அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சொதப்பல் பக்கம்: திராவிட இயக்கங்களும் கட்சிகளும்- பாமரன்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2013  15:51:01 IST


Andhimazhai Image

எங்கியோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா.. என்கிற கதையாய் எவரெவர்தான் திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்பதற்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இந்த உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது எதுவுமேயில்லை என்பது வேறு விசயம். ஆனால் திராவிடர் இயக்கத்தைத் தோலுரித்து தொங்கவிடுகிறேன் பார் என்று களத்தில் குதிக்கும் பல ஞானசூன்யங்களுக்கு திராவிடர் இயக்கம் என்பது எது? திராவிட கட்சி என்பது எது? என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாததுதான் இந்த நூற்றாண்டின் சூப்பர் நகைச்சுவை. திராவிடர் இயக்கத்திற்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையே பண்பாட்டுத் தளத்தில்... செயல்பாட்டுத்தளத்தில்.. அணுகுமுறைகளில்... என எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு. சுற்றிவளைக்காமல் சுருக்கமாகச் சொன்னால்...


தனது தங்கையோ துணைவியோ யாராயினும் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து சிறைசெல்ல துணை நிற்பது திராவிட இயக்கக்கூறு.
கணவனோ புதல்வனோ “வெற்றிவாகை” சூடிவர நெற்றித்திலகமிட்டு வழியனுப்பி வைத்துவிட்டு வாசலோடு நின்றுவிடுவது திராவிட கட்சிக்கூறு.


அடுத்த தலைமுறையின் நலனுக்காக தன்னையே பலி கொடுப்பது திராவிட இயக்கப் பண்பு.
அடுத்த தேர்தலின் நலன்களுக்காய் தலைமுறையையே பலி கொடுப்பது திராவிட கட்சிப் பண்பு.


மாதவி வீட்டிலேயே விருந்துண்டு கிடந்த கணவனுக்காக காத்திருந்த கண்ணகியின் காற்சிலம்பையும் கற்பையும் போற்றிப் புகழ்பாடுவது திராவிட கட்சியின் “இலக்கியம்”.
 தன் கணவன் கொல்லப்பட்டதற்காக அக்கினி பகவானிடம் கண்ணகி  மதுரையைச் சுட்டெறி எனக் கட்டளையிட்டால் அது அவள் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்கு புத்தி வேண்டாமா? ஒரு பெண்பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா? (அதுவும் “தமிழ்நாட்டு யூதர்களை” மட்டும் கொளுத்தாமல் விதிவிலக்கு அளித்து விட்டு...) ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கிற அறிவு வேண்டாமா? என இலக்கியங்களையும் இதிகாங் களையும் கேள்விக்குள்ளாக்குவதுதான் திராவிட இயக்கத்தின் இலக்கணம்.


ஆணோ பெண்ணோ... திருமணம் செய்துகொள்வதும்... செய்து கொள்ளாமல் இருப்பதும் அவரவர் தனிநபர் உரிமை குறித்த விசயங்கள். இதைக்கூட பகுத்தறியாமல் திருமண உறவே சமூக வாழ்க்கைக்கான தகுதி என கற்பிதம் செய்து கொண்டு  எதிர்கட்சித் தலைவியை காயப்படுத்துவது திராவிட கட்சி “கலாச்சாரம்”.


பெண்ணினம் விடுதலை அடைய வேண்டுமானால் ஆண் என்ற பதமே அழிய வேண்டும் என்பது திராவிட இயக்கக் கலாச்சாரம்.
பெரியார் வழி வந்ததாய் சொல்லிக் கொண்டு ”சுமங்கலி” என்கிற பெயரில் பத்திரிகை நடத்துவது திராவிடக் கட்சியின் “பகுத்தறிவு”.


”கணவனை இழந்தவர்கள்... தாசிகள் என்று தம்மைக் கருதிக் கொள்வோர்.. தனித்து வாழும் பெண்கள்... என அனைவரும் செங்கல்பட்டு மாநாட்டுக்கு அவசியம் வரவேண்டும்” என்று 1930 களிலேயே ஒட்டு மொத்த பெண்ணினத்திற்கும் அழைப்பு விடுத்தது திராவிட இயக்கப் பகுத்தறிவு.


பச்சையாகச் சொன்னால் 1947 லேயே தந்தை பெரியாரோடு இந்திய சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வதில் முரண்பட்டு.. 1949இல் பிரிந்து... பிற்பாடு விரிந்து கிளை பல பரப்பி நிற்பவை யாவும் திராவிடக் கட்சிகள். திராவிட இயக்கங்கள் அல்ல.


பெரியாரின் திராவிட இயக்கம் முன் கூட்டியே கணித்ததை.. நினைத்ததை... வலியுறுத்தியதை... போராட்டங்களால் நெருக்கடி கொடுத்ததை பல வேளைகளில் திராவிடக் கட்சிகள் நிறைவேற்றித் தந்தன என்பதும் உண்மை. ஆனால் இயக்கத்திற்கும் கட்சிக்கும் இடையே உள்ள குணாம்சங்கள் வேறு வேறு.

ஆக...
எது இயக்கம்? எது கட்சி? என்கிற அடிப்படைப் புரிதல்கள் ஏதுமின்றி பொத்தாம்பொதுவாக உளறிக் கொட்டுவதுதான் விமர்சனம் என்றால்... இந்த விளையாட்டுக்கு நான் வரமாட்டேன்... நான் அம்பேல்.
போதாக்குறைக்கு திராவிடம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில்.. இதிகாசத்தில் எங்கிருக்கிறது காட்டு... என்ற சவால்கள் வேறு.


