???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறுகதை : சுகிர்தராணியும் சொர்ணமால்யாவும் - தாமிரா

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   15 , 2018  07:09:05 IST


Andhimazhai Image
சிலுவையில் அறையப்பட்டது போல அந்த அரங்கத்திலிருந்த எல்லா படைப்பாளிகளும் உறைந்து போயிருந்தார்கள். சுகிர்தராணியின் பேச்சும் துளி கண்ணீரும் எல்லோருக்குள்ளும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
 
 
கண்ணீரைத் தொடர்ந்து ஒரு கனத்த மௌனம் அந்த அரங்கை ஆட்கொண்டது. சுற்றிச்சுற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த கோம்பை அன்வர், காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து அருகில் இருக்கும் மற்றொரு இருக்கையில் தனது கேமராவை வைத்தார். நெற்றி வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார். ஏற்காட்டின் குளுமையையும் மீறி ஒரு வெம்மை அந்த அரங்கத்தில் பரவியது. அது தமிழ் மலையாள இஸ்லாமிய படைப்பாளிகளின் சங்கமம். கல்புர்கி மரணத் தைத்தொடர்ந்து, படைப்பாளர்களுக்கிருக்கும் நெருக்கடிகள் பற்றி மனம்விட்டு உரையாடலாமென கோம்பை அன்வர் ஏற்பாடு செய்த அரங்கம். 
 
 
சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் இமையம், பத்திரிகையாளர் சமஸ், கவிஞர் சுகிர்தராணி மற்றும் சொர்ணமால்யா இவர்கள் நால்வரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். சுகிர்தாவும் சொர்ணமால்யாவும் பேசி முடித்தார்களென்றால் ஒட்டுமொத்த நிகழ்வே முடிந்துவிடும். ஏற்காடு மலையிலிருந்து தரையிறங்குதல், தொடர்வண்டி பிடித்தல் என எல்லோருக்குள்ளும் பயணத்திட்டங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தபோது, அடுத்து சுகிர்தராணி என ஒரு ஒற்றைசொல் அறிமுகத்தில் சுகிர்தாவை பேச அழைத்தார் நிகழ்ச்சிதொகுப்பாளர் கோம்பை அன்வர். வீடு திரும்புதல் கவிதை வாசிப்பிலிருந்து துவங்கினார் சுகிர்தராணி. அது பல மேடைகளில் பலமுறை வாசிக்கப்பட்ட கவிதைதான் ஆனாலும் கனன்று எரியும் கங்கை போன்ற சுகிர்தராணி குரலில் வீடு திரும்புதல் கவிதை ஒரு அழகான சொல்லாட்சியாகவே இருந்தது. அவர் வாசிக்கத் துவங்கிய நான்காவது வரியில் அரங்கத்தின் அத்தனை மனதையும் தன்னை நோக்கி திருப்பினார் சுகிர்தராணி. 
 
 
ரஃபீக் சல்மானின் தலையசைப்பில் சுகிர்தராணியின் கவிதையின் சாரம் இசைந்து நின்றது. மலையாளக்கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு சுகிர்தராணியின் தமிழைப் புரிந்து கொள்வதில் அசௌகர்யங்கள் இருந்திருக்கக்கூடும். அவர்கள் கவிதையின் கடைசிச் சொல்லுக்காகக் காத்திருந்தார்கள்.
 
 
சுகிர்தராணிக்கு ஒரு வழமையிருந்தது கவிதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே கவிதை யிலிருந்து விடுபட்டு பழைய சம்பவங்களுக்குத் திரும்பும் வழமை. அன்றும் அப்படித்தான்:
‘மேடையைவிட்டு நாமிருவரும் கீழே 
இறங்குகிறோம்                                                                          
நீ ஊருக்குள் போகிறாய்
நான் சேரிக்குச் செல்கிறேன்.’
கவிதை வாசித்து முடித்து ஒரு கணம் கூட்டத்தை ஒரு அமைதிப்பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்தார் சுகிர்தா. 
 
