???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"கமலின் வருகையில் ஒரு நுண்ணரசியல் மறைந்திருக்கிறது!'' - தமிழருவி மணியன்.

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   20 , 2018  00:48:56 IST


Andhimazhai Image
கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகளைப் பார்த்தால் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. உணர்ச்சிகளால் வழி நடத்தப்படுகிறவரா நீங்கள்?
 
மனிதர்கள் அனைவருமே உணர்ச்சிகளால் வழிநடத்தப்படுகிறவர்களே. உணர்வு வயப்பட்டு காரியங்கள் ஆற்றுவது தவறல்ல. ஆனால் உணர்வுகளின் அடிப்படையில் தவறான முடிவுகளை விரைந்து எடுப்பது தவறு. நான் அந்த தவறை இதுவரை செய்யவில்லை. பெருந்தலைவர் காமராஜர் 1967 தேர்தலில் தோற்றபோது அவரது தி.நகர் இல்லத்தில் கண்ணீரும் கம்பலையுமாக கூடிக்கிடந்த  மக்களின் இடையே சென்று முதல்முதலாக சந்தித்தேன். அன்றே மாணவர் காங்கிரஸில் என்னை இணைத்துக்கொண்டேன். ஏறக்குறைய 50 ஆண்டுகள் முடிந்துவிட்டன இந்த ஐம்பது ஆண்டுகளில் திமுக அதிமுக என்கிற இரு கட்சிகளின் ஆட்சி அலங்கோலங்களையும் என் இளம்பருவம் முதல் இன்றுவரை பார்த்துவந்திருக்கிறேன். முழுக்கமுழுக்க சுயநலம்  சார்ந்தவர்களாக இவர்கள் இருப்பதை நான் நன்றாக அறிவேன். இந்த காலத்தில் தமிழகத்தின் காலங்காலமான அத்தனை பண்பாட்டு விழுமியங்களும் படுகுழியில் தள்ளப்பட்டுவிட்டன. எனவே மௌனப்பார்வையாளனாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் இந்த இரு திராவிடக் கட்சிகளையும் தமிழகத்தின் ஆட்சி நாற்காலியில் அமரவிடாமல் பார்ப்பது என்பது நான் நேர்ந்துகொண்ட வேள்வி. அதற்கு எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுப்பது என்றுதான் 2014ல் அந்த கூட்டணியை உருவாக்கினேன். எனக்கு பாஜக மீது எந்த மதிப்பும் இல்லை. ஆனாலும் 2016-ல் வரவிருக்கும் 
சட்டமன்றத்தேர்தலுக்கு சக்திவாய்ந்த மாற்று அரசியல் கூட்டணியை உருவாக்கவே 2014 நாடாளுமன்றத்தேர்தலில் அக்கூட்டணியை வளர்த்தெடுத்தேன். அப்போது பாஜகவால் அதிமுக, திமுக இரு அணிகளிலும் சென்றிட முடியாத நிலை. பாமக இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தது. அதையே வைகோவும் முன்னெடுத்தார். தேமுதிகவும் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் பிறந்தது என்ற நிலை. இதுதான் தக்க தருணம் என்று இவர்களை ஒன்றாக இணைத்தேன். மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு வலுவான மாற்று அணியை உருவாக்க நினைத்தேன். காங்கிரஸ் கட்சி என் இனத்தை அழித்த கட்சி. அதற்கொரு பாடம் புகட்டவேண்டும் என்பதற்காக பாஜக பக்கம் நின்றேன். அந்த கூட்டணி தோற்கவில்லை. என் முயற்சி வெற்றிதான் பெற்றது. இரு திராவிடகட்சிகளுக்கும் மாற்றாக அமைக்கப்பட்ட அணி 19 சதவீத வாக்குகளை அதாவது 75 லட்சம் வாக்குகளைப் பெற்றது அப்போது மட்டுமே. இருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகினர்.  அந்த தேர்தல் முடிந்தபின்னர் இதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்திருக்கவேண்டும். மக்களைச் சந்தித்திருக்கவேண்டும்.  ஆனால் அவர்கள் தேர்தல் முடிந்த மறுகணமே விலகிச்சென்றது அவர்க்ள் செய்த தவறு. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டது. முதலில் சிபிஎம் கட்சியின் தோழர் ஜி ராமகிருஷ்ணன் என்னுடன் தொடர்புகொண்டு அந்த கூட்டணியில் இடம்பெறவேண்டும் என்றார்.  மாற்று அரசியல் சிந்தனையில் இருந்ததால் அந்த யோசனை எனக்குப் பிடித்தமாக இருந்தது. அதன் முதல் கூட்டத்தில் எங்கள் இயக்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாற்று அரசியலை வளர்க்கவிரும்பும் இந்த அணியினர் இனி எந்தக் காலத்திலும் இரு திராவிடக் கட்சியிலும் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று நான் கூறினேன். அது நம் சிவப்புச் சிந்தனையாளர்களுக்கு உகந்ததாக இல்லை. அது எனக்குப் புரிந்தது. நான் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை. திமுகவிலும் அதிமுகவிலும் அவர்களுக்குத் தேவையான இடங்களைப் பெறமுடியாததால் உருவான அணி அது. உண்மையிலேயே லட்சியபூர்வமாக அந்த அணி அமைந்திருந்தால் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் (விஜயகாந்தைத் தவிர்த்து) இன்று திமுகவின் பக்கம் சென்று நின்றுகொண்டிருப்பார்களா? 