அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பெரும்பாலான தமிழ் நாவல்கள் குடும்ப நாவல்களே!- எஸ்.ராமகிருஷ்ணன்

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   02 , 2019  13:26:57 IST

சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் அந்திமழைக்காக சந்தித்து தமிழ் நாவல்கள் பற்றி உரையாடினோம். அதிலிருந்து சில பகுதிகள்:
 
 
தமிழ் நாவல் உலகம் இன்று எப்படி இருக்கிறது? என்ன மாதிரி முயற்சிகள் அதில் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி...
 
சிறுகதை போல தமிழில் நாவல்கள் எழுதப்பட ஆரம்பித்தும் நூறாண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு நாவலாசிரியன் என்ற அடையாளத்துடன் மட்டுமே அறியப்படும் எழுத்தாளர்கள் தமிழில் மிகக் குறைவு. ஒருவேளை இதற்கு உதாரணமாக நாம் ஜெயகாந்தனைச் சொல்லலாம்.
அவர் தன் நாவல்களுக்காக மிக அதிகமாகக் கொண்டாடப்பட்டவர்.  சுந்தர ராமசாமி,லாசரா, அசோகமித்திரன் பூமணி  போன்றவர்களும் தங்கள் நாவல்களுக்காக அதிகம் பேசப்பட்டார்கள். பா. சிங்காரம் மட்டுமே இதில் தனித்துக் குறிப்பிடவேண்டியவர். அவர் நாவலைத்தவிர எதுவுமே எழுதவில்லை. கடலுக்கு அப்பால். புயலிலே ஒரு தோணி என இரு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இன்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் முக்கியமான இடத்தை வகிக்கிறார், இது தமிழ் நாவல்கள் எந்த அளவுக்குக் காத்திரமானவை என்பதற்கு ஓர் அடையாளம்.
இன்னொருவர் சம்பத். அவரும் ஒரு நாவலில் புகழ்பெற்றவர், சம்பத்தின் இடைவெளி மிக முக்கியமான நாவல்.   அந்நாவல்  தத்துவத்தின் கேள்வியை எதிரொலிக்கிறது.  இடைவெளியின் நாயகன் தினகரன் மரணத்தைப் புரிந்துகொள்ள நினைக்கிறான். மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என ஆராய்கிறான். இடைவெளியை கண்டு கொள்கிறான். இடைவெளி என்பது அற்புதமான குறியீடு. இரண்டு சொல்லுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை எப்படி புரிந்து கொள்வீர்கள்? ஒரு சொல்லை நினைப்பதற்கும் சொல்வதற்கு இடையிலிருக்கும் இடைவெளியை அளவிட முடியுமா?
தேவதச்சன் ஒரு கவிதையில் சொல்கிறார். காகிதத்துக்கும் அதில் வரையப்பட்ட ஓவியத்துக்குமான இடைவெளி என்று! இடைவெளியே இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்குள் அரூபமான ஒரு இடைவெளி இருக்கிறது.  அதையே சம்பத்தும் சுட்டிக்காட்டுகிறார்.
 
 
பொதுவாக ஒரு நாவலைப் படிக்கும் வாசகன் முதலில் செய்வது அதை சுருக்குதல். பிறகு அது குறித்த ஓர் அபிப்ராயத்தை உருவாக்குகிறான். பின் அவனுக்குத் தெரிந்த சமகால யதார்த்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அப்புறம்தான் அந்த நாவலில் ஏன் இந்த கதாபாத்திரங்கள் இப்படி நடக்கிறார்கள்  அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது என்று அறிந்து கொள்கிறான். இதுதான் நாவலை வாசிப்பதன் மரபான வழி. ஒரு நாவலில் சந்தித்துக் கொள்ளாத இரண்டு பாத்திரங்கள் வாழுகிறார்கள்.  சில கதாபாத்திரங்கள் திடீரென காணாமல் போய்விடுகிறார்கள். கதாபாத்திரங்களை யார் வழிநடத்துகிறார்கள்? நாவல் என்பது வாழ்க்கையைப் போலவே புதிராக இருக்கிறது.
வாழ்க்கையை நாம் முழுவதுமாகப் பார்க்கமுடியாது. ஒரு புள்ளியிலிருந்துதான் அறிந்து கொள்ள முடியும். அந்தப்புள்ளி, நாம் உருவாக்கிக் கொள்ளும் கோணம்.  இலக்கியம் அதைத்தான் சொல்கிறது. யதார்த்தம் என்பது வெறும் பிரதிபலிப்பு இல்லை அதற்கு நிறைய தளங்கள், கோணங்கள் இருக்கின்றன. அதை நாவல் அடையாளம் காட்டுகிறது.
 
