???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிகச்சிறந்த ஆண்குரல் உங்களுடையதுதான்: டி.எம்.சௌந்தர்ராஜன் - சிறப்புக் கட்டுரை- [ பகுதி-1 ]

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   04 , 2018  04:38:33 IST


Andhimazhai Image
பாடகர் டிஎம் சவுந்தரராஜனுடன் தொடர்ந்து 13 ஆண்டுகள் பயணித்து இமயத்துடன் என்ற பெயரில் அவரது வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் விஜயராஜ். தொலைக்காட்சியில் 150 வார தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பும் அளவுக்கு நீளமான இந்தப் படத்தை டி.எம்.எஸ் உயிருடன் இருந்தபோதே முழுவதும் பார்த்து ஆமோதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் பழகிய, பணிபுரிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் என பலருடனும் டி.எம்.எஸ் சந்தித்து உரையாடுகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இளையராஜா, ரகுமான் வரை பலரை டி.எம்.எஸ் சந்தித்துப் பேசுகிறார். பாடகிகள் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி ஆகியோரும் அவருடன் பேசும் காட்சிகளும் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் டி.எம்.எஸ் பற்றிக்கூறும் காட்சிகளுமாக இப்படம் மிகச்சுவாரசியமாக, இனிமையான பாடல்களுடன் அமைந்திருக்கிறது. அதன் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜயராஜுடன் அவரது அனுபவம் பற்றிப் பேசினோம்.
 
 
 
“ நான் அடையாறு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கலை படித்தவன். கொஞ்சகாலம் இயக்குநர் ஏ.சி. திரிலோகச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதன் பின்னர் தமிழக செய்தித்துறையில் பணிபுரிந்தேன். அப்போது டி.எம்.எஸ் அவர்களுடன் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தேன். ஏற்கெனவே முதல்வருடன் அரசியல் சாராத நல்ல அறிமுகம் இருந்தது. அவர்தான் டி.எம்.எஸ் பற்றி விரிவான  ஆவணப்படம் எடுக்கலாமே எனக் கூறினார். எனக்கும் அந்த ஆர்வம் இருந்தது.  டி.எம்.எஸ் அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டபோது அவர் லேசில் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கெனவே அவருக்கு இது தொடர்பாக சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் நான் மீண்டும் சந்தித்து வலியுறுத்தினேன். இந்தப் படம் முடியும்வரை உங்களிடம் சல்லிக்காசு கூட கேட்கமாட்டேன். முழு தயாரிப்புச் செலவும் என்னுடையது என்று சொல்லிவிட்டேன். ஆனால் சொல்லிவிட்டேனே தவிர கடந்த பத்தாண்டுகளில் தயாரிப்புக்காக பணம் திரட்ட நான் பட்டபாடுசொல்லி மாளாது. டி.எம்.எஸ் இடையில் என்னைக் கூப்பிட்டு அவ்வப்போது கேட்டுப்பார்ப்பார். செலவுக்கு பணம் வேண்டுமா என்று... நான் சொன்ன சொல் மாறுவதில்லை அய்யா என்று கூறிவிடுவேன்.
 
 
 
முதலில் அவரை மதுரையில் அவர் பிறந்த இல்லத்தில் வைத்து அவரது நினைவுகளைப் பகிரச்சொல்லி ஆரம்பித்தோம். எண்பது வயதைக் கடந்த நிலையிலும் அவர் உற்சாகமாகவே இருந்தார். அங்கே அவரது அண்ணன் வசித்துவந்தார். அவரைச் சந்தித்து ஆசி பெற்று, தான் பிறந்த அறையில் நின்று மெய்சிலிர்த்தார். தான் பணிபுரிந்த இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நினைவுகளை மீட்டெடுப்பதாக இந்த ஆவணப்படம் அமையும் என்பதில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி வந்திருந்தது.
 
 
 
 1946-ல் கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டூடியோவில்தான் டி.எம்.எஸ். முதல் முதலில் தன் பாடல் வாழ்வைத் தொடங்கினார். அதே இடத்தில் டி.எம் எஸ், தன் நினைவலைகளைப் பேசவைக்க ஆசைப்பட்டேன். அதன் உரிமையாளரிடம் அதற்கான அனுமதி பெறுவது பெரும் சிரமமாக இருந்தது. மாதக்கணக்கில் அலைந்தபின்னர் அனுமதி தந்தார்கள். கோவையில் படப்பிடிப்பு நடப்பதால் அங்கே இருக்கும் பட்சிராஜா ஸ்டூடியோவிலும் டி.எம்.எஸ் அவர்களை வைத்து படம் எடுத்துவிடலாமே என்று நினைத்து அதன் உரிமையாளரான சிவஞானம் செட்டியார் அவர்களைச் சந்தித்தேன். அவர் பேசவே இல்லை. சைகையிலே அடுத்த வாரம் வாருங்கள் பார்க்கலாம் என்றார். என்னடா இவர் இப்படி மதிக்கவே மறுக்கிறாரே என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். வரும்போது பார்த்தேன், பட்சிராஜா ஸ்டூடியோவின் கழுகு சின்னம் உடைந்து கிடந்தது. எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
 
 
 
