???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறுகதை: சாமந்தி- எஸ்கேபி கருணா

Posted : புதன்கிழமை,   மே   06 , 2020  05:58:10 IST

 
முனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அப்படி ஒரு காட்சியை அவர் தனது வாழ்நாளில் கண்டதில்லை. என்ன மாமா இது? பெரிய கூத்தா இருக்கு, என்றபடி அருகில் வந்து நின்றான் பக்கத்து நிலத்துக்காரன். அந்த மழை நாளின் அதிகாலையில் இன்னமும் லேசாக தூறல் தூறிக் கொண்டிருந்தது.
தனது வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு, அந்த
சேற்றிலிறங்கி, அதனருகே சென்று பார்த்தார். கரும்பு நட்டிருந்த தளைக்கும், சாமந்தி போட்டிருந்த தளைக்கும் நேர் குறுக்கில் அந்த இராட்சதக் குழாய் சரிந்து விழுந்திருந்தது. குழாயின் அருகில் சென்று பார்க்கும் போது, அது இன்னமும் பிரம்மாண்டமாக தோற்றமளித்தது.  ஒரு ஆள் முழுசாக உள்ளே நின்று கையைத் தூக்கலாம். அத்தனை அகலம் இருந்தது. நீளமோ, எப்படியும் நாற்பது அடி  இருக்கும்.
முனுசாமி இன்னமும், நடந்தது புரியாமல் தலையை உயர்த்திப் பார்த்தார். அந்தக் குழாயை ஏற்றி வந்த இராட்சத லாரி, ஒன்றும் தெரியாதைப் போல அப்பாவியாக, சாலையின் மீது நின்றிருந்தது.
 
முனுசாமிக்கும், அவர் தம்பிக்குமாக அந்த எட்டு ஏக்கர் நிலம், இன்னமும் பாகம் பிரிக்கப் படாமலேயே இருந்து வருகிறது. அதுவும் அவரது  தம்பியின் மரணத்துக்குப்பின் அவர் மகனுக்கு வாத்தியார்  வேலை கிடைத்து குடும்பத்துடன் வாணியம்பாடிக்குச் சென்ற பிறகு இரண்டு பேர் பாகத்தையும் இவரேதான் பயிர் வைத்துக் கொண்டிருக்கிறார். போனமாதம், அவர்களுடைய நிலத்துக்கு நேர் குறுக்கே புதிய பை பாஸ் சாலைக்காக வேண்டி, அரசாங்கமே பாகம் பிரித்து வைத்தது. சாலை என்றால், வெறுமனே சாலை அல்ல, பத்தடி உயரத்திற்கு மண்ணைக் கொட்டி உயரமாக்கி, கீழிருந்து பார்த்தால் வாகனங்கள் ஏறக்குறைய விண்ணுக்கு அருகில் மிதந்துசெல்லும் காட்சியது.
 
முனுசாமி அதிர்ச்சியுடன் தனது கண்களில் ஈரம் கட்ட அந்தக் குழாயைச் சுற்றி சுற்றி வந்து பயிர் நசுங்கின சேதத்தைப் பார்த்தார். ரோட்டை ஒட்டி கீழ் தளையில் போடப் பட்டிருந்த சாமந்திச் செடிகள் ஏறக்குறைய எல்லாமும், ஒரு பாதி குழாயின் கீழே நசுங்கி கொண்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் மொட்டுவிடவிருந்த  செடிகள் அவை. குழாயின் இன்னொரு பாதி, கரும்பு நட்டிருந்த தளையில் இருந்தது. ஆக, முனுசாமிக்கு சேற்றுடன் கூடிய வெறும் நிலத்தை மட்டும் மிச்சம் வைத்து, பயிர் அனைத்தையும் விழுங்கியிருந்தது அந்தக் குழாய்.
 
கதி கலங்கிப் போயிருந்த முனுசாமியின் கவனத்தைத் திருப்பி வேகமாக ஒரு ஜீப் வந்து லாரிக்குபின்னால் நின்றது. அதிலிருந்து, இரண்டு பேர் குதித்து, அந்த சரிவில் இறங்கி ஓடி வந்தனர். அதில் ஒரு இளைஞன், மை காட்! என்று தலையில் கை வைத்தபடி, அப்படியே அந்த ஈர வரப்பின் மீது உட்கார்ந்து கொண்டான். அந்தக் குழாயின் எல்லாப்புறத்தையும் பதட்டத்தோடு பார்த்தபடி இன்னொருவன் சுற்றிச் சுற்றி வந்தான்.
 