 
 
நாவல் என்ற இலக்கிய வடிவம் எப்படி உருவாகி வந்தது?
நாவல் வடிவம் என்பது ஐரோப்பாவில் உருவானது. அதுவும் குறிப்பாக பிரெஞ்சு சமூகத்தில் பிறந்தது. அதிலும் குறிப்பாக நாளிதழ்களால், வார இதழ்களால் உருவாக்கப்பட்டது.  நாவல் என்றாலே புதுமை என்று தான் பொருள்... ப்ரெஞ்சு சமூகத்தில் அதுவரை இலக்கியம் என்பது மேல் தட்டு வர்க்கத்துக்கான கலையாக இருந்தது. நாவல் வந்தபோதுதான் எளிய மக்களின் வாழ்வு முதன்முறையாக பதிவாக ஆரம்பித்தது. திருடர்கள், பாலியல் தொழிலாளிகள், பண்ணை அடிமைகள், கூலிகள், சூதாடிகள், குடியர்கள், ஏமாற்றுகாரர்கள், ஏழைகள் என மாறுபட்ட மனிதர்கள் கதைகளில் பிரவேசித்தார்கள். விக்டர் கியூகோவின் நாவல்களை வாசித்து பாருங்கள். அடித்தட்டு சமூகம் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கும். காமத்தையும் தீவினையையும் நாவலாசிரியர்கள் ஆராயத்துவங்கினார்கள்.  பிரெஞ்சு நாவலில் இருந்தே  ரஷ்ய நாவல்கள் உருவாகின. டால்ஸ்டாயின் ஆதர்சம் டிக்கன்ஸ் மற்றும் ரூசோ தானே. அவர்கள் எழுதியது போன்ற நாவலை தானே எழுத ஆசைப்பட்டார். ஆனால் ரஷ்ய நாவல்கள் மாறுபட்டவை. அவை நிலவெளி சார்ந்த எழுத்தாக உருவாகின.   கோகல், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, துர்கனேவ், லெர்மன்தேவ் கோன்சிரோவ்  போன்றவர்களால் ரஷ்ய நாவல்கள்  புகழ்பெறத்துவங்கின. வரலாற்றை ரஷ்ய நாவல்கள் மீள் உருவாக்கம் செய்தன. 
சிறைவாசிகளை, குற்றவாளிகளை, ஏழைகளை முக்கிய கதாபாத்திரங்களாக உருவாக்கினார்கள். அதிகாரத்தின் ஒடுக்குமுறையை கேள்விகேட்டார்கள். 
ஐரோப்பிய எழுத்தாளர்கள் வரலாற்று சாசகங்களையும் காதலின் துயரையும் திருமணத்திற்கு பிறகும் தொடரும் காதலையும், வாழ்வின் நிஜமான அர்த்ததை தேடும் மனிதனையும் முதன்மைப்படுத்தி நாவல்களை எழுதினார்கள்.
ஜப்பானில் எழுதப்பட்ட கெஞ்சிகதை என்ற நாவல் முரசகி சீமாட்டியால் எழுதப்பட்டது. இதையே உலகின் முதல்நாவல் என்கிறார்கள். டான் குவிகாத்தே என்ற செர்வாண்டிஸ் நாவலே நவீன நாவலின் துவக்கப்புள்ளி. இந்தியாவிற்கு நாவல் ஆங்கிலம் படித்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக வங்காளிகள். அவர்கள் ரொமான்ஸ், வரலாறு, துப்பறியும் நாவல்களை  நகலெடுத்து  எழுதினார்கள் . மெல்ல வங்க நாவல் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள துவங்கியது.  சரத்சந்திரர், தாகூர், விபூதிபூஷன், தாராசங்கர், அதின் பந்தோபாத்யாயா என அசலான வங்க வாழ்க்கையை எழுதுகிறவர்கள் உருவானார்கள்.
ஆரம்பகால நாவலாசிரியர்களான சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் பண்டித நடேச சாஸ்திரி எழுதிய தீனதயாளு, மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் அ.மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம் ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் ஆகிய அனைத்துமே தமிழ் குடும்பத்தின் கதையை தான் விவரித்தன. குறிப்பாக திருமண உறவின் சிக்கலை முதன்மைப்படுத்தின. தமிழ் நாவல் வரலாற்றில் எப்போதுமே இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன. ஒன்று. வெகு ஜன எழுத்தாளர்கள் எழுதுகிற நாவல்கள் மற்றது, தீவிர இலக்கியம் என்று எழுதப்படுகிற நாவல்கள். நாவல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் வடிவம். அது இருபதாம் நூற்றாண்டில் புத்துருவாக்கம் பெற்றது. குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாவல் அடைந்துள்ள வடிவமாற்றம் வியப்பூட்டக்கூடியது. கால்வினோ, சரமாகோ, மார்க்வெஸ், பாவிக், குந்தேரா, உம்பர்தோ ஈகோ போன்றவர்கள் நாவலின் வடிவத்தை முற்றிலும் உருமாற்றியிருக்கிறார்கள்.  தமிழில் நாவலின் வடிவம் குறித்து நாம் அதிக  கவனம் செலுத்தவில்லை. சுந்தரராமசாமி  தனது ஜேஜே சில குறிப்புகள்  நாவலிலும் நகுலன் தனது நாவல்களிலும் செய்த புதுமைகள் புதிய வாசலை திறந்துவிட்டன. குறிப்பாக  நகுலன் எழுதிய நாவல்கள். போஸ்ட் மாடர்ன் தன்மையுடன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். வட்டார வழக்கு நாவல்கள். நவீன நாவல்கள் தலித்நாவல்கள் என தமிழ்நாவல்  வளர்ச்சியடைந்துள்ள போதும் முழுவீச்சை அடையவில்லை என்பதே நிஜம்.
 