 
“நீ ஊருக்குள் போகிறாய். நான் சேரிக்குச் செல்கிறேன். சேரிக்குப் போற வலி புரியலன்னா இது ரொம்ப சாதாரண வரியா தெரியும். சாதியத்தோட மிச்ச அடையாளம் தான் சேரி, சேரி அழியாம சாதி அழியாது. என்னோட எழுத்து அனுபவம்னு சொல்றதுக்கு எதுவுமில்ல. நான் வாழ்ந்த வலிதான் என்னோட எழுத்து,” என்கிற சொல்லிலிருந்து தன் பால்ய நினைவுகளுக்குத் திரும்பினார் சுகிர்தராணி.
 
 
“அப்பல்லாம் எனக்கு சாதின்னா என்னன்னு தெரியாது. எங்க தெருவுலருந்து நாங்க ஏழெட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குப்போவோம். ஸ்கூலுக்கு எடுத்துட்டுப்போற பைல உப்பு மொளகாத்தூள் எல்லாம் எடுத்துட்டுப் போவோம். வழில இருக்கற மாந்தோப்புல திருட்டு மாங்கா அடிச்சு 
சாப்பிடுவோம். திருட்டு மாங்காய உப்பு, மொளகா போட்டு ருசிச்சு சாப்பிடுவோம். ஸ்கூலுக்குப் போறவரைக்கும் ரொம்பக் கொண்டாட்டமா இருப்போம். 
 
 
ஸ்கூல்ல எப்பவுமே உயரப்படிதான் உக்கார வைப்பாங்க. நான் கட்டையாத்தான் இருப்பேன் ஆனாலும் என்னை கடைசி பெஞ்ச்ல உக்கார வைப்பாங்க. எம்பக்கத்துல யாருமே உக்கார மாட்டாங்க. எனக்கு அதுக்கெல்லாம் காரணமே தெரியாது. 
 
 
எங்கூட படிச்ச  ஒரு பொண்ணு எனக்கு எப்பவுமே ஸ்கூலுக்கு வெளிய வித்துட்டிருக்கற தேன்முட்டாய் வாங்கித் தருவா. தெனமும் அவகிட்ட முட்டாய் வாங்கித் திங்கோமே, நாம அவளுக்கு முட்டாய் வாங்கிக் குடுப்போமேன்னு, ஒரு நாள் எங்க ஆயாகிட்ட சண்டபோட்டு காசு வாங்கி ஒரு அஞ்சு காசுக்கு தேன் முட்டாய் வாங்கி அவகிட்ட நீட்டினேன். அவ என் கைல இருந்த தேன் முட்டாயை தட்டி விட்டுட்டா. அது மண்ணுல விழுந்துருச்சு. எனக்கு புரியல. அவ வாங்கிக் குடுக்கற மாறித்தான் நானும் வாங்கிக் குடுத்தேன் அத ஏன் தட்டி விடணும்னு புரியல. 
 
 
நீ ஒன்னும் எனக்கு வாங்கித் தர வேண்டாம். நீயெல்லாம் எனக்கு வாங்கித் தரக்கூடாதுன்னா.. என் வயசுல இருக்கற சேரிப்புள்ளைங்க யாருக்கும் சாதின்னா என்னன்னு தெரியல. ஆனா ஆதிக்க சாதிலருக்கற எல்லா புள்ளையளுக்கும் சாதி பத்தி தெரிஞ்சிருந்துது. இன்னாரைத் தொடணும் இன்னாரைத் தொடக்கூடாதுன்னு அவங்க வீட்ல சொல்லித்தான் வளத்திருப்பாங்க போல..
 
 
எங்கிட்ட ரொம்ப நல்லா பழகற புள்ளைங்க கூட எங்க வீட்டுக்கு, எங்க தெருவுக்கு வரமாட்டாங்க.. நாங்க நம்பிக்கையோட கும்பிடற சாமியும் எங்கத் தெருவுக்குள்ள வராது. 
 
