அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை 0 கமலுக்கு மீண்டும் டார்ச் லைட்! 0 த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார்! 0 அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை 0 விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை 0 திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்! குருமூர்த்தி பரபரப்பு பேச்சு! 0 ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அலெக்சாண்டர் துபியான்சுகி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   19 , 2020  03:54:09 IST


Andhimazhai Image

ரஷ்யாவை சேர்ந்த தமிழறிஞரும், ஆய்வாளருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி. சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்.அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, புதிய பார்வையுடன் பல கட்டுரைகளை வழங்கிய பேராசிரியர் துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் மொழியை அறிந்துகொண்ட மேல்நாட்டவர் ஏராளம். 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர். பேராசிரியர் துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்" என்று தெரிவித்துள்ளார்."தமிழ் மீது பற்று கொண்ட அலெக்சாண்டர் துபியான்சுகி 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சஞ்சீவி, பொற்கோ ஆகியோரிடம் தமிழ் கற்றவர். தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட காதலால் திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சி ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். அகநானூறு, புறநானூறு, நற்றினை, குறுந்தொகை மற்றும் பாரதியார் படைப்புகள், பாரதிதாசன் படைப்புகளில் பல ரஷ்ய மொழியில் மொழிமாற்று செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர். சிலப்பதிகாரம், அழகின் சிரிப்பு உள்ளிட்ட காவியங்களை அவற்றின் சுவையும், தரமும் குறையாமல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று துடிப்பு கொண்டிருந்தவர்.தமிழ் மொழியின் சிறப்புகளை அனுபவித்தவர். தனித்தமிழில் பேச வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய துபியான்சுகி, தமக்கு முன் உரையாற்றிய அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஆகியோர் பிற மொழி கலந்த தமிழில் பேசியதை சுட்டிக் காட்டி, அவர்கள் தனித்தமிழில் பேச முயல வேண்டும் என்று அவர்களிடம் நேரடியாகவே கூறியதிலிருந்தே தனித்தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றை அறிய முடியும். அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்களின் சிறப்பை தமிழகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னால் நிறுவப்பட்ட தமிழ் ஓசை நாளிதழின் வார இணைப்பான களஞ்சியத்தில், அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பிலான தொடரின் 14&ஆவது அத்தியாயத்தில் துபியான்சுகி பற்றி விரிவாக எழுத வைத்தேன். துபியான்சுகி அவர்களின் மறைவுக்கு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "ரஷ்யாவில் பேராசிரியர் துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகள் நடந்துவந்தன. அதிலும் குறிப்பாக சோவியத் யூனியன் தகர்வுக்குப்பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதிகா பப்ளிஷர்ஸ் போன்றவை மூடப்பட்டதற்குப் பிறகு தமிழ் தொடர்பான ஆர்வம் ரஷ்யாவில் வெகுவாகக் குறைந்து விட்டது. அதைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராகக் காப்பாற்றி வந்தவர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி. ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறையை ஒழுங்கு செய்து இந்த ஆர்வம் குறையாமல் அவர் காப்பாற்றி வந்தார்.கோவையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரும் பங்கேற்றார். அங்கு தொல்காப்பியம் குறித்து அவர் வாசித்த கட்டுரை பல விவாதங்களை எழுப்பியது. ஆனால் துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை. “ சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரன்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்: ‘‘தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது. பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால், சங்கப் பாடல்களில் பிரிவுக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. பொருள் மற்றும் போர் ஆகியவைப் பற்றி மட்டுமே அவை பேசுகின்றன. ஓதல், தூது ஆகியவை சங்கப் பாடல்களில் எங்குமே பிரிவு’கான காரணமாகப் பேசப்படவில்லை. பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டார். இந்த கருத்துகள் இப்போதும் விவாதிக்கப்படாமலேயே உள்ளன.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் உருவாக்கிய விருது தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தால் டாக்டர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கியும் அதைப் பெற்றிருப்பார்.இப்போதாவது அந்த விருதுகளை வழங்க நடவடிக்கை எடுத்து திரு துப்யான்ஸ்கி அவர்களைக் கௌரவிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...