 
நாவல் என்பது என்னவாக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?
நிஜத்தில் நாவல் என்பதை  ஒரு சிம்பொனி போல உணருகிறேன்.  நாவல் என்பது ஒரு இசைக்கோர்வை சிம்பொனியில் முதன்மையாக ஒரு இசைக்கருவி இடம்பெறும். அத்துடன் துணை இசைக்கருவிகள் சேர்ந்து கொள்ளும். இசை குறிப்பிட்ட கதியில் உயர்ந்து உச்சத்தை அடைந்து பின்பு தாழ்ந்து பல்வேறு நிலைகளில் சஞ்சரித்து மீண்டும் 
உச்சத்தை அடையும். நாவலையும் அப்படியே காணுகிறேன்.  நாவலின் இயல்பே காலவெளியில் முடிவற்று சஞ்சரிப்பது. குறிப்பாக வாழ்வின் ஆதாரப்புள்ளிகளை குறித்து விவாதிப்பது. கேள்விகேட்பது. விசாரணை செய்வது.  நாவலுக்குள் நாடகத்தன்மை இருக்கலாம். மிகை கற்பனை இருக்கலாம். தத்துவ விவாதம் இருக்கலாம். கனவுத்தன்மை இருக்கலாம். பல்குரல்தன்மையே நாவலின் தனித்துவம். நிலக்காட்சியை வரைய முற்படும் ஓவியனைப் போலவே நாவலாசிரியன் விரிந்த காட்சிகளை தனது சொற்களை கொண்டு வரைய ஆரம்பிக்கிறான். உளவியல் என்ற துறையின் வருகை நாவல்களை மிகவும் பாதித்தது. மனித மனதை ஆராய நாவல் பயன்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின்பு நாவலின் வடிவம் மொழி உருமாறியது. நம்பிக்கையற்ற மனிதர்கள் உலர்ந்த மொழியில் நாவல் எழுத துவங்கினார்கள். காமம், போதைமருந்து உட்கொள்ளுதல், விஞ்ஞான கற்பனைகள் பற்றிய நாவல்கள் மேற்கில் உருவாகின.
நான் ரஷ்ய இலக்கியத்திலிருந்து உருவாகி வந்தவன். அந்த நாவல்களே எனது முன்மாதிரிகள். ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து நான் நுண்மைகளை எழுதுவதற்கு மட்டுமே கற்றுக் கொண்டேன்.
 
