அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி! 0 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! 0 ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 0 ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி! 0 கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 0 நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்! 0 எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்! 0 ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல் 0 திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா! 0 திமுக அரசு பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 0 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி! 0 தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா! 0 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம் 0 நீட் ஒழிப்பு: அதிமுகவால் முடியாதது, திமுகவால் முடியுமா?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கதையல்ல நிஜம்: தன்னம்பிக்கையின் மறு பெயர்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   03 , 2019  12:10:02 IST

துப்புறவுப் பணி புரியும் பெண்மணி அவர். எல்லா வீடுகளிலும் பணிகளை முடித்து விட்டு, ஒரு வீட்டின் கார் ஷெட்டின் அருகே உட்கார்ந்தார். பல வீடுகளில் கொடுக்கப்பட்ட பழைய சாதம் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.

 

காருக்கு அடியில் இருந்து சரசரவென சத்தம்! காரை மூடி வைக்கும் அழுக்குத் துணியை தங்கள் மீது போர்த்திக் கொண்டு சுருண்டு கிடந்தார்கள் இரண்டு சிறுவர்கள்.

 

“ஐயோ.. ராஜாக்களே.. என்ன இங்கே படுத்திருக்கீங்க..” என்று பதறினார் அந்தப் பெண்மணி. ஒருவனுக்கு ஐந்து வயது. அடுத்தவனுக்கு இரண்டரை வயது.

 

இருவரும் எழுந்தார்கள். திறந்து கிடந்த சாப்பாட்டு பாத்திரத்தைப் பார்த்ததும் ஓடிவந்து, அதில் கை நுழைத்தார்கள்.

 

“நீங்க இதையெல்லாம் சாப்பிடக்கூடாது ராஜாக்களே..” என்று அந்தப் பெண்மணி தடுக்க முயன்று தோற்றார்.

 

“காலைல இருந்து எனக்கும் தம்பிக்கும் வயித்து வலி. சமையல் ஆண்ட்டிகிட்ட சாப்பாடு கேட்டேம். இன்னும் சமைக்கலைன்னு சொல்லிட்டாங்க. அப்பா அம்மா இருக்கப்ப ஃப்ரிட்ஜ்ல சாக்லேட், பிஸ்கட், பழம்லாம் இருக்கும். எடுத்துச் சாப்பிடுவோம். இப்ப எதுவுமே இல்ல..” என்றான் பெரியவன்.

 

வயிற்றுப் பசியை, பசி என்று சொல்லத் தெரியாத அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் நிலையைப் பார்த்ததும், அழுகையும் ஆத்திரமுமாக எழுந்தார் அந்த பெண்மணி. குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்கென அமர்த்தப்பட்டிருந்த வேலைக்காரப் பெண்ணையும் சமையல்கார பெண்ணையும் கோபத்துடன் தேடினார்.

 

“குழந்தைகளுக்கு சாப்பாடு சமைச்சுக் கொடுக்குறதை விட வேறென்ன வேலை உனக்கு?” என்று கொதிப்போடு அவர் கேட்டதும், சமையல்காரப் பெண் கேட்ட பதில் கேள்வி.. “ஆமா.. ஒரு நேரம் சாப்பிடாட்டி செத்தா போயிடுங்க..”.

 

“பிள்ளைங்க ரெண்டும் கார் ஷெட்ல கந்தலா கிடக்குதுங்க. குளிப்பாட்டி விட மாட்டியா?” என கோபத்துடன் அவர் கேட்டபோது, வேலைக்காரப் பெண் கூறிய பதில்..“எத்தனை வாட்டி குளிப்பாட்டினாலும், அழுக்காக்கிக்கிட்டுத்தான் வருதுங்க. அப்படியே திரியட்டும். இதுகளுக்காக வீட்டைத் திறந்து வச்சிருந்தா.. அப்புறம் யாராவது உள்ளே புகுந்து.. ஏதாச்சும் பொருள் காணாமப்போனா.. நான்தானே பதில் சொல்லணும். அதனாலதான்.. வீட்டை பூட்டிவச்சிட்டேன். வெளியே போய் விளையாடுங்கன்னு அனுப்பி வச்சேன்..”.

