பெரும் முதலீட்டிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ்ஸூக்கும், அதைத் தடுக்க நினைக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நடக்கும் சேஸிங்கே ‘தமிழ் ராக்கர்ஸ்’ திரைப்படம்.
என்கவுண்டர் செய்வதில் கைதேர்ந்தவரான அருண் விஜய் (ருத்ரா) ஒரு நேர்மையான காவல் அதிகாரி. இதனால், அவருடைய மனைவி (ஐஸ்வர்யா மேனன்) மர்ம நபர்களால் கடத்துப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து, திரைப்படங்களைச் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ்ஸை கண்டுபிடிக்கும் பொறுப்பு அருண் விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருடன் வினோத் சாகர், வாணி போஜன், வினோதினி ஆகியோர் இணைகின்றனர்.
அதேசமயத்தில், பெரிய நடிகர் ஒருவரை வைத்து அழகம் பெருமாள் 300 கோடி ரூபாய் முதலீட்டில் கருடா என்ற படத்தை தயாரித்திருப்பார். இந்தப் படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பாகவே இணையத்தில் வெளியாகும் என தமிழ் ராக்கர்ஸ் எச்சரிக்கை விடுகிறது.
இறுதியில் காவல் துறை தமிழ் ராக்கர்ஸ்ஸை கைது செய்ததா? கருடா திரைப்படம் திட்டமிட்டபடி தியேட்டரில் வெளியாகியதா? என்பதே இந்த இணைய தொடரின் மீதிக் கதை.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோத் சாகர், வினோதி ஆகியோர் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் இணையத் தொடர் இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் எட்டு எபிசோடுகளைக் கொண்ட தொடர்.
சில நேரங்களில் அருண்விஜய் போலீஸ் அதிகாரிதானா என்ற சந்தேகம் எழுகிறது. சினிமா ரசிகர்கள் வரும் காட்சிகள், ஏன் இவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள் என்று தோன்ற வைக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் பற்றிய புதிய தகவல்கள் எதுவும் இல்லாமல், அவர்களின் செயல்பாட்டை மோலோட்டமாகவும், பாதிக்கப்படும் தரப்பின் அவஸ்தைகளை மட்டுமே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதனால், வழக்கமான திருடன் – போலீஸ் கதை போன்று உள்ளது இந்த இணையத் தொடர்.
தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர்,ரசிகர்கள் என ஒரு திரைப்படத்தோடு தொடர்புடைய அத்தனை தரப்பினரையும் சந்தேகிக்க வைக்கும் யுக்தியே படத்தை ஒரளவிற்கு தாங்கிப் பிடிக்கிறது.
சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு கைகொடுத்த அளவிற்கு ஒளிப்பதிவு, இசை சோபிக்கவில்லை.
விறுவிறுப்பான திரைக்கதையோ, எதிர்பாரா திருப்பங்களோ, புதிய தகவல்களோ இல்லாததால் தமிழ் ராக்கர்ஸை இவ்வளவு நேரம் ஒதுக்கிப் பார்க்க வேண்டுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
தா.பிரகாஷ்