அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி! 0 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! 0 ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 0 ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி! 0 கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 0 நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்! 0 எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்! 0 ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல் 0 திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா! 0 திமுக அரசு பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 0 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி! 0 தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா! 0 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம் 0 நீட் ஒழிப்பு: அதிமுகவால் முடியாதது, திமுகவால் முடியுமா?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மித்தாலி ராஜ்: தூக்கத்தைத் தொலைத்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவர்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   06 , 2019  16:06:12 IST


Andhimazhai Image

இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என்பதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது. யாரும் ஊக்குவிக்க மாட்டார்கள். இப்படி ஏகப்பட்ட தடைகள். இந்தத் தடைகளை எல்லாம் கடினமாகப் போராடி படிக்கட்டுகளாக மாற்றி சாதனை படைத்தவர்  மித்தாலி ராஜ். அண்மையில் டி20 போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதை அறிவித்த அவர், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு கவனம் செலுத்தவே இந்த முடிவு என்கிறார்.

 

மித்தாலியின் தந்தை துரைராஜுக்கு நாகப்பட்டணம்தான் சொந்த ஊர். இந்திய விமானப்படையில் பணியாற்றி, செகந்தராபாத்தில் செட்டில் ஆனவர் அவர். எட்டுவயது வரை பாரத நாட்டியம் பயின்ற மித்தாலிக்கு அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழுவது பிடிக்காது. இப்படியே விட்டால் படு சோம்பேறியாகி விடுவாள் மகள் எனக் கருதிய தந்தை அதிகாலையில் தன் மகன் மிதுனின் கிரிக்கெட் பயிற்சிக்கு மகள் மித்தாலியையும் அழைத்து சென்றார். மைதானத்தின் ஓரமாக அமர்ந்து வீட்டுப்பாடங்களை செய்துவிட்டு மித்தாலியும் மட்டையை எடுத்து பந்தை அடிப்பார். அப்போது அவரைக் கவனித்த பயிற்சியாளர், மித்தாலியிடம் திறமைகள் இருப்பதைக் கண்டறிந்தார். அதிலிருந்து அவரது வாழ்க்கை மாறிவிட்டது.

 

தொடர்ந்து பயிற்சிகள் –ஆட்டங்கள் – வெற்றிகள் என்று மாறிப்போன அவரின் பயணம் அவரை ஆந்திரப் பிரதேச அணிக்காக 1995-96 இல் 13 வயதிலேயே ஆடும் நிலைக்குக் கொண்டு சென்றது. அப்போது அவருக்கு கோச்சாக இருந்த சம்பத்குமார், துரைராஜிடம் ஒருநாள் சொன்னாராம் “என் மீது நம்பிக்கை வையுங்கள். இந்தப் பெண்ணை நிச்சயம் இந்திய அணிக்குக் கொண்டு போக முடியும்”. இது அதீத நம்பிக்கையில் பேசும் பேச்சு என்று துரைராஜ் கருதினாலும், கோச் சொன்னது பலிக்கவே செய்தது.

 

பள்ளிவிட்டு வந்து தினமும் ஆறுமணி நேர பயிற்சி, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சாதனை எனக் கடும் உழைப்பை செலுத்திய அவர் 1997 இல் இங்கிலாந்து செல்லவிருந்த இந்திய அணியில் இடம் பெறும் உத்தேச வீராங்கனைகளின் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.   வேறு சில காரணங்களால் வாய்ப்பு நழுவியது.

 

1997-ல் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்தது. ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் ஆடின. அந்த உலகக் கோப்பையில் ஆடியதோடு சரி அதன் பிறகு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அடுத்த சர்வதேச போட்டியில் ஆடியது. அது ஒரு புது அணி. அந்த அணியில் மித்தாலிக்கும் இடம் இருந்தது.  அப்போது அவருக்கு வயது பதினாறு. இங்கிலாந்தில் நடந்த தனது முதல் ஆட்டத்தில் அவர் எடுத்தது 114 ரன்கள். வலுவான நிலையில் அப்போது இருந்த அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டம் அது. பெண்கள் கிரிக்கெட் தானே என்ற கீழான பார்வை நிலவிய சூழலில் கைதட்டி ஆதரிக்க இந்திய ரசிகர் யாரும் இல்லாத இங்கிலாந்து மைதானத்தில் அவரின் ஆட்டம்தான் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.

