???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறுகதை: எடிசன் 1891 - எழுதியவர்: சைமன் ரிச்- தமிழில் அ.முத்துலிங்கம்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   08 , 2018  02:21:26 IST


Andhimazhai Image

                                

 

‘தொந்தரவுக்கு மன்னிக்கவும்,’ ஜெட் முனகினான். ’நான் மறுபடியும் ஏதோ குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்.’

 

தோமஸ் அல்வா எடிசன் கண்களைச் சுருக்கி அந்தப் பையனைப் பார்த்தார். ஜெட்டுக்கு மூளை கிடையாது என்ற விசயம் சிலகாலமாக அவருக்குத் தெரியும். ஆனால் சமீபத்தில்தான்  இந்தப் பையன் உண்மையான முட்டாள்தான் என்று சந்தேகப்படத் துவங்கியிருந்தார்.

 

’இப்பொழுது மீண்டும் என்ன?’ எடிசன் முணுமுணுத்தார்.

 

’நீங்கள் ஐந்து சென்டிலிட்டர் கலக்கச் சொன்னீர்களா?’ 

 

‘இல்லை, ஐந்து மில்லி லிட்டர்.’

 

பக்கத்தில் இருந்த கண்ணாடிக் குடுவை கூர்மையான கண்ணாடித் துண்டுகளை சிதறியடித்தபடி  வெடித்தது.

‘மன்னிக்கவும்’ ஜெட் குழைந்தான்.

 

எடிசன் துடிக்கும் நெற்றியை தேய்த்தார். அவர் உள்ளூர் பையன் ஒருவனை ஆய்வுக்கூடத்தில் கூடமாட உதவி செய்வதற்காக சேர்த்திருந்தார். ஆனால் ஒரு சின்ன வேலையைக்கூட  சரியாகச் செய்ய அவனுக்குப் புத்தி எட்டவில்லை. விஞ்ஞானத்துக்கு இந்தப் பையன் ஏதாவது பங்களிக்க விரும்பினால் அவனுடைய சிறந்த கொடை அவன் மூளைதான்.  அதை வெட்டி ஆராய்ந்தால் ஒரு மூடனின் மூளை எப்படி செயல்படுகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும். அவனால் வேறு ஒரு பயனும் இல்லை.

சிலவேளை ஒரு பிரயோசனம் இருக்கலாம்.

 

                    *                                          *                                     *

 

நான் என்ன செய்யவேண்டும்?’ ஜெட் கேட்டான்.

 

‘நீ சும்மா நில். இதோ, இந்த இடத்தில்’ எடிசன் சொன்னார்.

 

உலோகத்தாலும், கண்ணாடியாலும் உருவாக்கப்பட்ட சதுரமான ஒரு கருவியின் முன்னால் பையனை நிறுத்தினார்.

 

அவர் சொன்னார், ’ஓகே, அக்சன்.’

 

‘என்ன?’ பையன் திருதிருவென முழித்தான்.

 

‘ஏதாவது செய். உன் உடம்பை சும்மா ஆட்டு.’

 

‘என்ன மாதிரி?’

 

‘எதுவென்றாலும் பரவாயில்லை. ‘

 

எடிசனுக்கு பொறுமையை கடைப்பிடிப்பது கடினமான ஒன்றாக மாறிக்கொண்டு வந்தது.’

 

‘இதோ’ பையனிடம் இரண்டு நீள்சதுரமான தடிகளைக் கொடுத்தார். ‘இவற்றை சும்மா உன்னைச் சுற்றி சுழட்டு.’

 

தடிகளைப் பெற்றுக்கொண்டு ஜெட் தன் தலைக்கு மேல் அவற்றை  இங்குமங்கும் வீசினான். அதைப் பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் அது இப்போது முக்கியமில்லை. எடிசன் தன்னுடைய மகத்துவமான  கினெட்டோகிராஃப் கண்டுபிடிப்பை உலகத்திற்கு காட்டவேண்டும்.

 

அதிவேகமாக மூடித் திறக்கும் காமிராக் கண்கள் வழியாக அவரால் உயிருள்ள புகைப்படங்களை படைக்க முடியும். அதாவது நகரும் படங்கள். அவர் கண்டுபிடித்த பாட்டுப் பெட்டி அவருக்கு புகழைத் தேடித் தந்தது. மின்சார பல்ப் பணத்தை குவித்தது. ஆனால் இந்தக் கருவி அவருக்கு சாகாவரம் தரக்கூடியது. அவர் பெயரை நிரந்தரமாக  நிலைக்கச் செய்யும். இது, அவருக்குத் தெரியும், உலகத்தை என்றென்றைக்குமாக மாற்றிவிடும்.

 

                              *                                 *                                     *

 

தன்னுடைய திரைப்படத்துக்கு எடிசன் கொஞ்சம் கேலி தொனிக்கும் விதமாக  சூட்டிய பெயர்  ‘நியூவார்க் விளையாட்டுவீரன்.’ மக்களுக்கு அது பிடிக்கும் என்பது அவர் எதிர்பார்த்ததுதான். அவருடைய ஆய்வுக்கூடத்தில் முதல்தடவையாக அதை வெளியுலகத்துக்கு காட்டியபோது கிடைத்த எதிர்வினை அவர் கனவிலும் நினைத்திராத ஒன்று. அவர் அழைப்பை ஏற்று வந்திருந்த  பத்திரிகை நிருபர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தார்கள். சிறுவர்களைப்போல சத்தமிட்டு சிரித்து கும்மாளமிட்டனர். 