 

“ஐயாவும் அம்மாவும் இருந்திருந்தா இப்படி பண்ணுவீங்களா.. நீங்கள்லாம் உருப்படுவீங்களா.. ” - கோபத்தில் சாபம் விட்டார் அந்தப் பெண்மணி.

 

கொஞ்சமும் சட்டை செய்யாமல் கூவிக்கொண்டே போனாள் வேலைக்காரப் பெண்.. “அந்த மனுஷன் செத்துப் போயிட்டாரு. அந்தம்மா மென்டலாகிடுச்சு. நீ என்னமோ இந்த வீட்டு எஜமானியம்மா மாதிரி அலட்டிக்கிறே..”.

 

*****

கோயம்புத்தூரில் பிரபல டாக்டர் ஒருவரின் வாரிசாகப் பிறக்கிறாள் விஜயலட்சுமி. கடைசிப் பெண் என்பதால் குடும்பத்தில் அனைவருக்கும் செல்லப் பெண்ணாகவும் வளர்கிறாள். மிகவும் ஆச்சாரமான இந்து குடும்பம் அது.

 

செல்லச் சீமாட்டியாக வளரும் விஜி என்ற விஜயலட்சுமி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கிண்டி பொறியியல் கல்லூரிக்குள் நுழைகிறார்.

 

அதே கல்லூரியில் பயிலும் மதுரைக்கார பையன் ஸ்டீபனை, விஜிக்கு பிடிக்கிறது. அதிதீவிர இந்து குடும்பத்து விஜியும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டீபனும் காதல் வயப்படுகிறார்கள்.

 

பி.ஈ. முடித்ததும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் ஸ்டீபன். ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படிப்பதற்காக பெங்களூர் செல்கிறார் விஜி. தொலைபேசி வழியாக காதல் தொடர்கிறது.

 

விஜியின் மேற்படிப்பு முடிந்ததும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அவரவர் வீடுகளில் தங்கள் ஆசையைத் தெரிவிக்கிறார்கள். இரு தரப்பிலும் சம்மதம் கிடைக்கவில்லை.

 

“ஆசை ஆசையா நான் வளர்த்த என் மகள் விஜயலட்சுமி செத்துட்டாள்னு நினைச்சுக்கறேன். இனி உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை. என் பேரையோ இந்தக் குடும்பத்தின் பேரையோ இனி நீ எங்கேயும் சொல்லிக்க கூடாது.. போ..” என்று கூறி விஜியை அனுப்புகிறார் அவரது அப்பா.

 

சென்னையில் எளிமையாக பதிவு திருமணம் நடக்கிறது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்கூட வாழ்த்த வரவில்லை. நண்பர்கள் மட்டுமே உடன் இருக்கின்றனர்.

 

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்கிறார் விஜி. சொந்தமாக சிறிய அளவில் சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கனவு. அதற்காக இருவரும் பணம் சேர்க்கிறார்கள்.

 

ஒருசில மாதங்களிலேயே கனவு நனவாகிறது. வங்கிக்கடன் உதவியுடன், சிறிய நிறுவனம் ஒன்றினை ஆரம்பிக்கிறார்கள். வெற்றிகள் வசமாகின்றன. இந்திய அளவில் இருக்கும் சிறப்பான சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று என்ற நிலையை சட்டென அடைகிறது அவர்கள் நிறுவனம். 17 பணியாளர்களுடன் லாபகரமாக இயங்குகிறது.

 

ஸ்டீபனின் குடும்பத்தினர் சமாதானமாகிறார்கள். “நீங்கள் இருவரும் மதுரைக்கே வந்து விடுங்களேன்..” என வேண்டுகோள் வைக்கிறார்கள்.

 

மிகுந்த யோசனைக்குப் பின்னர் விஜி - ஸ்டீபன் இருவரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்கள். நன்றாக நடந்து கொண்டிருக்கும் சென்னை கம்பெனியை மூடிவிட்டு, மதுரைக்கு இடம் பெயர்கிறார்கள்.