2016-ல் இரு கட்சிக்கு மாற்றாக ஒரு அரசியலை வளர்த்தெடுப்பதாகச் சொல்லிவிட்டு இரண்டே ஆண்டில் திமுக பக்கம் சென்றிருக்கிறார்கள் எனவே அவர்கள் நடத்துவது சந்தர்ப்பவாத அரசியல். ஆனால் தமிழருவி மணியன் அப்படிப்பட்டவன் அல்ல. எனவே தனியாக 25 இடங்களில் நின்றோம். ஒரு இடத்திலும் வெல்லமாட்டோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னிடம் இருப்பவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள். காந்தியத்தில் பிடிப்புள்ளவர்கள். அதிகபட்சம் 5000 வாக்குகள் ஒவ்வொரு தொகுதிக்கும் கிடைத்தால் பிறரின் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக நாம் இருப்போம் என நினைத்தேன். அதில் அதிகபட்சம் எங்களுக்குக் கிடைத்ததோ அதிக பட்சம் 950 வாக்குகள்தான். எனவே விரக்தி ஏற்பட்டது. நான் அதிகபட்சம் பஞ்சாயத்துத் தேர்தலில்கூட நான் நின்றது  இல்லை 2001ல் ஆயிரம்விளக்கு தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து நிற்குமாறு மூப்பனார் கடுமையாக வலியுறுத்தியபோதும் மறுத்துவிட்டவன் நான். எனக்கென்று ஒரு பெருமை, பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. காந்தியையும் காமராஜரையும் நெஞ்சில் சுமப்பவன். இருப்பவர்களில் வைகோ மீது தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. அவர் இனம் சார்ந்து மொழி சார்ந்து சிறப்பாகச் செயல்படுகிறவர். அவரை முன்னிலைப் படுத்தினேன். ஆனால் வைகோ தன் பிம்பத்தைத் தானே உடைத்து சுக்குநூறாக்கிவிட்டார். எனவே வைகோவைக் கொண்டுவரும் சூழல் இல்லை. ஆனால் வைகோ மீது எந்த தனிப்பட்ட மாற்றுக்கருத்தும் கிடையாது. திமுக அதிமுகவை வீட்டுக்குஅனுப்ப  வலிமையான வாக்குவங்கி வேண்டும். அதை நிறைவேற்ற 20-25 சதவீத வாக்குகளையாவது வைத்திருக்கும் ஒரு வசீகரத் தலைமை நமக்குத் தேவை. பிறகு அதை மையமாக வைத்து ஒரு கூட்டணியை அமைக்கலாம். அது 40 விழுக்காடு வரைக்கும் கூடப் போகலாம். அந்த அடிப்படையில் பார்த்தபோது ரஜினிகாந்த் இங்கு வந்து நிற்கிறார். அவர்  ஒரு நடிகர்  என்பதற்காகவோ அவருக்குப் பின்னால் வசீகர ஒளிவட்டம் இருப்பதனாலோ அவரைப் போய் நான் சந்திக்கவில்லை, அவர் சொன்ன விஷயஙள்தான். அவர் முதலில் ரசிகர்களைச் சந்திக்கும்போது தன்னை வைத்து பணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்றார். அது நான் காலங்காலமாக வளர்த்தெடுக்கும் கருத்தும் அவரது  கருத்தும் இணையும் மையப்புள்ளி. சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது என்று சொன்னார். இந்த ஒரு வரி போதும். 60ல் இருந்து இந்த சிஸ்டம் இரு கட்சிகளாலும் மாறிமாறி சீரழிக்கப்பட்டுள்ளது. நான் எதைச் சொல்லுகிறேனோ அதை நோக்கியே அவர் வருகிறார் என்கிற நிலையில்தான் நான் அவருடன் கரம்கோர்த்து நிற்கிறேன்.  அரசியலை விட்டு விலகுகிறேன் என்று நான் சொன்னது உண்மைதான். விரக்திதான் காரணம். என் எழுத்தையும் பேச்சையும் அறவழியில் பயன்படுத்திய பின்னால் ஐயாயிரம் வாக்குகளைக் கூட பெறமுடியவில்லை என்றால் இவர்களுடன் மன்றாடி என்ன பயன்? எனவேதான் விலக முடிவெடுத்தேன். ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பத்து லட்சம் பேரை பார்த்தேன் அதில் பத்தாயிரம் இளைஞர்களாவது தேறுவார்கள் என்று உணர்ந்து என் முடிவைத் திரும்பப் பெற்றேன். அதன் பின்னர் ரஜினி எனக்குக் கிடைத்தார். இப்போது மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான காலம் கனிந்திருக்கிறது என்பதில் எனக்கு  மகிழ்ச்சி.
 
