அதிமுகவில் இரட்டை இலை சின்னம் உள்ளவர்களுக்கே ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், “இருதரப்பையும் இணைக்க முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வரும் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் விருப்பதற்கு ஏற்ப தொகுதியை விட்டுக் கொடுப்பதாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைத்தேர்தலில் தாங்களும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்து இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருதரப்பினரும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள இல்லத்தில் தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி முனுசாமி ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், இந்த தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இருதரப்பினர் வேட்பாளரை நிறுத்தினால் யாருக்கு ஆதரவு தருவீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பேசிய ஜான் பாண்டியன், “ இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே ஆதரவு” என்றார்.