அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாலகுருசாமியும்... பின்னே ஒரு கேள்வியும் - புதிய கல்விக் குழுவை முன்வைத்து!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   13 , 2022  20:54:49 IST

 மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் குழு நியமிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அதுகுறித்த விவாதங்கள் ஓயவில்லை. தமிழ்நாட்டுக்கென தனியாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கவேண்டும் என்பதற்காக, கடந்த வாரம் மாநில அரசு இந்தக் குழுவை அறிவித்தது.

புதுதில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி முருகேசன் தலைமையில், முன்னாள் துணைவேந்தர் பேரா. ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேரா. சுல்தான் இஸ்மாயில், பேரா. இராம. சீனுவாசன், யூனிசெஃப் அமைப்பின் முன்னாள் சிறப்பு அலுவலர் அருணா ரத்னம், கதையெழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான பேராசிரியர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, எதிர்வரிசையில் உள்ள கட்சிகள் தரப்பிலும் இதற்குப் பெரியதான எதிர்ப்பு இல்லை. ஆனால், கல்விப்புலம் சார்ந்தவர்களிடையே ஆதரவாகவும் ஆதங்கமாகவும் விமர்சனமாகவும் கருத்துகள் வெளிப்பட்டவண்ணம் உள்ளன. நேற்று இதில் தன் கருத்தைக் கூறி பரவலான கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.

ஏற்கெனவே மைய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐத் தீவிரமாக ஆதரித்து எதிர்ப்பை எதிர்கொண்டவர், இப்போது இந்தக் குழுவில் கல்வியாளரைத் தலைமையிடத்தில் நியமிக்காததைக் குறைகூறியுள்ளார். இதே கருத்தை கடந்த ஒரு வாரமாக மாநில அரசாங்கத்தின் ஆதரவுத் தரப்பினர் பலருமேகூட முன்வைத்தார்கள். நியமிக்கப்பட்டிருக்கும் குழு உறுப்பினர்களைப் பற்றி பாராட்டுப் பத்திரம் வாசிக்கும்படியாகவே அவர்களின் கருத்துகள் இருந்தன. ஆனாலும் மேலும் சிலரைச் சேர்த்திருக்கலாம் என அவர்கள் கூறியவர்களைச் சேர்த்தால் இன்னுமொரு பட்டியலே ஆகிவிடும்; இது தனியானது. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சுட்டும் இடமும், முக்கிய கவனத்துக்கு உரியதே!

 இதே தி.மு.க. தலைமையிலான முன்னைய ஆட்சிகளிலும் கல்வி தொடர்பான வல்லுநர் குழுக்கள் நியமிக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவம், பொறியியல், இன்னபிற தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ரத்துசெய்து ஆணையிட்டார், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் ஒரு தனிச்சட்டமும் கொண்டுவரப்பட்டது. அந்த இரண்டையுமே நீதிமன்றம் ரத்துசெய்தது. அந்த அரசாணையும் சட்டமும் அகில இந்திய மருத்துவ கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவற்ற்றின் விதிகளுக்கு மாறாக இருப்பதாக, உயர்நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, இப்ராகிம் கலிஃபுல்லா ஆகியோர் அமர்வு தீர்ப்பில் கூறியது. ஆட்சி மாறிய பின்னர் 2006ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, நுழைவுத்தேர்வு ரத்துசெய்வது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த ஆண்டு ஜூலை 7 அன்று நியமிக்கப்பட்ட ஆறு பேர் குழு, சென்னையிலும் மதுரையிலும் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தியது. அவற்றில் 390 பேர் தங்கள் கருத்துகளை எடுத்துக்கூறினர். மொத்தம், 3000 பேர் கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்களில் 1,250 பேர் நுழைவுத்தேர்வை நீக்கவும் 600 பேர் அதைத் தொடரவேண்டுமெனவும் கோரினர். அதே ஆண்டு நவம்பர் 13 அன்று ஆனந்தகிருஷ்ணன் குழு அரசிடம் தன் அறிக்கையை அளித்தது. சூட்டோடுசூடாக அதே ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அது சட்டமாகவும் ஆக்கப்பட்டது.

அதே காலகட்டத்தில், பள்ளிகளில் அரசுப் பாடத்திட்டம், தனியார் மெட்ரிக், ஓரியண்டல் முறை எனப் பலவகைப் பாடத்திட்டங்களை மாற்றி, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டுவந்ததற்கு முன்னர் அதற்கான குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக முன்னாள் துணைவேந்தர் ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக தனியார் மெட்ரிக் பள்ளி சங்க நிர்வாகி ஒருவர், ஏற்காடு மலைவாசத்தல உயர்வசதிப் பள்ளி நிர்வாகி ஒருவர், ஓரியண்டல் முறைப் பள்ளி நிர்வாகி ஒருவர், கல்வியாளர் என்றாலும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் என்கிறபடியாக முனைவர் ச.சு.இராசகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். பள்ளி நிலை கல்வித் துறையின் நான்கு இயக்குநர்களை எப்போதும்போல அலுவல்சார் உறுப்பினர்களாக நியமித்தபோதும், அதில் நீதித்துறையைச் சார்ந்தவர் யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை.

