???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பார்க்காத படத்தின் கதை- 1 - ஷாஜி

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   08 , 2014  01:38:37 IST


Andhimazhai Image
 
 
 
நடுத்தெருச் சினிமா
 
 
சிறந்த சினிமாவில் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்ப் பார்வையாளர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவசியம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
- சுந்தர ராமசாமி  
 
 
”சினிமாவப் பத்தி எலுத தமிழ்ல ஆயிரம்பேரு இருக்காய்ங்க! நீங்க எதுக்கு சினிமாக் கட்டுரை எல்துறீய்ங்க? நீங்க ஏதோ இசை விமர்சகரோ என்னமோன்னு சொல்றாய்ங்க! அந்த வேலய ஒலுங்கா செஞ்சாப் போதாதா?” திரைப் படங்கள் பற்றி அவ்வப்போது சில கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கும் எனக்கு இந்தமாதிரியான அறிவுரைகள் நிறைய கிடைத்ததுண்டு! சினிமாவைப் பற்றி இங்கு பல்லாயிரம் பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. குறும்படங்கள், பெரும்படங்கள், ஈரானியப் படங்கள், ஈழத்துப் படங்கள், ஆஸ்கர் படங்கள்,  ஆஸ்கர் ரவிச்சந்திரன் படங்கள், ஷங்கர் படங்கள், ஷகீலாப் படங்கள் என எல்லா வகையறாப் படங்களைப் பற்றியும் பல லட்சம் பக்கங்கள் இங்கு எழுதப்பட்டு விட்டன. இப்போதும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கத்தால் சரியாகத் தூங்கமுடியாத ஆத்திரத்தில் எதாவது ஒரு திரையரங்கிலிருந்து வெளியேவந்து ‘இட்லி சாம்பார் ஒரு மொக்கைப் படம். அது ஒரு சக்கைப் படம்’ என்று அலைபேசி முகநூலில் எழுதிக் கொண்டிருக்கும் அந்த நண்பனும் பல சினிமா விமர்சனங்களை எழுதியவன்! இட்லி சாம்பார் என்று ஒரு படம் வரவில்லையே என்று யதார்த்த சினிமாப் பாணியில் கேட்கக் கூடாது. வேண்டுமானால் வறுத்த கரி, கருவாட்டுக் கொழம்பு, புளியங்கொட்டை என்று எதாவது ஒரு பேரை வைத்துக்கொள்ளுங்கள்!
 
என்னடா இது? ஆழமான கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரைத் தொடரை எழுதலாமென்று வந்த நான் ஆரம்பித்தவுடனே ‘செம காமடி’யை நாடி ’காமெடி ட்ரென்டின்’ பின்னால் போகிறேனே! பொதுப் போக்கு என்று தமிழில் சொல்லக் கூடிய இந்த ‘டிரென்ட்’ இருக்கே! நமது சினிமாவில் அனைத்தையும் தீர்மானிக்கும் உந்துதலாக எப்போதுமே இருப்பது இது தான். சுந்தர ராமசாமி சொல்வதுபோல் ’அறிந்ததையே எதிர்பார்த்து பழைய சுகம் மீண்டும் நக்கிக் காண நாவைத் துழாவும் நம் பழக்க’த்தினால் உருவாகிறவை இந்தப்  பொதுப் போக்குகள். ’வித்தியாசம் முதன்மை பெறும் படைப்புகளை உதறி உதாசீனப்படுத்திச் சிறுமைக்கு உட்படுத்தும் நம் பொறுப்பின்மை’ இதற்கு மற்றுமொரு முக்கியமான காரணம் என்றும் சொல்கிறார் ராமசாமி. உண்மை தான். ஆனால் வித்தியாசத்தை வலிந்து உருவாக்கும் முயற்சிகளை என்ன சொல்வது? 
 
