???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரானோ: தமிழகம் 1458; சென்னை 1146! 0 கொரோனாவுக்கு தாவூத் இப்ராஹிம் பலியா? 0 கொரோனா: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு! 0 சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவர் ராமதாஸ் அறிக்கை 0 ஜூலை 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்: ஆய்வில் தகவல் 0 இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் 0 மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக 8-ம் தேதி போராட்டம்! 0 பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய பள்ளி கல்வித்துறை 0 சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள் 0 மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு! கேரள போலீஸ் நடவடிக்கை! 0 கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு 0 மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விடுதலைப் புலிகளின் பெருமை பேசுவதை விட, திமுகவிற்கு முழு ஆதரவை வெளிப்படுத்துவதே இன்றியமையாதது!- சுப.வீரபாண்டியன்

Posted : திங்கட்கிழமை,   மே   11 , 2020  06:59:00 IST


Andhimazhai Image
சில நாட்களாக தமிழ்சமூக ஊடகங்களில் திமுக ஆதரவு இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்துவந்ததைப் பார்க்க முடிந்தது. அது தொடர்பாக தங்கள் ஒப்புதல் இன்மையை மூத்த திமுக தலைவர்கள் வெளியிட்டனர். ஈழவிடுதலை ஆதரவாளரும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவருமான சுப.வீரபாண்டியனும் இதுசார்ந்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் சலசலப்பு குறையவில்லை. இந்நிலையில் திமுக ஆதரவாளர்கள் புலிகளை விமர்சனம் செய்ய நேர்ந்தது ஏன் என்பதை அலசும் விதத்தில் சுப.வீரபாண்டியன் இன்னொரு அறிக்கையை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரும்பிப்பார்க்கிறேன் என்ற தலைப்பிலான அறிக்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் புலிகள்தானே காரணம். அவர்களின் தோல்விக்கு திமுகவை குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த அறிக்கை வருமாறு:
 
 “சில நாள்களாகவே என் நெஞ்சில் மண்டிக்கிடந்த ஒரு குழப்பம் பற்றிய இன்னொரு பார்வை எனக்குள் ஏற்பட்டபோது, அதனை மறைக்காமல் வெளியிட்டு விட வேண்டும் என்று தோன்றியது. 
 
என்ன நேர்ந்தது நம் இளைஞர்களுக்கு? ஏன் இப்படித் திடீரென்று விடுதலைப் புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர் என்ற குழப்பம்தான் அது! யாரேனும் திமுக மீது அவதூறு பரப்பினால்,  பொய்யான குற்றச்ச்சாற்றுகளை வைத்தால் அவர்களை எதிர்ப்பது சரி. அவர்களின் பொய்களைத் தோலுரிப்பது  தேவையானதும் கூட. ஆனால் அதற்காக ஏன் புலிகளைச்  சாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. 
 
அதனையொட்டி என் முகநூலில் ஒரு பதிவினை வெளியிட்டேன். அந்தப் பதிவில் உங்கள் கருத்தை  மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூட நான் சொல்லவில்லை. என் கருத்து எதுவோ அதுவே எல்லோரது கருத்தாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் நினைத்ததில்லை. அதற்காக என் கருத்தை, அது சரி என்று நான் நம்பும்வரையில்,  பரப்பாமலும் இருந்ததில்லை. அந்த வகையில் உங்கள் விவாதத்தை இப்போது வெளியிட்டு, உண்மையான சிக்கல்கள் திசைதிரும்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும்  திமுக ஆதரவு இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அது நான் முன்வைத்த சிக்கலுக்கான தீர்வு அன்று. ஒரு சமாதான அறிக்கை. அவ்வளவுதான்! 
 
எனினும் என் வேண்டுகோளில், இதுவரையில் தடுப்பாட்டம் ஆடிய திமுக ஆதரவு  இளைஞர்கள் இப்போது அடித்தாட்டம் ஆடத் தொடங்கியுள்ளனர் என்னும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டேன். 
 
பிறகு எனக்குள் ஒரு வினா எழுந்தது. அடித்தாட்டம் ஆட வேண்டிய தேவை இப்போது என்ன எழுந்தது என்று எண்ணிப் பார்த்தேன். அதற்கு ஒரு விடை கிடைத்தது. 
 
