அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அடேங்கப்பா ..ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே!- பாலையா என்னும் மகாநடிகர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   15 , 2019  15:46:30 IST


Andhimazhai Image

தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்த யாராலும் மறக்கமுடியாத வசனம் இது! ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு ரயிலுக்குள் உட்கார்ந்திருக்கும்போது சி.கே.சரஸ்வதி தனது தோள்களைக் குலுக்கியபடி குரலை உயர்த்திக் கூறுவார். “உக்காந்திருக்கிற ஆம்பளைங்கதான் ஒதுங்கிக்கிட்டாதான் என்னாவாம்! என்னமோ இவங்கதான் காசைக் கொடுத்து ரயிலையே விலைக்கு வாங்கின மாதிரி”. இதற்கு  பாலையாவிடமிருந்து வரும் சூடான பதில்தான்  “அடேங்கப்பா ..ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே!”

 

உடன் நடித்த நடிகர்களால் சிரிப்பை அடக்கமுடியாமல் 4 முறை ரீடேக் வாங்கியது இந்தக் காட்சி. ஐந்தாம் முறையும் யாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. கட் சொல்ல வேண்டிய டைரக்டர் ஏ.பி.நாகராஜனையும் காணோம். செட்டுக்கு வெளியே போய் கர்ச்சீப்பால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் அவர்,

 

பாலையாவின் தனித்துவமான இதைப் போன்ற வசனங்கள் மக்களின் அன்றாட உரையாடலில், வடிவேலுவின் வசனங்களைப் போல் நிரந்தமாகக் கலந்துவிட்டன. “என்னடா இது. இந்த மதுரைக்கு வந்த சோதனை?” என்ற திருவிளையாடல் வசனமும் அப்படித்தான்..

 

 

கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என திரையுலகில் சகல பாத்திரங்களிலும் முத்திரை பதித்த டி.எஸ்.பாலையா பிறந்து 105 ஆண்டுகளாகின்றன. தூத்துக்குடி மாவட்டம் (அப்போது அது திருவேல்வேலி ஜில்லா) சுண்டக்கோட்டை என்ற பட்டிக்காட்டில் பிறந்த பாலையா, ஊர்ப்பெயரை இனிசியலாகப் போட்டுக்கொள்ளும் வழக்கப்படி திருநெல்வேலி சுப்பிரமணிய பிள்ளை பாலையா (T.S.பாலையா) என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை தூத்துக்குடிக்கு சர்க்கஸ் பார்க்க சென்ற சிறுவன் பாலையாவுக்கு அங்கே உடலை வளைத்து சாகசம் செய்வோர் வாங்கும் கைதட்டல், சர்க்கஸில் சேர்ந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆவலைக் கிளறிவிட்டது. வீட்டை விட்டு வெளியேறிய அவரை, சர்க்கஸில் சேர்த்துவிடுவதாகச் சொல்லி  மதுரை, மானாமதுரை என அலைக்கழித்த நண்பர், இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு கம்பி நீட்டினார். பாலையா மானாமதுரையில் காப்பி கிளப்பிலும் கசாப்புக் கடையிலும் வேலை பார்த்தார்.

 

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியிலிருந்து வெளியேறிய சிலர்  பால மோகன நாடக சபாவை ஆரம்பித்திருந்தனர். சர்க்கஸில் கிடைக்கும் கைதட்டல் நாடகத்திலும் கிடைக்குமே என்று கணக்குப் போட்டு மதுரைக்கு வந்து சேர்ந்த, பாலையாவை அந்த சபா வரித்துக் கொண்டது. அங்கே கதாசிரியராகவும் நடிப்பு பயிற்சியாளராகவும் திகழ்ந்தவர், நடிகர் எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார். இவருக்கு பாலையாவின் திறமை மீது நம்பிக்கை இருந்தது.

 

அங்கே இவருக்கு நெருங்கிய நண்பரானவர் எம்.ஆர்.ராதா. கம்பெனி தந்த சம்பளம் போதவில்லை, இருவருக்கும். முதலாளியிடம் உயர்த்தக் கோரினர். முதலாளி கேட்கவில்லை. அன்று மாலை நாடகத்தை ஆரம்பிக்க திரைச்சீலை மேலே ஏறியது. ஆனால் முதல் சீனில் வர வேண்டியவர்கள் மேடைக்கு வரக் காணோம். நாடகசபைக்கு சொந்தமான கிணற்றுக்குள் ராதாவும் பாலையாவும் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார்கள். கம்பெனி முதலாளி “மேலே ஏறி வாங்கப்பா, நாடகத்தை ஆரம்பிக்கணும்” எனக் கெஞ்ச, கிணற்றுக்குள் இருந்தபடியே  சம்பள பேரத்தை முடித்தனர் இருவரும்.