முனுசாமிக்கு, நடப்பது எதுவும் புரியவில்லை. பக்கத்து நிலத்துக்காரன் வரப்பில் அமர்ந்திருந்தவனிடம்,  ‘ஏம்பா, இந்த குழாய் உன்தா’ எனக் கேட்டார். அவன் நிஜமாகவே, நிலைகுலைந்து போயிருக்க, மற்றொருவன்,  ‘யோவ், யார்தா இருந்தா என்ன? அப்படி தள்ளிப் போய் நில்லு’ எனச் சொல்லிவிட்டு, கையில் இருந்த செல்போனில் தொடர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டேயிருந்தான். லாரியை ஓட்டி வந்த சர்தார்ஜியோ, எந்த பரபரப்புமின்றி அந்தப் பெரிய லாரியின் அடியிலேயே ஒரு ஸ்டவைப் பற்ற வைத்து டீ போட்டுக் கொண்டிருந்தான்.
 
செல் போனில் பேசிக்கொண்டிருந்தவன், முனுசாமியைப் பார்த்து, பெரியவரே, இங்க எல்லாம் நிக்க கூடாது. அப்படி தள்ளி போய் நில்லுங்க என்று விரட்டியவுடன் முனுசாமி நிஜமாகவே பயந்து போய் தன்னுடைய நிலத்திலிருந்து வேகமாக வெளியேறி வரப்புக்கு மேலே நின்று கொண்டார். சற்று நேரத்தில் ஜீப்பில் வந்த இருவரின் செல்போன்களும் மாறி மாறி ஒலிக்கத் துவங்க, கிராம மக்கள் மெல்ல அங்கே கூடத் துவங்கினர்.  
 
அந்த இருவரும், அங்கிருந்த யாரையும் முனுசாமியின் நிலத்தில் கால் வைக்க அனுமதிக்கவில்லை.  பத்து மணிக்கு மேல் விஏஓ வந்து அவர்களிடம் பேசிய பின்பு தான் அனைவருக்கும் லேசாக விஷயம் புரிந்தது. அந்த குழாய் மத்திய
அரசாங்கத்துடையது. திருச்சியிலிருந்து, பெங்களூருக்குச் செல்லும் வழியில், இரவு பெய்த கன மழையில் அந்த நீண்ட வாகனம் சாலையின் வளைவில் வேகமாய்த் திரும்ப, கட்டப் பட்டிருந்த கம்பிகளில் இருந்து நழுவி குழாய் முனுசாமியின் நிலத்தில் விழுந்து விட்டிருக்கிறது.
 
நல்ல வேளை, நடு ராத்திரியில விழுந்திருக்கு. பகல்ல, பசங்க ஸ்கூலுக்குப் போறப்ப நடந்திருந்தா பசங்க கதி என்னாகிறது? என பேசியபடி அவர்களில் பலர் அங்கேயே அமர்ந்து வேடிக்கைப் பார்க்கத் துவங்கினர். விஷயம் கேள்விப்பட்டு, போதை தெளியாத கண்களுடன் வந்து சேர்ந்தார் பஞ்சாயத்துத் தலைவர். இதில்  நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று அவர் மனம் கணக்கிட்டது. இளைஞர்களிடம்,  ‘ஏம்பா, யாராயிருந்தாலும், குழாய எடுத்துட்டுப் போறதுக்கு முன்னால, நிலத்துக்காரனுக்கு பயிருக்கான நஷ்ட ஈடு கொடுத்தாகணும் இல்லன்னா, குழாய்ல கைவைக்க விடமாட்டோம்’ என்றார்.
 
செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த இருவரும், தலைவரை நிமிர்ந்து அற்பமாகப் பார்த்தனர். தொடர்ந்து சிகப்பு விளக்கு வைத்த கார்களில்,  மாவட்ட
ஆட்சித் தலைவரும், போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். ஊர் தலைவர் உட்பட அனைவரும், அங்கிருந்து விரட்டப்பட, யாரோ ஒரு அதிகாரி, பெரிய மனதுடன் முனுசாமியை மட்டும் அங்கே இருந்த  ஒரு புங்க மரத்தடியில் உட்கார்ந்து கொள்ள அனுமதித்தார்.
 
 கலெக்டர் வந்து போனவுடன் முனுசாமியின் நிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டது. ஜீப் ஆசாமிகள், இருவரும் விடாமல் புகை பிடித்துக் கொண்டிருந்த போது, லாரிக்கு எதிர் திசையிலிருந்து வேகமாக ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய குளிர் கண்ணாடி அணிந்திருந்த உயரமான உருவத்தைப் பார்த்ததும், இருவரில் ஒருவன், ‘போச்சுடா, டிசோசா வந்திருக்கான் செத்தோம் நாம்’ என்றான்.
சாலையின் மீது நின்றபடியே, விழுந்திருந்த குழாயை தனது கேமராவில் படம் எடுத்துக் கொண்ட டிசோசா, மெல்ல சரிந்தபடி அந்த மேட்டிலிருந்து கீழே இறங்கி வந்தார். இருவரும்,  அவரருகில் சென்று வணங்க, ‘என்னய்யா ப்ரசாத் என்ன காரியம் பண்ணி வச்சுருக்கீங்க? பெரியவர் பயங்கர மூட் அவுட் தெரியுமா?’ எனக் கத்தினார்.
 
‘இல்லை சார், மழையில் வண்டி ஸ்லிப்பாயிடுச்சு. கண்ட்ரோல் பண்ண முடியலை’  
 
‘எப்படியா கண்ட்ரோல் பண்ண முடியும்? நீங்கதான் பாண்டிச்சேரியில தண்ணியடிச்சுட்டு வண்டிய எடுத்தீங்களே’
 ‘இல்லை சார். மெதுவாதான் வந்துட்டு இருந்தோம்’
 ‘கிழிச்சீங்க. ஜிபிஎஸ் ரெக்கார்ட் பார்த்துதான் வந்திருக்கேன். ராத்திரி 3.15க்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கு. காலையில் 6.15க்கு இன்ஃபார்ம் பண்றீங்க. பெரியவர் டீடெய்ல்ட் ரிப்போர்ட் கேட்டிருக்காரு’
 ‘சாரி சார். வண்டியை நிறுத்தச் சொல்லிட்டுத்தான் தூங்கினோம். ஹைவேதானேன்னு, சர்தார்ஜி எடுத்துட்டு வந்துட்டான். காப்பாத்துங்க சார் ப்ளீஸ்’
 ‘பார்க்கலாம். என்ன, பாண்டியில வெறும் தண்ணி மட்டும்தானா இல்லை வேறெதாவதுமா?’
 ‘அதெல்லாம் இல்லை சார். வெறும் ட்ரிங்ஸ் மட்டுந்தான்’
 ‘யோவ், பெங்களூரில் கிடைக்காத சரக்கா? ஏன்யா மானத்தை வாங்கறீங்க. வேற எதுவும் இல்லையா?’
ப்ரசாத் சட்டென புரிந்து கொண்டான்.  ‘அதெல்லாம் பெங்களூரிலேயே அரேஞ்ச் பண்ணிடலாம் சார்’
 ‘எங்கே? எப்போ?’
 ‘இந்த வீக் எண்ட்லேயே வச்சுப்போம் சார். தேவனஹள்ளியில் நம்ம ரெட்டியோட ஃப்ளாட் சும்மாதான் இருக்கு. நான் ஏற்பாடு பண்ணிடறேன் சார்’
 
நிலைமையை ஒரு வார்த்தை சகஜமாக்கி விட்டது. டிசோசா தனது  ஷீ, சாக்ஸ் எல்லாவற்றையும் கழற்றி விட்டு,  பேண்டை முழங்கால் வரை தூக்கி விட்டுக் கொண்டு, சேற்றில் இறங்கி பல முறை குழாயைச் சுற்றி வந்தார். ஒரு மரக்கிளையை ஒடித்துக் கொண்டு, சேற்றில் குத்தி எத்தனை ஆழம் குழாய் இறங்கியிருக்கிறது என துல்லியமாய் சோதித்தார்.
 