இன்று நேற்றில்லை, கடந்த 11 ஆண்டுகளாக, ஈழப் போரின் பின்னடைவுக்குத் திமுகவும், தலைவர் கலைஞரும்தான் காரணம் என்பதான ஒரு பொய்யை ஓரிரு குழுவினர் மீண்டும்  மீண்டும் சொல்லி வருகின்றனர். அப்படிச் சொல்வதன் மூலம், ஈழ ஆதரவும், புலிகள் மீது பெரும் மதிப்பும் கொண்டுள்ள இளைஞர்களைத் திமுக விற்கு எதிராகத் திருப்புகின்றனர். 
 
அப்படிச் செய்கின்றவர்களில் மிகப் பலர், 2009க்கு முன்போ, 1991-96 க்கு இடைப்பட்ட புலிகளுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறைக்   காலத்திலோ, புலிகளுக்காக எதுவும் பேசாதவர்கள், எதனையும் செய்யாதவர்கள். 2009க்குப் பிறகு, ஆபத்து இல்லையென்றால் கோபத்துக்குப் பஞ்சம் இருக்காது  என்ற அடிப்படையில்  புதிதாகப் புறப்பட்டுக் கட்சி தொடங்கியவர்கள்.
 
எம் போன்றவர்கள் புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் பரப்புரை செய்தோம். அதனால் ஏற்பட்ட சில இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டோம். ஈழ மக்களும் எம் போன்றோரை மதித்துப் போற்றினார்கள். அவர்களால்தான் நான்  உலகத் தமிழர்களால் அறியப்பட்டேன். 
 
ஆனால் நாங்கள் ஊட்டிய உணர்வுகள், 2009க்குப் பிறகு எதிரிகளுக்குப் பயன்பட்டது. திமுக வை அழிக்க நினைத்தவர்கள் எங்கள் கூற்றுகளையே பயன்படுத்திக் கொண்டார்கள். பார்த்தீர்களா, இவ்வளவு வீரமும், தியாக உணர்வும் கொண்ட ஈழப் போராளிகளைத் திமுக அழித்துவிட்டது என்று பொய்களைக் கூசாமல் பரப்பினார்கள். அந்தப் பொய்களை  உணர்வூட்டப்பட்ட  இளைஞர்கள் சிலரும் நம்பினார்கள். பெருங்கொடுமை என்னவெனில், அதனைப்  புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரும்  நம்பினார்கள்.  நம்பியதோடு மட்டுமின்றி, என்னையெல்லாம், திமுகவை ஆதரிக்கும் துரோகி என்றார்கள்,  உண்மையற்றவர்களுக்குப் பணமும் அனுப்பினார்கள். அந்தப் பணம் அனைத்தும், திமுகவிற்கு எதிரான பரப்புரைக்கு உதவியது.   
 
இந்த இடத்தில் எனக்குள்ளும் ஒரு விழிப்பு ஏற்பட்டது.  2009 ஆம் ஆண்டு புலிகள் வெற்றி பெற்று ஈழத்தைக் கைப்பற்றி இருப்பார்களெனில், அந்தப் புகழ் அனைத்தும் அவர்களைத்தான் சேரும். எம் போன்றவர்கள் புலிகளை எவ்வளவோ  புகழ்ந்து போற்றியிருப்போம். ஆனால் அப்போது ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது,  பழி முழுவதையும் திமுகவின் மீது போடுவது என்ன நியாயம்?  வெற்றிக்கும் தோல்விக்கும் களத்தில்  நிற்பவர்கள்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?  அதுதானே நேர்மையானது! 
 
அப்படியில்லாமல், திமுகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாக ஒரு பழி சுமத்தப்பட்ட நேரத்தில்,  அந்தப் பொய்மை இளைஞர்கள் பலரிடம் ஓர்  அடங்காச்  சினத்தை  ஏற்படுத்தியிருக்கக் கூடும். புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப் பட்டது. 
 
எனவே இன்று தமிழகத்தில் எழுப்பப்படும் புலிகளுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லுக்கும், புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, திமுக வை வீழ்த்த நினைத்தவர்களே  முழுப் பொறுப்பு!. அவர்கள் திமுகவை இழுக்காமல், புலிகளை மட்டும் பாராட்டியிருந்தால், எந்த எதிர்வினையும் நிகழ்ந்திருக்காது. தங்கள் மண்ணின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களுக்கு ஒரு களங்கம், இந்தக் கொடியவர்களால்தான் ஏற்பட்டுள்ளது,  திமுக ஆதரவாளர்களால் இல்லை என்ற புரிதல் எனக்குள் ஏற்பட்டபோது, அதனை மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. 
 