 
ஆன்மீக அரசியல் உங்கள் கருத்தாக்கமா?
 
ஆன்மீக அரசியல் என்பது காந்தியம் கொண்டுவந்தது. ஆன்மீகம் என்பதும் மதம் என்பதும் வேறுவேறு.  ஒரு மதவாதியால் தன் மதம் சார்ந்தவர்களை மட்டுமே அன்பாகப் பார்க்கமுடியும். மற்ற மதம் சார்ந்தவர்களிடம் இதேபோல் அன்பை அவரால் செலுத்த நிச்சயம் முடியாது. ஆன்மீகம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆரத்தழுவும் அன்பு சார்ந்தது. அன்புதான் ஆன்மீகம். புனித அகஸ்டினிடம் கர்த்தரின் அனைத்து செய்திகளையும் ஒற்றைச் சொல்லில் சொல்லமுடியுமா என்றனர் அவர் சொன்னார்: அன்பாயிரு. அன்போடு இருப்பது வேறு; அன்பாக இருப்பது வேறு. பின்னதுதான் ஆன்மீகம். ஒன்றை இரண்டாக வெட்டிப் பிரிக்க மதம். இரண்டை சேர்க்க ஆன்மீகம் பயன்படும். தமிழ்நாட்டில் இதுவரை நடந்து வந்த அரசியல் சாதி, மதம், இனம் சொல்லி மனிதர்களைப் பிரிப்பது. ஒன்றுபட்டுக் கிடந்த மக்களைப் பிரித்தாளும் வெறுப்பரசியலே தமிழ்நாட்டில் நடப்பது.  இந்த வெறுப்பு அரசியலுக்கு மாற்று என்பது ஆன்மீக அரசியல். முதல் சந்திப்பிலேயே நான் அவரைக் கேட்டேன். நீங்கள் மதவாதியா ஆன்மிக வாதியா என்று. அவர் உடனடியாக எந்த தயக்கமும் இன்றி சொன்னார்,  அய்யா நான் ஒரு ஆன்மீகவாதி. மதம்வேறு;ஆன்மீகம் வேறு. எனக்கு எல்லா மதங்களையும் பிடிக்கும். அதில் உள்ள மனிதர்களையும் பிடிக்கும். எனவே ஒரு  புரிதலோடுதான் ஆன்மீகவாதியாக என்னைப் பக்குவப்படுத்திக்கொண்டிருக்கிறேன் என.  நானும் அவரும் சிந்தனை அளவில் ஒரே புள்ளியில் நிற்கிறோம். அது எங்களை மேலும் இறுக்கமாகப் பிணைத்தது. 
 
