அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பதவி அல்ல; பொறுப்பு - மு.க. ஸ்டாலின்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  15:50:02 IST


Andhimazhai Image

தலைவர் கலைஞர் 1956இல் கோபாலபுரம் வீட்டை வாங்கியபோது நான் மூன்றுவயது குழந்தை. அப்போதிருந்து இங்கே பெரிய கூட்டுக்குடும்பமாக நாங்கள் வசித்து வந்தோம்.

சின்னவயதில் அப்பாவுடன் நேரம் கழிக்க எங்களுக்கு பெரிய வாய்ப்பு இருக்காது. அந்த ஏக்கம் எங்கள் அனைவருக்குமே இருக்கும். அவர் பெரும்பாலான நேரம் சுற்றுப்பயணத்தில் இருப்பார். சுற்றுப்பயணம் கிளம்பும் நேரம்தான் அவர் மாடியிலிருந்து வீட்டுக்குள் வருவார். வந்து தன் அப்பா , அம்மா தம் முதல் துணைவியார் ஆகியோரின் படங்களை வணங்கிவிட்டு, ஒரு பூவை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் போய்ட்டு வர்றேன் என்று சொல்லிக்கொண்டு புறப்படுவார். அவர் சொல்லும் அந்த வார்த்தைக்காக  எல்லோரும் அங்கே சுற்றிலும் காத்திருப்போம். ஏனெனில் அவருடன் பேசும் வாய்ப்பே அதிகம் கிடைக்காது.

அவர் வெளியே போய்விட்டு திரும்பும்போது கார் ஹார்ன் ஒலிக்கும். எல்லோரும் என்ன சேட்டைகள் செய்துகொண்டிருந்தாலும் அப்படியே அமைதியாகிவிடுவார்கள். ஊரில் இருக்கும்போதும் வேலைகளை முடித்துக்கொண்டு இரவு பத்துமணி வாக்கில் வீட்டுக்குள் நுழைவார். அவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, நாங்களெல்லாம் அவரைச் சுற்றி தரையில் அமர்ந்துகொள்வோம். அவர் பல விவரங்களைச் சொல்லி குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் நேரம் அதுதான்.

தமிழகம் முழுக்க பல ஊர்களில் திமுக பிரசார நாடகங்களைப் போடுவதற்காக சென்ற போது, அந்த நாடகங்களில் தலைவராகத்தான் வேஷம் போட்டு நான் நடிக்கவேண்டியிருக்கும். அதற்காக நடுவழுக்கையுடன் கூடிய விக் தயார் செய்து அணிந்துகொள்வேன். போகும் வழியில் புளியங்காய்களைப் பறித்து சாப்பிடுவதுண்டு. அது தொண்டையை கரகரவென அறுக்கும்போது, தலைவரின் கரகரத்த குரலில் பேச உதவி செய்யும்.

தலைவர் நான் ஆரம்பத்தில் கட்சிப்பணிகளில் இறங்குவதை ஆதரிக்கவில்லை. என்னிடம் நேரடியாக சொல்லாவிட்டாலும் கூட அம்மாவிடம் கடுமையாக சத்தம் போடுவார்.  ஏனென்றால் எங்கள் கல்வி பாதிக்கக்கூடாது என்று அவர் கவலை கொண்டிருந்தார். அவர் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருந்தவர். அண்ணாவேகூட சிறுவயதில் எங்கள் அப்பாவைப் பார்த்தபோது ‘போய்ப் படி' என்றுதானே அறிவுரை கூறி இருந்தார். ஆகவே தன்னைப் போல தன் பிள்ளைகளும் ஆகிவிடக்கூடாது என்று நினைத்திருக்கக்கூடும். அத்துடன் தன் வீட்டில் ஒரு அரசியல் வாரிசு என விமர்சனங்கள் வருவதையும் அவர் விரும்பவில்லை. தலைவர்களிடமெல்லாம் என்னைப் படிக்கச்சொல்லி அறிவுரை கூறும்படி சொல்வதுண்டு.

1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முரசொலி அடியார் எழுதிய முரசே முழங்கு என்ற திமுக பிரசார நாடகத்தை மாநிலம் முழுக்க சுமார் 40 இடங்களில் நடத்தினோம். அத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நடந்த வெற்றி விழாவிற்கு கலைஞர் தலைமை. எம்ஜிஆர் முன்னிலை. அதில் நடித்தவர்களைப் பாராட்டி கலைஞர் மோதிரம் அணிவித்தார். எம்ஜிஆர் சான்றிதழ் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய எம்ஜிஆர். ‘பெரியப்பா என்ற முறையில் ஓர் ஆலோசனை சொல்கிறேன். நீ முதலில் படி. பிறகு அரசியலுக்கு வா!' என குறிப்பிட்டார்.