அடுத்தவாரம் மீண்டும் அவநம்பிக்கையுடன் பட்சிராஜா ஸ்டூடியோ சென்றேன். மீண்டும் அதே இடம். கழுகு சின்னம் மட்டும்  வைக்கோல் கொண்டு மூடப்பட்டு இருந்தது. செட்டியார் வந்தார். என்னை உட்காருமாறு சைகை காட்டினார். கழுகு சின்னத்தை மூடி இருந்த வைக்கோலை அப்புறப்படுத்துமாறு சொன்னார்.  அப்புறப்படுத்தினார்கள். ஒரே வாரத்தில் பதினைந்தாயிரம் செலவழித்து அந்த சின்னத்தை செப்பனிட்டிருந்தார் அவர். அவரது முகத்தைப் பார்த்தேன். பெருமையும் குறும்பும் தெரிந்தது. “ எப்படியும் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். படப்பிடிப்பின்போது எல்லோருக்கும் நம் செலவில்தான் சாப்பாடு,” என்று சொல்லிவிட்டார் அந்தப் பெரிய மனிதர். பட்சி ராஜா ஸ்டூடியோவுக்கு டி.எம்.எஸ் வந்தபோது அவரது கால் காரில் இருந்து தரையில் படவே விடவில்லை. அப்படித் தாங்கினார்கள்... 
 
 
 
கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் டி.எம்.எஸ் வரும்போது அவருடன் யாரைப் பேச வைக்கலாம் என்று யோசித்தபோது டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் அவர்களை அழைக்கலாம் என்று யோசனை. அவர்களின் தந்தையார் ரத்னம் அவர்கள் டி.எம்.எஸ் அவர்களின் பள்ளித்தோழர். அனிதா ரத்னம் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். விவரத்தை விளக்கினேன். கோவைக்கு விமான டிக்கெட், தங்க நல்ல விடுதி எல்லாம் ஏற்பாடு செய்துவிடுவீர்களா? என்றார். எனக்கு வயிற்றைக் கலக்கியது. அவ்வளவு பட்ஜெட் இல்லையே என்று மனசு கடமுடா என்றது.  ‘வேண்டாம் விஜயராஜ்.. இப்படியே எழுந்து ஓடிவிடு’ என்று எனக்குள் யாரோ கட்டளையிட்டார்கள். நான் அந்த அம்மையார் முகத்தைப் பார்த்தேன். அவரோ தாமரை  போல் மலர்ச்சியாக இருந்தார். நான் மெல்ல எழ முயன்றேன். அவர் ‘எங்கே போகிறீர்கள்.. இருங்கள் காபி சாப்பிடுங்கள் என்றார். அப்புறம் சொன்னார்: “ நீங்கள் ஒன்றும் செலவழிக்க வேண்டாம்.. எல்லாம் என் பொறுப்பு..” . காபி அமுதமாக மாறிவிட்டது.
 
 
அனிதா ரத்னம் சொன்ன நேரத்துக்கு கோவை வந்தார்... டி.எம் எஸ் உடன் உரையாடினார். சென்ட்ரல் ஸ்டூடியோ வாயிலில் நுழைய அவர்கள் நடந்து எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு நிமிடம். “ நாம் இப்போது வாயிலில் இருந்து ஸ்டூடியோவுக்குள் இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டோம். எனக்கு அப்போது ஆறு மாதங்கள் ஆனது. வாய்ப்புக்காக வாசலிலேயே அவ்வளவு நாள் காத்திருந்தேன். தியாகராஜ பாகவதர் போல பாடும் சாயல் இருந்ததால் அவர் முன்னர் பாடிய ராதை உனக்குக் கோபம் ஆகாதடி என்ற பாடலையே ’ராதே நீ என்னை விட்டுப் போகாதடி’ என்று பாட வாய்ப்பு கிடைத்தது. இசை: எஸ்.எம் சுப்பையா நாயுடு. நடிகர் நரசிம்மபாரதி நடித்த கிருஷ்ண விஜயம் படம். அந்த படம் 1950ல்தான் வெளியானது. இந்தபாடலில்  நரசிம்ம பாரதி ஒரே நேரத்தில் பல கிருஷ்ணர்களாகத் தோன்றுவார். சென்ட்ரல் ஸ்டூடியோவின் பாழடைந்துபோன ஒலிப்பதிவுக்கூடத்தில், தான் முதல் பாடல் பாடிய அதே அறையில் நின்று அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக்காட்டியது மிகப்பெரிய நிகழ்வு. 
 
 
 
கேரளாவில் பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ஓட்டு வீடு. சந்திரானந்த நிலையம் என்று பெயர். அங்கு ஒரு நாள் சென்று டி.எம்.எஸ்ஸுடன் படம் எடுத்தோம். கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன் வந்திருந்து அவருடன் உரையாடினார். அந்த இல்லத்தில் சந்திரானந்த நிலையம் என்ற பெயர்ப்பலகை எம்ஜிஆர் அவர்கள் கைப்பட அடிக்கப்பட்டது. முதல் மனைவி சதானந்தவதியுடன் அவர் வாழ்ந்த இல்லம்.  எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளை நிறைய டி.எம்.எஸ் அங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அங்கே போகவேண்டும் என்றதும் முதல் இரவு முழுக்க அவரால் தூங்க முடியவில்லை. ”புதிய வானம் புதிய பூமி’’ பாடலை அங்கே போய்ப் பாடப்போகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த எளிமையான வீட்டைக் கண்டதும் கண்ணீர் மல்கினார். உள்ளே போனதும் எம்.ஜி.ஆர் அவர்களின் படுக்கையறை பூஜையறையாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.  ‘நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன் பாருங்கள்.. உங்கள் ஆன்மா என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்,’ என்றார். இங்கிருந்து பல நாட்கள் இளமையில் எம்.ஜி.ஆர் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு நடந்தே சென்றிருப்பார் என்பதை நினைவுகூர்ந்தனர் அங்கிருந்த அவரது உறவினர்கள்.
 
 
[டி.எம்.எஸ் நினைவலைகள் தொடரும்..] 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...