நீண்ட யோசனைகளுக்குப் பிறகு,  ‘ப்ரசாத், எனக்கு 80 டன் கிரேன் வேண்டும். அதுவும் இரண்டு க்ரேன். 50 மீட்டர் அயர்ன் ரோப் கூட எடுத்துட்டு வரச் சொல்லு. டைம் ஆஃபீஸுக்கு போன் பண்ணி, இன்சார்ஜ் கிட்ட ஓசூர் கிரேன் கம்பெனி நம்பர் வாங்கி உடனே சொல்லு. ரேட் எதுவும் பேசிட்டு இருக்காதே. என்ன கேட்டாலும் ஒத்துக்கோ. அஞ்சு மணி நேரத்தில எல்லாம் இங்க இருக்கணும். இருட்டறதுக்குள்ள, வெளியே எடுத்தாகணும்’ என்று அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
 
இன்னொருவனிடம், ‘யோவ் மண்டு, இங்க வா  உன்னோட பேரு என்னா?’ என்றார்.
 
 ‘அறிவழகன் சார்’
 
 ‘என்ன எழவோ? போ, போய் சாப்பிட ஏதாச்சும் அரேஞ்ச் பண்ணு. இந்தப் பக்கமெல்லாம் நாட்டுக் கோழி நல்லா செய்வாங்க. அதுக்கு ஏற்பாடு பண்ணு’ என்றபடி பக்கத்து நிலத்து மோட்டார் தண்ணீரில் தனது கால்களை கழுவச் சென்றார்.
அறிவழகன் கொஞ்சம் லகுவாகி முனுசாமியிடம் வந்து,  ‘பெரியவரே கவலைப்படாதீங்க. ஆஃபீஸர் வந்துட்டாரு. இனிமே இவரு பார்த்துப்பாரு’ என்றபடி சிரித்தான்.
 
எதற்கு சிரிக்கிறான் என்பது முனுசாமிக்குப் புரியவில்லை.
அறிவழகன், முனுசாமியின் கையில் ஐநூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து,  ‘பெரியவரே! உங்க ஊரில் ஏதாவது ஓட்டலில் மதியம் சாப்பாடு சொல்லிட்டு வாங்க! நான் இங்கிருந்து வெளியே போக முடியாது’ என்றான்.
 
‘ஓட்டலா? அதெல்லாம் இங்க இல்லைங்க. டீ கடைதான். அதுவும் ஊருக்கு வெளியே ரோட்டு ஓரத்துலதான் இருக்கு’
 
 ‘உங்க வீட்டிலதான் ஏதாச்சும் செஞ்சு எடுத்துட்டு வாங்களேன். எவ்வளவு செலவாகுதோ, அதுக்கு மேல ஆயிரம் ரூபாய் வாங்கிக்குங்க. ஒரு அஞ்சு பேருக்கு, மதியம் சாப்பாடு, ராத்திரி சாப்பாடு. அவ்ளோதான்’
 
முனுசாமி வீட்டுக்குத் திரும்பி வரும்போது சமையல் நடந்து கொண்டிருந்தது. முதல் பஸ்ஸுக்கு பெரிய பெண் வந்திருக்கிறாள் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டார். இவரைக் கண்டவுடன் பேத்தி ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டாள். பெரியவள் வெளியே வந்து,  ‘என்னப்பா? நம்ம நிலத்திலே ஏதோ விழுந்திருச்சாமே?’ என்றாள். அவள் முகம் கறுத்திருந்தது.
 
இவர் மவுனமாக தலையாட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றார். முற்றத்திலேயே மனைவி படுத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நாள் நோயாளி. எப்போவாவது மூட்டுவலி குறையும் சமயத்தில் சமைப்பது உண்டு. பெரும்பாலும் முனுசாமியின் சமையல்தான். இளைய மகள், உள்ளறையில் இருந்த டிவியின் அரசு சின்னத்தை எதையோ வைத்து சுரண்டிக் கொண்டிருந்தாள். தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்த பழைய சோற்றினை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு, உறியில் இருந்த தயிரை எடுத்து அதில் ஊற்றிப் பிசைந்து கொண்டே, பெரியவளிடம் நடந்ததை ஒரு கதை போல சொன்னார்.
 
