![]() |
ஷிண்டே அரசாங்கம் வெற்றி - கடைசி நேரத்தில் தாவிய 2 எம்.எல்.ஏ.கள்Posted : திங்கட்கிழமை, ஜுலை 04 , 2022 12:34:06 IST
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றது.
சிவசேனாவுக்குள் பிளவு உருவாகி, முன்னாள் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து புதிய கூட்டணி அரசாங்கம் அங்கு பதவியேற்றது.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நேற்று நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பா.ஜ.க.வின் இராகுல் நர்வேக்கர் 164 வாக்குகள் பெற்று சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் தரப்பில் நிறுத்தப்பட்ட இராஜ் சால்விக்கு 107 வாக்குகளே கிடைத்தன.
இரண்டாவது நாள் சிறப்புக் கூட்டத்தில் இன்று காலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 164 வாக்குகள் பெற்று ஷிண்டே தலைமையிலான அரசு தப்பித்தது.
மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர் உயிரிழந்ததால், 287 பேர் உள்ளனர். இவர்களில் 55 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனா பிளவுபட்டு, ஷிண்டே தலைமையிலான குழு 39 உறுப்பினர்களுடன் தனி அணியாக ஆனது.
வாக்கெடுப்பு நடப்பதற்கு சற்று முன்னர், கடைசி நேரத்தில், உத்தவ் தலைமையிலிருந்து சந்தோஷ் பாங்கர், சியாம்சுந்தர் ஷிண்டே ஆகிய இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஷிண்டே அணிக்குத் தாவினர்; இதனால் அவருடைய அணியின் பலம் மேலும் கூடியுள்ளது.
English Summary
Shinde government wins in Maha assembly
|
|