இளைஞரணி பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டபோது அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் அதுதொடர்பான விவாதங்களும் கட்சிக்குள் எழுந்ததும் எல்லோருக்கும் தெரிந்ததே. அரசியலில் வாரிசு என்ற பேச்சு வந்துவிடக்கூடாதே என்று அவருக்கு ஆரம்பம் முதலே கவலை இருந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவியேற்புக்கு டெல்லி சென்று திரும்பினேன். நேராக கோட்டைக்குத்தான் போனேன். அப்போது முதல்வராக இருந்த தலைவரின் கார் வெளியே செல்ல தயாராக இருந்தது. என்னையும் அழைத்துக் கொண்டார். காரில் துரைமுருகன், ஆற்காட்டாரும் இருந்தார்கள். ‘உன்னை துணைமுதல்வராக ஆக்கப்போகிறேன்' என்றார் தலைவர். நான் அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டு ‘வேண்டாம் ஏற்கெனவே மாறன், அழகிரி, கனிமொழி என்றெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் பதவிகளில் இருக்கிறார்கள்' என்றேன். நான் சீக்கிரம் சாகவேண்டும் என்கிறாயா? என்றார். காருக்குள் கனத்த அமைதி. தன்னுடைய வேலை பளுவைக் குறைக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் அப்படிச் சொன்னாலும் அதிர்ச்சியாக இருந்தது.

வயது முதிர்வால் அவரால் இயங்க முடியாத காலகட்டத்தில் கட்சிக்குள்  செயல்தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு எனக்கு வழங்கப்பட்டது. அப்போது தினமும் காலை 9மணியிலிருந்து இரவு வரை ஒவ்வொரு மாவட்ட அடிமட்ட நிர்வாகிகளாக சந்தித்து இரவில் தலைவரை சந்தித்து அன்று என்னென்ன நடந்தது என்று தெரிவிப்பேன். பேச முடியாத நிலையில் அவற்றை பொறுமையாகக் கேட்டுக்கொள்வார். அறிவாலயத்துக்குப் போகலாமா என்றால் முகம்பிரகாசிக்கும். உடனே போய் அங்கே சுற்றிவிட்டுவருவோம். முரசொலி அலுவலகம் என்றாலும் அப்படித்தான்.

அவசரநிலை காலகட்டத்தில் 1976 ஜனவரி 30 அன்று ஆட்சிக்கலைக்கப்பட்டது. மறுநாளே காவலர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். தன்னைத்தான் கைது செய்ய வருகிறார்களோ என்று அவர் நினைத்த நிலையில் ஸ்டாலினைத் தேடி வந்திருக்கிறோம் என அவர்கள் சொன்னார்கள். அப்போது நான் செங்கல்பட்டுக்கு நாடகம் போடச் சென்றிருந்தேன். உடனே என்னை இல்லம் திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள் நான் வந்து சேர்ந்தேன். ‘எனக்கெல்லாம் மிகத் தாமதமாகக் கிடைத்த வாய்ப்பு உனக்கு இளமையிலேயே கிடைத்துள்ளது, போய் வா,' என வாழ்த்தி அனுப்பி வைத்தார். நான் வீட்டில் பெட்டி படுக்கைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவரது காலில் விழுந்து வணங்கி, வீட்டில் அனைவரிடமும் விடைபெற்றேன். என்னுடைய முதல் சிறைவாசம் அது. கட்சி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் செல்வதைப் போல்தான் நினைத்துக்கொண்டு கிளம்பினேன்.ஆனால் அது நீண்டநாள் சிறைவாசம் ஆனதை நீங்கள் அறிவீர்கள். சிறையிலே தாக்கப்பட்ட நிலையில், என்னை சந்திக்க வந்திருந்த தலைவர் அவர்களை காயம் தெரியாமல் இருக்க முழுக்கை சட்டை அணிந்து சந்தித்தேன். அவர் வருந்துவாரே என்பதால்தான் காயங்களை மறைத்திருந்தேன். அடித்தார்களாமே உண்மையா என்று அவர் கேட்டபோது இல்லை என்பதுபோலத் தலையாட்டினேன். பொதுவாழ்க்கைக்கு வந்தால் இதையெல்லாம் தாங்கவேண்டும் என்று தலைவர்சொன்னதை நினைவில் வைத்திருந்தேன். இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான் அவருக்குத் தெரியாமல் கழகத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த நான் வெளிப்படையாகச் செயல்பட ஆரம்பித்தேன்.

2003 ஆம் ஆண்டு. விழுப்புரம் மண்டல மாநாட்டில் நான் தலைமை வகித்தேன். அது நான் தலைமை வகித்த முதல் மாநாடு. எல்லோரும் என்னைப் புகழ்ந்து பேசினார்கள். இறுதியாகப் பேசிய தலைவர், ‘‘எல்லோரும் உன்னைப் புகழ்ந்துபேசினார்கள். இவர்கள் நம்மவர்கள். எதிரிகளும் மாற்றுமுகாமில் இருப்பவர்களும் புகழுமாறு நடந்துகொள்ளவேண்டும்'' என்று பேசினார்.

நான் சென்னை மாநகராட்சிக்கு மேயராக தேர்தலில் போட்டியிட்டு மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட போது என் முதல் உரையைத் தயாரித்தேன். அதை தலைவரிடம் காண்பித்தேன். நல்லா எழுதி இருக்கப்பா என்றவர், அதில் மூன்று திருத்தங்களை செய்தார். மேயர் பதவி என்று எழுதி இருந்த இடங்களில் எல்லாம், பொறுப்பு என மாற்றினார். பதவி அல்ல, அது மக்கள் உனக்கு வழங்கி இருக்கும் பொறுப்பு எனக் கூறினார்.

நன்றி: கலைஞர் தொலைக்காட்சி, ஒரு மனிதன் ஒரு இயக்கம் , ப்ரண்ட்லைன் வெளியீடு


(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...