 

மதுரையில் சாஃப்ட்வேர் தயாரிப்புக்கான தேவையோ, அது குறித்த சிந்தனையோ இல்லை. அதனால் சாஃப்ட்வேர் பயிற்சி கொடுக்கும் நிறுவனம் ஆரம்பிக்கிறார்கள். தம்பதியர் இருவரும்தான் பயிற்சியாளர்கள். செம வெற்றி.. நிறுவனத்தின் புகழும் பிரசித்தமும் தென் மாவட்டங்கள் முழுதும் பரவுகின்றன. நிறுவனம் பெரிதாகிறது.

 

விஜியின் புத்திசாதுர்யத்தால் உலகெங்கும் இருந்து சாஃப்ட்வேர் தயாரிக்கும் ப்ராஜக்டுகள் கிடைக்கின்றன. விஜியை பாராட்டுகிறார் ஸ்டீபன். ஊர் உலகமே மெச்சுகிறது. ஆனால்.. வீட்டுக்குள் தலைகீழ் நிலைமை! கணவரது சகோதரியின் காரணமில்லா கோபமும், கடும் டார்ச்சரும்தான் விஜிக்கு வீட்டில் பரிசாகக் கிடைக்கின்றன. கணவரது குடும்பத்தாரின் சுடு சொற்களாலும், வசவுப் பேச்சுகளாலும் பல சமயங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அவர். ஆனாலும் பொறுமையாகவே இருக்கிறார்.

 

வருவாய் அதிகரிக்கிறது. சொந்த இடம் வாங்குகிறார்கள். பெரிய இடம். அதில் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சேர்த்து ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள். அடுத்தடுத்த கட்டிடங்களில் ஸ்டீபனின் சகோதரருக்கும் சகோதரிக்கும் தனித்தனி வீடுகள். மாமியார் இறந்து போனதால், மாமனார் மட்டும் தனியே வசிக்கிறார். அவருக்கும் ஒரு தனி வீடு. அதுதான் எல்லோரும் ஒன்றாகக் கூடி சாப்பிடும் பொது வீடு. அத்தனையும் ஒரே காம்பவுண்ட்டுக்குள் இருக்கின்றன.

 

வீட்டுக்குத் தேவையான எல்லா செலவுகளையும் தங்கள் அலுவலகத்தின் மூலமாகவே செய்கிறார்கள் ஸ்டீபனும் விஜியும். தங்களுக்கென எந்தப் பணத்தையும் எடுத்துக் கொள்ளாமல் ஸ்டீபனின் அப்பாவிடமே எல்லா வருமானத்தையும் கொடுத்து வருகிறார்கள்.

எல்லோரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தாலும், விஜயலட்சுமியை முழுமனதோடு தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லை அந்தக் குடும்பம். ‘எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா..’ என ஆறுதல் வார்த்தைகள் கூறி மனைவியை அரவணைக்கிறார் ஸ்டீபன்.

 

குனிந்தால், நிமிர்ந்தால் குற்றம் கண்டுபிடித்து ஏசிக் கொண்டிருக்கும் ஸ்டீபனின் சகோதரியின் குடும்பம் நைஜீரியாவுக்குச் சென்று செட்டில் ஆகிறது. கொஞ்சம் நிம்மதி!

 

இரண்டரை வருட இடைவெளியில் அடுத்தடுத்து பிறக்கின்றன இரண்டு ஆண்  குழந்தைகள். குழந்தைகளைக் கவனித்தபடியே அலுவலக சவால்களையும் எதிர்கொள்கிறார் விஜி.

 

திடுதிப்பென ஒரு நாள்.. மாரடைப்பில் இறந்து போகிறார் ஸ்டீபன்!

 

விஜியின் உலகம் ஸ்தம்பிக்கிறது. நினைவை இழந்து புத்தி பேதலிக்கிறார். மனநல சிகிச்சைக்கு அனுப்பப் படுகிறார்! குழந்தைகள் இருவரும் சரியான கவனிப்பின்றி, அழுக்கு உடைகளுடன் திரியும் சூழல் உருவாகிறது!