‘சாமந்தி நல்ல விலை போவுது. இந்த நேரத்தில் பூ வித்தா எப்படியும் பறிக்கிற கூலி போக இருபதாயிரம் வரும். உன் பொண்ணுக்கு ஒரு பவுன் கம்மல் வாங்கிப் போட்டுடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமா உனக்கு செஞ்சு முடிச்சுட்டு, அடுத்தவளைப் பார்க்கலாம்னு நினைச்சா, அதுக்குள்ள இப்படி. போதாக்குறைக்கு இவனுங்களுக்கு சமைச்சுட்டு வேற வரணுமாம். ஆயிரம் ரூபாய் தரேங்குறான். நம்ம ஊட்டுப் பணம் இருபதாயிரத்தை அழிச்சுட்டு, ஆயிரம் ரூபாய் தரேன்றது என்ன ஞாயன்னு தெரியலை’
 
‘அதுக்கென்னப்பா? நான் சமைச்சுத் தரேன். ஆயிரம் ரூபாயாவது கிடைக்குதேன்னு பாரு’ என்றாள் பெரிய மகள்.
பின் மதியத்தில், கோழிக் குழம்பும், சுடு சோறும் சமைச்சு பெரியக் கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு முனுசாமி தன் நிலத்துக்குப் போகும் போது  உடன் இன்னொரு பாத்திரத்துடன் அவருடைய சின்னப் பெண்ணும் போனாள். காலையிலிருந்தபடியே அப்படியே இருந்தது அந்தக் குழாய். புங்க மரத்தடியில், பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப் பட்டிருந்த பாட்டில்களில் ஒன்று திறந்திருக்க, டிசோசா சொல்லிக் கொண்டிருந்த கதையை மரியாதையுடன் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர் மற்ற இருவரும்.
 
நல்ல காரசாரமாக கோழிக் குழம்பு சாப்பிட்ட மகிழ்ச்சியில் டிசோசா, புகைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது சின்னப் பெண் அவரிடம் சென்று,  ‘குட்மார்னிங் சார்’ என்றாள்.
 ‘ஸே குட் ஈவினிங் சரியா? உன் பேர் என்ன?’ என்றார்.
 ‘எம். அலுமேலு சார். ஆறாம் வகுப்பு பி பிரிவு’
 ‘வெரி குட். நல்லா படி’ என்றபடி நகரப்போனவரிடம்,  ‘எதுக்கு சார் இம்மாம் பெரிய குழாய்?’ என்றாள்.
 ‘அதுவா, இதுதான் ராக்கெட். இதுக்குள்ள இன்ஜினை வச்சுதான் ஆகாயத்துக்கு அனுப்புவாங்க. இது கொண்டு போய் மேல வைக்கிற சாட்டிலைட் வழியாதான் நீ உன் வீட்ல டிவி பார்க்குறே’ என்றார்.
 
‘ராக்கெட்டா?’ என்று வாய் பிளந்தாள் எம். அலமேலு. அவளது அறிவியல் பாடத்தில், கீழே பெரிய புகையுடன், ராக்கெட் வானத்தை நோக்கிச் செல்லும் படம் ஒன்று இருந்தது நினைவுக்கு வந்தது.
 
வேகமாக, அந்தக் குழாயின் அருகில் சென்று அதன் இரு புறங்களிலும் பொறிக்கப் பட்டிருந்த ஆங்கில எழுத்துக் களைத் தடவிப் பார்த்தாள். பிறகு அதை, ஒவ்வொரு
எழுத்தாக கூட்டி “ஐஎஸ்ஆர்ஓ” என்று சத்தமாக படித்தாள்.  
 
மாலையில் இன்னும் சில வாகனங்களில் ஆட்கள் வந்து சேர்ந்தனர். கிரேன் வருவதற்குள் இருட்டத் துவங்க டிசோசாவிற்கு அதற்குள் மேலும் பல முறை பெரியவரிடம் இருந்து போன் வந்திருந்தது.
 