 
நிலப்பரப்பு உங்கள் நாவல்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. உதாரணத்துக்கு சஞ்சாரம்...
அது தான் எனது அடையாளம். அலைந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விவரிப்பதே எனது நாவல்கள். ஆகவே பல்வேறு நிலக்காட்சிகள் நாவலில் வந்து போகின்றன. வாழ்நிலம் குறித்தே அதிகம் யோசிப்பவன் நான். ஆகவே எனது நாவல்கள் நிலவெளியின் கதையை தான் அதிகம் பேசுகின்றன.
போரும் வாழ்வும், கரம சோவ் சகோதரர்கள், மோபி டிக் போன்ற மாபெரும் நாவல்கள் தமிழில் இல்லை. தமிழ்நாவல்களில் எண்பதுகளுக்குப் பின் தான் நாவல் என்கிற வடிவம், அதன் மொழி கட்டுமானம் பற்றிய பேச்சு தொடங்கியது. வட்டார வழக்கு அறிமுகம் ஆனது. அதுவும் ஆப்ரிக்க எழுத்திலிருந்து உருவானதுதான். இனக்குழுவின் வரலாற்றை அதன் மொழியில் எழுதுதல் ஆப்பிரிக்க இலக்கியத்தின் முதன்மைப்பணி. அதையே இந்திய இலக்கியமும் உள்வாங்கிக் கொண்டது. .
 
 
பொழுதுபோக்கு நாவல்கள் செத்துவிட்டனவா?
அப்படி இல்லை. பொழுதுபோக்கு நாவல்கள் போதாமையை அடைந்துவிட்டன.  சுவாரஸ்யமாக இலக்கிய நாவல்கள் எழுதப்பட்டுவிட்ட காலமிது. உம்பர்தோ ஈகோவின் நேம் ஆப் தி ரோஸ் நாவலை துப்பறியும் கதையாகவும் படிக்கலாம். இலக்கிய நாவலாகவும் படிக்கலாம். முரகாமியின் நாவல்களும் மிகச்சுவாரஸ்யமானவை. ஆகவே பொழுதுபோக்கு நாவல்கள் தடுமாறத்துவங்கின. அவை தனது மொழியை, கதைகூறலை புத்துருவாக்கம் செய்து கொள்ளவில்லை.
 
 
இதுபோல் தமிழில்..?
இன்று நாவல் வாசிப்பதற்கு என தனிவாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். விற்பனையிலும் நாவல்கள் அதிகம் விற்கின்றன. ஜெயமோகன் மகாபாரதத்தை மிக நீண்ட நாவல்வரிசையாக வெளியிடுகிறார். அது ஒரு சாதனை. பா.வெங்கடேசன் எழுதிய ‘தாண்டவராயன் கதை’ பாகீரதியின் மதியம் இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். ஷோபா 
சக்தியின் Box கதைப் புத்தகம் சமீபத்தில் படித்த முக்கியமான நாவல். நான் ஒன்பது நாவல்கள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு கதைக்களம். ஒருவிதமான எழுத்துமுறையை கொண்டது. யாமம் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்றால் துயில் கிறிஸ்துவர்களின் வாழ்வை விவரிப்பது. இடக்கை அதிகாரத்தை கேள்விகேட்பது. சஞ்சாரம் கரிசல் வட்டார நாதஸ்வரக்கலைஞர்களை பற்றியது. நாதஸ்வரம் பற்றி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் 
சுவாரஸ்யமான நாவல். அது சினிமாவாகவும் வந்து  கொண்டாடப்பட்டது. ஆனால் அதன்பிறகு நாதஸ்வரம் பற்றி விரிவாக யாரும் நாவல் எழுதவில்லை. குறிப்பாக தென்மாவட்ட நாதஸ்வரக்கலைஞர்களை பற்றிய கவனம் பொதுவெளியில் உருவாகவில்லை. அதற்காகவே நான் இந்த நாவலை எழுதினேன்.
 