 
இதையெல்லாம் எங்கப்பாகிட்ட சொன்னா நல்லா படின்னு சொல்வாரு. அப்பா யாருகூடயும் அதிகம் பேசற மனுசன் இல்ல. அவரோட ஒரே நோக்கம் எங்கள எல்லாம் நல்லா படிக்க வச்சு நல்ல நெலமைக்கு கொண்டு வரணுங்கறதுதான். தாத்தா எப்பாயாவது பறையடிப்பாரு. அப்பாவயும் அடிக்கச் சொல்வாரு. ஆனா அப்பா பறைய கையால தொடக்கூட மாட்டாரு. அப்பாவுக்கு நெறைய கோவம் இருந்துது. அந்தக் கோவத்தையெல்லாம் எங்கள ஆளாக்கறதுல காட்டுனாரு. கிராமங்கள்ல சாதிய ஒரு போதும் அழிக்க முடியாது. என்னைக்கும் சாதிய தக்க வைக்கற எடமா கிராமங்கள் இருந்துட்டிருக்கும், அதனால நல்லா படிச்சு நகரத்துக்கு இடம் பெயர்ந்துரணும்னு நெனச்சாரு. 
 
 
இது பழைய கத.  காலம் மாறி இருக்குன்னு நீங்க சொல்லலாம். காலம் மாறியிருக்குங்கறத நானும் ஒத்துக்கறேன். கொஞ்சம் பேரு வசதியாயிருக்காங்க, வீடுகள் மாறி இருக்கு. ஆனா ஆதிக்க சாதி மனசுல மாற்றம் இல்ல. ஊரும் சேரியும் எப்பவும் வேற வேறயாத்தான் இருக்கு.
ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். சேரிக்குள்ள யாரும் டீக்கட வைக்க வரமாட்டாங்க. சேரில இருக்கறவங்க ஊருக்குள்ள டீக்கட நடத்த முடியாது. இன்னைக்கும் இதுதான் கிராமத்து நடமுறை.
 
 
நான் ப்ளஸ் டூ படிச்சிட் டிருக்கறப்ப ஒரு நாள் ஸ்கூல்ல ட்ராமா போட்டாங்க. அப்ப நான் கிளாஸ்லயே நல்லா படிக்கற பொண்ணு. பஸ்ட் ரேங்க் எப்பவுமே நாந்தான் வாங்கு வேன். அப்ப கட்டபொம்மன் நாடகம் போட்டாங்க. எனக்கு கட்டபொம்மனா நடிக்கணும்னு ரொம்ப ஆச. ஆனா என்னை நடிக்கவிடல. ரொம்ப வற்புறுத்தி மெயின் ரோல் இல்லாம சும்மா ஒரு ஓரமா நிக்கற ரோல் குடுத்தாங்க. நான் நடிக்கல.. எவ்வளவு படிச்சா லும் ஸ்கூல்ல முதல் மாணவியா இருந்தாலும் கிளாஸ் பொண்ணுங்க நெருக்கமா பழகுனாலும் ஒரு நுட்பமான ஒரு கோடு ஊருக்கும் சேரிக்கும் இடைல இருந்துட்டேதான் இருக்கு.
 
 
அத கல்வியாலதான் உடைக்க முடியும்னு எங்கப்பா நெனச்சாரு. இப்ப நான் படிச்சு அரசுப் பள்ளில ஆசிரியையா இருக்கறேன். ஆனா நான் பறச்சிங்கற அடையாளம் என்னை விட்டுப்போகல.
 
 
ஒரு நாள் எங்கூட வேலை பாக்கற ஒரு ஆசிரியை வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க குடிக்கறதுக்கு காஃபி குடுத்தாங்க. நம்மவீடுகள் மாதிரி  டம்ளர்ல காஃபி தர்ற வழக்கம் அவங்ககிட்ட இல்ல. டபரால தான் தருவாங்க. அப்படி காஃபி குடுத்துட்டு ஆத்திக் குடின்னாங்க. எனக்கு எப்பவுமே சூடா காஃபி குடிக்கறது வழக்கம். ஆனா அவங்க ஆத்திக் குடின்னு வற்புறுத்திக்கிட்டே இருந்தாங்க. காரணம் காஃபியை ஆத்தி அன்னாந்து குடிக்கணும். அவங்க வீட்டு டம்ளரை நான் எச்சி பண்ணிரக்கூடாது. ஒண்ணா வேல பாக்கறோம். ஒரே பே ஸ்லிப்லதான் சம்பளம் வாங்கறோம். சமயங்கள்ல அவங்கள என் டூ வீலர்ல தான் கூட்டிட்டுப்போய் ட்ராப் பண்றேன். இத எல்லாம் தாண்டி என் சாதி அவங்க மனசுக்குள்ள இருக்கு.
 