 

எடிசன் சொடக்குப்போட்டதும் அவரிடம் சுருட்டை நீட்டுவதற்கு ஜெட் ஓடி வந்தான். ‘கேள்விகள் ஏதாவது உண்டா?’ எடிசன் நிருபர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள்.  ‘இதோ, இவன்தான் நியூவார்க் விளையாட்டுவீரன்.’ ஒருவர் ஜெட்டைச் சுட்டிக்காட்டி கத்தினார்.

 

எடிசன் ஜெட்டை திரும்பிப் பார்த்தார். அவன் அத்தனை பேரின் கவனமும் தன்மேல் விழுந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு இளித்தபடி  நின்றான்.

 

‘ஆம், உண்மை. இவனைத்தான் நான் என்னுடைய கண்டுபிடிப்பை காட்டுவதற்காகப் பயன்படுத்தினேன். ஏதாவது கேள்விகள்?’

 

நிருபர் ஒருவர் கையை தூக்கினார். ‘இந்தப் பையனிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?’

 

எடிசன் திணறிப்போனார். ஆனாலும் அந்த நூதனமான வேண்டுகோளினால் பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை என்று பட்டது.

 

‘அதற்கென்ன, பிரச்சினை இல்லை’ என்றார்.

 

நிருபர் வெட்கத்துடனும் பதற்றத்துடனும் ஜெட் பக்கம் திரும்பினார்.

 

‘ஆ, இது சிலிர்ப்பூட்டுகிறது. முதலில் நான் சொல்ல விரும்புவது உங்கள் திரைப்படம் என்னை கிறங்கடித்துவிட்டது என்பதைத்தான்.’

 

சுருட்டுப் புகைத்தபடி நின்ற எடிசனுக்கு ஒரு கணம் மூச்சு நின்றுவிட்டது. அது ஜெட்டுடைய திரைப்படம் அல்ல; அவருடையது. கணத்துக்கு கணம் அதிகரிக்கும் எரிச்சலுடன் அந்த நிருபரின் பிதற்றல்களை செவிமடுத்தார்.

 

‘நாங்கள் எல்லோரும் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால் எப்படி உங்கள் பாத்திர நடிப்புக்கு வேண்டிய தயாரிப்புகளை செய்தீர்கள்?’

 

பையன் தோள்களை அசைத்தான். ’பெரிதாக ஒன்றுமில்லை. சும்மா காமிராவுக்கு முன் நின்றதுதான் நான் செய்தது.’

 

நிருபர் தலையை ஆட்டினார். ’அப்படியே உங்களுக்கு அமைந்தது. நான் விளையாட்டுவீரனாக மாறவேண்டும் என நினைத்தீர்கள். அப்படியே ஆனது.’

 

மறுபடியும் ஜெட் தோள்களை ஆட்டினான். ‘அப்படித்தான் நினைக்கிறேன்.’

 

‘ஓ, ஓ’ நிருபர் ஆச்சரியத்துடன் தலையை ஆட்டினார். ‘ஓ கடவுளே.’

 

‘ஒகே.’ எடிசன் பவ்வியமாக இடைமறித்தார். ’அது நல்ல கேளிக்கைதான். எனக்கு  கேள்விகள் உள்ளனவா? அதாவது இந்த அரிய கருவியை கண்டுபிடித்த எனக்கு ஏதாவது கேள்வி இருக்கிறதா?’

 

பின் வரிசையில் இருந்த ஒரு நிருபர் கத்தினார். ‘ஜெட், திரைத்துறையில் புதிதாக ஈடுபட விரும்பும் ஒருவருக்கு உங்கள் அறிவுரை என்ன?’

 

ஜெட் தோள்களை ஆட்டி ‘எனக்கு தெரியாது’ என்றான்.

 

‘தயவுசெய்து’ நிருபர் மன்றாடினார்.

 

ஜெட் தலையை சொறிந்தான். ‘நான் நினைக்கிறேன், உங்கள் கனவை தொடருங்கள்.’

 

கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது.

 

எடிசன் மறுபடியும் நிருபர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றார். ஆனால் அதற்கான தருணம் ஏற்கனவே கடந்துவிட்டது.

 

எடிசனைத் தாண்டி எல்லோரும் ஜெட்டிடம் ஓடினார்கள். அவனைச் சுற்றி நின்று அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகளால் துளைத்தார்கள்.

 

‘இல்லை, நான் ஒருவரையும் இப்பொழுது பார்க்கவில்லை.’ அவன் சொல்வது எடிசனின் காதில் விழுந்தது.

 

‘ஒருவரையும் பார்க்கவில்லை என்றால் என்ன பொருள்? காதலிக்கவில்லை என்றா?’

 

‘சும்மா பேசிப் பழகுவதுதான்.’

 

‘பேசிப் பழகுதல் மட்டும்தானா?’

 

அவருடைய ஆய்வுக்கூடத்துக்குள் நின்ற  கும்பல் அவரையே வெளியே தள்ளிவிட்டதை எடிசன் அதிர்ச்சியுடன் உணர்ந்தார். நிருபர்கள் அவரைத் தாண்டி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தனர். காமிரா பல்ப் பவுடர் அவர் முகத்தில் தெறித்தது. தொண்டையில் மக்னீசியம் புகை நிரம்பி எடிசன் இருமினார். அவர் முழங்கால்கள் மடிந்து சாய்ந்தபோது அவருக்கு ஒன்று புலப்பட்டது. அவருடைய முன்கணிப்பு உண்மையாகிவிட்டது. இந்த தடவை அவர் உலகை என்றென்றைக்குமாக மாற்றிவிட்டார்.

 

(அ. முத்துலிங்கம் மொழி பெயர்த்த இக்கதை ஆகஸ்ட் 2018 அந்திமழை இதழில் வெளியானது. ஓவியம்: ஜீவா )

 

.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...