 
இடதுசாரி நாவல்களை பற்றி...
சோசலிச யதார்த்த வாதமே இலக்கியத்தின் உச்சநிலை என புரட்சிக்குபிறகான ரஷ்யா ஒரு நிலைப்பாடு எடுத்தது. அந்த எண்ணத்தை பிரதிபலிக்கும் நாவல்கள் எழுதப்பட்டன. ஆனால் அவை பெரிய வெற்றியை பெறவில்லை. உலகெங்கும் இடதுசாரி நாவல்களை எழுதியவர்கள் இடது சாரி எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இல்லை. போராடும் மக்களின் வாழ்வை விவரிப்பதில் டிக்கன்ஸ் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் அவர் தன்னை இடதுசாரி என சொல்லிக் கொண்டதில்லை. எமிலி ஜோலாவும் அப்படித்தான். 
 
 
ஆயிரம் பக்கம் இரண்டாயிரம் பக்கம் என நாவல் பக்கங்களை கொண்டு முடிவு செய்யப்படுகிறதா ?
நாவலின் அளவை வைத்து நாவலின் தகுதியை முடிவு செய்யமுடியாது. ஜப்பானிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான யாசுனாரி காவபாட்டாவின்  நாவல்கள் அத்தனையும் நூறு முதல் 150 பக்கம் கொண்டதே. நாவலில்  அவர் தொட்ட உச்சம் அபூர்வமானது. அதே நேரம், ஆயிரம் பக்கங்களுக்கு மேலான கரமசோவ் சகோதரர்கள், போரும் வாழ்வும் போன்ற நாவல்கள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன; கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாவல்கள் விரிவான களத்தை தேர்வு செய்வதில்லை. பெரும்பான்மை தமிழ் நாவல்கள் தமிழ்க் குடும்பத்தின் கதையை தான் சொல்கின்றன. அந்தக்குடும்பம் எந்த ஊரில் உள்ளது. எந்த வகை பின்புலத்தில் உள்ளது என்பதில் தான் வேறுபாடு.  இரண்டாம் உலகப்போரில் தமிழர்களும் கலந்து கொண்டார்கள். ஏன் ஒருவர் கூட அதை நாவல் எழுதவில்லை? அந்தக்காலத்தில் ஊர் ஊருக்கு சர்க்கஸ் நடந்தது. ஆனால் சர்க்கஸ் பற்றி என்ன நாவல் இருக்கிறது. பிஜி தீவிற்கு கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய போனவர்களை பற்றி பாரதி கவிதை எழுதியிருக்கிறார். நாவல் என்ன இருக்கிறது. தமிழர்கள் கல்கத்தாவில் தலைமுறையாக வசிக்கிறார்கள். கல்கத்தாவை பிரதான களமாக கொண்டு எத்தனை தமிழ்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வங்கத்தில் நமது தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டு சிப்பிக்குள் முத்து என்ற ஒரு நாவல் வெளியாகி மிகுந்த புகழ்பெற்றிருக்கிறது. தமிழர்கள் நாசா வில் வேலை செய்து செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் குடும்ப பிரச்சனைகளே முதன்மையாக வருகின்றன. இப்போது தான் இந்தப் போக்கு மாறத்துவங்கியிருக்கிறது
 