வணிகப் படங்களை விடக் கலைப்படங்கள் தான் இங்கு போலியானவை. வணிகப் படங்கள் பண லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை. சிறந்த கலைப் படைப்பு என்ற பிரகடனை எதுவுமே அவற்றுக்கு இல்லை. ஆனால் கலைப் படங்கள் என்று போலியாக முன்னிறுத்தப்படும் பல படங்கள் கலைப் பெருமைக்கான தகுதியற்ற நாடல்கள் மட்டுமே! உண்மையான கலைப் படங்களுடன் எண்ணற்ற போலிகளும் எப்போதுமே இங்கு இருந்து வந்திருக்கின்றன. மலையாளத்தில் குறிப்பாக. 
 
இங்கே ஒரு துறவுரை அதாவது Disclaimer. நான் இங்கு எழுதும் விமர்சனபூர்வமான எதாவது கருத்துக்களை வைத்து தனிமனித விரோதம் காரணமாக விமர்சனம் செய்கிறார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் தனிமனித விரோதம்போல் அபத்தமான ஒன்று வேறு எதுவுமே இல்லை என்று நம்புகிறவன் நான். கருத்து ரீதியான வேறுபாட்டைப் பதிவு செய்யும்போது அதைத் தனிமனித விரோதமாகச் சித்தரிக்கும் மனநிலை நமது சமூகத்தின் பெரு வியாதிகளில் ஒன்று. 
 
டாக்டர் பிஜு என்பவர் அடிப்படையில் ஒரு ஹோமியோ மருத்துவர். திரைப் படங்களை இயக்கும் டாக்டர் என்று சொல்லும்போது கலைத்துறை சார்ந்தது அவரது மருத்துவர் பட்டம் என்று தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக இதைச் சொன்னேன். இந்தியன் பனோரமாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேன் (Cannes) திரைப்பட விழாவில் காட்டப்பட்ட அவரது முதல் மலையாளப் படமான ’சைரா’வின் ஒற்றைவரிக் கதையைக் கேளுங்கள். 
 
கேரளாவின் பிரபலமான ஒரு முஸ்லிம் கசல் பாடகரின் (கேரளாவில் ஏது கசல்?!) செல்ல மகள் சைரா ஒரு பத்திரிகையாளராக மாறும் முயற்சிக்கிடையே காணாமல் போகிறாள். பல நாட்கள் கழித்துத் திரும்பி வரும் அவள் எதையோ தொலைத்தவளைப் போல் மௌனமாக இருக்கிறாள். அவளை ஆறுதல்படுத்த அவளது அப்பா நெருங்கும்போது தனது உடைகளை அவிழ்த்துக் காட்டி ’என் உடலை பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் என்னை வதைக்காதீர்கள்’ என்று கதறிக் கெஞ்சுகிறாள். அவளைக் கடத்திச் சென்ற குழு கொடூரமான வன்பாலுறவுக்கு ஆளாக்கியதால் அவளது மனநிலை பாதிக்கப்பட்டது போலும். சொந்த அப்பாவைக் கூட பாலியல் வெறி பிடித்த ஒரு மிருகமாகத்தான் அவளால் இப்போது பார்க்க முடிகிறதாம்!  
 
ரோஜா, பாம்பே, உயிரே, சர்ஃபரோஷ், மிஷன் கஷ்மீர், உன்னைப்போல் ஒருவன் என எண்ணற்ற படங்களில் பார்த்த இஸ்லாமியப் பயங்கரவாதம் எனும் தேய்வழக்கை இழுத்து இழுத்து, போலிக் கலைப் படங்களின் அனைத்துத் தன்மைகளோடும் எடுக்கப்பட்ட வீட்டிலேக்குள்ள வழி எனும் படத்திற்கு 2011இன் சிறந்த மலையாளப் படத்திற்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது!  சில கொரிய, ஜப்பானிய படங்களின் பாணியைத் தழுவி எடுத்த, உட்கார்ந்து பார்க்கவே முடியாத ஆகாசத்தின்டெ நிறம் எனும் அவரது படத்திற்கும் பல விருதுகள் கிடைத்தன! சொல்லப் போனால் டாக்டர் பிஜு இதுவரைக்கும் எடுத்த ஐந்து படங்களுக்குமே பல விருதுகள் கிடைத்திருக்கின்றன! சிறந்த சினிமா குறித்து சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றிற்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன! அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் அமர்ந்திருந்த பீடத்தில் இன்று டாக்டர் பிஜு ஏறி அமர்ந்திருக்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு!
 
