???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“உங்கள் குயில் ஒன்றும் செத்துப்போய்விடாது!’’ - ஷங்கரை நையாண்டி செய்த சுஜாதா

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   07 , 2019  06:56:58 IST


Andhimazhai Image
எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் விதமாக உயிர்மையின் சுஜாதா விருதுகள் வழங்கப்படுகின்றன. உயிர்மையின் 10வது ஆண்டு ’சுஜாதா விருதுகள்’ வழங்கும் விழா  மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.  நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் வசந்த பாலன் பேசியதிலிருந்து:

’’உயிர்மையின் கம்பெனி விருந்தினர் நான் என்பதால் உயிர்மை நடத்தும் எல்லா நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்டுவிடுகிறேன். நான் சிறந்த படைப்பை உருவாக்கி இருக்கிறேன் என்ற நம்பிக்கையை எனக்கு திரையுலகம் தராவிட்டாலும் இலக்கிய உலகம் எப்போதும் தந்துள்ளது. சுஜாதா என்பது பெயரல்ல நவீன தமிழ் மொழியின் அடையாளம். தமிழ் மொழியில் ’க்ரிஸ்பாக’ எழுதுவதை அறிமுகம் செய்த முக்கியமான ஆளுமை அவர்.
 
இக்காலத்தில் இருக்கும் நவீன எழுத்தாளர்கள் சுஜாதாவைபோல் எழுத முயற்சித்து வருகின்றனர்.  சந்தோஷ் நாரயணனின் ஞ்ஞான கதைகளின் தொகுப்பாக இருந்தாலும் சரி, டாக்டர் சிவராமனின் நலம் பற்றிய கட்டுரையாக இருந்தாலும் சரி சுஜாதா எழுதுவதுபோல் சிறு பகடியுடன் எழுத முயற்சிக்கின்றனர். இது சுஜாதாவின் வாசகனாக நான் உணர்ந்துகொண்ட ஒன்று.
 
ஆனந்த விகடன் மற்றும் குமுதம் வாங்கும் போதெல்லாம் நான் முதலில் படிப்பது ’கற்றதும் பெற்றதும்’-தான். அதை படிக்கும்போது அப்படி ஒரு சந்தோஷம் ஏற்படும். மனுஷ்ய புத்திரன் அவர்கள் குறிப்பிட்டதுபோல் நல்ல எழுத்தாளர்களை, கவிஞர்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியவர் அவர்தான். முத்துக்குமாரின் படைப்புகளை இலக்கிய உலகத்திற்கும் திரை உலகத்திற்கும் அடையாளம் காட்டியவர் அவர்தான்.
 
ஒருமுறை நானும் முத்துகுமாரும் அவருக்கு நன்றி சொல்ல சென்றிருந்தபோதுகூட அதை பெரிதாக அவர் பொருட்படுத்தவில்லை. மற்றவர்களை அடையாளப்படுத்தி விட்டேன் என்ற தற்பெருமை சிறிதளவுகூட அவரிடத்தில் இருக்காது. எந்த கீழ்மையும் இல்லாத கலைஞர் அவர்.
 
 குமுதத்தின் ஆசிரியராக சுஜாதா இருந்தபோது மிக தைரியமாக நாசரின் அட்டைப்படத்துடன் குமுதத்தின் இதழை வெளியிட்டார். நடிகையின் படம் போடாமல் குமுதம் இதழ் வெளியிடப்பட்டது. அதனால் பிரதிகளின் விற்பனை குறைந்த தகவலையும் அவரே வெளியிட்டார். சுஜாதா குமுதத்தின் ஆசிரியராக இருந்த காலம்தான் இலக்கிய உலகின் பொற்காலம்.
 
சாதாரண வாசகனை இலக்கிய உலகிற்கு கைபிடித்து இழுத்து வந்தவர் சுஜாதா. முகபுத்தகத்தில் பதிவிடும்போதெல்லாம் சுஜாதாவைப்போல் பகடி செய்து எழுத வேண்டும் என்று  நினைத்திருக்கிறேன். தர்மாகோல் விடும் இன்றைய காலத்தில் சுஜாதா இருந்தால் எப்படியெல்லாம் நையாண்டியாக விமர்சித்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாக்கு  எந்திரத்தை வேண்டாம் என்று கூறியபோது சுஜாதா  கூரிய கூர்மையான விமர்சனம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. மொழியை எளிமையாக கையாளத் தெரிந்ததினால் அவரால் எழுத்தை தள்ளி நின்று பார்க்க முடிந்தது. எழுத்தாளர் பாலகுமாரனின் புத்தகங்களை வாசித்தற்கு பிறகுதான் சுஜாதாவை வாசிக்கத்தொடங்கினேன் நான்.
 
பாலகுமாரனின் எழுத்துகள் நம்மை உணர்ச்சிவசப்படுத்தும். சுஜாதாவின் எழுத்தில் ஒரு கொண்டாட்டம் இருக்கும். வாசகனை அதிக உணர்ச்சிவசப்படுத்தாமல் சொல்ல வந்த சம்பவத்தை மட்டுமே அவரது எழுத்து சொல்லும்.