 
 இப்பல்லாம் யாரு சாதி பாக்கறான்னு சொல்ற யாரா இருந்தாலும் எங்கூட வாங்க. மனுதர்மம் எவ்வளவு வேரோடிப் போயிருக்குன்னு காட்றேன். எங்க ஸ்கூல்ல சுமாராப் படிக்கற ஒரு பையனை ஒரு கிளாஸ் டீச்சர் க்ளாஸுக்கு வரக்கூடாதுன்னுட்டாங்க. அதப்பத்தி ஸ்டாப் ரூம்ல பேசிட்டு இருக்கறாங்க. அப்பத்தான் நா ஸ்டாப் ரூமுக்குள்ள வந்தேன். நான் வந்தத அந்த டீச்சர் கவனிக்கல. அவன் சேரிப்பையன் அவங்களுக்கு அவ்வளவுதான் அறிவு இருக்கும். அவங்க மாட்டுக் கறி கொழுப்பெல்லாம் சாப்பிடுவாங்க, அவங்களுக்கு அவ்வளவுதான் அறிவு இருக்கும்ன்னாங்க.
 
 
சாப்பிடற உணவை வச்சு எப்படி அறிவை மதிப்பிடமுடியும்னு தெரியல. நா நேரா அந்த டீச்சர் முன்னால போயி நின்னேன். மாட்டுக்கறி சாப்பிடறவங்களுக்கு அறிவு மந்தமா இருக்கும்ன்னா நானும் அங்கருந்து வந்தவதான் எனக்கும் அறிவு மந்தமாத்தான டீச்சர் இருக்கணும்னு கேட்டேன்.அவங்ககிட்டருந்து பதில் வரல. இன்னைக்கு நீங்க எனக்கு பதில் சொல்லியே ஆகணும்னு வற்புறுத்தியும் அவங்க மௌனமா இருந்துட்டாங்க. ஆதிக்க சாதியோட இந்த மௌனம்தான் ஆபத்தானது. இந்த மௌனம் தான் சாதியத்தை தலைமுறை தலைமுறையா கடத்திட்டு வருது.
 
 
இப்ப நெறைய பேரு பழைய மாதிரி இல்ல, சமமாத்தான நடத்தறோம்னு சொல்றாங்க. சமமா நடத்தறோம்னு சொன்னாலே நீங்க உயர்ந்தவங்கன்னு ஆகுது. சலுகையெல்லாம் தர்றோமேன்னு சொல்றாங்க. அது சலுகை இல்ல; எங்க உரிமை. அத நீங்க சலுகைங்கற பேர்ல தர்றீங்க.
 
 
ஒரு சேரிப்பொண்ணு ரொம்பநாளா ஸ்கூலுக்கு வரல. கூடப்படிக்கற ஒரு பொண் ணுட்ட நீ நாளைக்கு அவளை வீட்ல பாத்து கூட்டிட்டு வாம்மான்னு சொன்னேன்.இல்ல மிஸ் அவ சேரில இருக்கறா நாங்க அங்கெல்லாம் போகமாட்டோம், அப்படிப் போனா எங்கம்மா திட்டுவாங்கன்னு சொன்னா.ஒவ்வொரு ஊருக்குள்ளயும் வாழற எடம் ரெண்டாத்தான் இருக்கு. அத அந்தப் பொண்ணு பதில்ல என்னால உணர முடிஞ்சது.
 
 
எனக்கு ஒண்ணுமட்டும் புரியுது. கல்வி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமான்னா  கல்வி மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது. நல்லா படிச்சு ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையா இருக்கற எனக்கே இவ்வளவு நெருக்கடி இருக்குதுன்னா எழுதப் படிக்கத் தெரியாம ஒரு குக்கிராமத்துல  சேரில வாழ்ற எங்க புள்ளைங்கள நெனச்சா.. எத்தனை எழவுக்குத்தான் அழறது.. எவ்வளவு நாள்தான் பொலம்புறது...? இதையெல்லாம் யோசிக்கறப்ப இந்த இந்த மனுவ கண்டுபிடிச்சவனை...” என்று உரத்தகுரலில்  தொடர்பற்ற வாக்கியங்களைச் சொல்லி நிறுத்தினார். அரங்கம் ஒரு பெரியமௌனத்தோடு சுகிர்தாவைப் பார்த்தபடி இருந்தது. அதன்பிறகு சுகிர்தா எதுவும் பேசவில்லை. ஒரு துளிக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் கண்ணீர் துளி எல்லோருக்குள்ளும் உறைந்து நின்றது.
 
