நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ள நிலையில், அவர்கள் கோவிட் காலத்தில் கண்ட பாதிப்பு குறித்து அதற்கான நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ்,காவி, போபன்னா ஆகியோர் அமர்வு வழக்கை விசாரித்து. விசாரணையில் பல்வேறு முக்கிய உத்தரவை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். அதன்படி, பாலியல் தொழிலும் ஒரு தொழில்முறைதான்(Profession). எனவே, வயது வந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அந்த தொழிலில் ஈடுபடும் போது அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
பாலியல் தொழிலாளர்களை காவல்துறையினர் ரெய்டு செய்யும் போது அவர்களைக் கைது செய்வது, அபராதம் விதிப்பது போன்ற துன்புறுத்தல்களில் ஈடுபடக்கூடாது. அவர்களுக்கும் அனைத்து குடிமக்கள் போல உரிய மரியாதை, மாண்பு வழங்கப்பட வேண்டும். பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் மீது காவல்துறை கடுமையான, வன்முறையான போக்கை கடைப்பிடிப்பது காணப்படுகிறது. எனவே, காவல்துறையினர் பாலியல் தொழிலாளர்களை பேச்சின் மூலமாகவோ, உடல் ரீதியான தாக்குதலிலோ உட்படுத்தக்கூடாது. அதேபோல், ஊடகங்களும், பாலியல் தொழிலாளர்கள் குறித்த செய்திகளை வழங்கும் போது அவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது.
மேலும் பாலியல் தொழிலாளர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து கவனித்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பாலியல் தொழிலாளர் தங்குமிடம் அல்லது விடுதிகளை உரிய கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அங்கு அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கட்டயாத்தின் பேரில் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் தொழிலாளர்களிடம் இருந்து அவரது குழந்தை அவரிடம் கட்டாயமாக பிரித்து வைக்க கூடாது. பாலியல் தொழிலாளர்கள் போலவே அவர்களது குழந்தைகளுக்கும் உரிய மாண்பை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பாலியல் தொழில் தொடர்பான சட்டங்களை இயற்றும் போது பாலியல் தொழிலாளர்கள் கருத்தையும் கேட்டறிய வேண்டும் என நீதிபதிகள் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளனர். இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய அரசு தனது கருத்துகள் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ள நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 27ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.