’பிரிவோம் சந்திப்போம்’ நாவலின் முடிவு சோகமாக ஏன் இருக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சுஜாதாவிடம் கேட்டபோது அன்றைக்கு இருந்த மனநிலையில் அப்படி எழுதிவிட்டேன். மறுபடியும் அந்த நாவலை எழுதினால்  அதன் முடிவை மாற்றி எழுதியிருப்பேன் என்று கூறினார். இதுவே வேறு எழுத்தாளராக இருந்தால் எழுத்து ஒரு தவம் தெரியுமா என்றோ நாவலின் முடிவு சோகமாக இருக்கக்கூடாதா என்று கேட்டிருப்பார்.
 
இந்தியன் படத்தின்போது சங்கரிடம் துணை இயக்குநராக நான் வேலை செய்தேன். அப்போதுதான் சுஜாதாவை சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியன்  படத்தில் வரும் காட்சிகளை விவரித்து, அதை ஆடியோ கேஸட்டில் பதிவு செய்து சுஜாதாவை சந்திக்க நான் சென்றேன். சுஜாதாவிடம் இந்த கேஸ்ட்டையும், படத்தின் வசனங்கள் எப்படி வரவேண்டும் என்ற குறிப்பையும் கொடுத்தபோது ’என்னது இது’ என்று கேட்டார். சார் இதுதான் படத்தில் வரும் காட்சிகளை பற்றிய  விவரம் மற்றும் வசனங்களின் குறிப்பு என்று சொன்னேன்.
 
 
’அப்போ நான் எதற்கு படத்தில் வேலை செய்ய  வேண்டும்’ என்று கேட்டார். இனி சுஜாதா அவர்கள் படத்திற்கு வேலை செய்யமாட்டாரோ என்று பயந்தேன். உடனடியாக இயக்குநர் சங்கரை தொலைபேசியில் அழைத்து வரச் சொன்னார் சுஜாதா. அவரிடமும் ’இது என்ன சங்கர்’ என்று கேட்டார். அவரும் இது படத்தில் வரும் காட்சிகளின் குறிப்பு என்றார். அதற்கு சுஜாதாவோ ’அப்போது நான் எதற்கு’ என்று கேட்டுவிட்டு, இது எல்லாம் எனக்கு வேண்டாம். படத்தில் வரும் காட்சிகளை பற்றிய ஒரு வரி மட்டும் எழுதி கொடுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
 
 
முதல்வன் திரைப்படத்திற்கான கதை மற்றும் வசனங்களை எழுதி முடித்திருந்தபோது, சில அரசியல் காரணங்களுக்காக ரஜினி அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் உறுதியானது. ரஜினிக்காகவே எழுதப்பட்ட கதை என்பதால், அவர் நடிக்கவில்லை என்று சொன்னதும் அதை இயக்க சங்கர் விரும்பவில்லை.
 

சங்கர் அவர்களுக்கு இயக்குநர் மகேந்திரனைப்போல் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், ’அழகிய குயிலே’ என்ற திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தார்.  2 கோடி செலவில் ’அழகிய குயிலே’ என்ற படத்தை தான் இயக்க இருப்பதாக சுஜாதாவிடம் சொன்னார். அதற்கு சுஜாதாவோ’ தமிழ் சினிமாவின் வர்த்தகம் விரிவடைந்ததற்கு நீங்கள்தான் காரணம்.
 
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் உங்கள் படங்கள் டப் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உங்களுக்கு இளமை இருக்கிறது. அதனால் இதுபோன்ற கதைகளை ஒரு 70 வயதில் இயக்குங்கள் உங்கள் குயில் ஒன்றும் செத்துவிடாது. அப்புறம் எடுக்கலாம்’ என்று நையாண்டியாக கூறினார் .

சுஜாதாவை சங்கர் தனது தந்தையாகத்தான் பார்த்தார். அதனால் அந்த திரைப்படத்தை தள்ளி வைத்துவிட்டு முதல்வன் திரைப்படத்தின் வேலைகளில் இறங்கினார். அன்று மட்டும் சுஜாதா அப்படி சொல்லவில்லை என்றால் இன்று இயக்குநர் சங்கர் பிரம்மாண்ட இயக்குநராக வளர்ந்திருக்க முடியாது.’’ 
 
 “கடலைப்பருப்பைப் போட்டு ரசம் வைத்தவர் என் கணவர்’’: சுஜாதா ரங்கராஜன்
 
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுஜாதாவின் மனைவி பேசியதிலிருந்து:
இங்கே இயக்குநர் வசந்த பாலன் கூறியதுபோலவே அவர் வாழ்க்கையை தள்ளி நின்று பார்ப்பவர்.  ஒரு முறை விசேஷத்திற்கு பலகாரங்களை செய்துவிட்டு ஒரு வேலையாக வெளியில் சென்றேன். போவதற்கு முன்பாக அவரிடம் சாமிக்கு கற்ப்பூரம் காட்டிவிட்டு  சாப்பிடுங்கள் என்றேன். மீண்டும் வீடு வந்து பார்த்தபோது கற்பூரம் அப்படியே  இருந்தது.
 