 
நீங்கள் திரும்பத் திரும்பப் படிக்கும் தமிழ்நாவல்?
நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன், பா.சிங்காரத்தின் நாவல்கள், நகுலனின் நாவல்கள், சு,ராவின் புளியமரத்தின் கதை, சா.கந்தசாமி யின் 
சாயாவனம், கிராவின் கோபல்லபுரம், தி. ஜானகிராமனின் மோகமுள். வண்ணநிலவனின் கடல்புரத்தில், வாடிவாசல்- சி சு செல்லப்பா, ஒற்றன்- அசோகமித்திரன், பசித்த மானுடம் - 
கரிச்சான் குஞ்சு,  அபிதா- லா ச ராமாமிர்தம் இப்படி நிறைய உள்ளன.
 
 
உங்கள் எழுத்துமுறையை பாதித்த தமிழ் நாவல் எதுவென்று சொல்லலாம்?
நாவல் இல்லை. வண்ணநிலவனின் சிறுகதைகள் என் எழுத்தை பாதித்துள்ளன. தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ் இவர்களின் எழுத்துகளில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
 
 
சஞ்சாரத்தில் ஊரைப்பிரிக்கும் ஒரு சாதியச் சுவர் வரும். அதை உத்தபுரத்தில் நடந்த நிகழ்விலிருந்து பெற்றீர்களா?
எந்த ஊரில்  சாதியசுவர் இல்லை? நம் கண்ணுக்கு தெரியாத சுவர்கள் இருக்கதானே செய்கின்றன.   உத்தபுரம் சுவர்  நம் கண்முன்னால் தெரிந்தது. ஆனால் பல ஊர்களில் அரூபமாக இருக்கிறது.  அது ஒரு சமூக அவலம் அதை நாவலில் சுட்டிக்காட்ட விரும்பியே அந்த சுவரை பற்றி எழுதினேன்.  
 
 
தமிழ் நாவலின் எதிர்காலம்?
ஒவ்வொரு பத்தாண்டிலும் தமிழ் நாவலில் புதிய போக்கு உருவாகும். அப்படி தான் இன்றுவரை தொடர்கிறது. இரண்டாயிரத்திற்கு பிறகும் அப்படி ஒரு புதிய எழுத்துமுறை உருவாகியுள்ளது. இளந்தலைமுறை நாவலாசிரியர்கள் உருவாகி வருகிறார்கள். குறிப்பாக லட்சுமி சரவணக்குமார், சயந்தன், தமிழ்நதி, குணா கவியழகன், ஏக்நாத், இரா.முருகவேள், தமிழ்பிரபா, கரன்கார்க்கி, என சிறந்த நாவல்களை எழுதியவர்கள் நிறைய உருவாகிவருகிறார்கள்.
 
 
தமிழில் எழுதப்படாத நாவல் களங்கள் பற்றி?
தஸ்தாயெவ்ஸ்கியை பற்றி கூட்ஸி என்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பீட்டர்ஸ்பெர்க் நாயகன் என ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அப்படி எந்த தமிழ் எழுத்தாளர் பற்றியும் நாவல் எழுதப்படவில்லை.  கோலார் தங்கவயலுக்கு வேலைக்கு பல்லாயிரம் தமிழர்கள் சென்றனர். அவர்களின் வாழ்க்கையை பற்றி என்ன நாவல் வந்துள்ளது ? சங்க இலக்கியம் பற்றி, சிலப்பதிகாரம் பற்றி, தமிழர்களின் கலைகள் பற்றி எவ்வளவு நாவல்கள் வந்திருக்கலாம்? வரவில்லையே.. தமிழகத்தில் முக்கியமான ஆதீனங்கள். சைவமடங்கள் உள்ளன அவற்றை பற்றி யார் நாவல் எழுதியிருக்கிறார்கள்?  சென்னையைப் பற்றி மட்டுமே நூறு நாவல்கள் எழுதலாம்.. எழுதப்படவில்லையே! தமிழ் நாவல் செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது.
 
 
(ஜனவரி 2019 அந்திமழை இதழில் வெளியானது)
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...