![]() |
ஆஸ்திரேலியா, தமிழகத்துக்குத் தப்பமுயன்ற 58 ஈழத்தமிழர்கள் கைதுPosted : புதன்கிழமை, ஜுலை 06 , 2022 21:44:15 IST
இலங்கையில் நீடித்துவரும் கடுமையான பொருளாதார, வாழ்வாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் வழியாக, இன்று ஒரே நாளில் அந்நாட்டிலிருந்து 58 ஈழத்தமிழர்கள் கடல்வழியாக வெளியேற முயன்றனர்.
கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகவே இலங்கையின் நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமல் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கு வந்தபடி இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இராமேசுவரம் கடல் பகுதியிலோ அதற்கு முன்னரான திட்டுகளிலோ வந்திறங்குகின்றனர்.
வடக்கு மாவட்டமான மன்னாரின் தாழ்வுபாடு கிராமத்தின் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் உள்பட 9 பேர் படகு மூலம் தமிழகத்துக்குச் செல்லப் புறப்பட்டனர். அவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம், வடமராட்சி, தொண்டமனாறு பகுதியிலிருந்து நான்கு பேர் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கே சட்டவிரோதப் படகு மூலம் செல்வதற்குக் கிளம்பினார்கள். இன்றைய நாள் தொடங்கிய சாமம் 1 மணியளவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாணம், திருகோணமலையிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கு 45 பேர் குழுவாகப் புறப்பட்டனர். குச்சவெளிக் கடற்பரப்பில் வைத்து அவர்கள் பிடிக்கப்பட்டனர். பின்னர் விசாரணைக்காக உள்ளூர் காவல்நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். கைதானவர்களில் 25 பேர் இருபது வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று இடங்களிலும் கைதுசெய்யப்பட்டவர்கள் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர். English Summary
Sri lanka eelam Tamil families arrested trying to flee through sea
|
|