கந்தசாமி முதலியாரின் பதிபக்தி நாடகத்தில் பாலையா பலமுறை நடித்திருந்தார். இந்தக் கதையைப் போன்றே அச்சு அசலான இன்னொரு கதையை சதிலீலாவதி என்ற பெயரில் எஸ்.எஸ்.வாசன் எழுதி இருந்தார். எல்லிஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கர் அதனைத் திரைப்படமாக இயக்கினார். இப்படத்தில் கந்தசாமி முதலியாரின் சிபாரிசினால் வில்லனாக அறிமுகமானார் பாலையா. எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும முதல் படம் இதுதான். பாலையாவின் நடிப்பை “திருப்தியளிக்கும் வில்லன் பாத்திரத்தை செய்தவர்” என இந்து பத்திரிக்கை பாராட்டியிருந்தது.

 

அடுத்தடுத்து சின்ன சின்ன ரோல்கள் வந்தன. எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீராவில் ஒரு முக்கிய பாத்திரத்தை செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்தார், எம்.ஜி.ஆர். ஆனால் பாலையாவுக்குதான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. எம்.ஜி.ஆர் மனம் வருந்தினாலும், பாலையாவின் நடிப்பைப் பார்த்தபின் “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாக செய்திருக்க முடியாது” என்று தனது சுயசரிதை (நான் ஏன் பிறந்தேன்)யில் எழுதினார்.

 

பூலோக ரம்பை, ஆர்யமாலா என அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் எதிர்பார்த்த பெயரும் புகழும் கிடைத்துவிடவில்லை. விரக்தியில் சாமியாராகி புதுச்சேரிக்குப் போய்விட்டார், பாலையா. அங்கே படப்பிடிப்புக்கு வந்திருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த சாமியாரை அடையாளம் கண்டு கொண்டார். தன் காரில் சாமியாரைத் திணித்துக் கொண்டு ஊர் திரும்பி, பர்மா ராணி படத்தில் வாய்ப்பை வழங்கினார். அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

 

அண்ணா எழுதிய வேலைக்காரி (1949) இல் இவர் ஏற்ற பகுத்தறிவாளர் கதாபாத்திரம், அதன் பின் திரைக்கு இதைப் போன்ற பாத்திரங்களை செய்த எஸ் எஸ் ஆர், சிவாஜி ஆகியோருக்கு ரோல்மாடலாக ஆனது.  தெய்வத்தைக் கிண்டல் செய்வதாக நடித்து விட்டு, தனது குலதெய்வம் சோணேஸ்வரரிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்வார் டி.எஸ்.பாலையா. சித்ரா, இரு சகோதரர்கள் ஆகிய படங்களில் நாயகன் பாலையாதான்.

 

வெறும் பேச்சல்ல என்ற படத்தில் இவருக்கு ஜோடி பத்மினி. ஹீரோக்களாக சில படங்கள் செய்திருந்தாலும் அவர் தனது தனிச்சிறப்பை நிலை நாட்டியது வில்லன் பாத்திரங்களில்தான்.

 

நகைச்சுவை கலந்து வில்லன் பாத்திரத்தை செய்த பாணி பாலையாவுக்கு பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை சம்பாதித்துத் தந்தது. மதுரை வீரனில் நரசப்பனாக வரும் அவர், எம்.ஜி.ஆரை வெட்ட வாளை உருவ முயல்வார். அதற்கு எம்.ஜி.ஆர் காட்டும் எதிர்வினையைக் கண்டு பம்மும் பாலையா தனது அல்லக்கையிடம் “இன்னைக்கு என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை எனப் பதில் வந்ததும் “ஆஹா. இன்னைக்கு கத்திய கையால தொடப்படாதப்பா” என்று சொல்லி வாளை உறைக்குள் போடுவார் அவர்.

