
 
படத்தைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு பிடிக்காமல் இருப்பது திருமணமான குடும்பப்பெண்களுக்கு பிரபு போன் செய்து அவர்களை மயக்கி நேரில் வரவைத்து அவர்களிடம் பொருட்களைப் பறிக்கும் காட்சிதான் என்று நினைக்கிறேன்! அது எப்படி குடும்பப்பெண்கள் இவன் வலையில் விழுவார்கள் என்று பத்தினித்தனத்துடன் அறச்சீற்றம் கொள்கிறார்கள்! இவர்கள் யாரும் தினத்தந்தியை ஒழுங்காகப் படிப்பதில்லை என்றுதான் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது அல்லது தமிழர்களுக்கே உரிய போலித்தனமான முகமூடியைப் போட்டுக்கொள்கிறார்கள்!
 
 
ரயில்நிலையக் காவலர் அழகம்பெருமாள் தன் அன்பான மனைவி எஸ்தரும் கூட பிரபுவின் வலையில் விழுந்தது குறித்து வருத்தப்பட்டு பிரபுவுடம் பேசுகையில், நாற்பது வயதுக்கு மேல் வரும் சபலம்தானேடா... இது நம்ம தங்கைக்கு வந்தா நாம் எப்படி நடந்துக்குவோம்? எஸ்தரும் யாரோ ஒருத்தனுக்கு தங்கைதானே? யாரோ ஒருத்தருக்கு மகள்தானேடா, என்று சொல்லி உயர்ந்து நிற்கிறார்! அதிகார வெறி கொண்ட, ஏமாந்தவர்களிடம் திருடுகிற பாத்திரங்களுக்கு இடையே, உயர்ந்து நிற்கும் மானுட அறம் கொண்ட பாத்திரப்படைப்புகளையே படமெங்கும் நிரப்புகிறார் ராம்!
 
 
கடைசியில் தான் திருடிய ரஹீம் பாய் வீட்டைத் தேடிச்சென்று பணத்தைத் திருப்பித்தருகிறான் பிரபு. அந்த விதவைத் தாய் வீட்டில் அவனுக்கு அளிக்கப்படும் உணவில் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படுகிறது! அந்தத்தாய் தான் பெறும் பணத்தை அன்று பிரதமர் அறிவித்த பணமதிப்பு இழப்பால் பயன்படுத்த முடிந்ததோ இல்லையோ என்று இயக்குநர் ராம் இந்த இடத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டாலும் கூட, மேற்சொன்ன காட்சியின் அழுத்தத்தைக் குறைக்க முடியவில்லை!
 
 
இயக்குநர் ராம் எடுக்கும் படங்களை அவை வெளிவரும் காலத்தில் யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள்! அவை ஏற்றுக்கொள்ளப்பட சில ஆண்டுகள் ஆகிவிடும்! காலத்தால் முந்திய படங்களை எடுத்துக்கொண்டிருப்பதே ராமுக்கு வேலையாகிவிட்டது!
 
 
குறிப்பு:  இது பெண்ணியப்படமா ஆணியப்படமா என்று படத்தைப் பார்த்தும் பார்க்காமலும் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். இயக்குநர் இது எந்தவகைப் படம் என்று எங்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை! ஆனால் ஒரு காட்சியில் மிகுந்த  மனஅழுத்தத்தில் தன் குடியிருப்பின் மின் தூக்கியைப் புறக்கணித்துவிட்டு படியேறுகிறார் ஆல்தியா. அப்போது படிகளில் வரிசையாக  மகன் ஆட்ரியன், பிரபு மற்றும் வேலைபார்க்கும் நிறுவன உயரதிகாரி ஆகியோர் இறங்கிவருவதாக ஒரு காட்சி வருகிறது. இந்த ஒரு காட்சிபோதும் இது என்னமாதிரி படம் என்பதற்கு!
 
 
-சுந்தரமூர்த்தி 
 
 
 

English Summary
on Taramani film

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...