இரண்டு நடிகர்களுக்கு வழங்கப்பட்ட கடந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் தேசிய விருதுகளில் ஒன்றை மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் பெற்றது டாக்டர் பிஜு இயக்கிய படத்தில்தான்! ஆனால் தேசிய விருது பெற்ற அந்த நடிப்புக்கு மாநில அளவிலான எந்த விருதுமே கிடைக்கவில்லை! இரண்டு பிராந்தியங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இரண்டு நடிகர்களுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பகிர்ந்து வழங்குவது இப்போது வழக்கமாகி வருகிறது! சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பார்த்த தேசிய விருது கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனதனால் ஒரு மலையாள நடிகர் மயக்கம்போட்டு விழுந்தார்! இதையெல்லாம் பார்க்கும்பொழுது விருதுகளைப்போல், குறிப்பாக அரசு அளிக்கும் விருதுகளைப்போல் அபத்தமானவை வேறு எதுவுமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
 
தனது வாழ்நாளில் ஒரு தேசிய விருது கூட கிடைக்காதவர் அதிசய இயக்குநர் பாசு சாட்டெர்ஜி. இன்று பார்க்கையிலும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நடுநிலைப் படங்களை இயக்கியவர் அவர். சோட்டி ஸி பாத், பியா கா கர், சித் சோர், கட்டா மீட்டா, ரஜனீகந்தா, பாத்தோம் பாத்தோம் மே என எத்தனையோ அற்புதமான படங்களைத் தந்தவர் அவர்! நடுநிலை சினிமாவைப் பற்றி பேசுகையில் ஒருமுறை அவர் சொன்னார், “நடுநிலை சினிமா என்றல்ல நடுத் தெருச் சினிமா என்று சொல்லுங்கள். ஏன் என்றால் அந்த வகைமை சினிமாவிற்காகவே வாழ்ந்த பெரும்பாலான படைப்பாளிகள் நடுத் தெருவுக்குதான் வந்து விட்டனர்”.  
 
அந்த காலகட்டத்தில் கலைப் படங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் அரசு விருதுகள் கிடைத்தன. நடுநிலைப் படங்களுக்கு விருதும் கிடைக்காது, வழக்கமான வணிக மசாலாக்கள் இல்லாததால் திரையரங்குகளில் அவை வெற்றியும் அடையாது! அப்படங்களில் பெரும்பாலானவற்றை அவை வந்த காலத்தில் யாருமே பார்க்கவில்லை. பார்க்கப்படாத அந்தப் படங்களின் திரையிலும் திரைக்கு பின்னாலும் என்ன நடந்தது என்பதை காலம் கடக்கும் முன் யாராவது பதிவு செய்தே ஆகவேண்டும். ஏனென்றால் இந்திய வெகுமக்கள் சினிமாவில் இன்று நாம் காணும் மாற்றங்கள் அனைத்தையும் உருவாக்கியது அந்த நடுநிலைப் படங்கள் தாம்.
 
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன். முதலில் அதன் பின்புலம். 1995இல் வெளியானது ஸ்திரீ எனும் தெலுங்கு திரைப்படம். NFDC யும் தூரதர்ஷனும் இணைந்து தயாரித்த அப்படத்தை அது வெளிவந்த காலத்திலேயே தேசியத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். 1993 வரைக்கும் ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்த, தெலுங்குமொழி தெரிந்த எனக்கு அப்படம் மிகவும் பிடித்துப் போனது. தரமானதும் அதேசமயம் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவையுமான பல படங்களை இயக்கி மலையாள சினிமாவின் எக்காலத்திற்குமுரிய இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர்பெற்ற கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய படம் ஸ்திரீ. தெலுங்கு மொழியில் அவர் இயக்கிய  ஒரே படம். தனது வாழ்நாளில் அவர் இயக்கிய கடைசிப் படமாகவும் அமைந்தது அது.
 