ஏன் சாமிக்கு கற்பூரம் காட்டவில்லை என்று கேட்டேன். அதற்கு அவரோ கவலைப் பட வேண்டாம் சாமி கோபித்துகொள்ள  மாட்டார் என்றார். சுஜாதாவிற்கு படிப்பதும் எழுதுவதை தவிற வேறு எதுவும் தெரியாது. குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்  என்றுகூட அவருக்கு தெரியாது. குழந்தைகள் அதிக நேரம் படித்தால் நாளை தேர்வா என்று கேட்பார். சந்தேகம் இருந்தால் கேட்கச்சொல்வார். காலை நடக்கும் பரிட்சைக்கு இரவு 10 மணிக்கு சந்தேகம் எதாவது இருக்கிறதா என்று கேட்பார் (அரங்கம் முழுக்க சிரிப்பு அலைகள்).
 
பெண்களை பற்றி வர்ணிப்பார் என்று பலர் கூறினாலும்,  அவரால் ஒரு புடவையை சரியாக தேர்ந்தெடுத்து வாங்கத்தெரியாது. அந்த அளவுக்கு அப்பாவியானவர். ஒரு முறை  அவர் வெளியூர் சென்றிருந்தபோது  ஸ்வெட்டர்  வாங்கிக்கொண்டு வாங்களேன் என்றேன். அவரோ சாயம் போனதுபோல் ஒரு ஸ்வட்டரை வாங்கி வந்தார். ஒருமுறை மட்டும்தான் அதை அணிந்தேன். அதன்பிறகு அதை அருகில் உள்ள  கண்காட்சி நடத்தும் இடத்தில் கொடுத்துவிட்டேன்.
 
எப்போதும் அந்த கண்காட்சி நடக்கும் இடத்திற்கு அவர் செல்லமாட்டார். ஆனால் அன்றோ அங்கு சென்றுவிட்டார் . ஸ்வெட்டரை நான் கொடுத்தது தெரிந்துவிட்டது. வீடு வந்த அவர் உனக்கு ஸ்வெட்டர் பிடிக்கவில்லை என்றால் என்னிடம் சொல்லியிருக்கலாமே என்றார்.  ‘ அப்படி கூறினால் இனி எதுவும் வாங்கிக் கொடுக்க மாட்டீர்கள் என்பதால் சொல்லவில்லை!’ என்றேன்.
 
எனது மாமனார்  அவர் வயதான காலத்தில்  எங்களுடன்  தங்கியிருந்தார்.   என்னிடம் இரண்டு நாட்கள் ஊருக்கு சென்று வா என்றும் என்னை என் மகன்  பார்த்துக்கொள்வான் என்று மாமனார் வற்புறுத்தினார்.  எப்படி சமைப்பீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அதெல்லாம் என் மகன் பார்த்துக்கொள்வான் என்றார். 

 நான் வீடு திரும்பியதும் என்ன சமைத்தீர்கள் என்று என் கணவரைக்  கேட்டேன் அவரோ இந்த பருப்பில் ரசம் வைத்தேன் என்றார். அவர் காட்டியதோ கடலைப் பருப்பு. துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்கும் வித்தியாசம் அவருக்கு தெரியாது. மாமனாரோ என் மகன் என்ன செய்தாலும் நல்லாதான் இருக்கும் என்றார். ” என சுவாரசியமாக நினைவுகளைப் பகிர்ந்தார் அவர். பாரதி கிருஷ்ணகுமார், இந்திரன், மதன் கார்கி, ரமேஷ் வைத்யா, முருகேசபாண்டியன், சுந்தரராஜன், யுவகிருஷ்ணா, தமிழ்மகன் ஆகியோரும் உரையாற்றினார்கள். மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை வழங்கினார்.

உயிர்மையின் 10வது ஆண்டு ’சுஜாதா விருதுகள் பெற்ற படைப்பாளிகள்
 
சுஜாதா நாவல் விருது :உயிர்நதி – சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை பதிப்பகம்)
சுஜாதா உரைநடை விருது : கையிலிருக்கும் பூமி – சு.தியடோர் பாஸ்கரன் (உயிர்மை பதிப்பகம்)
சுஜாதா கவிதை விருது : வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி -ராஜேஷ் வைரபாண்டியன்
(உயிர்மை பதிப்பகம்)
நொதுமலர்க் கன்னி –மௌனன் யாத்ரிகா (டிஸ்கவரி புக் பேலஸ்)
சுஜாதா சிறுகதை விருது: பாகேஸ்ரீ – எஸ்.சுரேஷ் (யாவரும் பப்ளிஷர்ஸ், பதாகை)
திருக்கார்த்தியல் – ராம் தங்கம் (வம்சி புக்ஸ்)
சுஜாதா இணைய விருது : என்.ஆர்.பிரபாகரன், வாசகசாலை
சுஜாதா சிற்றிதழ் விருது : உயிர் எழுத்து – ஆசிரியர் : சுதீர் செந்தில்
நடுகல் – ஆசிரியர் : வா.மு.கோமு
 
(தொகுப்பு: இரா.வாசுகி)
 
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...