 

****

தீவிர சிகிச்சையில் விஜயலட்சுமி இருந்தபோது நடந்த சம்பவம்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது.

 

விஷயம் கேள்விப்பட்டு விஜியைப் பார்ப்பதற்காக வீடு தேடிவந்த அவரது உறவினர்களிடமும் நண்பர்களிடம், ‘அவள் இங்கே இல்லை.. அவங்க அப்பா வீட்டுக்குப் போயிட்டா’ என்று கூறி திருப்பி அனுப்பினார்கள் ஸ்டீபனின் வீட்டார். விஜியைத் தேடிவந்த அவரது சகோதரர்களுக்குக் கூட உண்மை நிலையைத் தெரிவிக்கவில்லை.

 

தெய்வாதீனமாக மூன்றே மாதங்களில் குணமானார் விஜி. அவர் அத்தனை சீக்கிரம் குணமாவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரை டிஸ்சார்ஜ் செய்தபோது, வீட்டுக்கு அழைத்துப் போகக்கூட ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை!

 

*****

வீட்டுக்குள் நுழைகிறார் விஜி. கணவர் இல்லாத வீட்டின் வெறுமை, அவரை அறைந்து வரவேற்கிறது. கதறி அழுகிறார்.

 

அத்தனை நாட்கள் அம்மாவைப் பிரிந்திருந்ததால், ஓடி வந்து கட்டிக் கொள்ளத் தெரியாமல், மிரட்சியோடு பார்க்கிறார்கள் குழந்தைகள் இருவரும்.

 

தற்கொலை செய்து கொள்ளும் முடிவெடுக்கிறார் விஜி. ஏதேச்சையாக அதைக் கவனித்து விடுகிறார் அதே துப்புறவுப் பெண் பணியாளர். ஓடிவந்து தடுக்கிறார்.

 

“முதல்ல உன் குழந்தைகளை கொன்னுடு. அப்புறம் நீ சாகலாம்.." என அதிரடி அட்வைஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்மணி. மருத்துவமனையில் விஜி இருந்தபோது, குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் எடுத்துச் சொல்கிறார்.

 

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புது மனுஷியாக தலை நிமிர்கிறார் விஜி. இனி தன் வாழ்க்கை பிள்ளைகளுக்காக என்ற முடிவெடுக்கிறார். முன்பை விட அதிக உத்வேகத்துடன் அலுவலகப் பணிகளில் ஈடுபடுகிறார்.

 

அடுத்த மாதமே குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டி வருகிறது. மாமனாரிடம் பணம் கேட்கிறார் விஜி. அத்தனை வருடங்களாக மாதாமாதம் வாங்கிய பணத்தில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை என்று கைவிரிக்கிறார் அவர். கணவரின் சகோதரரிடம் கேட்கிறார். அவரும் கைவிரிக்கிறார். இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிக்களை கொடுத்தால் அடகு வைத்து பணம் வாங்கித் தருவதாகக் கூறுகிறார். துபாயில் இருக்கும் நாத்தனாருக்கும் போன் செய்து கேட்டு ஏமாறுகிறார். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல பசங்களைச் சேர்த்துடேன் என அறிவுரை கொடுக்கிறார் அவர்.

 

பீரோவில் வைத்திருந்த தன் நகைகளைத் தேடுகிறார் விஜி. அதனை அடகு வைத்து பணம் வாங்க நினைக்கிறார். ஆனால்.. ஒரு நகைகூட அங்கே இல்லை. அப்போது கூட அந்தக்குடும்பத்தில் யாரையும் தவறாக நினைக்கவில்லை விஜி. வீட்டுச்செலவை, மருத்துவச்செலவை சமாளிக்க நகைகளை விற்றிருக்கலாம் என நினைத்துக் கொள்கிறார்.