 

அடுத்தடுத்து அவர் ரன்களைக் குவித்தவண்ணம் இருந்தார். 203 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய மித்தாலி அவற்றில் எடுத்த மொத்த ரன்கள் 6720. அதில்  7 சதங்கள்  52 அரை சதங்கள். 18 முறை ஆட்ட நாயகி.

 

அவரின் திறமை அவரை அணியின் கேப்டனாக்கியது. 2005 உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம் வரை அணியைக் கொண்டு சென்றார்.

 

அப்போது மகளிர் கிரிக்கெட் அணி இருந்த நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. டெண்டுல்கர், விராத் கோலி ஆகியோருக்கு உள்ளதைப் போன்று  ரசிகர்களோ, ஸ்பான்சர்களோ இந்த அணிக்கு கிடையாது. சர்வதேச போட்டியில் ஜெயித்து வந்தபோதிலும் பெண்கள் அணியைக் கண்டுகொள்ள இங்கே ஆளே இல்லை. ஊடக வெளிச்சம் கொஞ்சமும் இல்லை. ஆண்கள் அணிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்த பி.சி.சி.ஐ பெண்கள் அணிக்கு சம்பளம் தரக் கூட ரொம்ப யோசித்தது. அணிக்குத் தேவையான நல்ல கிரிக்கெட் சாதனங்களை வழங்க அதற்கு மனமில்லை. கைக்காசை செலவு செய்து பெண்கள் அணியினர் தேவையான கிரிக்கெட் கிட்களை வாங்கிக் கொண்டனர். சொந்தமாக கோச் அமர்த்திக் கொண்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். மித்தாலியின் தந்தை தனது சேமிப்பை எல்லாம் கரைத்துதான் அவருக்கு கிரிக்கெட் பயிற்சி தந்தார்.

 

கிரிக்கெட்டைப் பொறுத்த அளவில் எந்த அளவுக்கு அதிகமான ஆட்டங்களில் இறங்குகிறார்களோ அந்தளவுக்கு ஆட்ட நுணுக்கங்களும் சவால்களை சந்திக்கும் அனுபவங்களும் கைவரப் பெறும். பெண்கள் கிரிக்கெட்டை ஏளனமாக பார்க்கும் கண்ணோட்டம் நிலவும் இந்திய சூழலில் பெண்கள் அணிக்கு ஸ்பான்சர் போதிய அளவில் இல்லாததால் குறைவான எண்ணிக்கையில்தான் மேட்ச்கள் நடத்தப்பட்டன. 2017 வரை எந்த சேனலும் இவர்களின் ஆட்டத்தை நேரடியாக ஒளிபரப்பவில்லை. இவை அனைத்தையும் எதிர்த்து கேள்வி எழுப்பினார் அவர்’.

 

ஒருநாள் போட்டிகளில் மின்னிய அவருக்கு டெஸ்ட் போட்டிகள் ஆரம்பத்தில் கடும் தோல்விகளையே தந்தன. முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். தனது கிரிக்கெட் பயணத்தில் எதிர்ப்படும் சவால்கள் அனைத்தையும் வென்றால்தான் தன் பெயர் நிலைக்கும் என்ற வைராக்கியத்தோடு அடுத்தடுத்து அணிகளை தயார்ப்படுத்தினார். டெஸ்ட் ஆட்டத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார். உலக அளவிலான மகளிர் டெஸ்ட் போட்டிகளில் 2002  வரை ஒரே ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 209 தான். இந்த சாதனைக்கு சொந்தமானவர் கரேல் ரோல்டன். இங்கிலாந்தில் 214 ரன் எடுத்து மித்தாலி புதிய சாதனையை உருவாக்கினார். (பாகிஸ்தான் வீராங்கனை கிரண் இச்சாதனையை 2004 இல் முறியடித்தார்).