 

நாகேஷ், பாலையாவுக்கு கதை சொல்லும் (‘காதலிக்க நேரமில்லை) காட்சிக்கு நிகரான ஒன்று தமிழில் இன்னும் வரவில்லை. நாகேஷ் கதையை சொல்லச் சொல்ல, ஆர்வம்,பயம்,திகில்,உளறல் என அடுத்தடுத்து மாறும் முகபாவனைகளை அவர் அனாயசமாக செய்திருப்பார்.  “ஒரு பொண்ணு..அவளுக்கு ஒரே ஒரு கண்ணு” என்று நாகேஷ் விவரிக்க, மிரண்டு பிதற்றும் பாலையா “என்னது..ஒரு பொண்ணு உள்ள கண்ணா” என்பார். தியேட்டரே சிரிப்பால் அதிரும்.

 

திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராக நடிக்க பாலமுரளி கிருஷ்ணா முதலில் வாய்ப்பு கேட்டார். ஆனால் அப்பாத்திரத்துக்கு ஏற்கெனவே பாலையா முடிவாகி விட்டதால், அவர் ‘ஒரு நாள் போதுமா’ பாடலை மட்டும் பாடினார். பின்னாளில் பாலமுரளி மனம் விட்டு சொன்னார் “என்னால் பாலையா செய்திருப்பதைப் போல் ஒருக்காலும் செய்திருக்க முடியாது. என் பாட்டைத் தூக்கி உச்சிக்குக் கொண்டுபோனது அவரோட அப்பீல்தான்”. பாகவதரின் மொத்தத் திமிரையும் உடல்மொழியில் இறக்கியிருந்தார் பாலையா.  

 

தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக உண்மையிலேயே தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டார். தினமும் அதிகாலையில் எழுந்து தனி ஆவர்த்தனம் வாசித்துப் பழகினார். அந்தளவுக்குத் தொழிலில் ஆழ்ந்த பக்தி அவருக்கு.

 

நடிப்போடு மட்டும் அவர் தனக்கு எல்லை போட்டுக் கொள்ளவில்லை. அவரால் கர்நாடக சங்கீதம் பாடமுடியும். இசை அமைக்க முடியும். பாடல் எழுதத் தெரியும். மலையாளம், உருது ஆகிய மொழிகளைக் கற்று புலமை பெற்றிருந்தார். மலையாளத்தில் தனது நாட்குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

 

சொந்தமாக சினிமா தயாரிப்பு கம்பெனி வைத்திருந்தார். கதை திரைக்கதை எழுதி ஒரு படமும் தயாரித்தார். சிவாஜி தொடர் கொலைகளை செய்பவராக வரும் சுவீகாரம் என்ற அந்த சஸ்பென்ஸ் திரில்லர், ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ திரைக்கு வரவில்லை. சினிமாவில் பிசியாக இருந்தாலும் சொந்தமாக நாடகக்குழு வைத்து தொடர்ந்து அதில் இயங்கினார். அவரே நாடகங்களை எழுதவும் செய்தார்.

 

பல ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாலையாவின் வாழ்வில் மூன்று திருமணங்கள். ஏழு வாரிசுகள். 1972 இல் ஓய்வு வயதை எட்டும் முன்பே 58 வயதிலேயே இறந்துவிட்டார். தனது பெயரை என்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் வகையில் சிறப்பான பங்களிப்பை தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பாலையாவின் வாரிசுகளில் ஜுனியர் பாலையா, மனோசித்ரா ஆகியோர் சில படங்களில் நடித்தனர். 

 

ஐந்தாண்டுகளுக்கு முன், காதலிக்க நேரமில்லை படத்தின் பொன் விழா வந்தபோது அப்படத்தை மறு ஆக்கம் செய்ய இயக்குனர் மனோபாலா முயன்றுள்ளார். அப்போது உயிருடன் இருந்த அப்பட இயக்குநர் ஸ்ரீதரிடம் அனுமதி பெறப் போயுள்ளார். “ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்களைப் போட்டாச்சா?” எனக் கேட்ட ஸ்ரீதரிடம், மனோபாலா தலையை ஆட்டியுள்ளார். “பாலையா ரோலை யார் பண்ணப் போறாங்க?” என்று அவர் கேட்டதும் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே இருந்த மனோபாலா, மறு ஆக்க உரிமையை ஸ்ரீதரிடமே திருப்பித் தந்து விட்டாராம். இட்டு நிரப்ப முடியாத இடம் என்பது இதுதான். அதில் ஒரு பாலையா மட்டுமே இருக்க முடியும்.

 

 

-கற்பக விநாயகம்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...