அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் கேள்விகளுக்குத் தீர்வு காண வேண்டும் - வைகோ

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   23 , 2021  15:57:55 IST

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எழுப்பி இருக்கின்ற கேள்விகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.


இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலச் சட்டமன்றங்களின் தலைவர்கள் பங்கு ஏற்கும் 52 ஆவது மாநாடு, இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைநகர் சிம்லாவில், கடந்த வாரம் நடைபெற்று முடிந்து இருக்கின்றது.


நூற்றாண்டு காணும் பெருமை மிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தின் தலைவர் அப்பாவு அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரை பாராட்டுக்கு உரியது.


அவர் தம் உரையில், மக்கள் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகள்; சட்டப்பேரவையின் அதிகாரங்கள் செயல்பாடுகளை எடுத்துக்கூறி, இன்று சட்டமன்றங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றார்.


மக்கள் ஆட்சியின் ஆணி வேராகத் திகழ்வது, சட்டம் இயற்றும் மன்றங்கள் ஆகும். அந்த அவைக்கு, மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்ற உறுப்பினர்களின் கடமை, சட்டங்களை இயற்றுவது மட்டும் அல்ல; ஆட்சியாளர்களின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுவதும் ஆகும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவையின் மாண்பை நிலைநிறுத்துவது, பேரவைத் தலைவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.


இன்றைய ஆட்சியாளர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்களை ஒரு அஞ்சல் பெட்டி போலக் கருதுகின்றார்கள். சட்ட முன் வரைவுகளின் மீது உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதற்கு இடம் தருவது இல்லை; விளக்கம் தர முனைவது இல்லை. மாறாக, எந்த ஒரு எதிர்க்கருத்தும் எழுந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றார்கள்; நாடாளுமன்ற, சட்டமன்றங்களை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்க முனைகின்றார்கள்; படிப்படியாகக் குடியரசுத் தலைவரின் ஆட்சிமுறைக்குக் கொண்டு போக முனைகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். தமிழ்நாடு சட்டமன்றத்தில், அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்படுவதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.


முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், அப்பாவு தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்ணியமாக நடக்கின்றது என்பதைப் பதிவு செய்து இருக்கின்றார்.


பிரித்தானிய முடியரசு ஒன்றியத்தின் நாடாளுமன்ற நடைமுறைகளையே நாம் பின்பற்றுகின்றோம்.  பேரவையின் நடவடிக்கைகள், பேரவைத் தலைவரின் அதிகாரங்களில், நீதிமன்றங்கள் குறுக்கிடுகின்ற வழக்கம் இல்லை. மக்கள் ஆட்சி என்ற அமைப்பில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களே அதிகாரம் பெற்ற அமைப்புகள் ஆகும். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்ற அந்த அவைகளில் இயற்றப்படுகின்ற சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமே நீதிமன்றங்களின் கடமை ஆகும். ஆனால், அண்மைக்காலமாக, நீதிமன்றங்கள், பேரவையின் அதிகாரங்களில் குறுக்கிடுகின்ற போக்கு ஏற்பட்டு இருக்கின்றது. பேரவையின் இறையாண்மையில் குறுக்கிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை.

பேரவைத் தலைவரின் உரையில், இரண்டு கருத்துகளை முன்வைத்து இருக்கின்றார்:  மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இயற்றிய சட்டங்கள், ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் மேற்கொள்ளாமல், நிறுத்தி  வைக்கின்றார்; திருப்பி அனுப்புவது இல்லை. அதற்கான கால வரையறை எதுவும் இல்லை.ஆளுநருக்கு ஏதேனும் ஐயம் இருக்குமானால், அதுகுறித்து அவர் விளக்கம் கேட்க வேண்டும்; குறைகளைச் சுட்டிக் காட்டித் திருப்பி அனுப்ப வேண்டும். சில சட்டங்களுக்கு, குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்; ஆனால், பல மாதங்கள் ஆனாலும், குடிஅரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவதே இல்லை.


குடிஅரசுத் தலைவரும், ஆளுநரும், கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, அரசு அமைப்புச் சட்டம் கூறுகின்றது.


அது எவ்வளவு காலம்? அதற்கான காலக்கெடு என்ன?  ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்கும், குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்கும் கால வரையறை வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.


குறிப்பாக, ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு அமைச்சர்கள் அவை கூடி நிறைவேற்றிய தீர்மானம் மீது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவு எதுவும் எடுக்கவில்லை. திருப்பி அனுப்பவும் இல்லை. உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்டதாகத் தகவல்கள் வந்தன. அவ்வாறு, கருத்துக் கேட்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.


இந்தப் பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறி ஆகி இருக்கின்றது. ஆளுநர்களின் தாமதம், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கின்றது. கூட்டு ஆட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைக்கின்றது.ஆளுநர்களை, ஒன்றிய அரசு தேர்வு செய்து அனுப்புகின்றது. அவர்கள், பெயர் அளவிற்குத்தான் ஆட்சித் தலைவர்கள் ஆவர். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது, மக்களுடைய விருப்பங்களுக்கு எதிரானது ஆகும்.


மற்றொன்று, மாநில அரசு இயற்றிய ஒரு சட்டத்திற்கு, குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கூற வேண்டாமா? இல்லை என்றால், அந்தச் சட்டத்தில் உள்ள குறைகள் என்ன என்பதை, சட்டமன்றம் எப்படி அறிந்து கொள்வது? நாட்டு மக்கள் எப்படி அறிந்து கொள்வது? அவ்வாறு குறைகளைத் தெரிவித்தால்தானே, அவற்றைக் களைந்து, புதிய, மேம்படுத்தப்பட்ட சட்டத்தை இயற்ற முடியும்? என்ற கருத்தையும் முன்வைத்து இருக்கின்றார். அதேபோல, கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ், பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுப்பதற்கான கால வரையறை எதுவும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.


அவரது கருத்துகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கின்றது. இதுகுறித்து, அனைத்து இந்திய அளவில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ வேண்டும்; அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றது.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...