கமல், ரஜினி இருவரின் அரசியல் வருகையுமே தமிழகத்தில் பாஜகவால் நிகழ்த்தப்படும் பரிசோதனை முயற்சிகள்தான் என்று கூறப்படுவது பற்றி?
 
பாஜக பின்னால் இருந்து ரஜினிகாந்தை இயக்க முடியாது. கமலைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ரஜினியை பலமுறைச் சந்தித்து ஏராளமாகப் பேசி இருக்கிறேன். நான் தெரிந்துகொண்டது, திரைப்படங்களில் வேண்டுமானால் அவரை ஒருவர் இயக்கலாம். ஆனால் அரசியல் உலகில் பின்னால் இருந்து அவரை இயக்க அவர் யாரையும் அனுமதிக்கமாட்டார். பாஜக ரஜினியை இயக்குகிறது என்று சொல்வது அவரைக் கண்டு அஞ்சுகிறவர்கள் முன்னெடுத்து வைக்கும் வாதமே தவிர அதில் உண்மை இல்லை. கமல்ஹாசனைப் பொருத்தவரையில் அவருக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று சொல்வதில் நியாயமே இல்லை. கமலஹாசனின் சொல்லும் செயலும் பாஜகவுக்கு எதிரானது. ஆனால் அவரது அரசியல் பிரவேசத்துக்குப் பின்னால் ஒரு நுண்ணரசியல் மறைந்திருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதை இப்போது வெளிப்படுத்த நான் விரும்பவில்லை.
 
 
தமிழ்நாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்க சினிமாவில் இருந்துதான் ஆட்கள் வரவேண்டுமா? ஏன் சினிமாகாரர்களை ஆதரிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள் என வெளிமாநிலத்தவர்கள் கேட்கிறார்களே..
 
இந்திய அரசியலில் மிகவும் அருவருக்கத்தக்க அளவில் ஊழல் மயமாகிவிட்ட அரசியல்வாதிகள் திமுகவிலும் அதிமுகவிலும் இருக்கிறார்கள் என்பது இந்தியா முழுவதும் உருவாகி இருக்கும் கருத்து. அப்படியெனில் இந்த இருவரையும் புறந்தள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அதற்கு வலிமையான வாக்குவங்கி தேவை. அதை வளர்த்தெடுத்து வைத்திருக்கும் ஒரு மனிதனை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். ஒரு கட்சியைக் காண்பியுங்கள். இப்படி நடிகர் வரக்கூடாது என்று சொல்வதன் மூலமாக திரும்பத்திரும்ப வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உதவிகரமாக இருப்பதாகத்தான் இவர்கள் அரசியல் முடியும். அதை நான் செய்ய தயாராக இல்லை. நடிகர் என்கிறீர்கள் சரி. முள்ளை முள்ளால் எடுப்பது.. வைரத்தை வைரத்தால் அறுப்பது.. எந்த சினிமா உலகினால் தமிழ்ச்சமூகம் சீரழிக்கப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த உலகில் இருந்தே வரக்கூடிய ஒரு  மனிதன் மூலம் இதை சீரமைத்து விடுவதற்கு நான் முயன்று பார்க்கிறேன்.
 
ரஜினி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாநில சினிமா உலகம் தமிழரை ஏற்றுக்கொண்டதே கிடையாது. நாம் சினிமாவில் ரஜினியைக் கொண்டாடுகிறோம். சரி. ஆனால் அரசியலிலும் அவரையே ஏற்கவேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு என்ன பதில்?
 