 

கடைசியில்.. கடன் வாங்கி பள்ளிக்கட்டணம் செலுத்துகிறார். குழந்தைகளைக் கவனிக்கும் நேரம் போக, மற்ற நேரமெல்லாம் அலுவலகப் பணிகளிலேயே மூழ்கிப் போகிறார். வீடும், அலுவலகமும் ஒரே இடத்தில் இருப்பதால் இரவு பகலாக பணி செய்கிறார். வழக்கம் போல மாத வருவாயை தன் மாமனாரிடமே கொடுத்து வருகிறார். கூட்டுக் குடும்பத்துக்கு தேவையான பொருட்களையும் தன் அலுவலகத்தில் இருந்தே வாங்கிக் கொடுக்கிறார்.

 

ஒருசமயம்.. மாமனாரின் உடல் நிலை லேசாக மோசமடைகிறது. படுத்த படுக்கையாகிறார். மகளன்புடன் அவருக்கு பணிவிடைகள் செய்கிறார் விஜி. நிஜமான பாசத்துடன் கண் கலங்குகிறார் மாமனார்.

 

தம்பி இறந்ததற்குக் கூட வந்து பார்க்காத ஸ்டீபனின் சகோதரி நைஜீரியாவில்ல் இருந்து திரும்பவும் மதுரைக்கே வந்து சேருகிறார். விஜியை மகளாகப் பாவிக்கத் தொடங்கிய தன் அப்பாவை அதட்டி வைக்கிறார். “எங்க அப்பாவை நானே பார்த்துக்கறேன். இனிமே விஜி இங்கே வர வேண்டாம். அவ வீட்டிலேயே தனியா சமைச்சு சாப்பிட்டுக்கட்டும்” என அதிரடி உத்தரவு போடுகிறார்.

 

அத்தனை வருடங்களுக்குப் பின்னர், தன் வீட்டில் தனிச்சமையல் செய்ய ஆரம்பிக்கிறார் விஜி.

 

“அம்மா.. இனிமே நீங்களே சமையல் பண்ணுங்கம்மா. தாத்தா வீட்டுல சாப்பிட வேணாம்..” என குழந்தைகள் இருவரும் சொல்லியபோது, அதற்குப் பின்னால் இருக்கும் காரணமும் புரியவருகிறது விஜிக்கு. அப்போதும் தன் கணவர் குடும்பத்தினரை விட்டுக்கொடுக்க மனமில்லை அவருக்கு. சமையல் மட்டும்தான் தனியாக நடக்கிறது, தன் வருமானத்தை வழக்கம்போல மாமனாரிடம்தான் கொடுத்து வருகிறார்.

 

பகல் முழுவதும் அலுவலகப் பணிகள். நிறுவனத்தின் புகழும் பெருமையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து உலக அளவில் டாப் 50 விருது கிடைக்கிறது. தமிழக அரசின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது கிடைக்கிறது. Women of the year, Successful Industrialist of the year.. என விஜயலட்சுமியைத் தேடி வருகின்றன விருதுகளும் பாராட்டுக்களும்.

 

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது போக மீதம் கிடைக்கும் நேரத்தில் என்ன செய்வதென யோசித்து, தானும் பாடம் படிக்க ஆரம்பிக்கிறார். வருடத்துக்கு ஒரு படிப்பு என அடுத்தடுத்து அவர் படித்து முடித்தவை.. மூன்று பி.எச்.டி.க்கள், ஒரு போஸ்ட் டாக்டரேட் (பி.எச்.டி.க்குப் பிறகு படிப்பது), பதினான்கு மாஸ்டர் டிகிரிகள்!

பொறியியல், மேனேஜ்மெண்ட், எஜுகேஷன்.. மூன்று துறைகளிலும் படித்துக் குவிக்கிறார். 

