வெள்ள நீரில் கால் நனையாமல், பார்வையாளர்கள் அமரும் இரும்பு சேர் மீது திருமாவளவன் ஏறி நடந்து காருக்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வீட்டினுள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. ஆனால் வெளியே செல்ல கிளம்பிய திருமாவளவன் வெள்ள நீரில் கால் நனையாமல் இருக்க, அங்கிருந்தவர்கள் ஒரு அதகள ஏற்பாட்டை அவருக்காக செய்தனர். அதன்படி பார்வையாளர்கள் அமரும் இரும்பு சேர்களை ஒவ்வொன்றாக அடுக்கி அவருக்கு பாதை அமைத்து தந்தனர்.
அந்த சேரின் மீது ஏறி சிறிது தூரம் நடந்த பின்பு அந்த இரும்பு சேரின் மீது திருமாவளவன் நின்றிருக்க அங்கிருந்தவர்கள் வெள்ளத்தில் இறங்கி சேரை இழுத்து வந்து வாசல் வரை விட்டனர். பின்னர் காரின் கதவை திறந்து வெள்ள நீரில் கால்வைக்காமலே சேரில் இருந்து நேரடியாக காருக்குள் ஏறி அமர்ந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்த வீடியோவை விடுதலை சிறுத்தைகள் ஐடி பிரிவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளத்தில் இறங்கி பார்வையிடுகையில், வெள்ளத்தில் கால் வைக்காமல் திருமாவளவன் செய்த செயல் குறித்தான இந்த வீடியோவை பார்த்த பலரும் எதிர்மறையாக விமர்சித்திருந்தனர். இதனிடையே விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டு பதிவில் “வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும். ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.
ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார். முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்.இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.