மற்றவர்களிடம் இல்லாத பெருந்தன்மையும் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும் ஞானமும் தமிழனுக்கு மட்டுமே உள்ளது என்று நினைத்துப் பாருங்களேன். ஞானம் என்பதும் அஞ்ஞானம் என்பதும் வேறானவை. ஒன்றை இரண்டாகப் பார்ப்பது அஞ்ஞானம். இரண்டை ஒன்றாக இணைத்துப் பார்ப்பது ஞானம். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஞானிகள். இவர்களுக்கு ரிஷிமூலம் நதிமூலம் முக்கியம் இல்லை. 1946-ல் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் பிரிமியராக இருந்தவர் பிரகாசம். அவர் தெலுங்கர். 1947-ல் பொறுப்பில் இருந்தவர் ஓமந்தூரார். அவர் தெலுங்கர்.  அதன் பின்னர் தேர்தல் வரும் வரை மூன்றாண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் குமார
சாமி ராஜா. அவர் தெலுங்கர். இந்த மூன்று பேரும் ஒரே ஒரு பைசாவை தங்களுக்கென்று ஊழல் செய்து சேர்த்தார்கள் என்று யாரும் சொல்லமுடியுமா? தங்கள் சொத்தை மற்றவர்களுக்கு எழுதி வைத்துவிட்டு செத்துப்போன மனிதர்கள்.  இன்று ஐம்பதாண்டுகாலம் இரு திராவிடக் கட்சிகளிலும் இவர்கள் கருணாநிதி தெலுங்கர் என்றும் ஜெயலலிதா கன்னடர் என்றும் எம்ஜிஆர் மலையாளி என்றும் சொல்வார்கள். அப்படியே வைத்துக்கொள்வோம் ஆனால் இவர்களைத் தவிர்த்து அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர் பெருமக்களும் 90 விழுக்காடு தமிழர்கள்தானே.? அதனால்தான் நான் சொல்கிறேன் என்னுடைய வீட்டில் கொள்ளையடிக்க வருகிறவர்கள் தமிழர்களாக இருந்தால் தாராளமாக வரலாம். நான் கதவைத் திறந்து வைக்கிறேன்.. வேற்றுமொழிக்காரனாக இருந்தால் கதவை மூடிவிடுவேன் என்று சொல்வது எப்படியோ அப்படியே இதுவும்.  அரசியலுக்கு வரும் ஒரு மனிதன் யோக்கியனா? நேர்மையானவனா? இந்த அடிப்படையில்தான் அணுகவேண்டுமே தவிர இவன் தமிழனா, மராட்டியனா என்ற அடிப்படையில் அல்ல. ஒரு  மனிதர் திரையுலகில் 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராகவே இருக்கமுடிகிறது என்றால் அந்த மக்களின் ஆதரவு இல்லாமல் ஒரு நாள்கூட இருக்கமுடியாது. கமலுக்கும் ரஜினிக்கும் ஒரு வேறுபாடுதான். சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள வேறுபாடுதான் அது. மக்கள் ரஜினியை வெறும் நடிகராகப் பார்க்கவில்லை. அவரை ஆன்மீக வாதியாக, பொய்வேடம் கட்டி ஆடாத போலித்தனம் இல்லாத உண்மையான மனிதனாக தமிழக மக்கள் நெஞ்சாரத் தழுவி ஏற்றுக்கொண்டனர். அதனால்  முதலமைச்சராக புனித ஜார்ஜ் கோட்டையில் அமரவைப்பது என்று தமிழர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இதில் யார் தமிழர் என்று ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு விழுக்காடோ இரு விழுக்காடோ வாக்குகளைப் பெற்றால் அதுவே அதிகம். 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட அவர்களால் வெல்ல முடியாது. எனவே இது போன்றவர்களுக்கு எதிர்வினை ஆற்றவே வேண்டியதில்லை என்பதுதான் என் கருத்து.
 
சந்திப்பு:அசோகன்.
 
அந்திமழை பிப்ரவரி 2018 இதழில் வெளியான நேர்காணல். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...