 

SEED என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து பொது நல சேவையிலும் களம் இறங்குகிறார். விதவைகள் மறுவாழ்வுக்காக, ஆதரவற்றவர்களின் நலனுக்காக பல உதவிகள் செய்கிறார். அரசிடமோ, பிறரிடமோ ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் தன் நிறுவனத்தின் வருவாய் மூலமே அனைத்தையும் செய்கிறார். பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு எட்டு நாட்கள்  சாஃப்ட்வேர் பயிற்சி கொடுக்கிறார். எட்டாவது நாளிலேயே தனியாக சாஃப்ட்வேர் எழுதும் அளவுக்கு தேறும் மாணவர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் கிடைக்கிறது. இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துக் கொடுத்திருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணையுடன் கணிணி மென்பொருள் தயாரிக்கும் 2 மாதகால பயிற்சியை மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.  மைக்ரோசாப்ட் நடத்தும் ஆன்லைன் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற வைத்திருக்கிறார். அத்தனை பேருக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

 

இந்தச் சேவைகளுக்காகவும் பல விருதுகள் தேடி வருகின்றன. அப்துல்கலாம் கையால் இந்திய அரசின் விருது, லயன்ஸ் க்ளப் விருது, ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து விருது, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து விருது, இங்கிலாந்தில் இருந்து சிறந்த பெண்மணி விருது.. என பல்வேறு கௌரவங்கள்.

 

 

கணவர் இருக்கும் வரை மதம் மாறும்படிச் சொல்லவே இல்லை. ஆனால், அவர் இறந்தபின்னர் அதைச் செய்கிறார் விஜி. கிறிஸ்துவ மத பிரசங்கங்கள், பாடல்கள்.. என தேவ ஊழியத்திலும் ஈடுபடுகிறார்.

 

ஊரும் உலகமும் விஜயலட்சுமியின் தன்னம்பிக்கையை, தன்னார்வத்தை, வியாபார வெற்றிகளை பாராட்டிக் கொண்டே இருக்க.. வீட்டுக்குள் அவருக்கு நாத்தனாரின் பொறாமைப்பார்வைகளும் துன்புறுத்தல்களும்தான் ‘விருது'களாகக் கிடைக்கின்றன.

 

‘கல்லானாலும் கணவர் குடும்பம்’ என்ற வைராக்கியத்துடன் அதே காம்பவுண்டுக்குள் வாழ்ந்து, தன் பிள்ளைகள் இருவரையும் வளர்த்து ஆளாக்குகிறார் விஜயலட்சுமி.

 

ஆரம்பத்தில் ஸ்டீபனும் அதன்பின்னர் விஜியுமாக அதுவரை வீட்டில் கொடுத்துவந்த பணத்தைக் கொண்டு பல முதலீடுகள் செய்து வைத்திருப்பதும், அவையெல்லாம் தங்கள் பெயரில் இல்லை என்பதும் அப்போதுதான் தெரியவருகிறது விஜிக்கு. அதன் பின்னரே.. மாமனாரிடம் தன் வருவாயைக் கொடுப்பதை நிறுத்துகிறார். தனியாக சில சொத்துக்கள் வாங்குகிறார்.

 

புதிய இடத்தில்.. புதிதாக அலுவலகம் கட்டிக்கொண்டு.. அதே கட்டிடத்தில் வீட்டையும் கட்டிக் கொண்டு.. குடி பெயர்கிறார்.

 

16 தொழிற்சாலைகளுக்கும், 21 தன்னார்வ அமைப்புக்களுக்கும், 25 பொறியியல் கல்லூரிகளுக்கும் ஆலோசகராக இருக்கிறார். 6 சர்வதேச கல்வி நிறுவனங்கள் மற்றும் 24 இந்திய நிறுவனங்களில் கமிட்டி மெம்பராக இருக்கிறார். 41 கல்வி நிறுவனங்களின் அகாடமிக் கவுன்சில் மெம்பராக இருக்கிறார். அரசு தரப்பு டாஸ்க் ஃபோர்ஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருக்கிறார். 109 சர்வதேச கான்ஃபரன்ஸ்களில் கலந்திருக்கிறார். 69 பிரத்தியேக சாஃப்ட்வேர்களை உருவாக்கி பதிவு செய்து, உலக அரங்கில் ‘சிங்கப்பெண்'ணாக வலம் வருகிறார்.