இந்த நடப்புகளை எல்லாம் விவரித்துச் சொல்லும் கல்விக்கொள்கை ஆர்வலர்கள், இப்போதும் அவ்வாறே செய்திருக்கலாமே என்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டபடி, குழுவுக்குத் தலைமைவகிக்க தகைமையருக்கா இங்கு தட்டுப்பாடு.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வசந்திதேவி, இடைவிடாது பள்ளிக்கல்வி, உயர்கல்விக் கொள்கைகள்சார்ந்து பணியாற்றிவருகிறார்; இப்போது பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பில் பொறுப்பெடுத்து செயல்பட்டும்வருகிறார் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

 மக்கள் சிவில் உரிமைக் கழகம்- பியுசிஎல் சார்பில், இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்து, கவனத்துக்குரியது. மைய, மாநில அரசுகளின் கல்விக்கொள்கைகளின்பால் தொடர்ச்சியாக இடையீடு செய்துவரும் கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபுவை இந்தக் குழுவில் இணைத்திருக்கவேண்டும் என்பது பியுசிஎல் அமைப்பின் பகிரங்கக் கோரிக்கை. கல்லூரி ஆசிரியர் அமைப்பில் தலைமைப்பணி செய்தவரும் உயர்கல்விக் கொள்கைகளில் ஊன்றிநின்று பணியாற்றிவருபவரும் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வருமான பேரா. சிவக்குமார், அதே பணியில் தீவிரமாக இயங்கியவரும் இப்போது குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் இருப்பவருமான பேரா.பிரபா கல்விமணி, திண்டிவனத்தில் இவர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை தன்னார்வத்திலும் நிதியைச் செலவிட்டும் நடத்திவரும் கல்வியாளர்கள் என வரிசையாகப் பட்டியலிடுகிறார்கள், ஆதங்கப்படும் அன்பர்கள்.

 மீண்டும் விட்ட இடத்துக்கே... கல்விக் கொள்கை தொடர்பான குழுவில் புதியதாக நீதிபதிகளை முன்னிறுத்துவது ஏன்..? ஆம், இந்த ஆட்சி வந்த பின்னர், நீட் தொடர்பான வல்லுநர் குழுவுக்குத் தலைமையாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் நியமிக்கப்பட்டார்தானே? ஏன் இந்த இடைச்செருகல்..?

ஜெயலலிதா ஆட்சியில் பொது நுழைவுத் தேர்வு அரசாணை, சட்டத்தை ரத்துசெய்யப்பட்டது போலவே, 1997ஆம் ஆண்டில் தொழிற்படிப்புகளில் ஊரக மாணவர்களுக்கு 15 % இட ஒதுக்கீடு அளித்து திமுக அரசு ஆணையிட்டது. அடுத்துவந்த அதிமுக அரசாங்கம் 2002இல் அதை 25% ஆக்கியது. ஆனால், அவை நீதிமன்றத்தில் நிற்கவில்லை. இந்தக் காரணத்தை முன்னிட்டே புதிய தேவையாக, நீதித்துறை வல்லுநர்களுக்கு புதுக் கொள்கை உருவாக்கத்தில் முதன்மை அளிக்கப்படுகிறது என்கின்றனர் அரசுத் தரப்பார்.

நடப்பு நிலவரத்தையும் புதிய தேவையையும் ஏற்றுக்கொள்ளும் கல்விக் கொள்கை ஆர்வலர்கள், உறுப்பினர்களில் ஒருவராக அவர்களை இடம்பெறச் செய்தால் போதாதா என்கிறார்கள். பதிலுக்கு சில மாவட்டங்கள் அதிகார எல்லையைக் கொண்டு அரசுப்பணியாற்றிய துணைவேந்தர் தலைமையில், மாநில அளவில் அதிகார எல்லை கொண்டிருந்த உயர்நீதிமன்ற நீதிபதியை வைப்பது மரபை மீறுமே என்கிறார்கள், அரசுத் தரப்பார். இதே அரசு முறைமையில்தானே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், கேரளம் எனும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றி, பதவிக்காலத்தையும் முடித்துச்சென்றார் என்கிறார்கள், பதிலுக்குப் பதிலாக! கல்விக்கொள்கை ஆர்வலர்களின் இந்த வாதம், தர்க்கபூர்வமாக சரியானது!

 - இர.இரா.தமிழ்க்கனல் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...