 
சுகிர்தராணி தன் இருக்கையில் சென்று அமர்ந்த பின் நெடுநேரம் எந்த அரவமும் இல்லாமலிருந்தது அரங்கம். வெகு நிதானமாக எழுந்து அடுத்து சொர்ணமால்யா பேசுவார் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் கோம்பை அன்வர். 
 
 
சொர்ணமால்யா எழுந்து நின்றார். எல்லோருக்குள்ளும் சொர்ணமால்யா என்ன பேசப்போகிறார் என்கிற ஆவல் இருந்தது. சொர்ணமால்யா என்றில்லை, யார் பேசினாலும் சுகிர்தாவின் பேச்சை புறந்தள்ளிவிட்டு எதையும் பேசிவிட இயலாது.
 
 
ஒரு பரத நாட்டியக் கலைஞர், நடிகை, ஜக்னி நடனம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் அங்கு கூடியிருந்த அநேகருக்குள் சொர்ணமால்யா யார் என்கிற அடையாளம் வந்துபோனது.அந்த அடையாளத்தோடு சொர்ணமால்யா என்ன பேசப்போகிறார் என்கிற ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பேச்சுக்கும் அடுத்தவர் பேச்சுக்குமிடையே புகை பிடிக்கச் செல்பவர்கள் கூட எழுந்து செல்லாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
 
 
எழுந்து நின்ற சொர்ணமால்யா ஒரு கணம் அமைதியாக நின்றார். “எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல நான் ஜக்னி நாட்டியம் பத்திப் பேசலாம்னு வந்தேன். சுகிர்தாவோட பேச்சு என்னை வாயடைக்க வச்சிருச்சு. சுகிர்தாவோட கண்ணீர் இப்ப  எனக்குள்ள இருக்கு. சொர்ணமால்யா நிறுத்தி நிதானமாக ஒரு நட்டுவங்கத்திற்கு முத்திரை பிடிப்பது போல நிதானமாகப் பேசினார். இப்ப நான் என்ன பண்ணட்டும்?” ஒரு சரியான உரையாடலுக்கான துவக்கமாக இருந்தது சொர்ணமால்யாவின் கேள்வி. ஒரு கலக்கமும் தவிப்புமான குரலில் இப்ப நான் என்ன பண்ணட்டும் என்று கேட்ட கேள்வியில் பொய்யில்லை.
 
 
“இது எங்க முன்னோர்கள் செஞ்ச தப்புதான். எஸ், நான் ஒத்துக்கறேன். ஆமா எங்க முன்னோர்கள் செஞ்ச தப்புதான்.இதுக்கு நான் என்ன பண்ணணும்?,” கேள்வியை சுகிர்தாவிடம் முன்வைப்பது போல சுகிர்தாவைப் பார்த்தபடி இருந்தார் சொர்ணமால்யா. அவர் இப்படிப் பேசுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. முற்று முழுதாகத் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தி இது தப்பு என்று சொர்ணமால்யா ஒப்புக் கொண்டவிதம் அரங்கத்திலிருந்த எழுத்தாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.
 
 
ஒரு சிலர் இது பாவனைச் சொல்லோ என்கிற அடிப்படையிலும் வேறு சிலர் பதில் சொல்ல இயலாத இடத்தில் ஆமோதிக்கும் ஒரு தந்திரச் சொல்லோ என்கிற அர்த்தத்திலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காத்திரமான முற்போக்கு பேசும் ஒன்றிரண்டு பேர் பார்வையில் இருந்த அலட்சியம் அப்படியெல்லாம் சட்டென ஒப்புக் கொள்வதையும் சரணடைவதையும் நம்ப இயலாது என்பது போலிருந்தது.
 