வேறு வழியின்றி, இரவிலேயே ராக்கெட் கேஸை தூக்கி விடுவது என்று முடிவெடுத்தனர். பக்கத்து டவுனில் இருந்து ஜெனரேட்டர், ஃபோகஸ் லைட்கள் என வரவழைக்கப்பட்டு, வேலைகள் மும்முரமாக்கப்பட்டன.
 
அறிவழகன் வேகமாக முனுசாமியைத் தேடி வந்தான்.  ‘பெரியவரே, ராத்திரி
சாப்பாடு எப்படியும் இருபத்தஞ்சு பேருக்குத் தேவைப்படும். பத்துக் கோழி வாங்கிடுங்க. அப்படியே முட்டைப் பொறியல் செஞ்சுடுங்க. எதுக்கும் மூணு கோழியை வறுத்துடுங்க’ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் சென்றான். முனுசாமிக்குத் தலை கிறுகிறுத்து விட்டது.
 
அன்றிரவு,  தனது ஒற்றை மாட்டு வண்டியில், சில பாத்திரங்களில் சமையல் செய்து வைத்துக் கொண்டு,  முனுசாமியே ஓட்டிக் கொண்டு போவதை ஊரே பார்த்தது. கோழிக் குழம்பின் வாசம் ஊரில் இருந்த அத்தனை நாய்களையும் வண்டிக்குப் பின்னாலேயே ஓட வைத்தது. ஊரின் மொத்த கவனமும் தன்மீது குவிவதில் முனுசாமிக்குக் கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.
 
முனுசாமியின் வண்டி நிலத்தருகே போனபோது மீண்டும் லேசாக தூறல் ஆரம்பித்தது. குழாயைச் சுற்றி பெரிய இரும்புக் கம்பிகள் கட்டப் பட்டுக் கொண்டிருக்க, அந்தக் கம்பிகளின் மறுமுனையை இரண்டு பெரிய கிரேன்கள் தாங்கிக் கொண்டிருந்ததை, இரவை பகலாக்கிக் கொண்டிருந்த உமிழ் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தார். இப்போது மழை வலுக்க ஆரம்பித்தது.
ஆழ் சேற்றிலிருந்து, அந்த இரவில்,  குழாயைத் தூக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்து விட்டது. இரண்டு கிரேன்களும் ஒரே நேரத்தில் இழுக்க வேண்டிய கணக்குப் பிசகி  போனதில், ஒரு கிரேனில் கட்டப் பட்டிருந்த இரும்புக் கம்பி துண்டாகி அறுந்து விழுந்தது. மழை ஈரமும், சேற்றுப் பிசுக்கும் ஊறிப்போன உடலோடு படுக்கச் போனவர்களுக்கு அந்த இரவின் ஒரே ஆறுதல் முனுசாமி வீட்டுச் சுடு சோறும் கோழிக் குழம்பும்தான்.
 
இன்னொரு கனத்த இரும்புக் கம்பிக்காக, மொத்தக்  குழுவும் காத்திருந்த மறுநாள் காலை வேளையை, முனுசாமியின் பெரிய மகள் கஸ்தூரி சுட்டனுப்பிய இட்லிகளும், ஆட்டுக் கறி குழம்பும் இட்டு நிரப்பியது. அதன் தொடர்ச்சியாக மதியம் மீன் குழம்பு கிடைக்குமா? என்று சிலர் முனுசாமியிடம் கேட்ட போது, முனுசாமிக்கு பெருமை பிடிபடவில்லை. முடியுமென வேகவேகமான தலையசைத்தார்.
 
மேற்கொண்டு பணம் கேட்க முனுசாமி, அறிவழகனைத் தேட முயற்சித்தார். ஆளாளுக்கு ஒரு பக்கம் விரைந்து கொண்டிருந்த அந்தப் பரபரப்பான சூழலில் அறிவழகனை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவர் அலைமோதிக் கொண்டிருப்பதைக் கண்ட ப்ரசாத், முனுசாமியிடம் அவனே வந்து விஷயத்தைக் கேட்டான். தனது பையிலிருந்து மேலும் ஒரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தவன், மொத்தப் பணத்தையும் கடைசியில் வாங்கிக்கலாமென மீண்டும் நம்பிக்கையூட்டினான்.
 