தென்னிந்திய சினிமாவில் எனது மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவரான ரோஹிணி அப்படத்தின் மையப் பாத்திரமான ரங்கி எனும் ஸ்திரீயாக நடித்தார். முக்கிய ஆண் பாத்திரமாக தலைவாசல் விஜய் வந்தார். ஆனால் அப்படம் ரங்கியின் கதை, அவளது வாழ்க்கை. கோதாவரிப் பிராந்தியத்தின் வட்டார வழக்கிலான பேசும் மொழியாலும், படிப்பறிவற்ற ஓர் ஏழை மீனவப் பெண்ணின் உடல் மொழியாலும், நுட்பமான முகபாவனைகளாலும் ரோஹிணி அப்பாத்திரமாகவே வாழ்ந்தார். 1995ஆம் ஆண்டிற்கான தேசிய விருது அறிக்கையில் ரோஹிணியின் அந்த நடிப்பைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள் நடுவர் குழுவினர். ஆனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைக்கவில்லை!
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்திரீ படத்தின் சிறந்த குறுவட்டுப் பிரதி ஒன்று என் கைக்கு வந்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்படத்தைப் பார்க்கும்பொழுது மிகுந்த ஆச்சரியத்திற்குத்தான் ஆளானேன்! தரமான திரைப்படங்களை எடுப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவான தெலுங்கு மொழியில் 19 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய ஒரு சினிமாவை எடுத்திருக்கிறார்களே! நம்பமுடியவில்லை. இன்று பார்க்கும்பொழுதும் அனைத்துத் தளங்களிலுமே வெகுச் சிறப்பான ஒரு திரைப்படம் ஸ்திரீ!
 
சென்ற வாரம் சென்னை திருவான்மியூரிலுள்ள பனுவல் புத்தகக் கடைக்குள்ளே இருக்கும்  சிறு திரையரங்கில் ஸ்திரீ திரைப்படத்தின் திரையிடலை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தைப் பற்றிப் பேச முடியுமா என்று பனுவலின் பொறுப்பாளர் செந்தில்நாதன் கேட்டபோது எதுவுமே யோசிக்காமல் சம்மதித்தேன். படம் திரையிடப்பட்ட பின்னர் நடந்த கலந்துரையாடலில் தலைவாசல் விஜயும் ரோஹிணியும் பங்கேற்றனர்.
 
சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்திரீ வழியாக தனக்கு கிடைக்காததில் வருத்தம் எதுவும் இல்லை என்று சொன்னார் ரோஹிணி. பேன்டிட் குயீன் படத்தில் கொள்ளைக்காரி பூலன் தேவியாக நடித்த ஸீமா பிஸ்வாஸுக்கு தான் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. தனது நடிப்பைவிட விருதுக்குத் தகுதியானது அவரது நடிப்பு. அதனுடன் போட்டி போட்ட தனக்கு சிறப்புக் குறிப்பிடல் கிடைத்ததென்பதே மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றார் ரோஹிணி! 
 
ரோஹிணியின் நடிப்பைப் போலவே அவரது வார்த்தைகளும் அற்புதமானதாக எனக்குத் தோன்றியது. தான் என்பதைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லாத இந்த காலத்தில், போட்டி பொறாமைகளைத் தவிர வேறு எதுவுமே காணக்கிடைக்காத இடத்தில் உண்மையும் நேர்மையும் இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன். எல்லையற்ற உண்மையும் நேர்மையும் வெளிப்படுத்திய இந்தியச் சினிமாவின் படைப்புகளைப் பற்றி, படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதப்போகிறேன். அறிவுரைகளுக்கு நன்றி.  
 
தொடரும்…
 
- அந்திமழை நவம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...