திராவிடம் என்ற சொல் கிடக்கட்டும்... முதலில் பண்டைய தமிழ் இலக்கியத்தில் இதிகாசத்தில்..
உழைக்கும் மக்களைப் பற்றி... அவர்களது வலிகளைப் பற்றி... எங்கு இருக்கிறது? வீடு தேடி வந்த அடியார்க்கு பிள்ளைக் கறி சமைத்துப் போட்ட கதைகளும்.. அந்தணருக்கு தன் மனைவியையே சீதனமாகக் கொடுத்த இயற்பகை நாயனார் கதைகளும் அன்றி வேறென்ன இருக்கிறது?


அல்லது இதிகாசத்திலும் இலக்கியத்திலும் இருந்துவிட்டதாலேயே அது ஏற்புடையதாகி விடுமா?


“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” 
என்று தொல்காப்பியம் சொல்வதனால் மனிதகுலத்தைப் பாகுபடுத்தும் மேலோர்-கீழோர் எனும் அபத்தங்களை நாமும் ஏற்றுக் கொண்டாக வேண்டுமா என்ன?
திருவள்ளுவரது 1330 குறள்களில் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையே இல்லை என்பதற்காக தமிழ் மொழியே இல்லை என்றாகிவிடுமா?


இல்லாத திராவிடத்தை ஏனய்யா பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள்? தெலுங்கர்களோ... மலையாளிகளோ... கன்னடர்களோ... யாராவது தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்களா?

கேள்வி நியாயம்தான். அழைத்துக் கொள்வது மட்டுமில்லை குடிக்க நீர் கேட்டால்கூட குப்புறப்படுக்கவைத்து கும்மாங்குத்து குத்துகிறார்கள். மறுக்க முடியாத உண்மை.
ஆனால் தெலுங்கர்களோ... மலையாளிகளோ... கன்னடர்களோ... இவர்களது நதிமூலம் எது? தமிழ்தானே... தமிழில் உள்ள எனக்கு-உனக்கு என்பதுதானே மலையாளத்தில் எனிக்கி உனிக்கி என்றும்... தெலுங்கில் நாக்கு நீக்கு என்றும்...கன்னடத்தில் நதிக்கே நிதிக்கே என்றும் ஆயிற்று. மற்ற மூன்று மொழிகளிலும் உள்ள சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டால் மிச்சம் இருப்பது சுத்தத் தமிழ்தானே?.
மொழித் தாய்க்குப் பிறந்த மூன்று பிள்ளைகள் தன்னைக் கொண்டாடவில்லை என்பதற்காக பிள்ளைகளில்லை என்றாகி விடுமா என்ன? தாம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் மறக்கலாம்.. மறுக்கலாம். நாம் எப்படி மறக்க? மறுக்க?


இதைத்தானே தந்தை பெரியாருக்கு முன்னரே நம் மக்களது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக தொண்டை வரளக் குரல் கொடுத்து அதற்காக லண்டனுக்குப் போய் அங்கேயே அனாதையாகச் செத்துப் போன டி.எம்.நாயரும் சொன்னார்.


திராவிடர் என்பதை எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் திராவிடம் பொய். சரி..
தமிழர்... தமிழ்த் தேசியம் என்கிறோம்...
ஆனால் தமிழன் கோயிலுக்குள் நுழைய தமிழனே தடை. தமிழன் பிணத்தை தெருவில் கொண்டு செல்ல தமிழனே தடுப்பரண். தமிழன் தமிழச்சியை மணம் முடிக்க முடியாமல் தண்டவாளம் அருகே பிணமாய்...

தமிழன் ஜீன்ஸ்சும், கூலிங்கிளாசும் போடுவதுகூட கூடாதென்கிறான் இன்னொரு தமிழன்..


அப்படியாயின் தமிழன் என்பதும் தமிழ்த்தேசியம் என்பதுவுமே பொய்யா?


இது பதிலுக்கு பதில் லாவணியல்ல. சேர்ந்து பயணிக்க எவையெவை தடையோ அதை நீக்கி விட்டு நீண்ட தூரம் பயணிக்கவே இக்கட்டுரை.


ச்ச்சும்மா சில்வண்டுகளே இங்கே சிலிப்பிக் கொண்டு திரியும்போது இலக்கிய மேதைகளால் இளைப்பாறிக் கொண்டிருக்க முடியுமா? முடியாதுதான். அதுதான்... பெரியாருக்கு இலக்கியம் தெரியுமா? திராவிடம் எங்கிருக்கிறது? ஆரியம் திராவிடமே பிரிட்டிஷ்காரன் பிரித்துப் போட்டுவிட்டுப் போன சூழ்ச்சி... என்று தூங்கி எழுந்து தொடைதட்டிக் கிளம்பியிருக்கிறார் ஒரு துர்வாசர். திராவிட இயக்க வெள்ளத்தில் “ஆழம்” பார்க்கத் துணிந்த அந்த இலக்கியவாதி ஒரு மென்மனதுக்குச் சொந்தக்காரர்.


அவரும் அவரது சகபாடிகளும் பெரியார் குறித்தும்... திராவிட இயக்கம்/கட்சியின் இலக்கிய அறிவு குறித்தும் என்னென்ன சொன்னார்கள்.? அதற்கு அந்தக் காலத்திலேயே பெரியார் வைத்த ஆப்புகள் என்னென்ன? என்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ள இன்னும் 30 நாட்கள் காத்திருக்க வேண்டும் நாம். அதாவது அடுத்த அந்திமழை வரும்வரை.

(அந்திமழை செப்டம்பர் 2013 இதழில் வெளியான கட்டுரை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...