அன்று மாலை, மீண்டும் குழாயைக் கட்டி மேலே இழுக்கும் போராட்டம் துவங்கியது.
ஒவ்வொருவரும் ஒரு யோசனையை சொன்னதாலும், சேற்றில் ஆழமாக புதைந்து போயிருந்த அந்த ராட்சதக் குழாயை ஒரு சேர சுண்டி இழுக்கும் சுதி கூடி வராததாலும், இரண்டாம் முயற்சியும் வெற்றி பெறவில்லை. பல்வேறு யோசனைகளுடன் டிசோசா குழுவினர் இரவு உணவுக்குக் கலைந்தனர்.
 
நடு இரவில், ஜீப்பில் படுத்துக் கொண்டிருந்த ப்ரசாத் குழுவினரை, லாரியின் டிரைவர் சர்தார்ஜி பரபரப்புடன் வந்து எழுப்பினார். டிசோசா தூக்கம் கலைந்து வெளியில் வந்து பார்க்க, அங்கே ராட்சத கிரேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஒரு பெரிய தொழிற்சாலையின் நிர்மாணப் பணிக்காக சாலையில் சென்று கொண்டிருந்த கிரேனை சர்தார்ஜி பார்த்து நிறுத்தியுள்ளார். யாரும் எதிர்பார்த்திராத அதிஷ்டமது. அந்த கிரேனின் பிரம்மாண்டத்தைப் பார்த்து எல்லோருமே உற்சாக மடைந்தனர்.
எல்லோரும் நிமிடத்தில் எழுப்பப்பட்டு, அந்த இடம் மீண்டும் ஒளியூட்டப்பட்டது. குழாயின் கம்பிகள் கிரேன் கொக்கியில் இணைக்கப்பட்டன. எல்லாம் ஒரு விபத்தின் பொருட்டு நடக்கும் அவசரங்களைப் போல அரங்கேறின. கம்பிகளின் அனைத்து முனைகளும் அந்த ஒரே கிரேனிலேயே இணைக்கப் பட, தேர்ச்சி பெற்ற அந்த கிரேன் ஆபரேட்டர், சரியான தருணத்தில் மிக நேர்த்தியாக அந்தக் குழாயை கவ்வி இழுத்தார்.
சேற்றில் அழுந்த ஊன்றிய செருப்பு, சப்தத்துடன் வெளியே வருவதைப் போன்று குழாய் மெல்ல  மேலெழும்பி வந்தது.
 
மொத்தக் குழுவும் கைத்தட்டி குதூகலித்த அந்த நடு சாமத்தில், முனுசாமியும் அவர் பெண்களும் முழு நாளும் சமைத்தக்  களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் கிரேனுக்கும், விளக்குகளுக்கும் பணத்தைக் கொடுத்து முடித்து, குழாய் ஏற்றப் பட்டிருந்த லாரியை முன்னால் அனுப்பி வைத்து விட்டு, டிசோசா குழுவினர் அதன் பின்னாலேயே புறப்பட்டுச் சென்றனர்.
 
மறுநாள் அதிகாலை பக்கத்து வீட்டிலிருந்து கடன் வாங்கியிருந்த பெரிய டீ கேனில் அவர்கள் எல்லோருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு தனியே நடந்தார் முனுசாமி.
சாமந்திப் பூ விளைச்சல், பேத்திக்குக் கம்மல், சின்னவளுக்குக் கல்யாணம், நேற்று நடந்த சம்பவம், அதைப்பற்றிக் கவலைப்படாமல் விட்டேத்தியாக டீ போட்டுக் கொண்டிருந்த அந்த வளர்ந்த சர்தார்ஜி என என்னென்னமோ எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்க தன் நிலத்தை வந்தடைந்தார்.  வரப்பில் கால் வைத்தவுடன்தான் கவனித்தார். அங்கே குழாய்  விழுந்திருந்ததின் அடையாளமாய் நிலத்துக்குக் குறுக்கே ஐந்தடி ஆழத்தில் ஒரு பெரும் பள்ளம் மட்டும் மிச்சமிருந்தது. 
 
-எஸ்.கே.பி.கருணா (டிசம்பர் 2014அந்திமழை இதழில் வெளியானது. மே 2020 இதழில் மறுபிரசுரம்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...