 
“நான் வேணா சுகிர்தராணிகிட்ட மன்னிப்பு கேக்கட்டுமா?” என்று கேட்டபோது அந்தச் சொல்லில் இருந்த தவிப்பை எல்லோரும் உணர்ந்தார்கள். இப்போது சுகிர்தராணியின் பேச்சை உணர்வுப்பெருக்கோடு கேட்டுக் கொண்டிருந்ததைப் போல சொர்ணமால்யா பேச்சில் ஒருமுகப்பட்டிருந்தது கூட்டம்.
 
 
“ஒரு மன்னிப்புல இது சரியாயிருமா? நான் ஒருத்தி மன்னிப்பு கேக்கறதுனால மாற்றம் வந்துருமா? இது எத்தனை தலைமுறை தவறு. இதுக்கு என்ன தீர்வு. இன்னும் எவ்வளவு நாள் இந்த வலி தொடரப்போகுது... நாம இதுக்கு என்ன பண்ணனும். எனக்கு எதுவும் தெரியல. சுகிர்தராணி அழுத கண்ணீர்ல என் உடம்பெல்லாம் கூசுது. இத்தனை நாளா இந்த வலியை தெரியாம வாழ்ந்ததுக்கு நா வெக்கப்படறேன். சுகிர்தா சொன்னமாதிரி இதப் பேசாம கடந்து போறது தப்பு. நாம இது பத்தி நிறைய பேசணும். மௌனம் சாதிக்கிற எல்லாருக்குள்ளயும் ஒரு பாசாங்கு இருக்கு. எந்தக் கடவுளும் மனுசனுக்கு மனுசன் தாழ்ந்தவன்னு சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சொல்லியிருந்தா அது கடவுளாவே இருக்க முடியாது. மனுச இழி நிலை களையறதுக்கு என்ன வழின்னு நாம கண்டுபிடிக்கணும். அதுக்குத் தடையா இருக்கற எல்லாத்தையும் நாம அழிக்கணும்.ஒரு மேடைகிடைச்சிருக்குங்கறதுக்காக, எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பேசி கைத்தட்டு வாங்கறதுக்காக நா இதச் சொல்லல. என்னோட ஆழ் மனசுலருந்து சொல்றேன். ஒரு பிராயச்சித்த மன்னிப்பை நாங்க கேட்டுத்தான் ஆகணும்.” இதைச் சொன்னபோது அவர் குரல் தழுதழுத்தது. வசப்படாத ஒரு வார்த்தையை தனக்குள் தேடும் ஒரு தவிப்பு. கலங்கிய கண்களோடு அவர் கூட்டத்தை ஏறிட்டபோது எல்லோருக்குள்ளும் நெகிழ்வு.
 
 
அந்த நெகிழ்தருணத்தில் மெல்ல நடந்து சுகிர்தராணி அருகில் வந்தவர், அவரை வாஞ்சையாக கையைப் பிடித்து மைக் அருகே அழைத்து வந்தார். “உங்க கண்ணீர் எனக்குள்ள ஒரு பெரிய குற்றவுணர்ச்சிய ஏற்படுத்திருச்சு. நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கட்டுமா?” என்று அவர்
சொன்னபோது சுகிர்தா கலங்கினார். கூட்டத்தில் இருப்பவர்களை ஒரு கம்பீரமான பார்வையால் பார்த்தபடி, “உங்க எல்லார் முன்னாலயும் சுகிர்தராணிகிட்ட மன்னிப்பு கேக்கறேன். அந்த மன்னிப்புக்கு அடையாளமா சுகிர்தாவை ஒரு ஹக் பண்ணி கிஸ் பண்ணிக்கிட்டுமா?” என்றபடி 
சுகிர்தராணியை வாரியணைத்தபடி கன்னத்தில் ஒரு முத்தமிட்டார் சொர்ணமால்யா.
 
 
என்றேனும் சாதியற்ற சமநிலை சமூகம் உருவாகும் ஒரு நாளில் இந்த முத்தமும் நினைவுகூரப்படும்.
 
 
[அந்திமழை ஏப்ரல் 2018 இதழில் வெளியான சிறுகதை]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...