 

மூத்த மகன் ஆஸ்திரேலியாவில் மருத்துவ உயர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இளைய மகனை ஒரு விபத்தில் பறி கொடுத்து விட்டு, மறுபடியும் தனி மனுஷியாக உழைத்துக் கொண்டிருக்கும் விஜயலட்சுமிக்கு இப்போது வயது.. 54.

 

*****

ப்போதும் கூட தனி மனுஷியாக ஓடிக்கொண்டே இருப்பதில் உங்களுக்கு வருத்தமாக இல்லையா?’ என்றதும், புன்னகைத்தார் விஜயலட்சுமி. 

 

“நான் தனி மனுஷி இல்லை. என் கணவரின் நற்குணங்கள் அனைத்தையும் கொண்ட அன்பு மகன் நிகில் இருக்கிறான். மற்றவர்களுக்கு உதவுவதிலும் கடவுளைத் துதிப்பதிலும் ஆர்வம் மிக்கவன். என்னை உயிருக்கு உயிராக நேசிப்பவன். கடவுள் தந்த விலைமதிப்பில்லா பரிசு என் மகன். அவனுக்குத் துணை நிற்கும் கிருபையையும் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். தவிர, வேலை கிடைக்காத பல இளைஞர்கள் என்னை வழிகாட்டும் தாயாக நினைத்து ஓடிவருகிறார்கள். அவர்களும் என் பிள்ளைகள்தான். அவர்களுக்காகவும் நான் இருக்கிறேன்..” என்றவர் தொடர்ந்தார்.

 

“ஸ்டீபன் இறந்ததும் என்னைக் கூப்பிட்டார் எங்க அப்பா. கோயம்புத்தூருக்கு போனேன். கூகுள்ள விஜயலட்சுமி ஸ்டீபன்னு தேடினா.. உன் சாதனைகள்தான் அடுக்கடுக்கா வருது. ரொம்ப பெருமையா இருக்குன்னு பாராட்டினார் அப்பா. என்னுடனேயே இருந்துடுன்னு கட்டாயப்படுத்தினார். அழுதுகூட பார்த்தார்.  முடியாதுன்னு தீர்மானமா சொல்லிட்டு மதுரைக்கு வந்துட்டேன். ஸ்டீபன் உயிரோட இருக்கும்போது அவரைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை பேசலையே.. அவர் இறந்தபின்னாடி நான் மட்டும் திரும்பப் போய் ஒட்டிக்கிறது ஸ்டீபனுக்கு செய்யும் துரோகம்தானே..” என்றார்.

 

‘அத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்டு ஏன் இத்தனை வருடங்களாக உங்கள் கணவர் குடும்பத்துடனேயே சேர்ந்து இருந்தீர்கள்? கணவர் இறந்த பிறகே தனியாக வந்திருக்கலாமே?’ என்றதற்கும் புன்னகையைத்தான் பதிலாகக் கொடுத்தார் விஜயலட்சுமி.

 

“ஸ்டீபன் இறந்துட்டதா நான் நினைக்கலை. எத்தனையோ ஆண்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்குறாங்க. குடும்பமெல்லாம் இங்கே தமிழ் நாட்டுலதான் இருக்கு. நாலஞ்சு வருஷத்துக்கு ஒருதடவை லீவ் எடுத்துக்கிட்டு வந்து குடும்பத்தைப் பார்க்குறாங்க. அப்படித்தான்.. ஸ்டீபனும் வேற ஒரு நாட்டுல வேலை பார்க்கிறார்னு நான் நினைச்சுக்கறேன். அவருக்கு லீவ் கிடைக்காது. நான்தான் ஒருநாள் இந்த உலகத்தை விட்டு கிளம்பிப் போய், அவரைப் பார்க்கணும்..” - கண்ணீரைத் தடுக்க கடும் பிரயத்தனப்பட்டாலும் புன்னகையுடன் தான் கூறினார் விஜயலட்சுமி. தன்னம்பிக்கை என்ற சொல்லின் அனுபவ அர்த்தம் விஜயலட்சுமி!

 

****

 

 

- ஜி.கௌதம்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...