இதில் என் போன்றவர்களுக்கு, ஓர் அறத்தடுமாற்றம் (தர்மசங்கடம்) ஏற்படவே செய்கிறது. நானும், நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் இன்றும் விடுதலைப் புலிகளின் ஆதர்வாளர்களாகவே உள்ளோம். இருப்பினும், திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டிய ஒரு கட்டாயத்தை முழுமையாக உணர்கிறோம்.
 
இந்தக் கொரோனா காலத்தில், திமுக ஒரு மக்கள் இயக்கம் என்பதை முழுமையாக மெய்ப்பித்துள்ளது. இந்தியாவிலேயே எந்தக் கட்சியும் செய்திராத அளவு, மக்களுக்கான உதவிகளை செய்து முடித்திருக்கிறது. திமுகவின் தலைவர்  தளபதி தன்னிகரற்ற தலைவராய் உயர்ந்து நிற்கிறார்.  அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய கடமை இன்று ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. அந்த வரலாற்றுக் கடமையை நாம் செய்யத் தவறிவிடக் கூடாது. அதுவே நம் முதல் பணி! 
 
இன்றைய தமிழக அரசியல் சூழலில், விடுதலைப் புலிகளின் பெருமை பேசுவதை விட, திமுகவிற்கு முழு ஆதரவை வெளிப்படுத்துவதே இன்றியமையாதது! 
 
இந்த இடத்தில் இன்னொன்றையும் நான் பதிவிட்டே ஆக வேண்டும். கடந்துபோன நான்கைந்து நாள்கள், தனிப்பட்ட முறையில், என்னைப்  பொறுத்தவரையில், துயரமானவை. நான் நேசித்த தம்பிகள் சிலரே, என்னை அவன் இவன் என்று ஒருமையில் பேசினார்கள். பாசிஸ்ட் என்று எனக்குப் பட்டம் சூட்டினார்கள். . ஆயிரம் ஆபாசச் சொற்களால்  அன்றாடம் என்னை எதிரிகள் திட்டித் தீர்க்கின்றனர். அப்போதெல்லாம் சற்றும் நான் கவலைப்பட்டததில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களே என்னை இழிவாகப் பேசியபோது,    மனசுக்குள் வலித்தது என்பது உண்மைதான்  
 
போனால் போகட்டும், வரலாற்றில் மலைகளே காணாமல் போயிருக்கின்றன. நான் வெறும் காகிதம். காற்றில் பறந்து காணாமல் போனால், அதனால் நாட்டுக்கு ஒன்றும் நட்டமில்லை. 
 
இதனைப் படித்துவிட்டு, பார்த்தீர்களா நம்மிடம் சரண் அடைந்துவிட்டான் என்று சிலர் கருதலாம். நம்மைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறான் என்று சிலர் பெருமை பேசிக் கொள்ளலாம். என் உடன் பயணித்த நண்பர்கள் சிலர்,   ஏன் இவன் இப்படித்  தன் கருத்தை மாற்றிக் கொண்டுள்ளான் என்று எண்ணிக் கவலையும் கொள்ளலாம்.  கடும் சொற்களை அள்ளியும் வீசலாம். 
 
எவ்வாறாயினும், மறுவாசிப்பும், திரும்பிப் பார்த்தலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 
 
இப்போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என் கதாநாயகன்தான்! அவரைப் பற்றிய சுடுசொற்கள் என்னைச் சுடவே செய்கின்றன. ஆனால் அவரை  முன்னிறுத்தி, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக்  கலைஞரை எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள், எத்தனை எத்தனை மீம்ஸ் போட்டு இழிவுபடுத்தினார்கள்! இப்போது காலம் திரும்பியுள்ளது. இதனையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
 
இன்று ஈழத்தில் எந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால் தமிழகம் போராடிக் கொண்டுள்ளது. சாதி வெறியர்கள், இந்துமதம் என்னும் போர்வையில் ,  பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புவோர், சர்வாதிகாரத்தை நோக்கி அரசைத்  திருப்ப எண்ணுவோர்,  ஈழத்தைக் காட்டிச்  சுயநல அரசியல் செய்வோர்  - இவர்களால் சூழப்பட்டிருக்கும் இன்றைய தமிழகத்தின் எதிர்காலமே இன்று நமக்கு முதன்மையானது. 
 
வேறு வழியில்லை, சில நேரங்களில் பேசியே தீர வேண்டும். சில நேரங்களில் மெளனமாக இருந்தும் காட்ட வேண்டும். இது மௌனிக்க வேண்டிய காலம். 
 
காத்திருப்போம் - காலம் மாறும்!’’ இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...