![]() |
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்: திரை விமர்சனம்Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 13 , 2021 22:50:47 IST
![]() சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் சோனி லைவில் பார்க்கக் கிடைக்கிறது. அசோகமித்ரன் ( விமோசனம்), ஆதவன்(ஓட்டம்),ஜெயமோகன் ( தேவகி சித்தியின் டைரி) ஆகியோரின் மூன்று பெண் மையச் சிறுகதைகளை எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்தி இருக்கிறார் வசந்த் எஸ் சாய்.
1980, 1995, 2005 ஆகிய மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த படங்களாக இருந்தாலும் பெண்களின் நிலை என்பது மாறாமலே தொடர்வதைச் சொல்லும் கதைகள்.
சரஸ்வதியாக வரும் காளீஸ்வரி, அலட்டிக்கொள்ளாமல் மலையைத் தூக்கி சுமப்பதுபோல் கஷ்டமான பாத்திரத்தை மிக இயல்பாக கையாண்டிருக்கிறார். எவ்வளவு உணர்வுகளை பிரதிபலிக்கும் முகம்… அதுவும் அந்த கறுப்பான முகத்தில் எப்படி இவ்வளவு முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார். இயக்குநர் வசந்தின் காட்சிக்கோணங்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஒரு காட்சியில் சரஸ்வதி காவல்நிலையத்தில் அதிகாரியிடம் தன் கணவனைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து காட்சியை காமிரா வழியாகக் காண்கிறோம். அவர் பேசிக்கொண்டிருக்கும் போலீஸ்காரரின் முகம் கடைசிவரைக்கும் காட்டப்படுவது இல்லை. வேறெதோ வேலையை தீவிரமாக செய்துகொண்டிருக்கும் இன்னொரு காவலர் தான் நம் கண்ணுக்குப் புலனாகிறார்.
கோபித்துக்கொண்டு காணாமல் போன கணவன் இல்லாத நிலையில் நாற்காலியில் அமர்ந்து காபி குடிக்கும் சரஸ்வதி, திரையில் அதுகாறும் தேங்கி இருந்த அழுத்தத்தை தன் பார்வையால் இயல்பாக வெளியேற்றுகிறாள்.
தேவகியாக வரும் பார்வதி, தன் டைரியை குடும்பம் படிக்கக் கேட்பதால், முரண்பட்டு குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். இறுதிக்காட்சியில் தேநீர்க் கடையில் தனியாக நின்று தேநீர் அருந்தும் தேவகி, குடும்ப பந்தத்திலிருந்து வெளியேறியதற்காக துளியும் வருத்தம் கொள்வதில்லை.
சிவரஞ்சனி, ஆதவன் உருவாக்கிய பாத்திரம். தேசிய ஓட்டப்போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை திருமணத்தின் பேரால் இழந்தவள். பிற இரு கதைகளைக்காட்டியிலும் இது சுறுசுறுப்பாகவும் சாசகத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இறுக்கமான முகத்துடன் வருகிறாள் சிவரஞ்சனி. இறுதிக்காட்சியில் மகளின் உணவுப் பாத்திரத்துடன் வாகனத்தின் பின்னே ஓடிச்செல்கையில் எழுச்சி கொள்ளும் காட்சி, குழந்தைகளின் கைத்தட்டலில் உச்சத்தை அடைகிறது. முகத்தில் உறைந்திருக்கும் சிரிப்புடன் ஓட்டப்பந்தய வீராங்கனையாக திரும்பி வரும் சிவரஞ்சனியை எல்லோருக்கும் பிடிக்கும். லட்சுமிபிரியா சந்திரமௌலிக்கு நடிப்பதற்குக் கிடைத்த பிரமாதமான வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். காபி போடுவதும், கணவனுக்கு டிபன் கொடுப்பதும், குழந்தைக்கு உணவு ஊட்டிவிடுவதுமாக… பார்ப்போருக்கே அலுப்பு ஏற்படுத்தும் இந்த வாழ்க்கையைத்தான் பல பெண்கள் காலங்காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வலுவாக உணரவைக்கும் காட்சி அமைப்புகள். சமையலறையில் சிவரஞ்சனியும் இன்னொரு அறையில் கணவனும் இருக்க, குழந்தையும் குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கும் காட்சி போன்ற அபூர்வ கோணங்கள் இதில் உண்டு.
செக்குமாடு போல் ஆண்களுக்காக குடும்பத்தில் உழைக்கும் பெண்கள் ஏதோ ஒருகணத்தில் நிமிர்வு கொள்வதை காட்சிப்படுத்தி இருக்கிறார் வசந்த். பெண் தன் வாழ்வை நடத்திச் செல்ல ஆண் என்ற துணையின் அவசியம்தான் என்ன என்ற கேள்வியை பளிச்சென்று கேட்கிறது படம். இளையராஜாவின் இசையும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் ஒலி அமைப்புகளும் அழகாக அமைந்துள்ளன. ஏகாம்பரம், வைட் ஆங்கிள் ரவிஷங்கர் இருவரின் ஒளிப்பதிவும் காமிரா கோணங்களும் வசந்தின் பார்வைக்கு வலு சேர்க்க, நமக்கொரு தீவிரமான பெண்ணியப் படம் கிடைக்கிறது! சமீபகாலத்தில் வெளியானவற்றில் கலாரீதியாக உயர்வான படங்களில் முன்னிலையில் வைக்கப்பட வேண்டிய படம்.
-எம்.எம்.
|
|