 

டி20 ஆட்டத்தில் 2000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற புகழை அடைந்த அவர்  89  ஆட்டங்கள் ஆடி 2364 ரன்களைக் குவித்தார். அதிகபட்சமாக 97 ரன்களும், அரைசதங்கள் 17 ம் அந்த சாதனையில் அடக்கம்.

 

இந்திய அரசு 2003 இல் அர்ஜுனா விருதையும் 2015 இல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரப்படுத்தியது.

 

 

சர்ச்சைகள்

 

 2018 டி20 உலகக் கோப்பையில் அரை இறுதியில் அவர் விலக்கப்பட்டார். அந்த ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் திட்டமிட்டு தன்னை வெளியேற்றியதாக மித்தாலி வெளிப்படியாக குற்றம் சுமத்தினார். மூன்று முறை உலகக் கோப்பைக்கு கேப்டனாக இருந்த அவரின் அண்மைக்கால ஆட்டங்கள் மந்தமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டார் என்று பவார் சொன்ன காரணம் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. கவாஸ்கர் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இப்படிப்பட்ட காரணங்களைக் காட்டி விராத் கோலியைக் கூட நீக்க முடியும். செய்யத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் மித்தாலியிடம் “உங்களுக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?” எனக் கேட்டார். சட்டென்று “எந்த ஆண் கிரிக்கெட் ஆட்டக்காரரிடமாவது உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார் எனக் கேட்பீர்களா?” எனக் கேள்வியைத் திருப்பினார். இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ரசிகர்கள் வினையாற்றினர்.

 

தனது சக கிரிக்கெட் வீராங்கனைகளுடன் கவர்ச்சியான மேலாடை அணிந்தபடி அவர் எடுத்துக் கொண்ட படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டதை நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்தனர்.

 

சாதனைகள் பல படைத்துவிட்ட, 37 வயதைத் தொடும் மித்தாலி, தனது கிரிக்கெட் சாதனைக்காக தொலைத்துவிட்ட சிறார்ப் பருவம் குறித்து வேதனைப்படுகிறார். “அப்பா என்னை ஒரு பந்தயக் குதிரையைப் போல் வளர்த்தார். பள்ளி முடிந்தால் கிரிக்கெட். கிரிக்கெட். கிரிக்கெட். எனக்கு பள்ளியில் நண்பர்களே கிடையாது. கிரிக்கெட்டில் கிடைத்த நண்பர்கள் மட்டுமே. அந்த பள்ளி நாட்களை, நட்பு வட்டங்களைத் தொலைத்து விட்ட ஏக்கம் இன்னும் உள்ளது” என்கிறார்.    

 

தடை பல கடந்து வெற்றிக் கொடி நாட்டிய இந்த வரலாறு , ‘பயோ பிக்’காக வரவுள்ளது. நடிகை டாப்ஸி அப்படத்தில் மித்தாலியாக நடிக்கிறார்.

 

மித்தாலி இந்திய அணிக்கு ஆட வந்த அதே வயதில் வந்தவர்தான் சச்சின். அவர் பத்தாயிரம் ரன்னுக்கு மேல் குவித்தது பெரும் சாதனைதான். அவரை எல்லாத் தரப்பும் கொண்டாடியது. ஆனால் போதிய நிதி இல்லாமை, ஸ்பான்சர்கள், ரசிகர்களின் புறக்கணிப்பு போன்ற தடைகளை எல்லாம் தாண்டி,  டி.20இல் அதிக ரன், ஒருநாள் போட்டிகளில் (203 போட்டிகள் மட்டுமே) 6720  ரன் என்று தடம் பதித்த மித்தாலியின் சாதனைகள் நிச்சயம் மிகப் பெரியதுதான்.

 

-கற்பகவிநாயகம்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...